Pages

Dec 24, 2013

விண்மகன் வந்துதித்தான்!..

வலையுலக அனைத்து உறவுகளுக்கும்
என் இதயங் கனிந்த நத்தார் திருநாள்
நல் வாழ்த்துக்கள்!
~~~000~~~

விண்மகன் வந்துதித்தான்!


அன்பெனும் அருளினில் அகிலமே நனைந்திட
அருந்தவன் வந்துதித்தான்! - எங்கள்
ஆதவன் வந்துதித்தான்!
துன்பங்கள் தொலைந்திடத் துயரங்கள் அகன்றிடத்
தூயனாய் வந்துதித்தான்! - நல்ல
தூதனாய் வந்துதித்தான்! 

பொய்மையைப் போக்கவும் உண்மையைக் காக்கவும்
புனிதனாய் வந்துதித்தான் !- உலகில்
புதுமையாய் வந்துதித்தான்!
நல்லதை நாட்டவும் நன்மையைக் கூட்டவும் 
நமக்கென வந்துதித்தான்! - யேசு
நாட்டினைக் காக்க வந்தான்!

வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும் 
வேதமாய் வந்துதித்தான்! - வானில்
விண்மீனாய் வந்துதித்தான்!
விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
விரைவாக வந்துதித்தான்! - அந்த
விண்மகன் வந்துதித்தான்!

விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய
ஆண்டவன் வந்துதித்தான்! - ஒளி
பூண்டவன் வந்துதித்தான்! -
அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே
நலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு
மலரடி போற்றிடுவோம்!
~~~000~~~


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
~~~
எண்ணங்கள் அனைத்தும் இனிதாக வேண்டும் - எங்கும்
வண்ணங்கள் மலர்ந்து வளமாக வேண்டும்!
இன்பங்கள் சிறந்து எழில்பாட வேண்டும்  - எங்கள்
இனியதமிழ் உலகை அரசாள வேண்டும்!

~~~000~~~

பாருடன் கூடியே பைந்தமிழைக் காப்பேனே!
சீருடன் நற்பணிகள் செய்து!

~~~000~~~

பதிவோடு பகிரும் பதிவர்




வலையுலகில் எனது அன்புக்குரியவர்களில் இன்னுமொரு தோழியான
தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் முகிலின் பக்கங்கள்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.
முகிலின் பக்கங்கள்

http://tamizhmuhil.blogspot.com/

தோழி தமிழ்முகில் பிரகாசம் தனது இந்த வலைப்பூவில் மிகுந்த ஆர்வமுடன் இனிய நல்ல கவிதைகளை எழுதிப் பதிவு செய்து எம்முடன் பகிர்ந்து வருகின்றார்.

தோழி அவர்கள் இவ் வலைப்பூவினைத் தவிர இன்னும் இரண்டு வலைப்பூக்களையும் படைத்துப் பதிந்து வருகிறார்.
 muhilneel
இவ் வலைத்தளத்தில் கதம்பமாக பல விடயங்களைப் பதிவிட்டும்…

My Clicks  
இவ் வலைத்தளத்தில் தான் எடுக்கும் நிழற் படங்களைப் பதிந்தும் வருகிறார்.

இவர் தனது இவ் வலைத்தளத்தைவிட வேறு பல தளங்களிலும் தனது பங்களிப்பாகத் பல படைப்புக்களைப் பதித்துவருகிறார்.
தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களையும் ஊக்குவிக்கும் அன்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களும் தோழியின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து மேலும் அறிந்து கொள்ளலாம்.

தோழி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் அவர் தளத்திற்கும் சென்று படித்துக் கருத்துப் பகிர்வு செய்து அவரையும் ஊக்குவிக்கலாமெனும் நோக்கோடு இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகின்றேன்!.
மிக்க நன்றி அன்பு உறவுகளே!

_()_

Dec 17, 2013

அழகென்றால்...

ஒன்றரை வருடத்திற்கு முன்னர் செய்த எனது இரண்டாவது 
க்விலிங் கைவேலை இதுவாகும்.

ஆரம்ப காலத்தில் என்னிடம் இதற்குரிய டூல் - கருவிகள் ஏதும் இருக்கவில்லை. சிறிய பல்லுக் குத்தும் குச்சியில் கருவிபோல முனையில் வெட்டி அதனில் வெட்டிய தாள் நாடவை வைத்துச் செய்தேன்.

சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் என்னை அதன் வடிவம் ஓரளவு திருப்திப்படுத்தியதால் உங்கள் பார்வைக்கும் தந்துள்ளேன்...

உங்கள் கருத்துகள் என்னை ஊக்குவிக்கும்! மிக்க நன்றி!..:)
~~~~~~

அழகென்றால்...
 
ஆடும் மயிலின் வனப்பெல்லாம்
அசத்தும் வண்ணத் தோகையிலே!
பாடும் குயிலின் கோலமதைப்
படைத்தான் அதனின் குரலினிலே!
ஏடும் காணும் எழில்மிகவே
ஏற்றும் பதிவுச் சுவைதனிலே!
கூடும் மாந்தர் அழகென்றால்
கொழிக்கும் உயர்ந்த குணம்தானே!
~~~~000~~~~

வளம்பெறச் செய்வீர்!...


வேடிக்கை கூத்தென வீணே புரிவதை 
வாடிக்கை தானாக்கி வாழாதீர்! - வாடி
நலமின்றிச் சோரும்! நமதுறவின் மேன்மை  
வளமின்றிப் போகும் வரண்டு!

வளம்பெறச் செய்வீர் வளரும் உலகை!
உளமுறச் செய்வீர் உழைப்பை! -  களம்பல
கண்ட தமிழ்மொழியைக் காப்பீர்! இழுக்கின்ற 
நண்டெனும் போக்கை நசித்து!
~~~~000~~~~


எண்ணமெலாம் நீயே எனக்குள் நிறைவாக
வண்ணமெலாம் காட்டு மலர்ந்து!
~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்


வலையுலகில் சமீப காலமாக எனக்கு அறிமுகமான அன்புக்குரிய சகோதரர்களில் ஒருவராகிய
மது அவர்களின் மலர்த்தரு
 என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.

சகோதரர் மது தனது வலைப்பூவிலேயே தன்னைப்பற்றி...
மது?
நான் வாசிப்பு மாற்றங்களை தரும் என்று நம்புகிற, பாடத்திற்கு வெளியிலும் வாசிக்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு ஆசிரியன்.

ஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவன்.இராமநாதபுரத்தில் துவங்கி மன்னார்குடிவரை பல்வேறு நிலை மாணவர்களை சந்திக்கிற வாய்ப்பை எனக்கு தந்த இளைஞர் பேரியக்கம் ஜே.சி.ஐ.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை  இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவன்....

என்று இவ்வாறு கூறியுள்ளார்.
 மது அவர்களின் வலைப்பூ அருமையான விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய நல்லதொரு கதம்ப வலைத்தளம் ஆகும்.


வாசிப்புக்குப் போதிய நிறைய விடயங்கள் அங்கு இருப்பதைக் காண்கிறேன்.

உதாரணத்திற்கு... ஒரிரு தினங்களுக்கு முன்னர் அவர் தளத்தில் நான் மேய்ந்து கொண்டிருந்தபோது `நலம்’ என்னும் லேபிள் பதிவுகளில்
 ”மூக்குத்தி அணிவது ஏன்” என்ற பதிவில் மூக்கில் வலப்பக்கம், இடப்பக்கம் மூக்கு குத்துவது பற்றி இருந்த விடயம் - என்னவர் முன்பு என்னுடன் கூறிய பல சம்பவங்களை நினைவில் நிழலாட வைத்தன... அப்போதெல்லாம் அவருடன் நான் நீங்கள் கற்பனையில் கூறுகிறீர்கள் என்றெல்லாம் வாதிட்டிருக்கின்றேன். ஆனால் அதற்கெல்லாம் விஞ்ஞான ரீதியாகக் காரணங்களை மிகத் தெளிவாக மது அவர்கள் பதிவிட்டிருப்பதைப் படித்தேன்.

 இதுபோல் இன்னும் எத்தனையோ சுவாரஸ்யமான பதிவுகள் அவர் வலைத்தளத்தில் என்னை அசர வைத்தன. இவைகளையெல்லாம் நீங்களும் அவர் தளத்திற்குச் சென்று பார்த்துப் படித்து, ரசிப்பதுடன் அவரையும் ஊக்குவித்தால் மிகவும் சிறப்பாக இருக்குமென நான் எண்ணுகிறேன்.

சகோதரர் மது தனது தளத்தில் எழுதுவதுடன் சக பதிவர்கள் வலைப்பூகளுக்கும் சென்று கருத்திட்டு அவர்களையும் ஊக்குவிக்கும் நல்ல மனோ இயல் நிரம்பியவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களும் அவரின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து மேலும் அறிந்து கொள்ளலாம்.
  
இவரின் வலைப்பூவினைத் தெரியாதோர் அவர் தளத்திற்கும் சென்று படித்துக் கருத்துப் பகிர்வு செய்து அவரையும் ஊக்குவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

மிக்க நன்றி அன்பு உறவுகளே!

_()_

Dec 1, 2013

இன்றோர் ஆண்டில்!...

இம்முறை பழங்களை க்விலிங் கைவேலையில்
முதன் முறையாக முயன்றுள்ளேன்...:)
~~~~~~~~

அன்பு உறவுகளுக்கு இனிய வணக்கம்!


கடந்த ஒரு வருடமாக இந்த இளையநிலாவின் வளர்ச்சிக்காக 
உங்கள் அன்பான ஆதரவுடன், இனிய நல்ல கருத்துக்களையும் வழங்கி என்னை ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும் 
என் இதயங்கனிந்த இனிய நன்றி!


இன்று மகிழ்வுடன் இரண்டாவது ஆண்டில் காலடியைப் பதிக்கின்றேன்!


வருங்காலத்திலும் இதேபோன்று உங்கள் ஆதரவினை நல்கி இவ் வலைப்பூ மேலும் சிறக்க உதவிடும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றேன்! மிக்க நன்றி!
0-0-0-0-0

இன்றோர் ஆண்டில்!...


தமிழ் உறவுகளே வணக்கம்! - அருந்
தமிழே நம்முயிர் இயக்கம்!

இன்றோர் ஆண்டில் இளையநிலா - உமக்கு
இனிதாய்த் தந்தேன் என்நன்றி!
என்றும் இதுபோல் உமதன்பு - எனக்கு
இருந்தால் பெறுவேன் மனத்தெம்பு!

நன்றே வலையை அமைத்தனளே - அதிரா
நற்றேன் சுவையைத் தந்தனளே!
இன்றே பலனும் கண்டனனே - அதனை
எண்ணி உவகை கொண்டனனே!

சிந்தை நிறைந்த ஆர்வமென - இருந்த
செம்மைத் தமிழை வளர்க்கின்றேன்!
சந்தக் கவிஞர் பாரதியின் - தாசன்
தயவால் கவிதை இசைக்கின்றேன்!

பொன்போல் மின்னும் கைவினையைக் - கற்றுப்
பொலிய அஞ்சு உதவினளே!
கண்போல் இருக்கும் நட்புகளே! - எந்தக்
கணமும் மறவேன் உம்உறவே!
~~~~~~~~~~


பிறப்பெல்லாம் உன்றனைப் போற்றிக் களிக்கச்
சிறப்பெல்லாம் கூடும் செழித்து!
~~~~~~~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்

வலையுலகில் எனது அன்புக்குரியவர்களில் இன்னுமொரு தோழியான
இனியா அவர்களின் கவியாகவி - Kaviyakavi
 என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.
 Kaviyakavi

http://kaviyakavi.blogspot.de/

தோழி இனியா தனது வலைப்பூவினை இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிவருகின்றார். தன் வலைப்பூவில் மிகுந்த ஆர்வமுடன் கவிதைகளை எழுதிப் பதிவு செய்து எம்முடன் பகிர்கின்றார்.

அழகான படங்களும் அவற்றுடன் இசைவான கவிதைகளையும் இணைத்து எழுதி எம்மை மகிழ்விக்கும் வலைப்பதிவாளர் தோழி இனியா ஆவார்.

தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களையும் ஊக்குவிக்கும் அன்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களும் இனியா அவர்களின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து மேலும் அறிந்து கொள்ளலாம்.
  
இனியா அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் அவர் தளத்திற்கும் சென்று படித்துக் கருத்துப் பகிர்வு செய்து அவரையும் ஊக்குவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

அத்துடன் ஆரம்ப நிலையில் இருக்கும் இவரைப் போன்றோரை நாம் ஊக்குவிப்பதனால் அவர்கள் மேலும் மெருகேறி வளரப் பெரும் உதவியாக இருக்கும்.
இனியாவின் வலைத்தள வளர்ச்சிக்கு உதவும் எண்ணத்துடன் இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகின்றேன்!..

 அன்பு நன்றி உறவுகளே!
_()_