Pages

Oct 19, 2015

முப்பெரும் சக்திகளே!.
முன்னின்று காத்திடுவீர்!..


முப்பெரும் சக்திகளே! முன்னின்று காத்திடுவீர்!
எப்பொழுதும் நல்லருள் ஈந்திடுவீர்! - ஒப்பிலாச்
செம்மொழிச் சீரோங்கச் செய்திடுவீர்! யாவரையும்
அம்மையுங்கள் அன்பால் அணைத்து!
~~~~~~~~~~

வல்லமை தந்தே வாழ்வை
  வளமுறச் செய்யும் சக்தி!
சொல்லவே வீரம் பாயத்
  துணிவினை ஊட்டும் சத்தி!
நல்லதைத் தேடும் நெஞ்சுள்
  நன்னெறி சூட்டும் சக்தி!
வென்றிட வேண்டும் ஈழம்
  விரைவினில் அருள்வாய் சக்தி!
~~~~~~~~~~

செந்தா மரையில் வீற்றிருக்கும்
  திருவே செல்வச் சீர்மகளே!
வந்தால் வளமே பெருகிடுமே!
  வாழ்வும் ஓங்கிப் பொலிந்திடுமே!
தந்தால் வறுமை தீருமெனத்
  தஞ்சம் நீயென் றேங்குகிறார்!
நந்தா விளக்கே! நாயகியே!
  நன்மை பெருக அருள்நிதியே!
~~~~~~~~~~

வெள்ளை மரையில் மேலழகாய்
  வீற்றி ருக்கும்  கலைமகளே!
உள்ள மரையில் உனைத்தாங்கி
  ஓதிப் பணிவோம் நாள்தோறும்!
அள்ள அள்ளச் சுரக்கின்ற
  அறிவை அளிக்கும் நாமகளே!
வெள்ளம் போன்றுன் அருள்பொங்க
  வித்தை தருவாய் என்தாயே!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

41 comments:

 1. கல்வியும் செல்வமும் வீரமும் என்றென்றும்
  சொல்லும் சிறப்பும் செயல்யாவும் - வல்லமை
  தந்திடும் பாடல் தமிழுக் கணி!உங்கள்
  சிந்தனை வாழ்க சிறந்து.

  அருமை பாவலரே!

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உள்ளம் உவக்க உடனிங்கு தந்திட்ட
   வெள்ளமே வெண்பா விருந்து!

   அருமையான வெண்பா வாழ்த்து அதுவும் அத்தனை விரைவாய் இங்குறக் கண்டு மகிழ்ந்தேன்!

   அனைவருக்கும் அம்மையரின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 2. மலைமகள்,அலைமகள்,கலைமகள் மீதான அருமையான கவிதை நவராத்திர்யின் போது மிகப் பொருத்தமாக!
  நன்று

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் உடன் வருகையும் இனிய ரசனையும்
   என்னை மேம்படுத்துகின்றன!

   அன்னையரின் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுகிறேன்!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 3. வெள்ளத் தனைய மலர்நீட்டம்
  விரும்பித் தேடி முயல்வோர்க்கே
  உள்ளத் தனைய உயர்வுவரும்
  உவகை கல்வி செல்வம்தரும்!
  கள்ளம் கயமை நிறைமனதை
  காய்த்தே அழிக்கும் வீரகவி
  துள்ளிப் பாடிப் பாவலரே
  துவளும் இனம்..உம் தோள்சுமப்பீர்!

  விருத்தம் மறந்து போனேன்.

  அருமை இனிமை எளிமை

  வாழ்த்துகள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அட..அட.. என்ன சுவை! உங்கள் விருத்தம் ஐயா!

   உள்ளம் உவகையில் துள்ளுகிறது!
   உங்கள் ஒவ்வொரு பாவும் என்னை ஊக்குவிக்கும்
   அருமருந்தாகும். எல்லையிலா மகிழ்வு கொள்கின்றேன்!

   மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete
 4. அன்புள்ள சகோதரி,

  அள்ள அள்ளச் சுரக்கின்ற
    அறிவை அளிக்கும் நாமகளே!

  பாடல் அருமை.

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவுடன் இனிமையாக ரசித்துக் கருத்திட்டமைக்கு
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 5. முப்பெரும் தேவியர்களின் பாமாலை அருமை கவிஞரே வாழ்த்துகள்
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவும் ரசனையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோதரரே!
   உளமார்ந்த நன்றி!

   Delete

 6. வணக்கம்!

  முப்பெரும் சக்திகளை இப்புவி போற்றிடவே
  செப்பரும் செந்தமிழில் செய்தகவி - எப்பொழுதும்
  ஓதி உணர்ந்திட்டால் உள்ளத்துள் சோதியெனும்
  ஆதி அளிக்கும் அருள்!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   முப்பெரும் சக்திகளுடன் ஒப்பில்லாச் சக்தியாக
   உங்கள் ஆசியும் வழிகாட்டலுங்கூட என்னை வழிநடத்தும் மாபெரும் சக்தியாகும்!

   அருமையான வெண்பாவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 7. சக்தி பாடல்
  சக்தி தரும் பாடல்.
  சகதிகளைத் தூர எரித்திடும் பாடல்.
  சதிகளை முறித்திடும் பாடல்.

  சந்ததிகள் சிறப்பாய் வாழ
  சிந்தையிலே அந்த சக்தியை நிறுத்துவோம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. www.youtube.com/watch?v=SE9FpW_eic8

   www.subbuthathacomments.blogspot.com

   listen please yourself and all your fans and friends here.

   subbu thatha.

   Delete
  2. வணக்கம் ஐயா!

   வந்து கேட்டு எனை மறந்தேன் ஐயா!

   சத்தியமாக என் பாடல்களுக்கு உயிர் கொடுக்கின்றீர்கள் உங்கள் குரலினால்!

   கேட்கும்போது ஓ.. என் கவிதையில் இந்த இடத்தில் வரும் சொல்லை இப்படி மாற்றினால் பாடும்போது இன்னும் நயம்மிக்கதாக இருக்குமே என்றெண்ணத் தோன்றுகிறது.

   அற்புதமாகப் பாடி என்னையும் இங்கு உங்கள் பாடல் கேட்போரையும் மிகவும் கவருகின்றீர்கள் ஐயா!
   இப்படி என் பாட்டும் உங்களால் உயருகின்றது. !

   என் உளம் நிறைந்த மகிழ்ச்சியுடன்
   கோடானுகோடி நன்றிகளும் ஐயா!

   நலமோடு உங்கள் வாழ்வமைய அந்த முப்பெருந் தேவிகளையும் மனதார வேண்டுகிறேன்!

   Delete
 8. முப்பெரும் சக்தியர்களுக்கு முத்தமிழால் அருமையான பாடல் படைத்திட்ட தங்களுக்கு சக்தியின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் இளமதி.
  மிக மிக சிறப்பாக எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவும் ரசனையும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்ச்சி பிரியா!

   உளமார்ந்த நன்றி!

   Delete
 9. நவராத்திரி சிறப்புக் கவிதை
  மிக மிக அருமை
  தேவியர் மூவரின் அருளும்
  உங்களுக்கு நிச்சயம் இருக்கும்
  இல்லையெனில் இப்படிப்
  பாமாலைப் பொழியும் வல்லமை
  வாய்க்குமா ?
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்னையரின் அருளொடு ஆசானின் வழிகாட்டலும்
   உங்கள் அனைவரின் ஊக்குவிப்பும் எனது எழுத்துகளுக்கு
   உறுதுணை ஐயா!

   உங்கள் வாழ்த்துக் கண்டு
   மிக்க மகிழ்ச்சி ஐயா!

   உளமார்ந்த நன்றி!

   Delete
 10. வணக்கம்
  அகிலத்தை படைத்த சக்கதிக்கு ஏற்றிய பாமாலை நன்று படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் த.ம 9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ரூபன்!

   உங்கள் அன்பான வரவும் ரசனையும்
   வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!

   உளமார்ந்த நன்றி!

   Delete
 11. முத்தாய்முத் தேவியர் மேல்விருத்தம்
  முடித்தீர்உம் பாடல் மிகப்பொருத்தம்
  வித்தும்வேர் விட்டுநல் நிழல்பரப்பும்!
  விருந்துண்ட எம்கண்கள் வியந்திருக்கும்
  நித்தம்நற் றமிழென்னும் நினைவிருக்கும்!
  நீர்பாடும் பாட்டில்எம் மனம்குதிக்கும்
  எத்திக்கும் இவை..உங்கள் புகழ்நிறைக்கும்!
  என்றென்றும் இறவாமல் வாழ்ந்திருக்கும்

  அருமை அருமைம்மா தோழி பொருத்தமான நல்லதோர் விருத்தம் அளித்தீர் வெகு சிறப்பு ! நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழியே!

   அன்பான வரவுடன் ஆர்வமிக்க பதிற் பாடலும் கண்டு
   மிக்க மகிழ்ச்சி!
   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி மா!

   Delete
 12. Replies
  1. அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 13. வணக்கம் சகோ !

  ஒன்றாகி உயிராகி ஓதுமறை தானாகி ஒளிரும் சக்தி
  இன்றேகி எமதுள்ளம் இளைக்காமல் காத்திட்ட இச்சா சக்தி
  குன்றாத செல்வத்துள் குடிகொள்ளச் செய்திடுவாள் கிரியா சக்தி
  நன்றேந்திக் கேட்கின்ற நாளெல்லாம் அறிவாவாள் ஞானா சக்தி !

  மிக மிக அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   அருமையான கவியாய்ப் பாடிச்
   சக்தியின் பெருமை கூறினீர்கள்! உள்ளம் மிகவே மகிழ்கின்றேன்!

   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 14. பக்தியில் இணைந்த சக்தி. அருமை. ஊமைக்கனவுகள் எழுத்தையும் ரசித்தேன்.


  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 15. நவராத்திரி சமயத்தில் முப்பெரும் தேவியர் பற்றிய சிறப்பான பதிவு.

  பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 16. அட! அட! என்ன அழகாக எழுந்தருளி உள்ளார்கள் முப்பெரும் தேவியரும். நவராத்திரி கொலு ஆகிவிட்டதே உங்கள் தளம் உங்கள் கவிதையால்!! தமிழ் விளையாடுகின்றது!

  அருமை ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ரசனை மிக மிகச் சிறப்பு சகோதரரே!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 17. விஜு அவர்களின் கவிதையும் மனதை அள்ளுகின்றது! அருமை. ரசித்தோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்! மிக்க நன்றி!

   Delete
 18. ஆஹா! என்ன அழகா பாடுறிங்க மா. மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். நன்றிங்க மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சசிகலா..!

   அழகாக பாடுறேனா.. :) மிக்க மகிழ்ச்சியா இருக்கு.
   என்னை அழகுன்னு வேற சொல்லீட்டங்கன்னு..:))

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் தந்தீங்க..
   மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி மா!

   Delete
 19. அருமை அருமை
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. அன்போடு வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 20. எங்களுக்காக மூன்று தேவியரையும் கொணர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.