Pages

Aug 28, 2014

கவிதைப் போட்டி - 2014!..

தீபாவளியை முன்னிட்டு சகோதரர் ரூபனும் ஐயா யாழ்பாவாணன் அவர்களும் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி - 2014
போட்டிக்கு நான் அனுப்பும் கவிதைகள்
படத்திற்கான கவிதை

பூக்கூடை உள்ளே!...

பூக்கூடை உள்ளே புதைந்த நினைவுகளாற்
பாக்கூடை ஆகும் படருலகம்! - தேக்கி
அடைத்தாலும் பொங்குவதேன் அற்றைக் கனவு?  
படைத்தாளும் தேவா பகர்! 

தேனாறாய்ச் செந்தமிழைத் திக்கெட்டும் தாம்பரப்பித் 
தானாண்ட ஈழத்தில் நான்தரித்தேன்! - மானாகத்
துள்ளி வளர்ந்தேன்! துயரின்றிப் பைந்தமிழில்
அள்ளிக் குடித்தேன் அமுது!

நாளொரு வண்ணம் நலமான நற்கனவு
தோளொடு தோழியர் துய்த்தேனே! - வேலொடு
வேடனாய் வந்து விழிக்குள் புகுந்தவன்!
மூடமாய் நிற்கும் மொழி!

பெற்றோர் மனம்மகிழப் பேருவகை யோடுமணம்
உற்றோரும் வாழ்த்த உவந்தோமே! - நற்பயனாய்க்
கிட்டிய சேயொடு கீழ்த்திசை வாழுமெமை
எட்டி எறிந்ததே போர்!

ஊர்விட்டு உறவுகளைத் தாம்விட்டு வேறூரில்
சீர்கெட்டு வாழ்வுநிலை சென்றதே! – வேர்விட்ட
நம்மூர்த் திருநாட்கள் நாமிழந்தோம்! எல்லாமே
நம்கண்ணுள் வாழும் நடந்து!

என்னவனே! இன்றமிழ்த் தென்னவனே! என்னுயிர்
மன்னவனே! இன்பூட்டும் மாதவனே! - கண்ணுக்கு
மையிட்டுக் கார்க்குழல் பூவிட்டுக் காத்துள்ளேன்! 
கையிணைத்துச் சேரும்நாள் காட்டு!
~~~~~~~~~~~

எனது தெரிவாக...

எங்கள் தமிழே!..

உயிரினில் கலந்த உணர்வாய் - என்றும்
உடனுறும் எங்கள் தமிழே!
குயிலது குரல்போல் இனிமை - காட்டிக்
குளிர்ந்திடும் எங்கள் தமிழே!
பயின்றிட ஆவல் பெருக்கி - நல்ல
பலன்தரும் எங்கள் தமிழே!
துயிலினைப் போக்கித் தமிழர் - துயர்
துடைத்திடும் எங்கள் தமிழே!

கனியினில் இருக்கும் சுவையாய் - என்றும்
கவிதரும் எங்கள் தமிழே!
இனியொரு துயர மின்றி - வாழ்வை  
இயக்கிடும் எங்கள் தமிழே!
தனிமையாய்த் தமிழா் கூட்டம் – எதையும்
தாங்கிடும் எங்கள் தமிழே!
பணியென உன்னைக் காத்து - வெற்றி 
பாடுவோம் எங்கள் தமிழே!

சென்னிற மாக மண்ணில் - குருதி
சிந்திய எங்கள் தமிழே!
தன்னிக ரில்லாத் தமிழர் - என்றும்
சாதிப்பார் எங்கள் தமிழே!
நன்மைகள் செய்யும் வண்ணம் - குறள் 
நல்கிய எங்கள் தமிழே!
உன்னைநாம் மறவோம் என்றும் - மெய்
உயிரான எங்கள் தமிழே!
******

103 comments:

 1. கவிதைகள் அருமை....... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   போட்டி என்றும் வெற்றி, பரிசு என்பதும் என் நோக்கமல்ல!
   தமிழ் மொழிப் பரவலுக்காக அவர்களின் முயற்சிக்கு
   என்னால் முடிந்த ஊக்கம் கொடுத்தேன்!

   உங்கள் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 2. தீக்கூடு நெஞ்சத்தில் தேனமிழ்து பொங்கியெழப்
  பாச்சூடும் பண்பைப் படித்தேன்! - வாக்கோடு
  நன்மைவரப் புன்மைவிழுந் தன்மையதிற் கொண்டதனால்
  சென்றுகவி வென்றுவரட் டும்!

  மூச்சினில் நம்மோ டாவாள் !
  முயற்சிகள் வெல்லச் செய்வாள்!
  பேச்சினில் எழுந்து வந்து
  பெருமைகள் சேர்ப்பாள்! தூற்றும்
  ஏச்சினை எதிர்ப்பை அன்னாள்
  எத்தனை பார்த்தி ருப்பாள்?
  பாச்சுவை கொண்டாள்! உங்கள்
  படைப்புகள் காண்பாள்! வெல்க!
  வாழ்த்துகள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கூத்தாடும் உள்ளத்தைக் கொண்டவள் நானிலை!
   பூத்தாடா வாழ்கையாய்ப் போகவே! - காத்திடக்
   கன்னித் தமிழணங்கென் காலமெலாங் கூடவரும்!
   எண்ணிக் களைந்தே(ன்) இடர்!

   பேச்சொடு மூச்சும் பெரும்பசி போக்கியொளி
   பாச்சிடும் உம்கவி பாவலரே! - கோலோச்சும்
   நம்தமிழ்! கண்டிடும் நாள்வரும்! வீச்சொடு
   எம்பணி செய்வோம் இணைந்து!

   அன்பான வரவுடன் அற்புதமான கவி வாழ்த்துகந்தீர்கள்!
   அத்தனைக்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. ஆஹா....கவிதை போட்டி இங்கும் நடக்கின்றது போல.....விஜு ஐயாவின் இந்தப் பின்னூட்டமும், அதற்கான உங்கள் பதிலும்.....

   Delete
  3. வாருங்கள் சகோதரரே!

   ஐயோ போட்டியா? அதுவும் இங்கு! அதுவும் யாருடன்?...
   நம்ம பெருங்கவிஞர் விஜு ஐயாவோடு!..:0

   ஐயோ! அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லை சகோதரரே!.
   புரளியைக் கிளப்பி விட்டுடாதீங்க....:)

   தெரிந்தவர்கள் இருவர் சந்தித்தால் அவர்கள் அவரவருக்குப்
   பிடித்தமான முறையில், மொழியில் பேசிக் கொள்வதில்லையா?.. :) அது போலவே நானும் ஐயாவுடன் கொஞ்சம் கவிதை மொழியில் பேசிப் பார்க்கின்றேன். அவ்வளவே! அதிலும் என்னிடம் நிறையத் தப்புகள் இருக்கும். சிறியோர் செய்யும் தவறுகளைப் பெரியோர் திருத்துவர் அல்லது போகட்டும் பிழைத்து என கண்டுக்காமல் விடுவர்...:)
   அதனால் நானும் துணிவைக் கையிலேந்தி இப்படி அங்கங்கே புகுந்து விளையாடிவிட்டு வருகிறேன்.. சரியா!..:)

   சும்மா இருக்கும் சிங்கத்தை சுரண்டி எழுப்பிவிடாதீர்கள்..:)
   விஜு ஐயா வந்தால் அவ்வளவுதான்..:)

   மகிழ்ச்சியாகக் கருத்துப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 3. வணக்கம்
  சகோதரி
  தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மிக்க மகிழ்ச்சி!
   உங்கள் இருவரின் ஒப்பற்ற இந்தப் பணி கண்டு
   உள்ளம் சிலிர்த்தேன்!
   போட்டியில் வெற்றியும் பரிசும் எனது நோக்கமன்று!
   உங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு
   என்னாலான உதவி, ஊக்கம் இது!

   தங்களின் இனிய ரசனைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
  2. வணக்கம்
   சகோதரி
   உண்மைதான்....

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
 4. கையினைத்துச் சேரும் நாள் விரைவில் வரட்டும் தோழி..கவிதை மிக அருமை!

  தமிழ் காதல் கவிதையில் தேனாய் ஓடுகிறதே...வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி கிரேஸ்!

   உங்கள் இலக்கியத் தேடலுக்கு முன்பாக
   என் கவிதை அப்படி இருக்குமா என்ன?...:)

   காதலைக் கவிதையில் கண்டீர்களா?
   மிகக் கடினமே என்னிடம்!
   வராது என்னிடம் அது எழுதுவதற்கு!..:)
   ஓ!.. //தமிழ் காதல் கவிதையில்// இப்ப புரிந்தது.
   தமிழில் காதல் இல்லையேல் இங்கு எனக்கு வாழ்வே வீணே!..:)

   உங்கள் அன்பு வருகைக்கும் ஆழ்ந்த ரசனைக்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
  2. யாப்போடு அருமையாய் எழுதுகிறீர்களே..
   ஆமாம்..தமிழ்க்காதல் :)

   Delete
 5. அருமைடான படைப்பு..
  பரிசுபெற வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்கள் அன்பு வருகையே எனக்கு மகிழ்ச்சி!
   வாழ்த்தியமைக்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 6. சிறப்பான வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என் தோழியே .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்பாளடியாள்!

   வாருங்கள்! உங்கள் கால் சுகப்பட்டுவிட்டதா?
   கவனம் கொள்ளுங்கள்!..

   உங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி!

   நீங்கள் பங்குபற்றவில்லையா? விரைவில் எழுதிப் பதிவிடுங்கள்! வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

   Delete
 7. இப்படி ஆளாளுக்கு மரபுக்கவிதை யில் கலக்குவதால் தான் நான் தள்ளியே நிற்கிறேன்:)) ரெண்டு கவிதைகளும் அருமை :)) எப்படித்தான் தீர்ப்பு சொல்லபோகிறார்களோ?? எனக்கே தலை சுற்றுது!! கடைசியா இருக்கிற என் பேவரிட் க்வெல்லிங் சூப்பர்!! தோழி வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹ்...சரியா சொல்லிட்டீங்கப்பா....நாங்க ரொம்ம்ம்ம்ம்ம்பவே தள்ளி நிற்கரோம்பா........

   Delete
  2. வாருங்க மைதிலி!..:)

   ஐயோ அப்படியெல்லாம் நான் கலக்கவில்லை. ச்சும்மா எழுதினேன். அவ்வளவே! ஏன்?.. ஏன்?.. நீங்க கூட நல்லாத்தானே எழுதுறீங்க! என்னவொரு கற்பனைத் திறன் உங்களிடத்தில்.. உங்க கவிதைகளும் அருமை அல்லவோ!

   ஒண்ணும் தள்ளி நிக்க வேணாம். போட்டி அது இது எங்கிறதை விட நாமெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கணும். அவங்க கவிதைப் போட்டி நடத்துறாங்கன்னா.. அவங்களுக்கு நாங்களும் நமக்கு தெரிஞ்ச அளவு நாலு வரி எழுதி அனுப்பி அவங்களையும் ஊக்கப்படுத்தணும்.
   இதுதான் என் சித்தாந்தம். ஆக, யோசிச்சுக் கொண்டிருகாம
   சட்டு புட்டுன்னு கவிதைகளை எழுதி இன்னும் 3 நாட்கள்தானாம் அதுக்குள்ள அவங்களுக்கு அனுப்பீடுங்கோ!.. :) சரிதானே!...:)

   ஓடீடாதீங்க...:) வந்து வாழ்தியமைக்கு என் அன்பு நன்றி உங்களுக்கு! அதையும் எடுத்துக்கொண்டு போங்க தோழி!..:)

   க்விலிங் எனது இந்த வலைப்பூ ஆரம்பத்திற்குச் செய்தது.
   மிக்க நன்றி உங்க ஆதரவிற்கும் தோழி!..:)

   Delete
  3. ஹாஆ.. சகோதரரே! தோழிக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்!..:)
   நீங்களும் எழுதுங்க. சீக்கிரம்! ஆவலோடு நாங்களும் இருக்கோம் பார்க்கிறதுக்கு!..:)

   Delete
 8. கவிதைகள் அருமை....... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி!

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி!
   ஒருவேளை பரிசு உங்களுக்காயும் இருக்கலாம்!
   வாழ்த்துக்கள் உங்களுக்கும் சகோதரி!

   Delete
 9. இரு கவிதைகளுமே ஹப்பா மிகவும் அருமை....போட்டி பலமாக உள்ளது போலும்.....வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரரே!

   ஆமாம் நிறையப்பேர் பங்கு கொள்ளுகின்றனர்.
   அருமையாக இருக்கப் போகிறது!

   தமிழ் பரவுகிறது! உறுதியாக இருக்கின்றது!
   மகிழ்ச்சிதான்!

   Delete
 10. velaiku poi viddu vanthu karuthu idukiren.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி!..:)

   Delete
 11. பூக்கூடைக்காரியை ''பா''க்கூடையாக்கிய கவி பாலாடையோடு தேனாய் இனித்ததே....
  *****------------------------------------------------*****
  உயிரில் கலந்து உணர்வாய் வடித்த தமிழ்க்கவி வெற்றி உமதென நான் நினைத்ததே...

  கவிதை அருமையாக இருந்தது பாராட்ட எமக்குமூண்டோ தகுதி என்ற ஐயப்பாட்டுடன்,,, வாழ்த்தும்.
  கில்லர்ஜி

  இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி விட்டீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அட.. உங்கள் ரசனையும் அற்புதம்! அதனோடு கவிவடிவமாய்
   வாழ்த்துகின்றீர்கள்!.. ம்.. அருமை! தொடருங்கள்!
   நாளைய கவிஞர் வரிசையில் உங்களுக்கும் ஓரிடம் உண்டு!

   பதிவேற்றும் போதே அனுப்பிவிட்டேன் சகோ!
   வெற்றி என் நோக்கல்ல... அது எப்படியாயினும் இத்தனை அன்பு நெஞ்சங்களின் ஆழ்ந்த ரசனையும் வாழ்த்துமே
   எனக்கு மிக்க மகிழ்ச்சிதானே!..

   உங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 12. கவிதை மழையில் நனைந்து விட்டேன் அருமை சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் உமையாள்!

   நனைந்தீர்களா? பார்த்து... ஜலதோஷம் வந்துவிடப் போகிறது...:)

   வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 13. அற்புதமான கவிதை ..வாழ்த்துக்கள் ...//கனியினில் இருக்கும் சுவையாய் - என்றும்
  கவிதரும் எங்கள் தமிழே!//
  அருமையான வரிகள்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!...:)

   இங்கு உங்களைக் கண்டதே என் பேறு!..:)
   மனம் மகிழ்வில் துள்ளுகிறது!

   அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி அஞ்சு!

   Delete
 14. என்னருமை அக்கா எழிலான பாவரசி
  சொன்னகவி வென்றுவர சொக்காளே - முன்னிற்பாய்
  சூழும் தடையகற்றி சூடிடவே வெற்றிமாலை
  வாழும் நிலவினை வாழ்த்து !

  வெற்றி உமதே வெற்றி உமதே ...!
  அழகான பாக்கள் அர்த்தமுள்ள வரிகள்
  இரண்டுமே அற்புதம் சகோ

  என்னடா இவன் எல்லோருக்கும் வெற்றி உமதே என்று சொல்கிறான் உண்மையில் யாருக்கு வெற்றி என்று யோசிக்கிறீங்களா ஹி ஹி ஹி

  பொன்வித்தே யாகினும்போ டும்வித் துயிர்கொள்ளின்
  நன்றே விளையும் நிலம் !

  வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. சீராளர் வாழ்த்தினுக்குச் செய்ததவம் நானறிவேன்!
   காராளும் தென்றல் கவின்மழையாம் - வேர்‘ஆளப்
   பெய்த மழை‘‘வித்தைப் பொன்னாக்கப் போதாதோ?
   எய்தகவி வெல்லும் இலக்கு!
   மோதிரக்கையால் குட்டு பெற்றீர்கள் சகோதரி!
   இனியென்ன வெற்றிதான்!
   நன்றி சகோதரி!

   Delete
  2. எனதன்புச் சகோதரரே! சீராளரே!

   சீராளன் இங்குற்று சேர்த்திட்ட வாழ்த்திது!
   பாராளும் மன்னன் பரிசாகும்! - நீராய்
   விளையும் பயிரின்நல் வேராய் இருப்போன்!
   கலையுலகு தந்த கதிர்!

   உங்கள் கவித்துவத்திற்கு முன்
   என் கவிதைகள் எம்மாத்திரம் சகோ!...
   அற்புதமான கற்பனைக் கவிஞன் அல்லவோ நீங்கள்!

   உங்கள் ஆழ்ந்த ரசனை என்னை இன்னும் மெருகேற்றுகிறது!
   வாழ்த்தினிற்கும் மனமார்ந்த நன்றி சகோ!

   Delete
  3. ஐயா!..

   // மோதிரக்கையால் குட்டு பெற்றீர்கள் சகோதரி!
   இனியென்ன வெற்றிதான்!//..

   உண்மைதான் ஐயா!.. :)

   //பொன்வித்தே யாகினும்போ டும்வித் துயிர்கொள்ளின்
   நன்றே விளையும் நிலம் !//

   உள்ளத்தில் ஏற்றிய ஒப்பற்ற கூற்றிது!
   தெள்ளத் தெளிவான தேன்!

   உங்கள் மீள்வருகையும் இனிய கருத்துப் பரிமாறல் கண்டும்
   உள்ளம் பூரித்தேன்!
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 15. கவிதை போட்டிக்கு கடைசித்தேதி எப்பொழுது?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   நாளையுடன் முடிவடைகிறதாம்.
   அறியவில்லையா நீங்கள்?..

   Delete
 16. தமிழும், கவிதையும் ஒருங்கே கொட்டுகிறது. வெற்றி வாகை தாங்கள் சூட வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி உமையாள்!

   நீங்களும் நன்றாகவே எழுதியுள்ளீர்கள்.
   வெற்றி வாகை உங்களை நோக்கியும் வரலாம்!
   வாழ்த்துக்கள் சகோதரி!

   Delete
 17. //அடைத்தாலும் பொங்குவதேன் அற்றைக் கனவு? //

  அருமையான வரிகளுடன் புனைந்த அற்புதமான கவிதை இளமதி! கவிதைப்போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா!

   உங்கள் உணர்வு பூர்வமான புரிதல்கண்டு மெய் சிலிர்த்தேன்...

   அனபு வாழ்த்திற்கு மிக்க நன்றி அக்கா!

   Delete
 18. அசத்தி விட்டீர்கள் இளமதி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள் ஐயா!

   உங்களைப் போன்றோரின் அன்பும் ஆசியுமே
   எனது எழுத்துக்களை உயர்வடையச் செய்கின்றன.

   வாழ்த்தினிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 19. கவிதைகள் அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் குமார்!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 20. அட அட அட கிளம்பிட்டாங்கய்யா கிள்ளம்பிட்டாங்க இன்னும் எத்தனை பேர் கிளம்புறான்களோ. எனக்கு ஒரு தம்பிடி பரிசு கூட கிடைக்க...... விடமாட்டங்க போலிருக்கே நான் என்ன செய்வேன்.
  அப்பிடின்னு சொல்லுவேன் என்று பார்கிறீங்களா அதான் இல்லை. என் அருமைத் தோழிக்கு நிச்சயம் கிடைக்கும். கிடைத்தால் எனக்கு கிடைத்தது மாதிரியே தான். ஹா ஹா ஹா கவிதை கண்டதுமே மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

  ஆருயிரைக்காண வாயிலில் தவம் கிடக்கும்
  ஆரணங்கு இணைவாள் உயிரில் கலந்து ! எனும் இக் கவிதை அருமையானதும் பொருத்தமானதும் நிச்சயம் வெற்றி தங்களுக்கே தோழி! கலக்கிட்டீங்கம்மா கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...! வெற்றி நிச்சயம் தோழி...!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...:) வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க எங்க இனிய இனியா!

   வருகையே அட்டகாசம்தான். மனம் மகிழ்கின்றது!

   நீங்களும் அற்புதமாப் பாடியிருக்கிறீங்களே!..:)
   வெற்றி தோல்வி பரிசு என்பதற்கெல்லாம் மேலாக
   உங்களைப் போன்றோரின் அனபும் ஆதரவுமே எனக்குப் பெரும் உவகை தோழி!

   வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி மா!

   Delete
 21. உயிரான எம்தமிழை உரக்க செய்தாய் -அதை
  உரத்து சொன்னாய் வாழ்க !

  தேனில் குழைத்துஎடுத்து தந்தாயே தீந்தமிழை
  திக்கெட்டும் பரவிடும் நிறைந்து !
  இரண்டுமே அசத்தல் தோழி! பாராட்டுக்கள் தோழி. வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் ....!

  ReplyDelete
  Replies
  1. உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 22. அருமையான கவிதைகள்.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் என் இனிய தோழியே!

   வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி!
   அன்பான வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 23. அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அருமையான ரசனை உங்களது!..
   வரவும் வாழ்த்தும் தருகின்றது எனக்கு மகிழ்ச்சி!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 24. உங்களின் மனதில் உள்ளதை சொல்லிவிட்டீர்கள்.கவிதை அருமை சகோ

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   நீண்ட இடைவெளிக்குப் பின்பு காணுகிறேன்!
   மிக்க மகிழ்ச்சி!
   ஆமாம் சகோ! உள்ளத்தில் உள்ளதுதான் என்னிடம்
   இப்படி வெளிப்படுகிறது. மிக்க நன்றி!

   Delete
 25. போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இளமதி.
  // ஊர்விட்டு உற்றோரைத் தான்விட்டு வேறூரில்
  சீர்கெட்டு வாழ்வுநிலை சென்றதே! – வேர்விட்ட
  நம்மூர்த் திருநாட்கள் நாமிழந்தோம்! எல்லாமே
  நம்கண்ணுள் வாழும் நடந்து!/// எத்துணை யாதார்த்தமான வரிகள்.
  பூக்கூடை உள்ளே பாக்கள் நிரம்பி வண்ணமயமாக்குது.
  //கவியும் குயிலது குரல்போல் இனிமை - காட்டிக்
  குளிர்ந்திடும் எங்கள் தமிழே!// எம்மொழியும் ஈடாகாது ,எங்கள் தமிழ் மொழிக்கு.
  மிக நன்றாக இரு கவிதைகளையும் எழுதியிருக்கிறீங்க இளமதி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு!..

   உங்கள் ஆழ்ந்த ரசனை என்னை மகிழ்விக்கும் சமயம்
   மேலும் வளர வைப்பதற்கான நல்ல ஊக்குவிப்பாக உணர்கின்றேன்!..

   அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி அம்மு!

   Delete
 26. அச்சச்ச்சோஓ தெரியாமல் வந்துட்டேன்ன் இட்ன்க... ஒரே கவிதை மழையாக் கொட்டுதே..... மேலுக்கும் கவிதை கீழுக்கும் கவிதை.. நான் எப்பூடி பின்னூட்டம் போடுவேன்ன்ன்ன் :)

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ... வாங்கோ அதிரா..:)
   மழையோ?.. இங்கையோ? ஓம் இருக்குந்தானே.. இப்ப ஜேர்மனில
   நல்ல மழை!.... குளிரும் சேர்ந்துட்டு..:)))

   Delete
 27. ஆஹா.. கவி உலகில் நீங்க எங்கயோ போயிட்டீங்க... வர வரக் கலக்குறீங்க.. கவிதைப் போட்டியில் வெற்றிபெற மனமார வாழ்த்துகிறேன்ன்ன்..(பரிசில் பாதி தந்திடுங்கோ)).

  இண்டைக்கு சதுர்த்தி எல்லோ பிள்ளையாருக்கும் ஒரு நேர்த்திக் கடன் வைக்கிறன்.. :)

  ReplyDelete
  Replies
  1. கலக்கல் கவிதைன்னு சொல்லுங்கோ..! அப்ப நடுவர்மாரும் கலங்கியெல்லோ போகப்போகினம்..:) கர்ர்ர்....:))

   சரி!... சரீஈஈ பரிசு தந்தால் பாதி உங்களுக்குத்தாறன்.
   வேற ஏதாகிலும் பரிசாத் தந்தால்???..
   (திருவிளையாடல் தருமி பாணியில்...:) ) அதையும் பாதி நீங்க ஏற்கோணும். சரியோ!..:)

   நேர்த்தி வைச்சிட்டீங்களோ?.. மெத்தச் சந்தோஷம்!
   என்னவெண்டு இப்ப சொல்லாதீங்கோ.. சரியோ!..
   பலிக்காமல் போயிடுமாம்...:)

   அன்பு வருகைக்கும் கலாய்ப்புக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி அதிரா!..:)

   Delete
 28. கவிதை அழகு. வெற்றி பெற என் வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா!..:)

   அழகான வாழ்த்திற்கு அன்போடு நன்றி இமா!..:)

   Delete
 29. //நன்மைகள் செய்யும் வண்ணம் - குறள்
  நல்கிய எங்கள் தமிழே!
  உன்னைநாம் மறவோம் என்றும் - மெய்
  உயிரான எங்கள் தமிழே!..//

  கவிதைகள் இரண்டுமே அருமை!..
  வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவும் வாழ்த்துமே எனக்கு என்றும்
   மிகுந்த மன உறுதியை தருகிறது!...

   மிக்க மகிழ்ச்சியுடன் உளமார்ந்த நன்றி ஐயா!!

   Delete
 30. வேர்விட்ட
  நம்மூர்த் திருநாட்கள் நாமிழந்தோம்! எல்லாமே
  நம்கண்ணுள் வாழும் நடந்து!
  அருமை......வாழ்த்துக்கள்..........


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி அனுராதா பிரேம்!.. வாருங்கள்!

   தங்களின் முதல் வருகை இங்கு கண்டு மிக்க மகிழ்ச்சி!

   உணர்வு பூர்வமான ரசனைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete

 31. வணக்கம்!

  பூக்கூடைக் காரியைப் போற்றிக் கவிபுனைந்தார்!
  பாக்கூடை தந்தேன் பாிசாக! - நாக்..கூடை
  மாங்கனியை உண்டதுவே! மங்கை இளமதியார்
  தேங்கவியை வாழ்த்துகிறேன் தோ்ந்து!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பாவேந்தர் வந்திங்கு பார்த்தொரு வாழ்த்தினை
   நாவேந்திக் கூறநலம் நானடைந்தேன்! - பூவேந்திப்
   போற்றினேன்! என்பிறவிப் புண்ணியம் இஃதென்று!
   சாற்றினேன் நன்றியினைத் தாழ்ந்து!

   தங்கள் வரவும் இத்தகையதொரு வாழ்த்தும் கிடைக்கப் பெற
   நான் என்ன தவம் செய்தேனோ?..
   சொல்ல முடியாத பேரானந்தம் கொண்டேன் ஐயா!
   மகிழ்ச்சியில் வார்த்தைகள் தடுமாறுகிறது எனக்கு!

   என் எழுத்துக்கள் இன்னும் உரம் பெறவேண்டும்.
   இதுவரை உங்களிடம் கற்றதே என்னை இவ்வளவுக்கேனும்
   எழுத வைத்துள்ளது. தொடர்ந்து உங்கள் வழிகாட்டலை
   விரும்பிக் கேட்கின்றேன்!

   தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மகிழ்வோடு
   பணிவான என் நன்றி ஐயா!

   Delete
 32. வண்ணப் படதிற்கான பாவும்
  எண்ணப் பகிர்வுக்கான பாவும்
  சிறப்பாக அமைந்திருக்கிறதே!
  வெற்றி பெற வாழ்த்துகள்!
  முடிவுகள் நடுவர்களின் கையில்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!..வாருங்கள் ஐயா!

   தங்கள் வரவும் வாழ்த்துமே எனக்கு பெரும் மகிழ்ச்சி!

   உங்களிருவரின் தூயபணிகண்டு உள்ளம் சிலிர்ந்த்தேன்!
   உன்னதமான தொண்டு!
   வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 33. பூக்கூடைஉள்ளே...தமிழ் கவிதை கொட்டிகிறதே...!!!

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசி!

   அன்பான வரவிற்கும் நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 34. மரபில் கலக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
  கொஞ்சம் எட்டியே நிற்கிறேன்..
  அப்புறம் உங்கள் வண்ணத் தேர்வு
  வெள்ளைப் பின்னணியில் எழுத்துக்கள் படிக்க இலகுவாக இருக்கு ...
  வாய்விட்டு படித்தால் ரசிக்க முடிகிறது...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மரபில் கலக்குகின்றேனா.. நான்? ஐயோ அப்படியெல்லாம் இல்லை. கற்கின்றேன்.. கற்றதை அவ்வபோது கொஞ்சம் இப்படி.. அவ்வளவுதான்!..:)
   எட்டி நிற்குமளவிற்குக் கவிதை புரிதலுக்குச் சிரமமாக உள்ளதோ?.. இலகுவான வார்த்தைகள்தான் இசைத்துள்ளேன்..:)

   தங்கள் நுட்பமான ரசிப்பு உண்மையில் என்னை ஊக்குவிக்கின்றது சகோ!
   பல இடையூறுகளால் பதிலெழுதத் தாமதம் செய்துவிட்டேன்!..

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 35. அழகான கவிதைகள். போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!..
   நீண்ட இடைவெளிக்குப் பின்னர்
   உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி!

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 36. படங்களும் அதற்கேற கவிதையும் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜலீலா அக்கா!

   Delete
 37. முதல் கவிதை மனதைக் கனமாக்கிவிட்டது. இரண்டாவது பாரதிதாசனுக்குப் (கனகசுப்புரத்தினம்) போட்டியாக அமைந்துவிட்டது.

  அருமை !

  வெற்றிபெற்றமைக்கு வாழத்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்களின் முதல் வருகையுடன் இனிய நற்செய்தி வாழ்த்தும்
   தந்தீர்கள்! உள்ளம் உவகையுற்றேன்!

   தங்களின் வாழ்த்துகளுக்கு இங்கே......

   www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html...நன்றி கூறுகின்றேன்!...

   என நன்றியைக் கூறியுள்ளேன்..!
   வாருங்கள்!

   மிக்க நன்றி!..

   Delete
 38. சென்றகவி நன்றெனவே ஒன்றிமன மன்றுரைய
  இன்றுலகக் குன்றிலொளி என்றிடவே - வென்றமதி
  கார்விலகக் கூர்நுதியின் போர்முனைவாள் கீறலிலே
  தூறலிடு வார்தமிழும் பார்!


  வாழ்த்துகள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்களின் இனிய வெண்பா நல்வாழ்த்துக் கண்டு
   உள்ளம் உவகையுற்றேன்!

   தங்களின் வாழ்த்துகளுக்கு இங்கே......

   www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html...நன்றி கூறுகின்றேன்!...

   என நன்றியைக் கூறியுள்ளேன்..!
   வாருங்கள்!

   மிக்க நன்றி!..

   Delete
  2. வணக்கம் ஐயா!

   இன்றுவந்து சொன்னகவி என்றுமென தெண்ணதிலே
   நின்றுதரு கின்றபுகழ் நீண்டதுவே! - கன்னற்பா
   கற்றிடுவேன் விற்பனரே! காற்றுவிசை தோற்கவரும்
   சற்குருவின் சொற்படித்துத் தான்!

   வந்து தந்த வாழ்த்துக் கண்டு கொண்டுவந்தேன்
   சொந்தச் சரக்கு..:)

   ஐயா!.. மீண்டும் அங்கு வந்து வாழ்த்தினால் எழுதலாம் என ஆயத்தப் படுத்தினேன்! அதற்குள் பலருக்கும் கருத்திட வேண்டியதாயிற்று! தாமதமானதற்கு வருந்துகிறேன்!..

   முதல் வாழ்த்தும் முத்தான வாழ்த்தும் உங்களதே!..
   மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 39. Replies
  1. வணக்கம் அஞ்சு!

   உங்களின் அன்பு வாழ்த்துக் கண்டு உள்ளம் உவகையுற்றேன்!

   தங்களின் வாழ்த்துகளுக்கு இங்கே......

   www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html...நன்றி கூறுகின்றேன்!...

   என நன்றியைக் கூறியுள்ளேன்..!
   வாருங்கள் அங்கே!

   மிக்க நன்றி!..

   Delete
 40. தங்கள் கவிதை வென்றதில் வியப்பில்லை. அவை அமுது அல்லவா. அனைவரையும் கவரவே செய்யும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!..

   தங்களின் வாழ்த்துகளுக்கு இங்கே.....

   www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html.. நன்றி கூறுகின்றேன்!...

   என எனது நன்றியைக் கூறியுள்ளேன்..!
   வாருங்கள் அங்கேயும்!

   மிக்க நன்றி!..

   Delete
 41. முதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 42. வணக்கம் சகோதரரே!..

  தங்களின் வாழ்த்துகளுக்கு இங்கே.....

  www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html... நன்றி கூறுகின்றேன்!...


  என எனது நன்றியைக் கூறியுள்ளேன்..!
  வாருங்கள் அங்கேயும்!

  மிக்க நன்றி!..

  ReplyDelete
 43. முதலாவதாய் வந்ததற்கும், முதலாவதாய் வந்து வாழ்த்துச் சொன்னதற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!..

   தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
   தங்களுக்கும் என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

   இங்கே.....

   www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html... நன்றி கூறுகின்றேன்!...

   என எனது நன்றியைக் கூறியுள்ளேன்..!
   வாருங்கள்!

   மிக்க நன்றி!..

   Delete
 44. வணக்கம்
  கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். மேலும் விபரம் பார்வையிட இதோ முகவரி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...: ரூபன்& யாழ்பாவாணன்  இணைந்து நடத்திய  உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!..

   தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

   தங்களின் அயராத முயற்சியின் இனிய பெறுபேறுகளை
   நாம் கண்டோம்! மிக்க மகிழ்ச்சி!
   தங்களுக்கும் என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

   விரைவில் விபரங்களை அனுப்பிவைக்கின்றேன் சகோ!

   இங்கே...

   www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html. நன்றி கூறுகின்றேன்!...

   என எனது நன்றியை அங்கும் கூறியுள்ளேன்..!
   வாருங்கள்!

   மிக்க நன்றி!..

   Delete
 45. ஒன்றாம் பரிசும் உமக்கென்றே கேட்டவுடன்
  குன்றா மகிழ்வுதனைக் கொண்டேன்- நன்றேதான்
  போட்டியிலே போட்டியிட்டு வெற்றிபெறத் தேன்கவிதை
  தீட்டியுள்ளீர் வாழ்த்துகிறேன் ! இன்று

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தீட்டிய ஓர்கவிதை தேர்வு தனைப்பெற்று
   ஊட்டிய நல்ல உயர்வென்பேன்! - கூட்டியது
   இங்கினிமை கூறிய..உம் வாழ்த்தினால் என்மனம்
   பொங்கிற்றே பாரும் பொலிந்து!

   தங்களின் அன்பான வரவுடன் ஊக்கம் தரும்
   இனிய நற்கவி வாழ்த்துக் கண்டு உவகையுற்றேன்!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 46. அந்தப் பெண்ணின் கண்களில தெரியும் எதிர்பார்ப்பை நெடுங்கதையொன்றின் சிறுகாவியமாக்கிப் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோதரி. பாக்களும் பெரும்பாலும் வகையுளி தவிர்த்து வந்திருப்பதும் சிறப்பு. வெண்பாவில் அழகே அதுதானே?
  நிற்க-
  தவறாக நினைக்க வே்ண்டாம். சிறு திருத்தம்-
  ஐந்தாம் வெண்பாவின் “வேற்றூரில என்பதே சரி (தளைப்பிழையும் எழாது சொற்பிழையும் தவிர்க்கப்பட்டுவிடும்)
  அடுத்த விருப்பக் கவிதையும் அழகுதான்.
  இறுதிப் பாவில் “சென்னிறமாக“ என்றிருப்பதை “செந்நிறமாக“ என்று திருத்தினால் நல்ல்து. தங்கள் தமிழார்வம் தழைக்கவும், கவியார்வம் செழிக்கவும் என் இனிய வாழ்த்துகள். பரிசுகள் பெரிதல்ல, பாரதிக்கே இரண்டாம் பரிசுதான் என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். நடுவர்களையும் அந்தந்தச் சூழலையும் பொருத்துப் பரிசுகள் மாறலாம். காலம் நம் படைப்புகளைக் காவியமாய் வரவு வைக்க இந்தப்பரிசுகள் முன்னுரை எழுதக்கூடும். அவ்வளவே. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பெருமகிழ்ச்சி கொண்டேன் நானின்று! உங்கள் வரவு கண்டு!!..

   தங்கள் வரவும் இனிய நற்கருத்துக்களும் என்னை
   இன்னும் ஊக்குவித்து மெருகேற்றும்!..
   அளவில்லா பெரும்பேறு உங்களைப் போன்ற
   அறிஞருடன் இங்கு நானும் பயணம் செய்வது..!

   பரிசு போட்டி என்பதெல்லாம் என் நோக்கமல்ல..
   இதிற் பங்கேற்றபோதே கூறியிருந்தேன்.
   அவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிப்பதோடு என்னையும்
   இப்படிப் பயிற்சி செய்ய நல்ல வாய்ப்பாகக் கொண்டேன்!

   பரிசிற்குத் தேர்வாகியதில் மகிழ்ச்சி கொண்டது இயல்பே!

   நீங்கள் தரும் கருத்துக்களை கண்ணெனத் தாங்குவேன் ஐயா!

   வருங் காலங்களில் என்னைச் சீர்படுத்தும் உளியாக உடன்
   துணையாக வர வேண்டுகிறேன்.

   ஒப்பற்ற உங்கள் வாழ்த்திற்கும் அறிவுரைக்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. நன்றி சகோதரி. தங்களின் படைப்பு மனத்தோடு பண்பு மனத்தையும் கொண்டிருப்பது கண்டு, தலைதாழ்த்தி வணங்கி, வாழ்த்துகிறேன். தங்களுக்குச் சொன்னதுபோல திருததம் சொன்ன இடங்களில் வருத்தம்தான் எனது வரவு! தங்களின் வெற்றிக்குக் காரணம் புரிகிறது. உங்கள் பாக்கள் அருமையாக லாவகமான சொல்நயத்துடனே இருக்கின்றன. அதனால் நான் எல்லாவற்றிலும் தவறு காண்பவன் அல்லன். கண்டதைச் சொன்னதில் தங்களின் பெருந்தன்மை கண்டு இப்போது மகிழ்ச்சியைப் பகிர்கிறேன். தொடரந்து பயணிப்போம் சகோதரி. பாவடிவங்களை இன்னும் எளிமையாக, கூர்மையாக எழுதவேண்டும் என்பதே என் நோக்கம். புதுக்கவிதையும் அவ்வப்போது எழுதுங்கள். பாவகையில் பழகிய கைகள் புதுக்கவிதை எழுதும்போது கிடைக்கும் ஆழமும் அழகும் அறிந்தவரே அறிவர். நன்றிம்மா. தொடர்ந்து எழுதி மென்மேலும் புகழ்பெறுவீர்.

   Delete
 47. அன்புள்ள இளமதி. பரிசு பெற்றதற்கு பலகோடி வாழ்த்துகள். கவிதாயினி என்று நான் சொல்வேன் உன்னை.. அது ஸரியாகவே இருக்கிறது. மெத்த மகிழ்ச்சி.. அன்புடன்

  ReplyDelete
 48. வணக்கம் அம்மா!

  தேடிவந்து வாழ்த்துச் சொன்னீர்கள்!.. மிக்க நன்றி அம்மா!
  எல்லாம் உங்கள் ஆசிதான் அம்மா!

  உங்கள் பதிவுகள் பார்க்க மனதில் எண்ணியும் இன்னும் செயற்படுத்த முடியாது நேரச் சிக்கலில் மாட்டியுள்ளேன். வருவேன்!
  மீண்டும் என் அன்பு நன்றி அம்மா!

  ReplyDelete
 49. கவிதைப் போடடியில் முதலாம் இடத;தைப் பெற்றுக் கொண்டதற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.