Pages

Oct 6, 2014

சிப்பிக்குள் முத்தொன்று!..

பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் விடயத்தில் தாய்மையும் ஒன்றாகும்!
அந்தத் தாய்மைப் பேற்றினை அடைந்து மகப்பேற்றுக்கு முன்
நிகழும் வளைகாப்பு வைபவத்தினைக் காணும்
என் உறவினத் தேவதையை
வாழ்த்தி எழுதிய வாழ்த்துக் கவிதைகள்!
~~~~~~~


வளைகாப்புச் சூடுகின்ற வண்ண மலரே!
சுளைகாப்புச் சொற்களால் வாழ்த்துகின்றேன்! சூழும்
குடிசெழிக்க வாழ்க! கொழிக்கின்ற அன்பாம்
கொடிசெழிக்க வாழ்க குளிர்ந்து!
~~~~~~~~


பூக்கள் சூடும் திருநாளாம்!
பொலியும் இன்பப் பெருநாளாம்!
ஈக்கள்  ஆடும் சோலையென
இல்லம் மணக்கும் கொண்டாட்டம்!
பார்க்க இனிக்கும் வளைகாப்பு!
பரமன் திருத்தாள் அருங்காப்பு!
வார்க்கும் இன்ப வாழ்த்துக்கள்!
வாழ்க! வாழ்க! பல்லாண்டு!
~~~~~~~~~~~~~~~


முத்தொன்று சிப்பிக்குள் முளைவிட்டதோ!
முந்நூறு நாட்களிலே முகம்பார்க்கவோ!
கொத்தோடு மலர்சூடிக் கொண்டாடுவோம்!
கோகிலமே நீவாழப் பண்பாடுவோம்!

உற்றாரும் உறவுகளும் உனைவாழ்த்தவே!
பெற்றிடுவாய் ஒருமகவை மகிழ்வாகவே!
இத்தரையில் காத்திடுக சிலவாரமே!
சித்திரமே! உன்கையில் ஒருசிற்பமே!

பெற்றாக வேண்டும்நீ பேறுபலவே!
நற்றாயின் புகழேந்தி காண்கநலமே!
வற்றாத வண்டமிழாய் வாழ்வோங்கவே!
நற்பாவில் வாழ்த்துகிறேன் வாழ்கவாழ்கவே!

பிள்ளைமொழிக் கனியமுதை உண்கஉண்கவே!
பேரின்பம் இதுவென்றே எண்கஎண்கவே!
தில்லையவன் நல்லருளைச் சூழ்கசூழ்கவே!
திகட்டாத இன்பத்துள் ஆழ்கஆழ்கவே!
~~~~~~~~~

முன்பு நான் செய்த க்விலிங் படத்துடன் 
கூகுளில் பெற்ற சில படங்களையும் இணைத்துள்ளேன். 
கூகுளிற்கும் என் நன்றி!

60 comments:

 1. ''..பார்க்க இனிக்கும் வளைகாப்பு!
  பரமன் திருத்தாள் அருங்காப்பு!
  வார்க்கும் இன்ப வாழ்த்துக்கள்!...''
  காட்சியின் வருணனை வரிகளில் நேர் அனுபவம்.
  நல்ல படங்களும் வரிகளும். இனிய வாழ்த்து.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சகோதரியே!..

   உங்களின் முதல் வருகையுடன் இனிய இரசனைமிக்க
   அன்பு வாழ்த்துக்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 2. வளைகாப்பு வைபவத்தினைக் காணும் தங்களது உறவினர் பெண்ணுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.
  அழகான கவிதையை நல்வாழ்த்தாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சொல்லாடல். க்விலிங் அழகு. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மு! வாங்கோ!..

   உங்கள் அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி அம்மு!
   அந்தக் க்விலிங் சென்ற வருடமும் இங்கு போட்டதுதான்.
   புதிதாகச் செய்ய நேரம் கிட்டுதில்லை. பார்ப்போம்!
   மிக்க நன்றி அம்மு!

   Delete
 3. அருமையான வாழ்த்துப்பா!..
  மகிழ்ச்சி.. நலம் வாழ்க!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் அன்பு வாழ்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 4. முத்தான வாழ்த்து மலர் சூடிய முழுநிலவே உயர்
  சத்தாக விளங்கும் இவ் வாழ்த்து உன்றன் தோழிக்கும் !
  வாழ்க வாழ்க தாயும் சேயும் தரணி போற்ற !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி! வாங்கோ!

   கொத்துமலர் அள்ளிச் சொரிந்தாற்போல்
   அத்தனை மகிழ்வாக இருக்கின்றது உங்கள் வாழ்த்து!

   மிக்க நன்றி தோழி!

   Delete
 5. மிக அருமையா அழகான வாழ்த்து பா ..
  உங்கள் உறவின தேவதை பெண்ணுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
  அவர் மிகவும் கொடுத்து வைத்தவர் .வேறெந்த பரிசுபொருளை விடவும் இது மிக சிறந்தது .
  ..ஒரு சின்ன யோசனை இப்போ உதித்தது .
  இதை ஸ்க்ரோல் (ஓலை )போல வண்ணத்தாளில் பிரிண்ட் எடுத்து தங்க நிற நூலை கட்டி அவருக்கு பரிசாக அளியுங்கள் .
  அவர் காலத்துக்கும் பாதுகாப்பார் :) BABY ஸ்க்ராப் புக் செய்யும்போதும் அவருக்கு உபயோகப்படும்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!

   உங்கள் அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி அஞ்சு!

   அருமையான யோசனைதான். நானும் இப்படிக் கூகிலில் பார்த்திருக்கின்றேன். அழகழகான பல டிசைன்களில் இருக்கின்றன. பார்க்கின்றேன்.
   அப்படியே பிறின்ற் செய்து கொடுக்கின்றேன்!.
   நல்ல யோசனை தக்க நேரத்தில் தந்தீர்கள்..:)

   ஹாஆ!.. அத்தோடு மேலே இரண்டு படங்களும் தேடித் தந்தமைக்கும் மிக்க நன்றி அஞ்சு!..:)

   Delete
 6. அருமையான வாழ்த்துப்பா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வணக்கம்!

   இரசனைக்கு மிக்க நன்றி!

   Delete
 7. வணக்கம் சகோ இளமதி !

  பிள்ளைக்கு !

  துளிகருவாய் தூங்காக் கருவறையுள் மூடி
  வெளியுலகை யாசிக்கும் வீரம் - வெளிப்படும்
  நன்நாளில் வாழ்த்துகிறோம் நல்வரவா கன்னையிவள்
  இன்புறும் சீமந்தம் ஏற்று !

  தாய்க்கு !

  தாயுள்ளம் காண்கின்ற தாரணியே உன்னுயிரின்
  சேயும் செழிப்பாய் பிறந்தபின் - நேயம்
  அடைந்திட நித்திலமா ளும்கலை ஊட்டு
  கொடையன்பு ஆளக் குடி !

  கவிஞர் இளமைதிக்கு !

  பாராளும் பாக்கள் படைக்கும் கவியாற்றல்
  சீராக்கும் செந்தமிழைச் சேர்ந்து !

  அனைத்தும் அருமை படித்தேன் ரசித்தேன் சகோ
  தாய்மை அடையும் அந்த தாய்க்கும் பிறக்கப்போகும்
  மழலைக்கும் வாழ்த்துக்கள் நீடூழி வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க நூறாண்டு !  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீராளன்!

   தாய்க்கும் மகவிற்கும் தந்திட்ட நற்பாக்கள்!
   வேய்ங்குழற் கீத விருந்து!

   அட.. அட..என்னவொரு இனிமையான வெண்பாக்கள்!
   மிக மிக அருமை!

   உங்கள் வெண்பா வாழ்த்துக்களைப் பெறுவதற்காகவே
   தினமொரு பதிவு இட நினைக்கின்றேன்!

   உங்கள் அன்பான வெண்பா வாழ்த்துகளுக்கு
   என் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 8. ஆஹா! வெகு காலம் கழித்து க்வேளிங் வேலைபாட்டுடன் கூடிய அழகிய வாழ்த்து!!! மிக்க மகிழ்ச்சி தோழி!! வரிகள் மிகமிக அருமை. தோழி கிரேஸ் உங்க ஊருக்கு போறாங்க:) அங்கு வந்தால் உங்களை பார்க்கவேண்டும்னு ஆவலா சொல்லிக்கிட்டு இருந்தாங்க:) கூடிய சீக்கிரம் நட்பு நெஞ்சங்கள் சந்திக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மைதிலி!..

   ஐயோ!.. இது சென்ற வருடம் செய்து இங்கே பதிவிட்ட
   க்விலிங் கைவேலை தோழி!

   இப்பெல்லாம் புதியது ஏதும் செய்யவே நேரம் கிட்டுதில்லை.
   தவிர சில உடல் நலக் குறைபாடும் காரணம்.. பார்ப்போம். முயற்சிக்கின்றேன்!..:)

   புதிய இனிய தகவலும் சொல்லியிருக்கீங்களே..:)
   எப்போ வாறாங்க?.. முற்கூட்டியே சொல்லுங்க..
   அதே நேரம் நான் வேறேதாகிலும் விடயங்கள் இருந்தால் அவற்றை ஒதுக்கி வரவேற்க ஆயத்தமாவதற்கு..

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்துக்கும் நல்ல செய்தி பகர்ந்தமைக்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
  2. குறைந்த பட்சம் ஒரு வருடம் அங்கே இருப்பார்கள் என நினைக்கிறன்:)) உங்களை தொடர்பு கொள்ளச்சொல்கிறேன்:)

   Delete
 9. வளைகாப்பு வாழ்த்துப்பா அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பான வரவிற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 10. குவீலிங் ராணி இளமதி! அற்புதமான வாழ்த்துப் பாக்களை படைத்த்துள்ளீர்கள். மரபின் இனிமையை ரசித்தோம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே! வாங்கோ!..:)

   க்விலிங்க் ராணியோ நானோ?.. அவ்வ்வ்.. வரும்போதே இப்படியா..:)
   ஐயோ இப்பெல்லாம் புதியதேதாகிலும் செய்து பார்க்கவே நேரம் கிட்டுதில்லை.
   நீங்க வேற இப்படிக் காலை வாராதீங்க சகோ!..:)

   உங்கள் அன்பான வரவுடன் கலகலப்பான கருத்தினையும் மிகவே இரசித்தேன்!
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 11. முத்தொன்று சிப்பிக்குள் முளைவிட்டதோ!
  முந்நூறு நாட்களிலே முகம்பார்க்கவோ!
  கொத்தோடு மலர்சூடிக் கொண்டாடுவோம்!
  கோகிலமே நீவாழப் பண்பாடுவோம்! அருமை அருமை !

  வண்ண மலர்ப் பூங்கொத்தாய்
  வடித்தாய் ஒரு வாழ்த்து!
  எண்ணங்கள் இனித்திடவே
  ஏந்திடுவர் வளைகாப்பு !
  தாய்க்கும் சேய்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி ...!
  மேலும் மேலும் தங்கள் புகழ் ஓங்கவும் மனமார வாழ்த்துகிறேன்...!.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனியாத் தோழி!..:) வாங்கோ!

   வண்ணவண்ணப் பூக்களாய் வார்த்தீரே நல்வாழ்த்து!
   எண்ணவே என்றும் இனிப்பு!

   உங்கள் அன்புக் கவி வாழ்த்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete

 12. வணக்கம்!

  மைவளை கண்கள் மயங்கி மகிழ்வேந்தும்!
  கைவளை மின்னிக் களிப்பூட்டும்! - தைவளம்
  பூக்கும் பொழிற்காட்சி! பொற்றாயைப் பிள்ளையைக்
  காக்கும் கருணைக் கடல்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வளையென வார்த்தை வசப்பட்ட வெண்பா!
   மழையெனக் கண்டேன் மகிழ்வு!

   மிக மிக அருமையான சொற்பதங்கள்!
   வளைகாப்பிற்காகவே மைவளை, கைவளை! அற்புதம் ஐயா!

   உங்கள் அன்பான வருகையுடன் இனிய வெண்பா வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 13. உங்கள் உறவினர் கொடுத்து வைத்தவர். இப்படி வலைக்காப்புமாலையை தொடுத்து அவர்களுக்கு சூடியுள்ளீர்களே.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் அன்பான வரவிற்கும் இனிய இரசனைக்கும்
   மிக்க நன்றி!

   Delete
 14. உறவுப்பெண்மணிக்கு கவிதை மூலம் வாழ்த்து சொல்ல முனைந்த நல்ல உள்ளம் உங்களுக்கு! அந்த நல்ல உள்ளத்தின் வெளிப்பாடாய் அமைந்த கவிதையும் மிக நன்று!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மனோ அக்கா!

   உங்கள் அன்பு என்னை ஊக்குவிக்கும் மருந்து!
   வரவிற்கும் நல் இரசனைக்கும்
   உளமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 15. வணக்கம்
  சகோதரி
  என்றென்றும் நலமுடன் வாழட்டும் உறவுப் பெண்மணிக்கு வார்த்த வார்தைகள் எல்லாம் மலர் மாலையாக அமைய எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ரூபன்!

   உங்கள் அன்பு வாழ்த்தும் தருவது பெரு மகிழ்வே!
   மிக்க நன்றி சகோ!

   Delete
 16. கவிதைகள் அருமை.

  வளைகாப்பு கண்ட உறவுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் வரவிற்கும் நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 17. அழகிய வாழ்த்துக் கவிதை... வாழ்த்துக்கள் இளமதி - நீங்க எங்கயோஓஓஓஓஓ போயிட்டீங்க... அதுசரி உந்த போட்ட குயிலையே மீள் குடியிருப்பு செய்யப்படாது சொல்லிட்டேன்ன்ன்.. புதுசா செய்து போடோணும்... அட்திராவைப் போல :).. என்னா முறைப்பூஊஊஊஉ.. அஞ்சு ... யெல்ப் மீஈஈஈஈ... இளமதி முறைக்கிங் மீஈஈ... :).

  ReplyDelete
  Replies
  1. உத்தரவு கொடுங்க இளமதி :) குண்டு பூனையை புடிச்சி மூட்டை யில் போட்டு கடல் மார்க்கமா உருட்டி விடறேன் ..ரைன் ரிவரில் பார்த்து புடிச்சிக்கோங்க

   Delete
  2. வாங்கோ அதிரா!

   கவிதை இரசிப்புக்கு மெத்தச் சந்தோஷம்!..:)
   க்விலிங் பழையதுதான்.. புதுசு செய்ய நேரமில்லை.
   முடியுதுமில்லை!..:0
   பார்ப்போம்! திரும்ப முயற்சி செய்து!..:)

   உங்கள் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி அதிரா!

   ஹாஆ..! அஞ்சு!.. பாவம் அதிரா!
   இப்ப ரைன் றிவர்ல நல்ல குளிர்!..
   அடுத்த கோடை வரட்டும்!...:)
   இப்ப விட்டுடுங்கோ.. மன்னிச்சு!...:))

   Delete
 18. வாழ்த்துப்பா வெகு அருமை இளமதி.
  உங்கள் உறவு அனைத்து நலமும் பெற என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஓ.. வாங்கோ இமா!

   ரொம்பக் காலத்திற்குப் பின்னர் உங்களைக் காண்கிறேன்..:)
   சுகமாக இருக்கிறீங்களோ?..

   உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி இமா!

   Delete
 19. Replies
  1. வணக்கம் ஐயா!

   வரவிற்கு மிக்க நன்றி!

   Delete
 20. எல்லோரும் வாழ்த்தும் இனிய மனம்கொண்டீர்!
  நல்லார்‘உம் வாக்குற்ற நற்றாயும் மெல்லுயிரும்
  பல்லாண்டு வாழ்கவெனப் பண்பாடி வாழ்த்திடுமே
  தொல்லாண்ட தூய தமிழ்!

  அருமையான உங்கள் தமிழ் வாழ்த்து தாய்சேய்க்கு அனைத்து நலன்களையும் அளிக்கும் அம்மா.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வரும்போதும் போம்போதும் வாராதே ஒன்றும்!
   தரும்வாழ்த்து நல்லுவகை தான்!

   தங்கள் அன்பான வரவோடு உளம் நிறைக்கும் இனிய
   கவிவாழ்த்துக் கண்டு மனம் மிக மகிழ்ந்தேன்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 21. நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 22. இல்லம் மணக்கும் கொண்டாட்டம்/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 23. வளைகாப்பு வைபவம் பற்றிய யாப்பு அருமை இளமதி தோழியே. உங்கள் க்வில்லிங்க் படங்களும் அருமை. ஆரோக்கியமான நல்ல மகவைப் பெற அப்பெண்ணுக்கு வாழ்த்துகள். :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி தேனம்மை லக்ஷ்மணன்!
   தங்களின் முதல் வருகை இங்கு கண்டு
   மட்டற்ற மகிழ்வடைகின்றேன்!

   இனிய இரசனையுடன் நல்வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 24. அருமை தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா!

   மிக்க நன்றி தோழி!

   Delete
 25. நாங்களும் வாழ்த்துகிறேம் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 26. கவிதை அருமை!

  முத்தொன்று சிப்பிக்குள் முளைவிட்டதோ!
  முந்நூறு நாட்களிலே முகம்பார்க்கவோ!//

  ஆஹா அழகு வரிகள்! க்வில்லிங்க் மிக மிக அருமை!

  எப்படி இது எங்கள் வலைத்தளத்தில் அப்டேட் ஆகாமல் விட்டது எனத் தெரியவில்லை. எப்படியோ பல வலைததளங்கள் மிஸ் ஆகிவிடுகின்றன! தாமதத்திற்கு மன்னிக்கவும்!

  ReplyDelete
 27. எங்கள் வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   எனது பதிவே அன்று முதலில் கூகில் டாஷ்போர்டில்
   காண்பிக்கவில்லை! கிட்டத்தட்ட அரை மணி நேரத்தின்
   பின்பே காட்டியது. அவ்வகையில் சிலருக்கு காட்டவில்லைப் போலும்!
   இரசிப்பிற்கும் வாழ்த்துவதற்கும் தாமதம் என்றில்லை!

   இதுவே உள நிறைவைத் தருகிறது!
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 28. முத்தொன்று சிப்பிக்குள் முளைவிட்டதோ!
  முந்நூறு நாட்களிலே முகம்பார்க்கவோ!
  கொத்தோடு மலர்சூடிக் கொண்டாடுவோம்!
  கோகிலமே நீவாழப் பண்பாடுவோம்!

  வாழ்த்துக்கள். வளைகாப்பு சிறப்புற மனம் நிறை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்கள் அன்பு வருகையுடன் இனிய இரசனையும்
   வாழ்த்துங் கண்டு மகிழ்வடைந்தேன்!

   மிக்க நன்றி சகோதரி!

   Delete
 29. பார்க்க இனிக்கும் வளைகாப்பு!
  பரமன் திருத்தாள் அருங்காப்பு!
  வார்க்கும் இன்ப வாழ்த்துக்கள்!
  வாழ்க! வாழ்க! பல்லாண்டு!//
  வாழ்த்து கவிதை அருமை.

  வளைகாப்பு நடந்த உங்கள் உறவினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  மகவு நல்லபடியாக பிறந்து தாயும், சேயும் நலமாய் வாழ இறைவன் அருள் புரிவான். உங்கள் வாழத்துக்கள் மற்றும் நம் அனைவர் வாழ்த்தும் நலம் தரும்.

  ReplyDelete
 30. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
 31. என் இனிய நல்வாழ்த்துக்களும் அவருக்கு

  ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.