Pages

Dec 7, 2014

இன்னோர் ஆண்டில் இளையநிலா!..


எங்கள் தமிழர் மூச்சானாய்
இனிய தமிழே! என்னுயிரே!
திங்கள் போன்றே குளிர்மைதரும்
தேனே! அமுதே! பேரழகே!
பொங்கும் மகிழ்வை எந்நாளும்
பொழியும் சந்தக் கவிமழையே!
சங்கம் வளர்த்த என்தாயே!
தலைமேல் தரித்து வணங்குகின்றேன்!

மூன்றாம் ஆண்டில் இளையநிலா
முயன்றே வந்தாள் பாருங்கள்!
ஆன்ற கருத்தை அழகாக
அள்ளி அன்பாய்க் கூறுங்கள்!
ஊன்றாய் உங்கள் கருத்துக்கள்
உயர்த்தும் என்னை வாழ்வினிலே
ஈன்றாள் அன்னை இனியவளாய்
என்றன் மூச்சு தமிழுக்கே!
~~~0~~~


  என்னினிய தோழி 
அதிரா
~~~~~


அன்பின் உருவாம் என்அதிரா!
ஆக்கித் தந்தாள் இவ்வலைப்பூ!
என்றன் நிலையை நன்குணர்ந்தே
இணைத்தாள் என்னைப் பதிவுலகில்!
கன்னற் பேச்சுக் களிப்புடனே
காண்போர் மகிழச் செய்திடுவாள்!
என்றன் தோழிக் கென்நன்றி!
இனிதே வாழ்க பல்லாண்டே!
---0---

~~~~~~

கம்பன் கழக நற்றலைவர்!
கவிதை பாடும் பெரும்மறவர்!
செம்பொன் தமிழைத் தம்முயிராய்ச்
சிறக்கச் செய்யும் மொழித்தொண்டர்!
எம்மின் ஈழப் பற்றுடையார்!
இனிய கவிதை வழிகாட்டி!
இம்மை வாழ்வில் உள்ளவரை
ஈவேன் நன்றி மலர்களையே!
---0---

இந்த ஆண்டுத் தமிழர்களின்
இன்னல் யாவும் தீராதோ?
சொந்தம் இழந்து நிற்போர்க்குத்
துணையாய்க் கைகள் சேராதோ?
கந்தல் சாதி வெறியாட்டம்
கால்கள் உடைந்து போகாதோ?
வந்த பிறப்பின் நிலையெண்ணி
மனத்துள் மாண்பு மலராதோ?

நல்ல நல்ல கவிதைகளை
நாளும் எழுத எண்ணுகிறேன்!
சொல்ல இனிக்கும் கருத்துகளைச்
சுவையாய்ப் பேச முயலுகிறேன்!
வெல்லப் பாகாய் வினையாவும்
விளைய வேண்டி உழலுகிறேன்!
வல்ல இறைவன் திருவருளால்
மெல்ல வளரும் இளமதியே!

முள்ளும் கல்லும் தாமகற்றி
முறையாய்ப் பாதை சமைத்திடவும்!
கள்ளக் கபட உலகத்தைக்
கணக்காய் மாற்றி அமைத்திடவும்
உள்ளம் என்னும் கோயிலிலே
உயர்ந்த தமிழின் விளக்கிட்டேன்!
கிள்ளும் துன்ப இருள்நீக்கிக்
கிழக்காய் அழகு விரிந்திடவே!

ஊறும் உணர்வு தமிழாக
உடனே இருந்து எனைவளர்த்தீர்!
கூறும் உங்கள் நற்கருத்தால்
கொண்டேன் வளர்ச்சி இதுவரைக்கும்!
ஆறும் கடலும் சேர்வதுபோல்
அன்பில் கலந்து திளைக்கின்றேன்!
வேறு வேண்டல் ஏதுமிலை!
விழிநீர் பொங்கும் நன்றிகளே!
__()__


படங்கள்: நன்றி கூகிள்!

82 comments:

 1. இனிய வாழ்த்துக்கள் இளமதி. இன்னும் நிறைய நல்ல கவிதைகள் படைத்திட்டு சாதனை படைத்து, ஐயாவின் புகழ் பரவ, பெருமை சேர்க்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். அத்துடன் எங்கள்நண்பி அதிராவுக்கும் வாழ்த்துக்கள். அவரின் இவ்வுதவியினால் நானும் பலனடைந்தவள். நன்றிகள் அதிரா.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ முருகாஆஆஆஆஆஆ என்ன நடக்குதிங்கே:)

   Delete
  2. வணக்கம் அன்பு நிறை பிரியசகி!

   அன்போடு வந்தே அருந்தமிழில் வாழ்த்தளித்தீர்
   என்னுயிர் நன்றி இசைத்து!

   உங்கள் அன்பான முதல் வரவுடன் இனிய வாழ்த்துக் கண்டு
   உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது!.

   அதிராவினாற்தான் நான் இவ்வலையுலகிற்கே வந்தேன்!
   என் வளர்ச்சியிற் காணும் மகிழ்ச்சிக்கு முக்கியமானவர்
   அன்புத்தோழி அதிராவே!
   நானும் உங்களுடன் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன் அம்மு!

   என் தமிழறிவு வளர்ச்சி, கவிதை ஆற்றும் முயற்சி உயர்விற்குக் கவிஞர் ஐயாவின் கற்பித்தலும் ஊக்கமும் முக்கிய காரணம்!
   அவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்!..

   எனக்கு வலையுலகில் மேலும் உறுதுணையாக இருக்கும்
   அன்பு வலையுறவுகள் யாவருமே என் நன்றிக்குரியவர்கள்!..

   எல்லோருக்கும் இதயம் நிறைந்த இனிய நன்றி!!!

   உங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றி அம்மு!

   Delete
  3. // ஹையோ முருகாஆஆஆஆஆஆ என்ன நடக்குதிங்கே:)..//

   அதிரா!.. என்ன நடந்ததா?.. இதுக்குத்தான் அடிக்கடி கண்ணைக் கொஞ்சம் திறந்து பார்க்க வேணும் எண்டு சொல்லுறவை!..
   நிறையப் பேர் உங்களையும் இங்கை விசாரிச்சிருக்கினம்!..:))

   Delete
 2. வாழ்த்துக்கள் சகோதரியாரே
  எழுத்துலகப் பயணம் இனிதே தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்ச்சி கொண்டேன்!

   தங்களின் ஆதரவிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 3. அழகிய தமிழில் நன்றிக்கவிதை அருமை வாழிய பல்லாண்டு வாழ்க வாழ்கவே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்போடு வந்து ஆதரவு தந்து வாழ்த்துகின்றீர்கள்!
   என்றென்றும் என் நன்றி உங்களுக்கு!

   Delete
 4. வாழ்த்துக்கள் சகோதரி ...
  இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த பதிவுலகின் பட்டது அரசியாக இருக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மது!

   பட்டத்து அரசி பட்டமெல்லாம் வேண்டாம்..!
   படைப்புகளுக்கு ஓர் அங்கீகாரம் கிட்டினால்
   அதுவே பெரும் மகிழ்வு எனக்கு!..:)

   அன்பிற்கும் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 5. நிறைந்த வாழ்த்துகள்.
  மேலும் வளர்ந்து புகழ் பெற வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்களின் அன்பும் இடையறாத வாழ்த்தும்
   என்னை மேலும் உயர வைக்கும்!

   இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி!

   Delete
 6. மேலும் மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பான வாழ்த்திற்கும் நல் ஆதரவிற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 7. மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ....

  மேலும் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்!

   தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு மட்டற்ற
   மகிழ்வைத் தருகிறது!..

   சகோ!.. தங்கள் பயணத்தொடரில் இடையில் நான் நிற்கின்றேன்.. விரைவில் வந்து இணைந்து கொள்வேன்!

   தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 8. வாழ்த்துக்கள் சகோ.
  தங்களுடைய கவிதைப்பயணம் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!..

   தங்களின் அன்புமிகு வாழ்த்திற்கும்
   நல் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 9. என்றும் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி...
  வாழ்த்துக்க்கள்...
  கவிதைகள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரர் குமார்!

   தங்கள் தொடர் ஆதரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும்
   நிறைந்த மனதுடன் என் நன்றி சகோ!

   Delete
 10. என்னைப்பற்றிய கவிதைதானே கேட்டேன்ன்.. :) இது நன்றி எல்லாம் சொல்லி என்னை ரொம்பவும் ஷை ஆக்கிட்டீங்களே!! இது நீதியாஆஆ?:) ஞாயமா?:) இது அடுக்குமோ?:) பூமி தாங்குமோஒ?:).. ரொம்ப ஷை ஷை ஆஆஆ வருதே.. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா!

   அன்பாலே ஆளும் அரசியே உன்’உறவைக்!
   கண்ணெனக் காப்பேன் கனிந்து!

   ...:)

   Delete
 11. சரி அதை விடுங்கோ.. நான்கு, அழகிய தமிழ்க் கவி எழுதி, 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறீங்கள்... வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவி எழுத்து...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பினாலும் ஆதரவினாலுமே இன்று இந்த இளையநிலாவின் இத்தகைய பிரகாசம்!..:)
   வாழ்விலே துவண்டு கிடந்த என்னை எழுந்து பார் இனிமை எங்கெல்லாம் இருக்கின்றது எனக் கைபிடித்து இழுத்து
   இவ் வலையுலகில் இணைத்தவர் நீங்களன்றோ!..

   உங்களாற்தானே வலையுலகப் பதிவர் எனும் தகுதியை அடைந்தேன்..! தொடந்து எனது தமிழ்மொழி உயிர் மூச்சு ஐயாவின் உதவியாற் கவிதையாகப் பிரவகித்தது.!

   என் வெற்றி, மகிழ்ச்சி எல்லாவற்றிலும் உங்களுக்கும் பங்குண்டு அதிரா!
   உங்கள் எல்லோரின் அனபும் ஆதரவும் என்னைத் தொடர்ந்து வலையுலகில் இருந்திட வைக்கும்! கைசேர்த்து உங்களுடன் பயணிப்பேன்!..

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி அதிரா!

   Delete
 12. இம்முறை புத்தாண்டுக்கு கவிதையோ? குயில் வேலை எதுவும் இல்லையோ? ஏதாவது ட்ரை பண்ணுங்கோ.. நாளிருக்குதுதானே...

  ReplyDelete
  Replies
  1. ம்.. முயற்சிக்கின்றேன் அதிரா!..:)

   Delete
 13. மூன்றாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
  கவிதைகள் அருமை.
  தோழிக்கும், குருவுக்கும் கவிதை அருமை.தாய்நாட்டின் நலம் மீண்டும் திரும்பும். இருள் நீங்கி ஒளி பரவும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ கோமதி அக்கா!

   தங்கள் அன்பு என்னை இன்னும் உயரவைக்கும்!..

   உளமார்ந்த வாழ்த்திற்கு இனிய நன்றி அக்கா!

   Delete
 14. நல்ல நல்ல கவிதைகளை
  நாளும் எழுத எண்ணுகிறேன்!
  சொல்ல இனிக்கும் கருத்துகளைச்
  சுவையாய்ப் பேச முயலுகிறேன்!
  வெல்லப் பாகாய் வினையாவும்
  விளைய வேண்டி உழலுகிறேன்!
  வல்ல இறைவன் திருவருளால்
  மெல்ல வளரும் இளமதியே!..

  இன்னும் பலநூறு தமிழ்ப் பாக்களை வடித்திட வேண்டும்..

  அன்பில் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்புடன் உற்ற உறவுகளாய் நீங்கள் எல்லோரும் இருக்க
   என் எழுத்துகள் இன்னும் வளரும்!

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 15. வாழ்த்துக்கள் சகோ...

  பொங்கு கவிதை வந்திட
  பொங்கி பொங்கி தந்திட
  அள்ளி அள்ளி பருகிட
  ஆசைத் தோழி தந்திட

  மேலும் இனிதாய் பயணம் தொடர்ந்திடட்டும்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   அன்பும் ஆதரவும் என்றும் இப்படிப் பொங்கிடத்
   தங்கு தடையில்லையே தமிழிற்கு!..:)

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 16. புதிய பதிவு நகைச்சுவையா ? என்னானு தெரியலை.வந்து காணவும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டேன்.. களித்தேன்!..:)
   நன்றி சகோதரரே!

   Delete
 17. இன்னும் எழுதுவீர் ஏராளம்! உம்கவியால்
  மின்னும் தமிழின் முகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   இன்னும் எழுத இறைவன் அருளோடே
   அன்பினாலும் ஆகும் அது!

   உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ!

   Delete
 18. வாழ்த்துக்கள் தோழி.
  மேலும் பல்லாண்டுகள் எங்களைக்
  கவிதை மழையில் நனைத்து மகிழ வையுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   அன்போடு வந்து அருணா சொரிந்திட்ட
   மென்பூவோ வாழ்த்தோ வியப்பு!

   உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு
   உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது தோழி!..

   நீண்ட இடைவெளியின் பின் இங்கு உங்களைக்
   கண்டதும் திகைத்துவிட்டேன்!..

   அன்பிற்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 19. மூன்றாம் ஆண்டில் இளையநிலா
  முயன்றே வந்தாள் பாருங்கள்!
  முத்தான வாழ்த்துகள்...பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு
   அகம் மிக மகிழ்ந்தேன்!
   மிக்க நன்றி சகோதரி!

   Delete
 20. வாழ்த்துக்கள் அன்புத்தோழி! இன்னும் பல ஆண்டுகள் பல கவிதைகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டி வாழ்த்துகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்பு தோழி கிரேஸ்!

   உங்கள் அன்பான வரவுடன் இனிய வாழ்த்துக் கண்டு
   மனம் மிகவே மகிழ்கின்றேன்!

   அன்பிற்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 21. வணக்கம் !

  தங்கத் தமிழால் மனமினிக்கும்
  தாயே !வளர்க வளர்மதியாய் !
  மங்காப் புகழும் மகிழ்வுதரும்
  மானே மனம்போல் தொடர்ந்திடுவாய் !
  எங்கும் தமிழின் உயர்வதனால்
  ஏற்றம் பெறுதல் எமதுகடன் !
  வங்கக் கடல்போல் வளர்மதியே
  வற்றாது பொழிவாய் தமிழ்நதியை !

  வாழ்த்துக்கள் என் ஆருயிர்த் தோழியே ஆண்டுகள் பலநூறு
  கடந்தும் உன்றன் சேவை தங்கத் தமிழிற்கும் தேவை .ஆதலால்
  என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இந்நேரம் தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் தோழி .
  என் அன்புச் செல்வங்களின் பரீட்சை நேரம் இப்போது ஆரம்பித்துள்ள
  காரணத்தால் வலைத் தளத்திற்கு வருகை தருவது இயலாத காரியமாக உள்ளது முடிந்தவரைத் தங்களின் ஆக்கங்களை வாசித்தும் மகிழ்வேன் கருத்துகள் இடாத போதிலும் அவ்வப்போது தங்களின் ஆக்கங்களைக்
  கண்டு மகிழ்ந்தவண்ணமே தான் உள்ளேன் தோழி .உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத் தோழியே!..

   விருத்தப்பா கொண்டே மிகவாக வாழ்த்தி
   இருந்தீரென் உள்ளத்தில் இன்று!

   தங்கத் தமிழைக் கற்பித்துத்
     தந்தார் பாரதி தாசனையா!
   இங்கெம் உயர்வின் காரணமாய்
     என்றும் உள்ளார் சிறப்புறவே!
   பொங்கும் கடலின் ஆழமதைப்
     போன்ற கவிதை நுட்பங்கள்!
   எங்கள் வாழ்வில் பயிலுதலே
     ஏற்றம் பெருகும் வழியாமே!

   தோழி!.. நேரம் அரிதானபோதிலும் இங்குற்று வாழ்த்தினீர்கள்!
   உங்கள் அன்பு வாழ்த்தில் உள்ளம் நெகிழ்ந்தேன் நான்!

   குறையேதும் இல்லைத் தோழி! நிதானமாக வாருங்கள்!
   நானும் ஒன்றும் அவ்வளவு வேகமாகப் பதிவேற்றுபவள் இல்லையே!
   உங்கள் செல்வங்களின் வளர்ச்சி, அவர்களின் படிப்பும் மிகமுக்கியம்! அவர்களை முதலிற் கவனியுங்கள்!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கு
   என் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 22. தமிழ்கூறும் நல்லுலகு உள்ளமட்டும் -அன்பே
  அமிழ்தாய் பலகவி பா!

  வாழ்த்துகள் தோழி!! நான் உங்களை வாழ்த்த தான் வந்தேன். நீங்க வெண்பா கேட்பீங்களே:)))

  ReplyDelete
  Replies
  1. அமிழ்தாய் பலகவி தா!
   அப்படினு தான் எழுத நினைத்து தப்பா எழுதிட்டேனே:((

   Delete
  2. அன்புத் தோழி மைதிலி!

   அன்புடன் இட்டீர் அழகிய வாழ்த்தொன்று
   இன்பமே கண்டேன் இணைத்து!

   உங்கள் அன்பு வாழ்த்து மட்டுமே
   என் கண்களுக்குத் தெரிகிறது தோழி!..

   ஆமாம்..வெண்பா எங்கே ?...

   வெண்பா விரும்ப விருந்தே தருவீரே!
   அன்போடு தாரும் அமுது!

   அன்பிற்கு உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
  3. இந்தமுறை உங்களுக்கு இன்பம் வழங்கவில்லையோ
   வந்துநான் விருப்போடு நல்கிய இக்குறள்ப்பா!
   தெவிட்டாது தேன்போல் அகம்நிறைந்த நம்நட்பும்
   தேயாது இன்பமும் காண்!

   Delete
  4. நன்றி தோழி!
   அகத்தினிற் கொண்டேன் அறிந்து!..:)

   Delete

 23. வணக்கம்!

  மூன்றா மாண்டில் இளமதியார்
    மொழிந்த கவிதை சுவைத்திட்டேன்!
  தோன்றா வண்ணக் கற்பனைகள்
    துள்ளி ஆடும் எழிற்கண்டேன்!
  ஆன்றோர் அணிந்த அணியெல்லாம்
    அழகாய் மின்னச் சொக்குகிறேன்!
  சான்றாய் எதனைச் சொல்லிடுவேன்
    தழைத்து வாழ்க பல்லாண்டே!

  எங்கும் தமிழை இசைத்திடுக!
    இனத்தின் மேன்மை காத்திடுக!
  பொங்கும் கவிதை பொழிந்திடுக!
    புலமை மணக்கப் புகழ்பெறுக!
  தங்கும் வளத்தில் தழைத்திடுக!
    சான்றோர் போற்றச் செயற்படுக!
  தொங்கும் வண்ணத் தோரணமாய்த்
    தொடர்க வலைப்பூ பல்லாண்டே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வலைதனிற் படைப்பும் ஓங்க
     வகைபல செய்வர் இன்று!
   சிலையதன் சிறப்பாம் அழகு
     செறிந்திடத் தருவர் சிற்பி!
   மலைப்புடன் உலகே நோக்க
     மகிழ்வுறக் கவிதை நல்கும்
   கலைமகள் கருணைப் பேறே
     கவிஞரே! உங்கள் வாழ்த்தே!

   உளந்தனில் உவகை கூட
     உடனிருந் தூட்டிக் கல்வி
   களம்பல காண என்னைக்
     கவிஞராய் உலவச் செய்தீர்!
   வளம்மிகும் மொழியைக் கற்றே
     வலையினிற் பதிவை ஏற்றிப்
   பலன்பெறும் பெருமை யாவும்
     படைக்கிறேன் நன்றி என்றே!

   அன்புடன் இங்குற்று இனிமைதரும் விருத்தப் பாமாலையால்
   எனை வாழ்த்தினீர்கள் ஐயா!
   நான் கொண்ட மகிழ்விற்கு எல்லை இல்லை!.

   எனது இந்த வளர்ச்சி, அதன் பெருமை யாவும்
   உங்களையே சாரும்!
   எனக்குள் இருந்த மொழிப்பற்றும் உணர்வும் இப்பொழுதான் சரியான பாதையிற் பயணிப்பதாய் உணருகின்றேன்!

   இன்னும் கற்றுத்தேற ஆவலுடையேன் ஐயா!
   காலம் துணைவர வேண்டும்!

   தங்கள் அன்பு வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 24. தோழி ஆதிராவுக்கு முதல் நன்றியை நானும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களால் தானே தங்களின் அறிமுகம் எங்களுக்கு கிடைத்தது. முத்தான அடிகளை முன்வைத்தே நான்காம் ஆண்டைத் துவங்க வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   உண்மை! நானும் உங்களைப் போன்ற இத்தனை அருமை
   நட்புகளைப் பெற்றது அதிராவின் அரிய முயற்சியாற்தான்!..

   அன்புத் தோழி அதிராவுக்கும் சேர்த்திட்ட வாழ்த்திற்கு
   என் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 25. இன்னும் பல பல ஆண்டுகள் இனிதே எழுதிட வாழ்த்துக்கள், சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி ரஞ்சனி!

   தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மெய் சிலித்துப் போனேன்!

   மிக்க மிக்க நன்றி சகோதரி!

   Delete
 26. //முள்ளும் கல்லும் தாமகற்றி
  முறையாய்ப் பாதை சமைத்திடவும்!
  கள்ளக் கபட உலகத்தைக்
  கணக்காய் மாற்றி அமைத்திடவும்
  உள்ளம் என்னும் கோயிலிலே
  உயர்ந்த தமிழின் விளக்கிட்டேன்!//
  மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள் இள‌மதி!! இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மனோ அக்கா!

   வந்ததும் வாழ்த்துத் தந்ததும்
   கொண்டது மனம் மிக மகிழ்வு!

   மிக்க நன்றி அக்கா!

   Delete
 27. இனிய வாழ்த்துகள் இளமதி. ஊற்றெனப் பெருகும் உயரிய பாக்கள். சந்தம் கூட்டிப் பாடவைக்கும் இன்னிசை வரிகள். உங்கள் நா பாடும் தமிழின் பெருமை அறியாமலே இருந்திருப்போம் வலையென்று ஒன்று உங்களுக்காய் இல்லாது போயிருந்தால். ஏற்படுத்தித் தந்த அதிராவுக்கும் ஊக்கத்துடன் உங்களை தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்களுக்கும் அன்பார்ந்த நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். கொஞ்சுதமிழ் பாக்களுக்காய் காத்திருக்கிறோம் நாங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புக் கீதமஞ்சரி!

   இளையநிலா இளைத்திடாமற் காக்கும் உங்கள்
   அன்பு என்னைத் திணற வைக்கின்றது!..

   என் நன்றி என்றென்றும் அதிராவுக்கும் எங்கள் கவிஞர் ஐயாவுக்கும் இனிய வலையுறவுகள் உங்கள் யாவருக்கும்
   என்றும் உடையது!..

   ஆதரவுதரும் உங்கள் எல்லோரின் உளம் நிறைய எழுதும் ஆற்றலை ஆண்டவன் தர வேண்டுகிறேன்!
   முயலுகின்றேன்!!!

   உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி கீதமஞ்சரி!

   Delete
 28. கன்னித் தமிழில் கற்கண்டு
    கவிதை படைக்கும் சொற்கொண்டு
  என்றும் அமிழ்தை உட்கொண்டு
    எழுத்து சமைத்தீர் நட்புண்டு!
  கன்னல் சுவையின் விற்கொண்டு
    கருத்தை வீழ்த்தும் நற்பெண்டு
  அன்னை மொழிக்கு நற்றொண்டு
    அளிப்பீர் தொடர்வேன் பற்றுண்டு!

  இருட்டை வெளுக்க ஒளியுண்டு
    இயக்க இயல்புத் தமிழுண்டு!
  குருட்டுக் கவிகள் ஏலாத
    கொள்கை கொள்ளுந் திறமுண்டு!
  பொருட்டாய் மரபைக் கற்பிக்கப்
    பாரதி தாசக் கவியுண்டு!
  விரட்டி இணையம் வெல்லுதற்கோ
    வழியில் அதிரா துணையுண்டு!
  -------------------------------------------------------------------------------------------
  வெற்றிகள் வாழ்வில் சேரும்!
    விதிகொடு வலிமை மாற்றி
  நெற்றியில் முத்த மிட்டு
    நலமுற வாழ்த்திப் போகும்!
  சொற்றிறம் கண்டே அன்னைச்
    செந்தமிழ் மடியில் வீழ்ந்து
  நற்றிறப் பாடல் கேட்க
    நிதமுங்கள் அண்மை வேண்டும்!

  வளமதி வானில் தேயும்!
    வாழ்கதிர் சுருக்கங் காணும்!
  தளர்வுறும் உடலும் ஓர்நாள்
    தணலிடை நீறாய்ப் போகும்!
  குளமொரு உயிரு மின்றேல்
    கொக்குகள் இடத்தை மாற்றும்!
  இளமதி உங்கள் பாக்கள்
    இருந்திடும் என்றும் வாழும்!

  வான்தொடு புகழின் வாசம்
    வடிக்கும்‘உம் கவிதை வீசும்!
  நான்தொடத் தமிழின் சொற்கள்
    நடமிடும் நான்நீ என்று
  தான்வரும் என்னைக் கொண்டு
    தமிழிள மதியார் இன்று
  மூன்றொரு ஆண்டைத் தொட்ட
    முயற்சியைப் பாடச் சொல்லும்!

  அன்னையே தமிழே இந்த
    அற்பனோ உன்னை வேண்டி
  இன்றொரு காலம் மட்டும்
    எதையுமே கேட்டே னில்லை!
  குன்றிலே விளக்காய் இந்தக்
    குவலயம் போற்றும் வண்ணம்,
  வென்றிள மதியார் பாடல்
    வாழ்ந்திட விதிசெய் வாயே!

  காற்றேயெம் மலையே நீரே
    கருத்திலா வானே தீயே
  நேற்றிலே இருந்தார் தம்மை
    நிழலென ஆக்கும் ஊழே!
  ஆற்றலைக் காலின் கீழே
    அடக்கியே வெல்லும் கூற்றே!
  தோற்றிள மதிக்குத் தொண்டு
    செய்யுவீர் தமிழ்மேல் ஆணை!

  சகோதரி ! தாங்கள் பதிவிட்டதைத் தற்போதுதான் அறிந்து மிகத் தாமதமாக வருகிறேன் மன்னிக்க!
  நட்ட நடு இரவில் வேகமாகத் தங்களின் பின்னூட்டத்தில் நேரடியாகத் தட்டச்சுச் செய்து போகிறேன்.
  பிழைகள் நேரும் என்ற கவலையில்லை.
  நீண்ட நாட்களுக்குப் பிறகு சரளமாக எழுத அருளினீர்கள்.
  உங்கள் எழுத்து அதைச் சாதித்தது.
  நான் இதை மீளப்பார்த்துத் திருத்தப் போவதில்லை. அது வேண்டியும் இராது என்கிற அதீத நம்பிக்கை எனக்கிருக்கிறது.
  பாரதிதாசன் அய்யா, சகோதரி அதிரா மற்றும் உங்கள் வளர்ச்சியில் இத்துணைகாலம் இருக்கின்ற இனிவரும் காலங்களிலும் உங்களோடு இணைய இருக்கின்ற அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும்!
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பு வாழ்த்து விருத்தப் பாக்கள் கண்டு
   மலைத்த நிலையில் நிற்கின்றேன்!..

   பதில் என்ன எழுதுவது எனத் தெரியவில்லை!..

   இப்போது என் உளமார்ந்த இனிய நன்றியை மட்டும் இங்கு இட்டுள்ளேன்! மீண்டும் வந்து கருத்திடுவேன்!..

   மீண்டும் மீண்டும் அன்புடன் என் நன்றி ஐயா!

   Delete

  2. வணக்கம்!

   இலக்கணச்செல்வா் சோசப் அவா்களின்
   விருத்தங்களைப் படித்துச் சொக்கிப் போனேன்.
   ஊற்றின் துள்ளல்,
   காற்றின் தழுவல்,
   ஆற்றின் அழகு நடை
   பாட்டில் படைத்த ஆற்றலைப் போற்றி மகிழ்கின்றேன்.

   மழைபோல் வாழ்த்து மலர்பொழிந்த
     மாண்பார் கவிஞர் விசீ.சோசப்!
   இழைபோல் பின்னி அளித்ததமிழ்
     இதயம் புகுந்து மணக்கிறது!
   கழைபோல் இனிமை! படர்ந்துள்ள
     தழைபோல் பசுமை தாம்கொண்டு
   குழைபோல் ஆடும் விருத்தங்கள்!
     குவித்தேன் என்றன் கைகளையே!

   கவிஞா் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
  3. வணக்கம் ஐயா!

   இளமதி இவளை வாழ்த்தி
     இட்டனை விருத்தப் பாக்கள்!
   உளமதில் உவகை கூடி
     உரைத்திட வார்த்தை காணேன்!
   வளர்நிலை கொண்ட மாது
     வழங்கினேன் நன்றி மட்டும்!
   நிலமதில் நீடு வாழ்வீர்
     நீள்புகழ் சேர நன்றே!

   இணைத்தவும் இனிய வாழ்த்து
     இருக்குமே இனிமை சேர்த்து!
   துணைக்கெனத் தோழர் உண்டு
     துயரமும் தொடுமோ நின்று!
   அணையென வலையிற் சேர்ந்து
     அவனியில் அவலம் போக்கு!
   பிணைத்துயெம் கைகள் கோர்த்து
     பெருக்குவோம் மொழியைக் காத்தே!

   உலகினில் வாழும் மட்டும்
     உணருவேன் உங்கள் நட்பு
   நிலமதை இழந்து நாமும்
     நிர்க்கதி ஆனோம் வாழ்வில்
   பலமென உளதாய் நீவிர்
     பகர்திடும் உணர்வு கண்டே
   வலம்வரும் நிலவு என்றும்
     வணங்கியே கரங்கள் சேர்த்தே!

   நன்றியைக் கூறத் தாமதம் செய்தேன் ஐயா!.. பொறுத்தருள்க!..

   விருத்தப் பாமாலை தந்த இனிமை என்னைப் புளகாங்கிதமடைய வைத்துவிட்டதையா!..
   இத்தனை புகழ்ச்சியாய்க் கூற, ஏற்க இவளுக்குத் தகுதி
   இங்கு என்ன உண்டு?.. என என்னை நானே கேட்கின்றேன்..!

   அன்பின் மிகுதியால் ஆர்த்தெழுந்து அலையெனப் பெருகிய
   வாழ்த்து என்னை அப்படியே தூக்கி மலையுச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது!!! எப்படி நன்றி உரைப்பேன்???..

   உங்களனைவரின் அன்பு என் பணி இன்னும் இங்கே
   இருக்கின்றதென உணர்த்துகிறது.!

   நம்பிக்கையைக் காப்பேன் முயன்று!
   நினைப்பது மட்டும் என் செயல்!
   நிகழ்த்துவது இறை சித்தம்! உங்கள் அனைவரின் அன்பிற்கு
   எப்படிக் கைமாறு செய்வேன்..?..!!!

   கண்கள் மல்கக் கரங்கள் கூப்பி வணங்குகின்றேன் ஐயா!
   கற்றிட வேண்டும் இன்னும்.. காணவில்லை வார்த்தைகளை மேலும்..!

   இங்குற்று வாழ்த்திய உங்களுக்கும்
   எமது ஆசான் கவிஞர் ஐயாவிற்கும்
   அன்பு வலையுலக உறவுகளுக்கும்
   என் உளமார்ந்த நன்றியும் வணக்கமும் வாழ்த்துக்களும்!

   Delete
 29. இளமதி,

  இனிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மேலும்மேலும் உங்களின் கவிதைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி சித்ரா!

   தங்களின் இனிய வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்கின்றேன்!

   மிக்க நன்றி சகோதரி!

   Delete
 30. அன்புச் சகோதரி,

  வாழ்த்துகிறேன்.

  அதிரப் பொருதல் தும்பைப்பூ
    அதிரா அமைத்தார் உம்வலைப்பூ
  முதிரும் எழுத்தில் முகிழ்க்கும்பூ
    முயன்று பெற்றேன் உம்நட்பு
  விதியின் பிடியில் வாழ்க்கைப்பூ
    விட்டு விடாத எழுத்துப்பூ
  உதிரும் விருத்தம் மத்தாப்பு
    உளமே கொள்ளும் கித்தாப்பு!

  மூன்றே ஆண்டில் முடிசூடி
    முதலாய் ஆனாய் கவிதையிலே
  சான்றாய் ஆனாய் மரபிற்கே
    செந்தமிழ் உதவும் நட்பிற்கே
  ஆன்றோர் அறிஞர் வாழ்த்தற்கே
    அரும்பொருள் உரைத்தாய் எல்லோர்க்கே
  ஈன்றாள் மகிழ்வாள் இளமதியே!
    ஈக இன்னும் கவிமழையே!


  தமிழன் வாழ்வு சிறந்திடவே
    தரணி போற்ற வாழ்ந்திடவே
  தமிழாய் என்றும் இருந்திடவே
    தனியாய் நாடு கண்டிடவே
  அமிழ்தாய் ஈழம் வென்றிடவே
    அன்று அமைதி அடைந்திடவே
  தமிழ்த்தாய் துணையாய் இருந்திடவே
    தமிழ்ப்பா கொண்டு வாழ்த்துகிறேன்!.  நீவிர் வாழ்க பல்லாண்டு!

  நன்றாய்ச் செய்க தமிழ்த்தொண்டு!

  -மாறாத அன்புடன்,

  மணவை ஜேம்ஸ்.

    

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கொத்தெனப் பூக்கள் கொய்து
     குளிர்ந்திடச் சொரிந்த தேபோல்
   இத்தனை இனிய பாக்கள்
     இட்டெனை மகிழச் செய்தீர்
   சித்தமும் சிலிர்க்க என்னை
     சிறையிடும் உங்கள் அன்பு
   இத்தரை வாழ்வில் நானும்
     எண்ணியே போற்று வேனே!

   உற்றநல் உறவும் இங்கே
     உள்ளனர் என்றே கண்டு
   பெற்றிடும் உவகை மேவ
     பிதற்றிடும் நிலையைப் பாரும்!
   நற்றவம் செய்தேன் நானே
     நன்றியை உவந்தே தந்தேன்!
   வற்றிடா உங்கள் அன்பால்
     வளர்ந்திடும் நிலவும் நன்றே!

   அன்போடிங்குற்று அருமையான விருத்தப் பாமாலையால் என்னை வாழ்த்தினீர்கள் ஐயா!
   உள்ளம் கொள்ளும் உவகையை உரைக்க
   வழி தெரியாது நிற்கின்றேன்!

   கரங்கூப்பி மன நிறைவோடு
   என் நன்றியைக் கூறுகின்றேன்!

   இத்தகைய அன்புள்ளங்களை வலையுறவாக
   இந்த இளையநிலா பெற்றது பெரும் பேறே!
   என்னை வளர்க்கும் தமிழன்னைக்கு என் தலைதாழ்ந்த
   வணக்கமும் நன்றியும் என்றும் சொல்லிக்கொள்வேன்!

   இளையநிலாவை உதயமாக்கிய அன்புத்தோழி அதிராவுக்கும்
   தமிழறிவூட்டிக்கொண்டிருக்கும் கவிஞர் ஐயாவுக்கும்
   உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும்
   என் உளமார்ந்த நன்றி!

   Delete
  2. மிக்க நன்றி.

   Delete
 31. வாழ்த்துக்கள் இளமதி..இன்னும் பல ஆண்டுகள் வலையுலகில் வலம் வர அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு மகி! வாங்கோ! நலம்தானே!
   குட்டி இளவரசி எப்படி இருக்கின்றாள்?..

   உங்களின் வரவே என் மனம் நிறைத்தது மகி!
   என் வளர்ச்சியும் வலையுலக வலம் வருதலும் அன்புள்ளங்களாகிய உங்களாற்தான்!..:)

   மிக்க நன்றி மகி வாழ்த்திற்கு!

   Delete
 32. இன்னோராண்டில் எடுத்தடி
  வைக்க வாழ்த்துகிறேன் தோழி!
  கண்ணில் காணும் கனவுகள்
  யாவும் பலிக்கட்டுமே தோழி!
  மண்ணில் உந்தன் மகிமைகள்
  மேலும் சிறக்கட்டுமே தோழி!

  எண்ணங்கள் நன்றாய் எடுத்தாளும் சொல்வண்ணம்
  பொன்னாய் பொறித்திடும் பூவுலகில் நின்றாளும்
  கண்ணாய்நீ எண்ணும் கவிதை கடலையே
  வென்று கடக்கவென் வாழ்த்து !

  வாழ்த்துக்கள் பலதோழி ....!
  பிழையை சுட்டிக் கட்டுங்கள் ok வா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய இனியா!

   எடுத்தே அடிவைத்த இன்னொரு ஆண்டும்
   கொடுக்கட்டும் மேன்மை குவித்து!

   வென்று கடக்க விருப்போடு நீவரவே
   சென்றே றிடலாம் சிகரத்தில்! - என்றும்
   இனிய இனியாவே என்தோழி என்றால்
   கனியாகும் காலமே காண்!

   உங்கள் வாழ்த்தும் அன்பும் கூடவே வரும்போது
   கடந்திடுவேன் விரைவில் இடையூறு அனைத்தையும்!..:)

   அருமையான வெண்பா வாழ்த்துக் கண்டு
   மனம் மகிழ்வில் திளைக்கின்றது!
   மிக்க மிக்க நன்றி தோழி!

   Delete
 33. வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.!!!நான் அன்னிக்கே கமெண்ட் போட்டேனே !எங்கே போச்சு எனக்கு பூஸார் மேலே டவுட் கர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!..

   நன்றி நன்றி வாழ்த்திற்கு மிக்க நன்றி அஞ்சு!

   //அன்னிக்கே கமெண்ட் போட்டேனே !எங்கே போச்சு.. //
   எப்போ போட்டீங்க இதுக்குமுன்பு..:0
   ஒரு இடமும் காணலியே நான்..!

   ஐயோ பூஸார் பாவம்.. !
   அவங்க ஒண்ணும் பண்ணலைப்பா..:)

   Delete
 34. இளையநிலா! - நீ
  புதிய நிலாவல்ல
  எங்கள் தமிழுக்கு...
  இரண்டு கழிந்து
  மூன்றில் காலடி வைக்கும்
  குழந்தை நிலாவல்ல...
  சீருக்கு சீர் - நல்ல
  தமிழ்ச் சொல்லெடுத்து
  மரபுப் பாபுனைந்து
  தமிழ் வளம் மின்ன
  பதிவுகளைப் பகிரும்
  இளையநிலா தொடர்ந்தும்
  தமிழில் பழுத்த நிலாவாக
  பல்லாண்டுகள் தொடர
  வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பாவாணர் வாழ்த்துப் பலகோடிப் பொன்னென்பேன்
   பூ!..ஆரம் போலே பொலிந்து!

   தங்களின் அன்பான வரவுடன் இனிய வாழ்த்துப் பாடலும்
   கண்டு மிக்க மகிழ்வுற்றேன்!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 35. இளைய நிலா மூன்றாம் வயதில் மூலை முடுக்குகள் யாவற்றினின்றும் பேச்சுகள் வெளிப்படும். என் பெண்ணெ பிறந்ததிலிருந்தே பேசிக்கொண்டும் ,பாமாலைகள் இயற்றிக்கொண்டும்,கவிதை மழை பொழிந்துகொண்டுமுள்ளாய்.
  வாழ்க உன் படைப்புகள்,உன் தளங்கள், உன் உள்ளன்புகள். வாழிய வாழியவே. ஆசிகளுடனும்,அன்புடனும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் என் அன்பு அம்மா!..

   உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்வும்
   மேலும் மனத் திடமும் கொண்டேன் அம்மா!
   நீங்கள் தந்த இந்த வாழ்த்திற்காகவே கவிதைகள்
   பல இயற்றுவேன்!..

   உங்கள் அன்பிற்கும் ஆசிக்கும் உளமார்ந்த நன்றி அம்மா!

   Delete
 36. வாழ்த்துக்கள் சகோதரி! தங்கள் எழுத்துப் பணி பல்லாண்டுகள் தொடரவும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பும் ஆதரவும் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது!
   இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 37. மூன்றாம் ஆண்டில் இளமதியும்
  முழுமதி போல மிளிர்கின்றார்
  ஆன்றோர் ஈன்ற தவப்புதல்வன்
  ஐயா பாரதி தாசனாரின்
  தேன்மா கவிதை போலிங்கு
  தேடற் கரிய பொக்கிசமாய்
  ஆன்மா தழுவும் விருத்தத்தில்
  அழகாய் நன்றி பகர்கின்றாள்..!

  உற்ற நண்பி அதிராவாம்
  உயிரின் மூச்சே அதிராவாம்
  பெற்ற புகழும் பெருங்கவியும்
  பெற்றுக் கொடுத்தாள் அதிராவாம்
  அற்றைக் கனவை அமுதாக்க
  அழகாய் வலைப்பூ செய்தாளாம்
  இற்றை வரைக்கும் இனிதாக
  எடுத்துச் சொல்வது அவள்பெயரே !

  என்னில் ஊறும் கவிதைக்கும்
  எழுத்தாய் இருந்த என்கவிஞர்
  நன்றே வெண்பா நானெழுத
  நயமாய் வழியை காட்டியவர்
  புன்னை வனத்துப் பூங்குயிலின்
  பொலிவை தந்த குரலாளன்
  கன்னல் தமிழின் செங்கோலை
  காக்கும் கவிஞர் பாரதியாம் ..!

  இன்னும் எழுதுவேன் எனக்கில்லை நேரங்கள்
  மின்னலாய் என்வாழ்வின் மெட்டு !

  அழகு அருமை இளமதி அக்கா

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சீராளன்!..

   இட்டமாய் இங்கே வந்து
     இயம்பினை வாழ்த்து ஒன்று!
   மட்டிலா மகிழ்வு கொண்டே
     மாண்பொடு நன்றி சொன்னேன்!
   கட்டினைத் தகர்த்து மேவும்
     கடலதன் அலையே போன்று
   கொட்டினை விருத்தப் பாக்கள்!
     குளிர்ந்திட உலகை மறந்தேன்!

   நேரமில்லாதவிடத்தும் அன்புடன் இங்குற்று
   அழகிய விருத்தங்களால் வாழ்த்தினீர்கள்!
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.