Pages

Jun 9, 2014

அன்னைக்குச் சமர்ப்பணம்!..

’’அம்மா இந்த வார்த்தையின் ஆழம், அதன் சிறப்புப் பற்றி யாரும் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரினதும் உணர்விலும், உதிரத்திலும் தாயோடு உள்ள பாசம் நிச்சயம் கலந்திருக்கும்.

அப்படி எனக்கும் என் வாழ்வில் எல்லாமுமாக இருந்த என் ”அம்மா” என்னையும் இந்த மண்ணையும் விட்டுப் பிரிந்த நிகழ்வு என்னைத் தீராத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது...

இந்த வருட ஆரம்பத்திலேயே இருதய நோயின் தாக்கத்தினால் மிகவே போராடிய என் அன்னை, மார்ச் மாத நடுப்பகுதியில் ஒரு அதிகாலைப் பொழுதில் மீளாத் தூக்கத்தில்  ஆழ்ந்துவிட அவள் பிரிவு என்னை மாளாத் துயரத்திற்கு ஆளாக்கிவிட்டது. இந்நிலையில் வலையுலகிற்கு வரவோ எழுதவோ என்னால் இயலவில்லை. 

இப்பொழுதும் அந்தத் துயர நினைவுகளிலிருந்து விடுபட முடியாதபோதும் என் அன்பு நட்புகள் சிலரினது வேண்டுகோளிற்கும் மரியாதைக்குரிய ஆசான் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின்  அன்புக் கட்டளைக்கும் இணங்கத் துயருலகால் மெதுவாக வெளியே வந்து வலையுலகை எட்டிப் பார்க்கின்றேன்...

மீண்டும் என் வலையுலகப் பதிவிடலின் ஆரம்பமாகச் சில குறட் பாக்களை எழுதி அவற்றை இங்கு என் அன்னைக்குச் சமர்ப்பணமாகப் பதிவேற்றியுள்ளேன். 

தொடர்ந்தும் உங்களின் இனிய கருத்துப் பகிர்வினை நல்குமாறு கேட்பதுடன், 
அன்புடன் எனைத் தேடிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.

***************

என் அன்னைக்கு!


அம்மா எனக்கூற அன்னை இனிஇல்லை!
இம்மா நிலமே இருள்!

திங்களும் மூன்று திரும்புமுன் ஆனதே!
மங்கலம் யாவும் மறைந்து!

விண்ணகம் நாடி விரைந்தனையோ அன்னையே!
என்னகம் வாட இருண்டு!

என்னுயிர் வாழ்ந்ததும் உன்அன்பால்! நீயின்றித்
துன்புறும் உள்ளம் துவண்டு!

எங்கெனக்கு ஆறுதலோ?  என்றுனைக் காண்பேனோ?
மங்குதே மாட்சிகள் மாய்ந்து!

மடிதாங்கி என்னை மகிழ்வித்தாய் உன்னை
விடிவெள்ளி என்றெண்ணும் விண்!

வினைதீர்ந்த தென்று விடைபெற் றனையோ?
இணையாய் எவருளர் இங்கு!

அமைதியில் உன்ஆத்மா ஆழ இரந்தேன்  
இமையுறங்காக் கண்களோ டே!

காட்டிய நல்வழி காத்திடுவேன் காசினியில்
நாட்டிடுவேன் நின்புகழை நான்!

அம்மா எனச்சொல்ல அன்புதான் ஊறுமே
பெம்மான் படைப்பினது பேறு!
 ************

66 comments:

 1. அன்பின் சகோதரிக்கு வணக்கம்
  பல மாதங்கள் கடந்து வருகை கண்டு உண்மையில் உள்ளம் பூரிக்கிறேன் சகோதரி. நான் தூங்கச் சென்று விட்டேன் தூங்குவதற்கு முன் டேஸ்போர்டு பார்ப்பது வழக்கம். உங்கள் பதிவு கண்டதும் எழுந்து கணினி முன்பு உட்கார்ந்து விட்டேன் அம்மா. உங்களின் மனத்துயரைப் போக்க இந்த சிறியவனின் ஆறுதல் வார்த்தைகள் போதாது என்பதை நான் அறிவேன். வாழ்க்கையின் பக்கங்களை சில இழப்புகள் அப்படியே புரட்டிப் போட்டு விடும். மீளுவது என்பது ரொம்ப கடினம் தான் அம்மா. என்ன செய்ய இறைவன் எழுதிய எழுத்து ஒன்று இருக்கிறதல்லவா! அவர் ஆட்டுவிக்கும் பொம்மை தான் நாம். இதுவும் கடந்து போகும். மீண்டு(ம்) வலைப்பக்கம் வந்தது ரொம்ப என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்துகிறது. வெகு நாட்களுக்கு தாயைக் கண்ட குழந்தை போல என் உள்ளம் உணர்ச்சிவசப்படுவதை உணர முடிகிறது. எத்தனையோ முறை மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்து சகோதரியை தொந்தரவுக்கு ஆளாக்க வேண்டாமென்று கைவிட்டு விடுவேன். இது வெறும் வார்த்தையில்லை உண்மை. மீண்டும் உங்களை வலைப்பக்க உறவுகள் அன்புக்கரம் நீட்டி அழைக்கிறது சகோதரி. வருக தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக இங்கே தருக. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதர் பாண்டியன்!..

   உங்கள் உடனடி வருகையும் அளவிலாப் பாசமும் தேடலும் கண்டு உளம் நெகிழ்ந்தேன்.

   அன்பான ஆதரவான ஆறுதல் வார்தைகட்கு என் மனமார்ந்த நன்றி!

   வருவேன் உங்கள் யாவரினதும் வலைப் பக்கங்களுக்கும்
   தருவேன் என்னாலியன்ற என் கருத்துக்களையும்!...

   மீண்டும் என் அன்பான நன்றியுடன்!..

   Delete
 2. தங்களின் அன்பான அம்மாவின் மறைவுச்செய்தி கேட்க என் மனம் மீளாத்துயரம் அடைகிறது. மிகவும் வருத்தமாக உள்ளது. ;(((((

  இதையும் தாங்கும் சக்தியினை தங்களுக்கு இறைவன் அளிக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அனுதாபத்திற்கும் ஆதரவான
   ஆறுதல் வார்தைகட்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 3. சகோ..
  ஆழ்ந்த இரங்கல்கள்..

  அதே வேளையில் துவழ்ந்திடாதீர் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்
  .

  தாங்க முடியாத சோகம்தான்!
  தாங்கித்தானே பயணிக்க அழைக்கிறது
  வாழ்க்கை !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   சோகங்களை வெல்வது கடினம்... முடிந்தால் அதோடும் பயணிக்க முயல்கிறேன்...

   தங்களின் ஆழ்ந்த இரங்கலுக்கும் அனுதாபத்திற்கும் ஆதரவான ஆறுதல் வார்தைகட்கும்
   என் மனமார்ந்த நன்றி சகோ!

   Delete
 4. ஆஹா!!! தோழி
  நண்பர்கள் பக்கம் என உங்களை சேர்த்திருந்தேன். அதில் பார்த்துக்கொண்டே இருப்பேன். இன்று ஒரு நிமிடம் என் கண்ணையே நம்பமுடியவில்லை. நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சி ஆனால் இப்படி ஒரு துயருடன் வந்திருக்கிறீர்களே. இப்போ தான் ப்ரியசகி மேடம் ப்ளோகில் உங்களை பற்றி குறிப்பிட்டுவிட்டு வந்தேன். எல்லா வலியையும் காலம் மாற்றும் தோழி.

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி மைதிலி!..

   உங்கள் அன்பினால் என்னை என்ன செய்வது எனத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.

   உங்களின் தேடுதல் கண்டு பிரமித்தேன்!
   உரிமையான உங்களின் அன்பிற்கும் ஆறுதல் வார்த்தைகட்கும்
   என் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 5. காலம் மட்டும் தான் சில இழப்புகளுக்கு மருந்தாக முடியும் என்று சொல்வார்கள் ..

  உங்களுக்கு இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்..

  ஒரு படைப்பாளியின் வலியை அவளது இதயத்தின் அடியாழத்தில் இருந்து அது கவிதைகளாக வரும் பொழுது எத்தகு தரமுடன் இருக்கும் என்பதற்கு உங்கள் கவிதைகளே சாட்சி...

  துயர் ஊறிய இதயத்தில் காலத்தை வெல்லும் கவிதைகள் பிறக்கும் என்பதற்கு உங்கள் குறட்பாக்களே சாட்சி..
  அருமை சகோதரி..
  உங்கள் வலிகளில் நாங்களும் பங்கெடுக்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் கஸ்தூரி ரங்கன்!

   உண்மைதான் காலம்தான் காயத்திற்கு - இந்த உடலிற்கு (உட்காயமோ வெளிக்கயாமோ) மருந்திட வேண்டும். அதுவரை அகத்தையும் புறத்தையும் காக்க வேண்டுமே... முயல்கிறேன்.

   குறட்பாக்களில் தங்களின் ஆழ்ந்த ரசனைகண்டு
   என் தலை சாய்த்து இரு கரங்கூப்பி நன்றியைத் தெரிவிக்கின்றேன் சகோ!

   தங்களின் அனுதாபத்திற்கும் ஆதரவான
   ஆறுதல் வார்தைகட்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 6. இளமதி,

  மிகவும் வருத்தமான செய்தி. ஈடு இணையில்லாத அன்புகொண்ட உறவு. இத்துயரிலிருந்து காலம்தான் உங்களை வெளியே அழைத்து வர வேண்டும். மிகுந்த வருத்தத்துடன் சித்ராசுந்தர்.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி சித்ரா சுந்தர்!..

   உணர்வு பூர்வமான உங்கள் கருத்திற்கு
   என் அன்பு நன்றி சகோதரி!

   Delete
 7. அம்மா என்ற உறவு ..சொல்லில் வடிக்க முடியாத அன்பின் பந்தம் ..:( காலம் உங்களுக்கு ஆறுதலை தர இறைவனிடம் வேண்டுகிறேன்
  மீண்டும் உங்களை வலைப்பூவில் பார்ப்பதில் சந்தோஷம்

  ReplyDelete
  Replies
  1. அன்பு அஞ்சு!..

   இந்த உணர்வுக்கு ஈடில்லை. இழப்பும் அத்தகையதே..
   மனதைத் தேற்ற முயல்கிறேன். உங்களைப் போன்ற வலையுலக உறவுகள் மகத்தானவர்கள்.
   நிச்சயம் எனக்குண்டான மருந்தும் வலையுலகில் கிட்டும்.

   உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அஞ்சு!

   Delete
 8. அன்புத் தோழிக்கு வணக்கம் ! தினமும் தாய் முகம் காணாத சேய் போல் தேடும் நான் இன்று ஏனோ எதிர்பார்க்கவில்லை போலும் இப்பொழுது தான் வந்து பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை தோழி. சந்தேகத்தோடு திரும்ப திரும்ப பார்த்து உறதி செய்து கொண்டேன். அளவு கடந்த சந்தோஷம் என்றாலும். துயரச் செய்தி கண்டு துவண்டு தான் போனேன். அதை இன்னும் மேலோங்கச் செய்தது தங்களினிய குறட்பாக்கள். தாய் பாசத்துக்கு ஈடு இணை ஏது? அந்த துயரத்தில் இருந்து வெளிவருவது கடினம் தான், என்ன செய்வது தோழி மறந்து தானே யாகவேண்டும். வலை யுலகம் தான் அதற்கு சரியான மருந்து வேதனையை குறைக்க. காலப் போக்கில் கரையும் துன்பம் மீண்டும் வலையுலகம் வந்ததை இட்டு மட்டற்ற மகிழ்ச்சியே. தொடர்பு கொள்ளலாம் என்று எண்ணுவேன் என் நிலையில் இருகிறீர்களோ தொந்தரவு செய்யக் கூடாது என்றே அமைதியாகி விட்டேன் ஆனால் என் இதயம் எப்போதும் துடித்துக் கொண்டு தான் இருந்தது தோழி.
  தங்கள் மனம் ஆறுதல் அடைய ஆண்டவனை பிரார்த்திகிறேன். நன்றி !

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி இனியா! வணக்கம்!

   உங்களின் அன்பும் ஆதரவும் என்னை இவ்வளவு காலமும் வலையுலகிற்கு வராமல் இருந்தது தவறோ என எண்ண வைக்கின்றது தோழி!

   எத்தனை பாசம் என்மீது... கண்கள் குளமாகிறது...

   அம்மாவின் பிரிவுத் துயரத்திலிருந்து மெல்ல விடுபட முயல்கிறேன். ஆயினும் ஏதும் ஒரு நிகழ்வு என்னை மீண்டும் அவள் நினைவுக்கே இழுத்துச் சென்றுவிடுகிறது...

   பார்ப்போம். வலையுலக உறவுகளை அவர்களின் பதிவுகளில் சந்திக்கும்போது என்னைச் சிறிதேனும் இயல்பு நிலையாக்க முடியுமென எண்ணுகிறேன்.

   உங்கள் அன்புக்கும் ஆறுதல் வார்த்தைகளுக்கும் என்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 9. மகிழ்வும் துயரமும்
  நிரம்பியதுதானே
  வாழ்க்கை
  பிரிவுத் துயர் பெரிதுதான்
  ஆனாலும் மீண்டுத்தான் வர வேண்டும்
  மீண்டுத்தான் எழ வேண்டும்
  தாங்கள் வேதகையில் இருந்து
  நிச்சயம் மீண்டு வருவீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் கூற்று உண்மைதான் ஐயா!
   புயல் வீசிச் சென்றுவிட்டபின்னரும் அதுவந்து அழித்த சுவடுகள் மாறாதிருப்பதுபோல
   அன்னையின் பிரிவுத் துயர் என் மனத்தில் ஆழப் படிந்துள்ளது. ஆனாலும், இப்போது வலையுலகிற்கு வந்துள்ளமையால் அந்தக் காயத்திற்கு மருந்திடப்படுவதை இந்த ஓரிரு நாட்களிலேயே மிகவே நான் உணர்கின்றேன் ஐயா!

   மனதிற்கு வலிமை தரும் வகையிலான உங்களின் அன்பான ஆறுதல் வார்தைகட்கு
   என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 10. அன்னையை இழந்துவாடும் உங்களுக்கு நான் சொல்லும் ஒரே ஆறுதல் நீங்கள் எழுதியுள்ள இந்த இரண்டு வரிகளே:

  "மடிதாங்கி என்னை மகிழ்வித்தாய் உன்னை
  விடிவெள்ளி என்றெண்ணும் விண்!"

  அந்த விடிவெள்ளியை மனதில் எண்ணித் தெம்படையுங்கள்.
  காலம் எல்லாவற்றையும் மாற்றும். அன்புடன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ஆமாம் ஐயா. வழிகாட்டியாய் இருந்து வாழ்கை சொல்லித்தந்தவள் இன்று விடிவெள்ளியாக விண்ணில் மின்னுகிறாள்.
   நினைத்துப் பார்க்கிறேன்.. அவள் எனக்குக் கற்பித்த யாவையுமே...

   உங்கள் அன்பான ஆறுதல் மொழிகளுக்கு என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 11. அமைதியில் உன்ஆத்மா ஆழ இரந்தேன்
  இமையுறங்காக் கண்களோ டே!

  இழப்பைத்தாங்கும் வலிமையை
  இறைவன் அருளட்டும்..!

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி இராஜராஜேஸ்வரி!

   இந்த மன வலிமையை உங்களைப் போன்ற வலைப்பூ உறவுகள் தருவதை இங்கு காணுகிறேன்!..

   தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த என் நன்றி சகோதரி!

   Delete
 12. மிகவும் வருத்தப்படும் செய்தி... காலம் அனைத்தையும் மாற்றும்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் தனபாலன்!

   நானும் உங்கள் கருத்தை ஏற்கின்றேன். எனக்குக் கிடைத்த இந்த வலையுலக அன்பு உறவுகள் என்னைக் காயப்பட்டு அப்படியே இருந்திட விடமாட்டார்கள்.

   உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 13. அன்னையை இழந்து வாடும் தங்களுடைய மனத்துயர் அகலவும் தங்கள் மனம் ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
  தங்கள் அன்னையின் ஆன்மா - இறைநிழலில் இன்புற்றிருப்பதாக!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்களைப் போன்றோரின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும் ஐயா!

   எனக்காக, என் அன்னைக்காகப் பிரார்த்திக்கும் உங்களுக்கும்
   என் மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 14. வணக்கம்
  சகோதரி.

  தங்களின் பதிவை படித்துக்கொண்டு போகும் போது அன்னையின் இழப்பு பற்றி அறிந்தேன் அன்னையின் ஆத்மா சாத்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  வலையுலகில் கால் பதித்து பல மாதங்கள் ஆகிட்டது. நான் மின்னஞ்சல் அனுப்பி தகவல் அறிந்த பின்தான் காரணத்தை அறிந்தேன் என்னிடம் இனியா(அம்மா) பல தடவை கேட்டார்கள் நான் காரணத்தை சொன்னேன்.. அவர்களும் மனவேதனைப்பட்டார்கள் என்ன செய்வது எல்லாவற்றுக்கும் இறைவன் துணை.. சகோதரி.
  அம்மாவுக்கு வடித்த கவிதை என் நெஞ்சை கனக்கவைத்தது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ரூபன்!

   உங்களின் அன்பிற்கும் இணையே இல்லை.என்னைக் காணாது தேடிய உங்களின் அக்கறையை என்னவெனச் சொல்வேன்?.. மிக்க நன்றி சகோதரனே!..

   இக் குறட்பா யாவும் என் அன்னையை நினைக்குந் தோறும் அவ்வப்போது ஒவ்வொன்றாக எழுதியவை. இன்னும் சில இருக்கிறது. அதிகமாகிவிடுமென இங்கு தரவில்லை...

   அனைத்திற்கும் உங்களுக்கு மீண்டும் என் அன்பு நன்றி சகோ!

   Delete
 15. அன்பின் இளமதி, அன்னையின் அன்பை அனுபவித்தறியாதவன்நான். என் மூன்று வயதிலேயே அவர் போய்ச் சேர்ந்து விட்டார், இருந்தாலுமென் மனைவியும் ஒரு அன்னையல்லவா. தொப்புள் கொடி உறவு எப்படி என்று பார்த்திருக்கிறேன் , ஆண்டவனே அன்னையின் உருவில் இருக்கிறான் என்று தெரியும். வார்த்தைகளால் ஆறுதல் சொல்லத்தான் முடியும். மனிதனுக்குக் கிடைத்த ஒப்பற்ற வரம் மறதி. காலம் கடக்கும்போது நடந்தது மறக்கும் இழப்பின் வலியும் குறையும் நிறையவே எழுதிக் கொண்டு போகலாம் உங்கள் இழப்பிலிருந்து மீள வேண்டுகிறேன். அன்னை உயிருடன் இருந்தால் என்ன செய்ய விரும்பி இருப்பாரோ, எதை செய்துமுடிக்காமல் போனாரோ அதைச் செய்யவும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ஆமாம் ஐயா.. ஒவ்வொரு உறவும் ஒவ்வொருவிதமான உணர்வுதான். இருப்பினும் அடிப்படை அன்பில் அனைவரினது அன்பும் ஒன்றே.
   தாயாயிருந்தாலென்ன தாரமாயிருந்தாலென்ன... தன்னிகரில்லா உறவுகள் அவர்களும். அவர்களின் அன்பும் அத்தகையதே!

   உங்கள் கூற்றுப்படி அம்மாவின் ஆதங்க - முடிக்காமல் விடுபட்ட விடயங்கள் இருக்கின்றனதான். அவற்றை இப்பொழுதிலிருந்தே கவனிக்கின்றேன். தக்க சமயத்தில் நல்ல விடயம் சொன்னீர்கள் ஐயா!
   உங்கள் அன்பான, ஆதரவான , நம்பிக்கையும் வலிமையூட்டும் வார்தைகளுக்கு என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 16. மிக மகிழ்ச்சியான விடயம் மீண்டும் வலையுலகிற்கு வந்தது. மீளாத்துயரமா அமைந்தது அன்னையின் இழப்பு. காலம் அனைத்து துயரையும் மாற்றும். மனஆறுதலை உங்களுக்கு கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு அம்மு... இங்கும் உங்களைக் காணும்போது என் கண்கள் என்னையுமறியாமல் குளமாகிறது...
   அப்படி ஒரு தொடர்பாகிவிட்டது...

   முயல்கிறேன் என்னை மாற்ற... முயல்வதென்ன முன்னேறிவிட்டேன் என்றே சொல்கிறேன்.
   உங்களைப் போன்று இத்தனை அன்பு உறவுகள் என்னை மாற்ற எனக்குள் மாற்றம் நிகழவென என்னை வெளியே கொண்டு வந்து விட்டீர்களே...

   உங்களின் அன்பிற்கும் மனமார்ந்த நன்றி அம்மு!

   Delete
 17. இந்தியாவுக்கு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தீர்களா? அம்மாவின் இறுதி நாட்களில் கொஞ்சமாவது கூட இருக்கும், ஒத்தாசையாக பணிவிடை செய்யும், நேரில் பேசிப்பழகும் பிராப்தமும் சந்தர்ப்பமும் கிடைத்ததா ?

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை ஐயா!

   அவ்வகையில் துர்ப்பாக்கியவதிதான்...

   Delete
 18. அன்னையின் மறைவு! ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை! அன்னையின் ஆன்மா அமைதியடையட்டும்! எனது கண்ணீர் அஞ்சலி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   என் அன்னையின் மறைவு என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே உள்ளது...

   அன்பிற்கும் ஆதவிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 19. ஆழ்ந்த அனுதாபங்கள்/

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அனுதாபத்திற்கும் மிக்க நன்றி சகோதரர் விமலன்!..

   Delete
 20. இளமதி உன் துயரம் மிக்க வருத்தமானது. உன்னை ஒவ்வொரு முறை தேடும்போதும் என்ன இப்படி, ஏதும் தெரியவில்லையே என்று நினைப்பேன். என் ஆழ்ந்த அனுதாபம். சித்ரா சுந்தரும் சமீபத்தில் இதே
  துயருக்கு ஆளானாள்.. உங்கள் அம்மாக்களை அவர்களின் நல்மனதை, குணத்தை சிந்தனை செய்யுங்கள்.. அதுவே உங்களின் கூட இருந்து, அன்பைக் கொடுக்கும்.
  அவர்களின் நல்லாத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அம்மா.... உங்களை இப்படி நான் அழைக்கலாமா எனக் கேட்டிருக்கிறேன். அது வெறும் வார்த்தைக்காக அல்ல...
   என் தாயார் சில வருட காலம் இதய நோயால் தாக்கப்பட்டு அல்லறும் போதெல்லாம் என்னைவிட்டு போய்விடுவாளோ எனும் ஏக்கம் எனை வாட்ட, அதேசமயம் வலையுலகில் உங்கள் தொடர்பு கிடைத்தபோது என் அம்மாவாகவே உங்களை நான் நினைத்தேன் அம்மா. அதனாலேயே உளப்பூர்வமாகவே அப்படி உங்களை அழைத்தேன்.

   என்னைப் பற்றிய உங்கள் அக்கறையான தேடுதலிற்கு என் அன்பு நன்றிகள் தாயே. உங்களுக்கு செய்தி சொல்ல வழி தெரியாமற் போயிற்று. வருந்துகிறேன்.

   சகோதரி சித்ரா சுந்தரின் அன்னையும் இறையடி சேர்ந்துவிட்டாரா?... ஆண்டவனே.... :’(
   சகோதரிக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்! அல்லலுறும் மனதிற்கு ஆறுதல் கிடைக்க அவன்தான் அருளல் வேண்டும்.

   மீண்டும் உங்கள் அன்பிற்கும் என் உளமார்ந்த நன்றி அம்மா!...

   Delete
 21. அன்பின் சகோதரி,
  வணக்கம். தங்கள் தளத்திற்கு முதல்முறை வருகிறேன். கையறு நிலைக் கவிதைகளோடு கண்ணுறுவதில் வருத்தமே!
  குறளில் அடையுண்டிருக்கும் இழப்பின் கண்ணீரை உள்ளார்ந்து படிப்பவரின் இதயத்தில் இறக்கிவிட்டுப் போய்விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே! வணக்கம்!

   உங்கள் முதல் வருகை இங்கு கண்ணுற்று மகிழ்வாக வரவேற்கும் மனநிலையில் இன்று இல்லாவிடினும் வருகை கண்டு என் அகம் நிறைந்த அன்பு நன்றிகளைக் கூறுகின்றேன்.
   வருக சகோதரரே!..

   என்ன செய்வது... எம் ஈழத் திருநாட்டில் இழப்புகளோடேயே வாழ்ந்திருந்தும் எமக்கான உறவுகள் பலரைக் கொடுமைகளாற் பிரிந்த போதிலும் அதற்கெல்லாம் மேலாகப் பெற்ற அன்னையையே பிரியும்போது வரும் துயரம் வார்த்தைகளால் வடித்திட முடியாதவையே...
   இருந்தும் என் உளக்கிடக்கையை ஏதோ கொஞ்சம் புலம்பி வைத்தேன்...

   உங்கள் வருகைக்கைக்கும் அனுதாபத்திற்கும் என் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 22. அன்னையின் ஆன்மா இறையடியில் நன்காழ்ந்து
  பொன்னையே பெற்றுப் பொலிந்திடவும் - முன்னைத்
  திருவருளை வேண்டி இருகை குவித்தேன்!
  அருமருளை நல்கும் அது!

  அம்மா எனும்சொல்லே ஆரமுதாம்! இச்சொல்லுக்கு
  இம்மா நிலத்தில் இணையேது! - செம்மை
  திரண்ட அருங்கனி சென்றசெங்கே! வாடும்
  வரண்ட நிலமென வாழ்வு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞர் ஐயா!...

   என் அன்னையின் ஆன்மா இறையடியில் ஆறுதலடைய
   அமைத்த வெண்பாக்கள் கண்டு மனம் தேறினேன்.

   அமுதூட்டினாள் என் அன்னை!
   ஆரமுதாம் தமிழ்மொழி அறிவூட்டிய ஆசான் நீங்கள்!
   உங்கள் அறிவுரையினால் நம் மொழிகாக்க
   என் அன்னை விருப்பமும் நிறைவேற
   என்றும் உழைப்பேன் ஐயா!

   உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்
   என் இதயம் நிறைந்த இனிய நன்றி ஐயா!

   Delete
 23. அன்புள்ள இளமதி, வெகுநாட்களாக உங்களைக் காணவில்லையே என்று அடிக்கடி வலைத்தளம் வந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ வேலையாக இருப்பீர்கள் என்று நினைத்தேனே தவிர, இப்படியொரு துயரத்தில் ஆட்கொள்ளப்பட்டிருப்பீர்கள் என்று நினைத்தும் பார்க்கவில்லை. அம்மாவின் அன்புக்கு முன் எதுவுமே பிரதானமில்லை. அவர்களை இழந்தவேதனையின் துயரைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களைப்பற்றி எழுதியுள்ள வரிகள் ஒவ்வொன்றும் ஆழ்மனத்திலிருந்து அருவியெனக் கொட்டியவையன்றோ? அம்மாவின் நினைவைகளை நெஞ்சில் சுமந்து திடவுள்ளத்தோடு வாழ்க்கையைத் தொடர என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி கீதமஞ்சரி...
   உங்களின் அன்பான, உளப்பூர்வமான தேடலுக்கு என் மனமார்ந்த நன்றி!

   உள்ளே மனம் இன்னும் ஓலமிட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. என்னை மாற்றி வெளிக்கொணர முயல்கிறேன்...
   இப்பொழுதும்கூட உங்களிற்கு பதில் தர இத்தனை நாளாகிவிட்டதே.. இடையில் பல தடைகள்.
   தாண்டி வருவதற்குள் காலம் எங்கோ போகிறது.

   வாழ்க்கை வாழத்தான் வேண்டும்! முயல்கிறேன்...

   மீண்டும் என் அன்பு நன்றிகள் கீதா!

   Delete
 24. அன்னையின் பிரிவால் வாடும் தங்களுக்கும் தங்களின் அப்பாவிற்கும் சகோதரர்களுக்கும் மற்ற சொந்தகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தினை வருத்தத்துடன் தெரிவித்து அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வணங்குகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!
   தங்களின் அனுதாபத்திற்கும் ஆறுதல் தரும் வேண்டுதலிற்கும் எனது குடும்பத்தின் சார்பில் என் அன்பு நன்றிகள் சகோ!

   Delete
 25. ஆழ்ந்த அனுதாபங்கள் இளமதி..வார்த்தைகளால் ஆற்ற முடியாத இழப்பு! :( மெல்ல மெல்ல மீண்டு வாருங்கள். அன்னையின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும், இருப்பினும் எம் பிரார்த்தனைகள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு மகி!
   காலம் மாறினும் அன்னையின் பிரிவுத் துயரத்திலிருந்து மீளமுடியுமா என்பது கேள்வியாக என்னிடம் நிற்கிறது. முயல்கிறேன் மகி!

   உங்களின் அன்புப் பிரார்த்தனைகளுக்கு என் உளம் நிறைந்த நன்றி மகி!

   Delete
 26. தங்கள் தாயின் துயரில் மூழ்கிய உங்களை இன்றுதான் வலைவந்து காண்கிறேன் மன்னியுங்கள் ...........ஆறாத்துயரில் அமிழ்ந்திருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆத்மா சாந்தி வேண்டுதல்கள் தொடரும்..!

  அன்னைக் கெழுதிய ஆன்ம வரிகளில்
  மின்னுதே பாசம் மிகுந்து !

  மீண்டும் வலையுலகில் வந்து மனதின் ஆறுதலை அடையுங்கள்
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரா சீராளா!...

   ஆழக் கடலில் வாரிக் கொடுத்த உங்கள் துயர் நான் அறிவேன்.
   வாழ்க்கைக் கடலில் என் தாயையும் காலன் வாரிக் கொண்டு போக இன்று நானும் என் பலம் இழந்து நிற்கின்றேன். தவிக்கின்றேன்....

   மீள முயல்கின்றேன்.
   உங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 27. அன்புத் தோழி இளமதி, உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வந்தேன். துயரச் செய்தி கலக்கிவிட்டது. கடவுள் உங்கள் அம்மாவின் ஆன்மாவிற்கு இளைப்பாறுதல் தரட்டும், உங்களுக்கு மன தைரியம் தரட்டும்..உங்களைக் காணவில்லையே என்று மின்னஞ்சலில் பேசியிருந்தாலும் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுக்க வேண்டாம் என்றே காத்திருந்தேன்...உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் தோழி..மின்னஞ்சல் அனுப்புகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி கிரேஸ்!

   உங்களின் ஆத்மார்த்த வேண்டுகோள் என்னை என் அன்னைப் பிரிவுத் துயரத்திலிருந்து விடுவிக்கும் சக்தியாக இருப்பதைக் கண்டேன்...
   உணர்கிறேன். முயல்கிறேன்...

   என்னவெனச் சொல்வேன் உங்கள் அன்பினை நான். அத்தனைக்கும் என் உளமார்ந்த நன்றி தோழி!

   உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்
   அந்த இறையருள் காக்கட்டும்!

   Delete
 28. ஆழ்ந்த இரங்கல்கள்....

  அம்மாவின் இழப்பு என்பது ஈடு இணையில்லாதது தான். ஆனாலும் தொடர்ந்து நீங்கள் வருந்துவதை உங்கள் அன்னையும் விரும்ப மாட்டார்கள்.....

  உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரர் வெங்கட் நாகராஜ்!

   உண்மை!. என் அன்னை என் கண்கள் கலங்குவதை ஒருபோதும் விரும்பாதவள்.
   ஆனால் தான் எனக்காக அந்த இறைவனிடம் கதறி வேண்டுவாள். வேண்டியிருக்கின்றாள்.

   முதலில் துயரை மறைக்க முயல்கிறேன்...
   பின்னர் அதுவாக மறக்கும் நிலையாக வருமென நினைக்கிறேன் சகோ!

   உங்கள் அன்பான, ஆறுதல் தரும் வார்த்தைகளுக்கு உளமார்ந்த என் நன்றி!

   Delete
 29. உங்களை மீண்டும் இங்கு கண்டதில் மகிழ்ச்சி இளமதி. பாக்கள் அருமை.
  உங்கள் அன்னையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா!..

   உங்களின் அன்பான, ஆறுதல் தரும் வார்த்தைகளுக்கு உளமார்ந்த என் நன்றி!

   Delete
 30. அன்பு இளமதி, துயர செய்தி இப்போது தான் அறிந்தேன். அது தான் உங்களை வெகு நாட்களாக காணவில்லையா?
  அன்னையின் மறைவு மீளமுடியாத துக்கம்தான், அன்னையின் நினைவுகள் அவர்களின் வார்த்தைகள் அன்பு, இவை தான் இனி நம் நினைவுகளில் இருக்கும் எப்போதும்.
  நானும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  அம்மா அவர்களுக்கு மலர் அஞ்சலிகள், வணக்கங்கள்.
  மீண்டு வாருங்கள் இளமதி தேற்றிக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்களினதும் அன்பான, தேறுதல் தரும் செய்தியும் என்னை நெகிழச் செய்கிறது.
   என் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 31. அன்னையின் பிரிவின் துயரத்தை பாவாக்கிய விதம் அருமை ..
  எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்..

  வலைச்சரத்தின் அ .பாண்டியன் அவர்களின் கட்டுரை வாயிலாக உங்கள் வலைப்பூவை தொடர்கிறேன்...

  http://pandianinpakkangal.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் பாண்டியன்!

   முதல் வருகையே ஆறுதல் தரும் செய்தியோடு வந்துள்ளீர்கள்!

   மிக்க நன்றி சகோ!

   Delete
 32. தங்களின் துயரத்தை நண்பர்களாகிய நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம். எல்லாம்வல்ல இறைவன் தங்களுக்கு நல்ல மன தைரியம் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
  www.ponnibuddha.blogspot.in
  www.drbjambulingam.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் முதல் வருகையும் இங்கு எனக்கு ஆறுதல் செய்தியோடு அமைந்துள்ளது.

   மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 33. தங்களின் துயரத்தை இன்று தான் படிக்க நேர்ந்தது. என்னுடைய ஆழந்த அனுதாபங்கள். அந்த துயரத்திலிருந்து மீண்டு, தாங்கள் கவிதைகளை படைப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்னை உங்களை விட்டு நீங்கினாலும், அவர்களின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களை விட்டு நீங்காது.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்! வணக்கம் சகோதரர் சொக்கன்!

   தங்களின் முதல் வருகை இங்கு.
   விலை மதிக்க முடியாதது அன்னைப் பாசம்.
   அவள் பிரிவு தந்த வலியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேன்..

   தங்களின் ஆறுதல் செய்திக்கும் அன்பிற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_