Pages

Sep 12, 2014

பொன்விழா வெண்பா!


பொன்விழா நூலில் புனையொரு பாவென்றே
என்னுளம் துள்ள இயம்பினீர்! - என்குருவே!
எண்ணி மகிழ்ந்தேன்! எழுதினேன் நின்புகழை
வெண்பாவில் தேனை விளைத்து!
*********

என்னாசிரியர்
பாட்டரசர் கி. பாரதிதாசனார்
பொன்விழா மலருக்காக எழுதிய வெண்பா!
*~*~*~*~*

என்னை ஒருபொருட்டாய் எண்ணித் தமிழளித்தாய்!
பொன்னை நிகர்த்த புகழீந்தாய்! - மன்னுபுகழ்
பாரதி தாசனே! பாட்டரசே! எந்நாளும்
பாரதிர் பாட்டுன் படை!

போராளி என்பேன்! புடைநாற்ற மண்திருத்தும்
சீராளி என்பேன்! செழுந்தமிழின் - பேராழி
என்பேன்! இனியதமிழ்ப் பாட்டரசே! நீ..என்னுள்
இன்தேன் சுரக்கும் இறை!

யாப்பழகு சொன்னாய்! இனியகவித் தேன்சொட்டும்
தோப்பழகு சொன்னாய்! துணிவேந்திக் - காப்பழகு
செய்யும் செழுஞ்சந்தப் பாட்டரசே! இவ்வுலகுக்(கு)
உய்யும் தமிழுன் உயிர்!

கண்ணன் கழலிணை கண்டு திளைக்கின்ற
வண்ணக் கவிமழையே! வானமுதே! - விண்மதிநான்
கற்றுக் களிக்கின்றேன்! பாட்டரசே! உன்னருளால்
பெற்றுச் சிறக்கின்றேன் பேறு!

கம்பன் கவிகளைக் காதல் புரிந்திங்கு
நம்மின் மொழிகாக்கும் நற்றலைவா! - செம்மையுடன்
பண்டைப் புலமையொளிர் பாட்டரசே! உன்னுடைய
தொண்டைத் தொடர்வோம் துணிந்து!

புலம்பெயர்ந்த நாட்டில் புகழ்த்தமிழ் பாடி
நலம்பொழிந்த நன்மறவா! நாளும் - வலம்வந்து
நற்றமிழைப் போற்றுகின்ற பாட்டரசே! நானோங்க
நற்றுணை செய்வாய் நயந்து!

தனித்தமிழ் நெஞ்சும்! தமிழினம் ஓங்கும்
நனிதமிழ் நல்கிடும் நாவும்! - கனித்தமிழ்
ஆளும் அணியொளிர் பாட்டரசே! உன்னருளால்
மூளும் எனக்குள் மொழி!

மின்வலையில் கண்டேன்! வியப்புற்றேன்! உன்தமிழை
என்மனத்தில் கொண்டேன் இனிப்புற்றேன்! - என்றென்றும்
பாடிப் பரவுகின்ற பாட்டரசே! பண்ணமுதே!
நாடிக் கொடுத்தாய் நலம்!

அஞ்சா அடலேறே! அந்தமிழ்த் தேனாறே!
பஞ்சாய் பறந்து பணியாற்றும் - நெஞ்சோனே!
கொஞ்சும் தமிழ்க்குயிலே! பாட்டரசே! வாழியவே
விஞ்சும் புகழை விளைத்து!

பொன்விழா கண்டனை! பூந்தமிழ் நெஞ்சேந்தி
இன்னுலா சென்றனை! ஈடிலா - என்குருவே!
பாரதி தாசனே! பாட்டரசே! பல்லாண்டு
சீருடன் வாழ்க சிறந்து!

0~~0~~0~~0~~0


46 comments:

 1. வணக்கம்மா. நேற்று தான் உங்களக்காணோமே என்னாவாயிற்று என் எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதில் உங்களின் வாழ்த்து...பா. அருமைமா...தொடரவும்...

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி கீதா!

  தங்களின் உடன் வருகையும் இனிய கருத்துரை கண்டும்
  மிக்க மகிழ்ச்சி!
  அன்பான விசாரிப்பிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

  ReplyDelete
 3. வணக்கம்!

  ஒருபாட்டுக் கேட்டேன்! உயர்தமிழ் பொங்க
  அரும்பாட்டுப் பத்தளித்தாய்! அன்பால் - தரும்பாட்டு
  நெஞ்சுள் புகுந்தாடும்! விஞ்சும் புகழ்சூடும்!
  கொஞ்சும் தமிழைக் குவித்து!

  பொன்விழா நாள்சிறக்க! போற்றும் மலர்மணக்க!
  இன்பலாப் பாக்கள் இளமதியார் - நன்கிசைத்தார்!
  குன்றின் விளக்காகக் கொண்ட தமிழ்கண்டு
  நன்றி நவில்கின்றேன் நான்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பாவொன்றே உங்களுக்குப் பாட வருகையில்
   நாவும் இனிக்கவே நாமகள் - மேவினாள்!
   தேடிய நல்வரம் சேர்ந்ததே! உம்கருணை
   கூடிட..பா யாத்தேன் குவித்து!

   நன்றியைக் கூறவழி நான்கண்டேன்! பாட்டரசே!
   என்றும் உமதருளை ஈந்திடுக! - அன்புநிறை
   எங்கள் குருவே நனிநன்றி! இன்நன்றி
   தங்கத் தமிழ்மொழிக்கும் தான்!

   உங்கள் கற்பித்தலின் பயனாலே
   எனக்கும் இப்படி வெண்பாக்களைப்
   புனைய அறிவு கிடைத்தது மிக்க மகிழ்வே!

   அருமையான வெண்பாக்களால்
   பெருமைதரும் வாழ்த்துத் தந்தீர்கள்!
   என் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
  2. பாராட்டினார் ...............பண்போடு பா இயற்றினீர் அருமை

   Delete
  3. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி

   Delete
 4. பூந்தமிழைத் தானேந்தி
  இன்னுலா சென்றனையே! ஈடிலா - என்குருவே!
  பாரதி தாசனே! பாட்டரசே! பல்லாண்டு
  சீருடன் வாழ்க சிறந்து!

  இன்சுவைக் கனியாய் தித்திக்கும் ஆக்கம்..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!

   அன்பான வரவுடன் இனிமையான பாராட்டிற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 5. அருமையான கவி(தை) வாழ்த்துக்கள், சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   பெருமை தரும் உங்கள் வாழ்த்து!
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 6. பாரதி தாசனே! பாட்டரசே! பல்லாண்டு
  சீருடன் வாழ்க சிறந்து!
  அருமை... சொல்ல வார்த்தைகள் இல்லை
  சிறப்பு சிறப்பு........
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   அழகாகக் கருத்தெடுத்துக் கூறினீர்கள்!
   மனம் நிறைந்த நன்றி சகோதரி!

   Delete
 7. மிகவும் அருமையான கவிதை...
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் குமார்!

   உங்கள் அன்பான வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 8. ஆசிரியருக்கு அருமையான ஒரு பா எழுதி சமர்ப்பித்து விட்டீர்களே! ...அழகிய தமிழ் வரிகளால் மாலை கோர்த்து செப்பிவிட்டீர்...

  எங்களுக்கு வார்த்தைகள் இல்லை புகுந்து விளையாட.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் அன்பான கருத்துக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!
   இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 9. மரபிலக்கணத்துடன் புனையும் பாடல்களுக்கே தனி அழகு. மவுசு. பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் வருகையும் வாழ்த்தும் காண
   மிகவே மகிழ்வாயுள்ளது!

   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 10. அன்பின் ஆசிரியருக்குத் தாங்கள் சமர்ப்பித்த தமிழ் மாலை - அருமை!.. தங்களின் குரு பக்தி வாழ்க!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவும் வாழ்த்தும் தொடர்ந்த விருதுப் பகிர்வும் கண்டு
   நான் வானத்திற் பறக்கின்றேன்!..
   மிக்க மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 11. வெண்பா எழுத விளையாட்டாய் வந்தவென்
  கண்‘உம் கவிகண்டு கற்றிடுதே! - விண்மதியும்
  ஆக்கவரி தாக்கிடுபா நோக்குமுயிர் தேக்குதலால்
  தூக்கவிழிப் பூக்குளுறை தீ!
  அருமை சகோதரி!
  வேறென்ன சொல்ல..................................???!!!
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ஏக்கக் கவிபாடல் ஏனோ கவிஞரே!
   ஆக்கப் புயலுமை ஆய்ந்தறிந்தேன்! - ஊக்கம்
   தருகின்ற பண்புமிகு சான்றோரே! உம்மாற்
   பெருமையொடு கொள்வேனே பீடு!

   உங்கள் கவியாக்கத்திற்கு முன்னால் நானெல்லாம் எம்மாத்திரம் ஐயா!

   உங்கள் இரசிப்பு என்னை ஊக்குவிக்கின்றது!
   அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 12. அருமையான வாழ்த்துப் பா
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 13. இதை புகழ்கிற அளவு நமக்கு திறமை இல்லையென்றாலும், ரசிக்கும் மனம் இருக்கிறது!!! அருமையாக உள்ளது தோழி!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   உங்கள் இரசனையே என் பேறல்லவோ!..
   புகழ்ச்சியெல்லாம் எனக்கு வேண்டாம்!
   நான் எழுதுவது எல்லோருக்கும் புரிந்தாலே பெரிய வெற்றிதானே! மிக்க மகிழ்ச்சி தோழி!
   அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி!

   Delete
 14. அருமையான கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு!

   Delete
 15. ஆகா!
  'செழுந்தமிழின் பேராழி' அருமை! பா முழுவதும் ரசித்தேன் தோழி!
  உங்கள் திறம் கண்டு வியந்து வாழ்த்துகிறேன்!
  பதிலுக்கும் பதில் பாவாக வருகிறதே... அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி கிரேஸ்!

   மீண்டும் மீண்டும் அதே!...:)

   உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 16. ஆஹா.....அருமையான வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும்!

   Delete
 17. அன்புடையீர்..
  விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   என்னை ஒருபொருட்டாய் இங்கு விருதுகந்தீர்!
   என்நன்றி சொன்னேனே ஏற்று!

   வந்து பார்த்துக் கருத்திட்டேன் ஐயா!
   எப்படி என் நன்றியை உங்களுக்கு நான் சொல்ல?..

   உளமார்ந்த இனிய நன்றி ஐயா!

   Delete
 18. சிறந்த ஆசானுக்கு
  தகுந்த வரிகளால்
  தொகுத்த பாமாலை
  நெஞ்சில் புகுந்து இனிக்கிறது சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   நலமாக இருக்கின்றீர்களா? வலைத்தளத்தில் மீண்டும் உங்களைக் காண்பது மட்டற்ற மகிழ்ச்சி!

   உங்கள் கவித்துவமும் எனக்குப் பிடித்தமான ஒன்றே!
   வலையில் எழுதுங்கள்! காத்திருக்கின்றேன் படிப்பதற்கு...:)

   அன்புவரவிற்கும் இனிய வாழ்த்து வரிகளுக்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 19. பாவேந்தர் நற்புகழை பாடும் கவிகண்டால்
  பூவேந்தி கொண்டாடும் பொன்விழா - நாவேந்தி
  நானும் நவில்கின்றேன் நற்கவியே உம்திறமை
  வானளவு கொண்ட வளம் !

  இனிய பாக்கள் சகோ அருமை அருமை

  பொன்விழாக் காணும் எங்கள் ஆசான் கி. பாரதிதாசன் ஐயா அவர்களுக்கு வாழ்த்தும் நெஞ்சங்களுடன் .......நானும் நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீராளன்!

   பாவேந்தர் பாராட்டும் பண்பான பாவலரே!
   நாவேந்தும் நின்புலமை நானறிவேன்! - பூவேந்திப்
   பாரதி தாசரை வாழ்த்துவோம்! பார்க்கட்டும்!
   சீரதை இவ்வுலகும் சேர்ந்து!

   உங்கள் வரவும் உன்னதமான கவிதை வாழ்த்துங் கண்டு
   உவகை கொண்டேன்!
   உங்கள் கவிமாலையைக் காண ஆவல்!.. பதிவிடுங்கள்!
   அன்பு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரரே!

   Delete
 20. ஆசானை அருமை வரி எடுத்து வாழ்த்திய இளைய நிலாவுக்கு நாமும் வாழ்த்துவோம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி சந்திரகௌரி!

   உங்கள் வருகையும் நீண்ட காலத்திற்குப்பின் இங்கு!...

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி! மிக்க நன்றி சகோதரி!

   Delete
 21. ஆசானுக்கான நன்றியுணர்வு பெருகி வழியும் கவிதை
  படிக்கவும் , பகிரவும் அருமையாக இருக்கிறது சகோதரி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மது!

   தன்னலமற்ற சேவை புரிகின்றவர்கள் அல்லவா?
   இது ஒரு இனிய சந்தற்பமே..:)

   மகிழ்வோடு படித்து மனதார வாழ்த்தினீர்கள்!
   என் உளமார்ந்த இனிய நன்றி சகோ!

   Delete
 22. அன்புச் சகோதரியே உங்கள் வளர்ச்சி கண்டு உள்ளம் பூரித்து
  நிற்கின்றது !என்றேனும் ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்புக்
  கிட்டினால் அதை என் பாக்கியமாகக் கருதுவேன் .சிறந்த
  பாவரிகளால் சிந்தையைக் குளிர வைத்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள் பாப் புனைந்த தங்களுக்கும் அருமைப் பாவலர்
  எங்கள் ஐயா பாரதிதாசனுக்கும் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய சகோதரி!

   எம்மை ஈன்ற பெற்றோருக்கு நிகராக அறிவுக் கண்களைத் திறக்கும் ஆசான்களும் அடங்குவர்.
   எங்கள் கவிஞரின் இனிய வழி கட்டலாலேயே ஏதோ இவ்வளவுக்கேனும் என்னால் எழுத முடிந்தது.
   உங்களைப் போன்றோரின் அறிவாற்றற் படைப்புகளுக்கு முன் நான் மிகச் சாதாரணமானவளே!

   காலம் கை கொடுக்கும்போது காண்போம் சகோதரி!
   உங்கள் கால் குணமாகிவிட்டதா? கவனம் கொள்ளுங்கள்!

   இனிய வரவுடன் அன்புக் கருத்துக்களுக்கும்
   என் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 23. வணக்கம்
  சகோதரி
  செவ்விய வரிகள் என் சிந்தையை சீற்றெடுக்க
  ஆசானின் அறிவுகண் திறக்க
  அழகிய வரிகள் விழாக் கோலம் போட
  சிக்கித்தவிக்கிறேன் பதில் சொல்ல
  தெரியாமல் ....
  அற்புதமான பாமாலை... பாடிய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் இனிய நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.