Pages

Aug 29, 2015

நல்லதமிழ் என்றனுக்கு ஊட்டு!..

நாமகளின் நற்கருணை நன்கெனக்குக் கிட்டிடவே
 நானிசைக்கும் சந்தவகைப் பாட்டு!
  நாவினிக்கச் சொல்லடுக்க நாளுமுனைத் தேடுகிறேன்
   நல்லதமிழ் என்றனுக்கு ஊட்டு!


பாமகிழ்ந்து பாடிடவே பண்னொளிரும் சீரணியைப்
 பாங்குடனே என்னெழுத்தில் பூட்டு!
  பாரதிபோல் இவ்வுலகைப் பாட்டெழுதி் மாற்றிடவே 
   பாவையெனக்(கு) இன்னிசையை மீட்டு!

பூமகளின் பூக்குவியல் பூமியெலாம் வர்ணமயம்
 போற்றிவரும் காட்சிகளைத் தீட்டு!
  புத்துலகப் பூவுலகைப் பொற்புடனே ஆக்கிடவே
   பொங்குபுகழ்ச் சிந்தனையை மூட்டு!

மாமகளாம் ஈழமகள் பாமகளே உன்னருளால்
 மாண்புரைக்கப் பாரறியச் சூட்டு!
  மாதிவளும் மண்ணிலுறை நாள்வரையும் தேன்தமிழை
   மார்பினிலே தாங்கவருள் காட்டு!


எங்கள் ஆசான் ஐயா வலைச்சர ஆசிரியராக இருந்தபோது இட்ட பதிவில் இருந்த சந்த விருத்தத்தைப் பார்த்து நானும்  - ஆறு கூவிளங்காய் தேமா- கொண்ட சந்த விருத்தமாக எழுதி இங்குப் பதிவிட்டுள்ளேன்.

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

53 comments:

 1. ஆஹா! ஆஹா!
  என்ன சொல்ல...
  பூமாலை மணக்கும் இந்த மாலைப்பொழுதில்
  பாமாலை சூட்டி எந்தம் மனத்தை கவர்கின்றீர் தோழி.
  எங்கிருந்து தான் உங்களுக்கு மட்டும் இப்படி சொற்கள் அருவியாய் வந்து விழுமோ?
  ஆச்சரியத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்தொரு கவிதையாய் வந்து ஆச்சரியப்படுத்துவீர்கள் தானே... ஹஹ வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ என் தோழியே!

   உங்கள் ஆச்சரியம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது!...
   வார்த்தைகள் வரிந்து கட்டி உங்களிடமல்லவா வந்து நிற்கின்றன.. நான்தான் கடன் பெற வரவேண்டும் அங்கே!..:))

   முதல் வருகையுடன் முத்தாகக் கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 2. தமிழன்னை தமிழமுதினை
  தங்களுக்கு ஊட்டியதற்கு
  இக்கவிதையே சான்று
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பான வரவுடன் இனிய ரசனையும் கண்டு
   என்னுள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது!
   வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 3. அருமையான சந்தக்கவி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வரவும் ரசனையும் கண்டு மகிழ்கின்றேன்!
   மிக்க நன்றி சகோ!

   Delete
 4. நல்ல தமிழ் ஊற்றில் தமிழருவியில் நனைந்தேன்
  தமிழ் மணம் ஐந்தருவி

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவுடன் தமிழருவியில் நனைந்தமைக்கும்
   வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 5. நாமகளின் நற்கருணை
  தங்களுக்கு
  எந்நாளும் உண்டு சகோதரியாரே
  அருமை
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்களைப் போன்றோரின் அன்பும் ஆதரவைக் கண்டாலே
   நாமகளும் எனக்கிரங்கிடுவாள்!
   இனிய வரவுடன் ரசித்துக் கருத்திட்டு வாக்கும் தந்தமைக்கு
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 6. தமிழன்னைக்கு நல்ல பாமாலை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் ஐயா!
   தங்கள் வரவு கண்டு மிகவே மகிழ்கின்றேன்!
   இனிய ரசனைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும்
   இதயம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 7. உங்களின் முயற்சியால் எங்களுக்கும் இனிய கவிதை கிட்டியது !! வாசித்து மகிழ்ந்தேன் ! நன்றி இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சித்ரா!

   நன்றி! நன்றி!.. வரவிற்கும் இனிய ரசனைக்கும்
   உளமார்ந்த நன்றி சித்ரா!

   Delete
 8. அற்புதமான சந்தம்
  அதுவே என் வசந்தம்.
  என்ன ஒரு அழகு !
  எனக்கு ஒரு அழைப்பு !!

  பாடு பாடு எனும் குரல்,
  ஆடு ஆடு எனவும் சொல்கிறதோ !!

  கிழவன் ஆடமுடியாது.
  பாடி விட்டேன்.

  அனுப்புவேன் விரைவில்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. www.youtube.com/watch?v=ztQtyvmISto

   listen here.

   subbu thatha

   Delete
  2. வணக்கம் ஐயா!

   தாங்கள் இத்தனை மகிழ்வோடு வந்து பாடித் தருமளவிற்கு
   என் கவிதை அமைந்ததை எண்ணி அந்த நாமகளுக்கும்
   என் ஆசானுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்ளும் அதேசமயம் உங்களுக்கு எப்படி என் நன்றியினைக் கூறுவதென்று தெரியாமல் பிரமித்து நிற்கின்றேன் ஐயா!!..

   தங்கள் குரலில் எனது கவிதை இன்னும் மெருகேறிக் கேட்பதற்கு மிக அருமையாக இருக்கின்றது ஐயா!

   நலமோடு நீங்கள் இருக்க இறைவனை வேண்டிக் கேட்டு
   உளமார்ந்த என் நன்றியையையும் கூறிக்கொள்கின்றேன்!

   மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete
 9. அன்புத் தோழியே ! அத்தனையும் முத்தாய் மொழிந்தாய் சொற்சுவையும் பொருட் சுவையும் பற்றவே பெற்றேன் மட்டிலா மகிழ்ச்சி! குன்றில் விளக்காய் கொடுக்கும் ஒளி போல் நிற்க்கட்டும் மும்பாட்டு நிலையாய் இவுலகி லென்றும். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு நற்கவிகள் மேலும் வழங்கவே ! ஹா ஹா ......என்ன சங்கடத்தில் மாட்டுகிறேன் என்று பார்க்கிறீர்களா ?
  அசத்துங்க அசத்துங்க அருமைம்மா ! சுவைக்க சுவைக்க தெவிட்டாத பாக்கள் இவை தருவாய் தினம் ! நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா!.. வாருங்கள் இனிய தோழியே!

   இதென்ன மூச்சுவிடாமல் உங்கள் வேண்டுதல்கள்
   யாவையும் இங்கு கொட்டிக் குவித்து விட்டீர்கள்...:))

   ம் ம்.. சொல்வதெல்லாம் சரி! நீங்களும்
   அழகாக எழுதுகின்றீர்கள் தானே!. தொடருங்கள்!
   விரைவில் உங்கள் வலையிலும் இப்படி ஒன்று
   நான் பார்க்கவேண்டும்!..:0

   அன்பான வரவுடன் இனிய கருத்தும் வாழ்த்தும்
   வாக்கும் நல்கினீர்கள்! உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 10. சந்தம் மயக்குகிறது . இரண்டுமுறை வாய்விட்டுப் படித்துப் பார்த்தேன். இனிமை இனிமை

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!
   சந்தம் உங்களை இங்கழைத்து வந்திட்டதோ?
   மிக்க மகிழ்ச்சி சகோதரரே!

   அன்பான வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   வாக்கிற்கும் மிக்க நன்றி!

   Delete
 11. அருமை சகோதரி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் இனிய வரவுடன் வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 12. சகோதரி பிரமித்து வியந்து விட்டோம்...அருமையான சந்தம் அமைந்த கவிதை!! இப்படி எல்லாம் எழுதினால் நாமகளின் நற்கருணை தங்களுக்குக் கிட்டாமல் போகுமா!!! எப்போதும் தங்களுக்குக் கிட்டும் சகோதரி! அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   தங்களின் ரசனை கண்டு நான் என்னையே மறந்தேன்!
   நாமகளின் கருணையும் தயவும் என்றென்றும் கிட்டிட வேண்டும்!
   இனிய வரவுடன் நல் வாழ்த்து வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 13. இனிமைமிகாருமைசகோதரி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவும் இனிமையாயுள்ளது சகோதரி!
   மிக்க நன்றி!

   Delete
 14. நாவினிக்கச் சொல்லடுக்க நாளுமுனைத் தேடுகிறேன்
  நல்லதமிழ் என்றனுக்கு ஊட்டு!..

  இனிய தமிழ்ப் பாமாலை!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   நாவினிக்கப் பாடுவதும் நாமகளின் அருள் கிடைத்தால்தான்.
   தொடர்ந்து அவளருளிட வேண்டுகிறேன் ஐயா!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்ரி ஐயா!

   Delete

 15. ஆஹா ..அருமை ! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழி இதோ உங்கள்
  ஆருயிர்த் தோழியின் பகிர்வு :))
  http://rupika-rupika.blogspot.com/2015/06/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி!
   அடடா இப்படியொரு பதிவை நான் படிக்கவில்லை.
   சற்று உடல் நலக் குன்றல்.. விரைவில் வந்து படிக்கின்றேன்!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   வாக்கிற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 16. அருமையான பாமாலை... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ!

   தங்களின் அன்பான வரவுடன் வாழ்த்து வாக்கு
   அனைத்திற்கும் மிக்க நன்றி சகோ1

   Delete
 17. படித்தேன். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   அன்பின் வருகைக்கும் ரசிப்புடன் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 18. அன்புள்ள சகோதரி,

  நல்லதமிழில் விருத்தப்பாவை ஊட்டிய தங்களின் தமிழுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  நன்றி.
  த.ம. 12

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவும் இனிய ரசனையும் கண்டு
   மிகவே மகிழ்கின்றேன்!

   வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete

 19. வணக்கம்!

  சிந்தை பறிக்கின்ற சந்தக் கவிகண்டேன்!
  மொந்தை மதுகுடித்து மூச்சயர்ந்தேன்! - விந்தைமிகு
  சொல்லாட்சி மின்னும்! சுடர்த்தமிழ் யாப்பழகின்
  நல்லாட்சி மின்னும் நடை!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சந்தப்பா பாடலும் சற்குரு உன்தயவே!
   வந்ததே ஊற்றாய் வளர்ந்து!

   தங்களின் வழிகாட்டலில் நாம் வளர்கின்றோம் ஐயா!

   அன்பான வருகைக்கும் வெண்பா வாழ்த்திற்கும்
   வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 20. சந்தக்கவி நெஞ்சைத்தொடும் சாமரம்
  சத்தியமாக வாழ்த்துக்கின்றேன்
  சரளமாக தமிழ் தேன் சொட்டுது!

  ReplyDelete
  Replies
  1. வந்து உள்ளம் மகிழ வாழ்த்தியமைக்கு
   உளமார்ந்த நன்றி நேசன்!

   Delete
 21. சந்தத்தமிழ் சிந்தும் சுவை ரசிக்க ரசிக்கப் பெருகும் பேரின்பம். தமிழின் இனிமை சொட்டித் தெறிக்கிறது ஒவ்வொரு வரியிலும்.. பாராட்டுகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. தமிழே தேன்சுவைதானே தோழி!
   அதனை நாமெல்லோரும் ருசிக்கின்றோம்!..:)

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்துத்தந்தீர்கள்!
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 22. சந்தம் அருமை! படிப்பவரைத் தாளம் போட வைக்கும்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா!
   தங்கள் அன்பு வருகையும் ரசனையும்
   வாழ்த்துடன் வாக்கும் தருகிறது எனக்குப் பெருமை!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 23. என்ன சொல்லி பாராட்ட தோழி, இனிமை மிக இனிமை!

  ReplyDelete
  Replies
  1. அன்பில் கட்டுண்டேன் தோழி!
   அகம் நிறைந்த நன்றிகள்!

   Delete
 24. நாமகளின் நற்கருணை நிறையவே உண்டு இளமதி. சந்தக்கவி அருமை. நன்றாக எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. நாமகள் நல்லருள் எல்லோருக்கும் தரட்டும்!
   உங்கள் இனிய ரசனை கண்டு
   மனம் மட்டற்ற மகிழ்வு கொள்கிறது!

   அன்பான வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி பிரியா!

   Delete
 25. வணக்கம் சகோ !

  அன்புருகி என்புருக்கும் அந்தமிழின் பண்பிருக்கும்
  அன்றலரும் பூவிதழின் செழிப்பு
  மென்மனதில் மீட்டிவிட மெய்சிலிர்க்கும் இன்னிசையின்
  மந்திரமாய் உம்கவியின் பொழிப்பு !

  அருமை அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +!

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சீராளா!

   வந்து இனியதாய் வாழ்த்தினை நான்மகிழ!
   இந்தவரம் போதும் எனக்கு!

   உங்களை மீண்டும் இங்கு காண்பதே
   பெரும் மகிழ்வாயுள்ளது!

   வந்து நல்ல பாவிசைத்து வாழ்த்தினீர்! இனிமை!
   அன்பு வரவுடன் வாழ்த்தும் வாக்கும் நல்கினீர்!
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 26. நாதமாய் நற்கீதமாய் செவிகளிலே சேர்க்கிறது உங்களுடைய பாமாலை... ரசித்தேன்....

  ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.