Pages

Jul 25, 2015

வந்தது யாரோ!..


எண்ணச் சுழலினில் என்னைத் தொலைத்தே
எங்கோ போயிருந்தேன்! - நாடி
வண்ண அலைகளாய் வந்தென் உளம்புக
வார்த்தை வசமிழந்தேன்!


மெல்ல அருகினில் மேவும் விருப்புடன்
மின்னலாய் வந்ததொன்று! - கையில்
அள்ளி எடுத்திட ஆர்வம் மிகுந்திட
அண்டையில் சென்றுவிட்டேன்!

தொட்டேன்! உடனொரு சுந்தர ரூபமாய்த்
துள்ளி எழுந்ததுவே! - நானும்
சட்டென விலகித் தள்ளியே சென்றிடத்
தாவிப் பிடித்ததுவே!

மெட்டெனக் காதிலே மெல்லொலி கேட்கவே
மீண்டும் அதைப்பார்த்தேன்! - கைகள்
தட்டியே தாளம் போட்டிடச் செய்து
தான்நெளிந் தாடியதே!

வண்டு விழிகாட்டி வந்த எழில்சொல்ல
வார்த்தையைத் தேடுகின்றேன்! - மலர்ச்
செண்டெனச் சிரித்தென் சிந்தை புகுந்திடச்
செய்கை மறந்துநின்றேன்!

சிற்பமோ? செம்பொற் சிலையிதோ? அன்றிச்
சின்ன தேவதையோ? - என்றே
வந்திட்ட ஆசையால் ”வா”என் றழைக்க
வானில் மறைந்ததுவே!

அந்த விநாடிக்குள் அகிலமே ஒளிர்ந்திட
அங்கம் சிலிர்த்ததுவே! - கண்ட
விந்தை நிகழ்வொடு விம்மிநான் விழித்தேன்!
விளைந்தது கனவுஎன்றே!

படங்கள் உதவி கூகிள்!

58 comments:

 1. அழகான கனவு... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உடன் வரவொடு வாழ்த்தும் வாக்கும் வழங்கினீர்கள்!
   மிக்க நன்றி!

   ரசிக்கக் கூடியதாக அமைந்ததுவே மட்டட்ற மகிழ்சியைத் தருகிறது! மீண்டும் நன்றி!

   Delete
 2. /எழில்சொல்ல
  வார்த்தையைத் தேடுகின்றேன்! //

  நானும்தான் ..உங்க கவிதை வரிகளை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன் !

  அழகு அழகோ அழகு !

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!

   கனவும் அழகாக இருந்தது.! அதையே கவிதையாய் வடித்தேன்!
   அன்பிற்கும் ஆதரவிற்கும் அனைத்திற்கும் நன்றி! நன்றி!

   Delete
 3. >>> வண்ண அலைகளாய் வந்தென் உளம்புக
  வார்த்தை வசமிழந்தேன்!..<<<

  வண்ண மயமான வார்த்தைகளுடன் அழகிய தமிழ்ப்பா!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்போடு வந்து அருமையாக ரசித்தீர்கள்!
   அதுவே என் பாக்கியம்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 4. வணக்கம்.

  “கொட்டும்மழையினில் காயும்வெயிலினில்
  கொல்லும் பனிக்குளிரில் - நிதம்
  பட்டுத் தெறிக்குமும் பாக்களி லென்னுளம்
  பம்பர மாய்ச்சுழலும்!
  கட்டுக் கடங்கிடா கண்ணீர்க் கடலெழும்
  கற்பனை ஓடங்களும்- இமை
  தொட்டுத் தொடரட்டும்! தொல்லைக ளற்றவத்
  தூக்கப் பெருவெளியில்! “

  அருமை சகோ.

  இது நான் கண்ட கனவு நேரம் இருக்கும் போது கண்டு கருத்திடுங்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மாசில் மனத்துடன் வாழ்த்தினைச் சொன்னீரே!
   மாண்பு நிறைந்தவரே! - குளிர்
   வீசிடும் தென்றலின் மேவும் குளிரென
   வீழ்ந்து கிடக்கின்றேன்!

   ஆசு கவியுன்றன் அற்புதப் பாக்களென்
   ஆயுள் முழுதிருக்கும்! - எங்கும்
   தேசு பரவும்உம் தீந்தமிழ் கண்டாலே
   தீர்ந்திடும் பேரிருளே!

   என்னை அதிகமாகப் புகழ்கின்றீர்கள் ஐயா!..
   உங்கள் பாக்களிற்தான் நீங்கள் சொன்ன அத்தனை
   தகுதிகளையும் நான் காண்கிறேன்!

   அன்பான வரவுடன் அருமையான கவிப்பின்னூட்டத்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   கட்டாயம் வந்து உங்கள் பதிவினையும் பார்ப்பேன்! நன்றி!

   Delete
 5. கனவில் எங்களையும் மெல்ல கரம்பற்றி இழுத்துச் சென்றுவிட்டீர்கள் தோழி.. மிகவும் ரசித்தேன் சொற்கோர்வையை.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அன்புத் தோழியே!
   உங்கள் ரசனையும் என்னை அசத்துகிறது!..:)

   அன்பான வருக்கைக்கும் ரசிப்பிற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 6. என்ன இனிமையான கவிதை . சொற்ப்ரயோகம் சந்தம் அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!
   தங்களின் ரசனைக்கு உளமார்ந்த நன்றி!

   Delete
 7. கனவுக் காட்சியை கவிதையாய் விரித்த விதம் சிறப்பு! அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   தங்களின் வரவும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 8. அருமையான கனவு.... கனவு தந்த கவிதை....

  பாராட்டுகள்.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்!

   இனிய வரவுடன் அன்புப் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 9. அருமையான கனவு
  அழகிய கவிதை
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வருகை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!
   அனைத்திற்கும் என் நன்றி ஐயா!

   Delete
 10. Replies
  1. மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 11. வண்டு விழிகாட்டி வந்த எழில்சொல்ல
  வார்த்தையைத் தேடுகின்றேன்! -//

  நிலாவின் வரிகளைக் கண்டு பாராட்டிட
  சொல் எது என்று தேடுகின்றோம்...
  எல்லை இல்லை என்றது அகராதி
  சிலிர்த்தது மேனி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   ஐயோ இதென்ன இது?..
   உங்கள் ரசனைகண்டு நான் என்னையே மறந்தேன்!
   மிக்க மகிழ்ச்சி சகோ! நன்றி!

   Delete
 12. கவிதையாய்க் கனவா? கனவாய்க் கவிதையா? அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!

   இரண்டுமேதான்!..:)
   அன்பிற்கு மிக்க நன்றி!

   Delete
 13. ஆஹா...அருமையான கனவு கொடுத்த கவிதை...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி!

   இனிய ரசனைக்கு உளமார்ந்த நன்றி!

   Delete
 14. ஆஹா! அந்த கனவை நானும் பார்த்த சுகம்!!
  கனவை போலவே நினைவும் இனிக்கட்டும் தோழி! வாழ்க நலம்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தோழி மைதிலி!

   ஆமாம் எனது ஆசையும் நனவிலும் எல்லாம்
   இனிக்க வேண்டும் என்பதே! ஆனால் எங்கே?..
   எல்லாம் கனவிற்தான்..!

   வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 15. வார்த்தைகள் வசமிழந்து போய் விட்டன தோழி. தங்கள் கவிதையில் நான் என்னையே தொலைத்து விட்டேன். அன்னை அவள் ஆசி கிடைத்து விட்டது. என்றும் இனிதொல்லை இல்லாது காப்பாள் அவள். அன்னையின் அன்பை எண்ணி கரைகிறேன். அவள் கருணைக்கு எல்லையே இல்லை. எல்லா நலன்களும் பெற்று நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்! மிக்க நன்றி ! அன்புத் தோழி ! பதிவுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அடடா... வாங்கோ என் இனிய தோழியே!

   ம்.. போதும்!.. போதும்! ரொம்பவே புகழ்கின்றீர்கள் என்னை..:)

   அன்னை அருளாற்தான் ஏதோ இவ்வளவிற்கேனும்
   எழுதிட என் உடல் நலம் இடங்கொடுத்ததால் முடிகிறது. உங்கள் அன்பிற் கரைகின்றேன் நான்!

   உளமார்ந்த வாழ்த்திற்கும் என் அன்பு நன்றி தோழி!

   Delete
 16. வணக்கம்
  சகோதரி
  கவிதையின் கருப் பொருளுக்கு எங்களையும் அழைத்து சென்றது போல உணர்வு வார்த்தை பிரயோகம் நன்று... த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பு வரவிற்கும் நல்ரசனைக்கும்
   மிக்க நன்றி!

   Delete
 17. ரசிக்க வைத்த கனவு...
  அருமையான கவிதை அக்கா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   தங்கள் ரசனைக்கும் என் அன்பு நன்றி!

   Delete
 18. இளமதி,

  மீண்டும் இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி !

  கனவும் அழகான கவிதையாகிவிட்டதே !! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் இளமதி !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சித்ரா!

   எனக்கும் உங்களைக் கண்டது பெருமகிழ்ச்சியே!

   இனிய ரசனைக்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 19. அழகான கனவு. கனவை இரசிக்கும் கவிதையாக்கி விட்டீர்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி!

   தங்களின் தொடர் வருகை எனக்கும்
   பெரு மகிழ்வாக இருக்கிறது!

   இனிய ரசனைக்கும் அன்பு வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி!

   Delete
 20. இளநிலா மீண்டும் தோன்றிடக் கண்டேன்--நெஞ்சில்
  எல்லையில் உவகையே மலர்ந்திட விண்டேன்
  வளமோட மேன்மேலும் வலம்வர வேண்டும்-வானில்
  வளர்பிறை யாக, தேயாமல் யாட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புலவர் ஐயா!

   தங்களின் அன்பான வரவுடன் இனிய கவிவாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 21. கனவால் வந்த கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   இனிய நன்றி அக்கா!

   Delete
 22. //எண்ணச் சுழலினில் என்னைத் தொலைத்தே
  எங்கோ போயிருந்தேன்! - நாடி
  வண்ண அலைகளாய் வந்தென் உளம்புக
  வார்த்தை வசமிழந்தேன்!//

  மிகவும் அழகாய் எழுதியிருக்கிறீர்கள் இளமதி! இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் மனோ அக்கா!

   உங்களின் ரசனைக்கும் என் கவிதையானது
   எனக்குப் பெரும் மகிழ்ச்சியே!

   இனிய ரசனைக்கும் அன்பு வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி அக்கா!

   Delete
 23. கனவை வெளிப்படுத்த
  புனைந்த பாவரிகளை
  மீள மீளப் படிக்கிறேன்!

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் ரசனையில் என் பாவரிகள்..!
   மிக்க மகிழ்ச்சி ஐயா! நன்றி!

   தங்களின் தளம் வந்தும் பதிலளிக்க முடியாது
   திரும்பினேன் ஐயா! ஏனெனத் தெரியவில்லை..:(

   Delete
 24. அருமையான கனவுக்கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன்!

   உங்களின் ரசனையும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே!
   மிக்க நன்றி நேசன்!

   Delete

 25. வணக்கம்!

  கனவு கவிதைகளைக் கண்டுவந்தேன்! என்றன்
  நினைவு பறந்தே நெகிழும்! - மனத்துக்குள்
  நிற்கும் எழில்காட்சி! நித்தம் கவிக்கலையைக்
  கற்கும் உயர்மாட்சி காண்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சித்தம் குளிர்ந்திடச் சேர்த்தீரே நல்வெண்பா!
   புத்தியில் வைத்தேன் பொதிந்து!

   எனது கவிகள் இவ்வளவிற்காயினும்
   இன்றிருப்பதற்குத் தங்களின் கற்பித்தலே காரணமாகும்!
   இன்னும் கற்றிட வேண்டுகிறேன்!

   தங்களின் அன்பான வரவுடன்
   இனிய வெண்பா வாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 26. ''...சிற்பமோ? செம்பொற் சிலையிதோ? அன்றிச்
  சின்னத் தேவதையோ? - என்றே
  வந்திட்ட ஆசையால் ”வா”என் றழைக்க
  வானில் மறைந்ததுவே!..''
  mikka nanru sis....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   அன்பான வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 27. வணக்கம்

  தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சாம்!

   ஓ.. அப்படியா! இதோ வந்து பார்க்கின்றேன்.
   மிக்க மகிழ்ச்சியுடன் உளமார்ந்த நன்றியும் சகோ!

   Delete
 28. ஆஹா அழகான கனவு..அதுவும் அழகான உங்கள் கவிதையில்..
  இரட்டை மகிழ்ச்சி! நன்றி தோழி! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி!

   உங்கள் ரசனை தருகிறது ஊக்கம் எனக்கு!
   இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 29. வணக்கம்,
  தங்கள் நலம் குறித்து ஊமைக்கனவுகள் பக்கம் கவிக்கண்டேன் முன்பு,
  தங்கள் கனவாயினும் வரிகள் அருமைம்மா,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   வலையுலகில் நான் பெற்ற ஒப்பற்ற உறவுகள்
   இவர்கள் அனைவருமே!..

   தங்களின் இனிய ரசனைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரி!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.