Pages

Jul 28, 2014

இன்சொல் தருமே இதம்!..

கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களிடம் யாப்பிலக்கணம் கற்கின்ற வகையில் சில தினங்களுக்கு முன்னர் அவரின் வலைத்தளத்தில் செய்யுள் இலக்கணம் என்ற பதிவுத் தலைப்பில் வெண்டளையால் வந்த அறுசீர் விருத்தம்! என 
இத்தகைய அறுசீர் விருத்தத்தினை எழுதும் இலக்கணத்தை எழுதியிருந்தார்.

அதனைப் பின்பற்றி நானும் எழுதியதை இங்குத் தருகின்றேன்!
நன்றி! 

மனதினில் தோன்றும் இனிமை
மகிழ்வொடு காணும் உணர்வாகும்!
பணத்தினால் வாங்க இயலாப்
பல(ம்)இது பண்பின் குணமாகும்!
வனப்பினை அள்ளிச் சொரியும்
வளம்மிக நன்றே உருவாகும்!
கனந்தரும் இன்சொ(ல்) அதனைக்
கணித்திட வாழ்வே உயர்ந்தோங்கும்!
~~~~~~~~
 

மனமும் மதியும் மகிழ்வுடன் ஓங்கத்
தினமுஞ்சொல் காப்பாய் சிறந்து!

இன்சொல் தருமே இதம்மிகவே! இல்லையேல்
புன்சொல் புதைக்கும் குழி!

உறவைப் பிரித்தே உணர்வினைத் தாக்கும்
துறவையும் தூண்டும்வீண் சொல்!

சிறையிட்டுக் கொல்லும்! சிதைக்குமே வாழ்வை!
முறையற்ற சொற்கள் முளைத்து!

வேதனை தந்தே வெறுப்பைப் பெருக்கிடும்
சோதனைச் சொல்லைத் துரத்து!

இன்தரும் சொற்கள் இகத்தில் நமைக்காக்கும்!
பின்வரும் சந்ததிக்கும் பீடு!

தரமில்லாச் சொல்லைத் தரிக்காதே! என்றும் 
உரமில்லாச் சொல்லை ஒதுக்கு!

இளமையைக் காக்கும்! இனிமையைக் கூட்டும்!
வளமையை வார்க்கும்நற் சொல்!

சத்தியப் பேச்சுனைச் சான்றோன் எனவாக்கும்! 
நித்தியச் சொல்லை நிறுவு!

விளைக்குமே நன்மை விரும்பிடும் சொல்லால்
திளைக்குமே வாழ்வு சிறந்து!
---()---

நல்வார்த்தை இன்றி நலமின்றி நட்பின்றிக்
கல்லாகும் வாழ்வினைக் காண்பாயோ? - பொல்லா
உளத்தை உழுதே உயர்சொல் விளைப்பாய்! 
வளத்தை வடிக்கும் வழி!

__()__

58 comments:

 1. அறுசீர் விருத்தம் மிக அருமையாக உள்ளது இளமதி. செய்யுள் இலக்கணம் தெரியாது எனினும் சொல்லப்பட்டிருக்கும் பாடலின் பொருள் புரிவதால் மனம் தொடுகிறது. பொல்லா உளத்தை உழுது உயர்சொல் விளைவிக்க வைக்கக் கோரும் கவி அசத்துகிறது. பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதமஞ்சரி!..
   உங்களுக்கு செய்யுள் இலக்கணம் தெரியாதா?..:)
   அசத்துகிறீர்களே அகிலத்தை!..

   உங்கள் இனிய ரசனை என்னை இன்னும் எழுத வைக்கும் ஆற்றலுள்ளது.

   அன்பு வரவிற்கும் ஆழ்ந்த கருத்திற்கும் பாராட்டிற்கும்
   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் கீதா!

   Delete

 2. வணக்கம்!


  வணக்கம்!

  செம்பொன் குறட்பாக்கள்! செந்தேன் தரும்பூக்கள்!
  அம்மன் அருளென்றே ஆடுகிறேன்! - நம்மின்
  வளத்தை உயா்த்தும்! மணக்கும் நறுஞ்சொல்
  உளத்தை உயா்த்தும் ஒளி!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சீர்கொடுக்கும் பேச்சுஇன் தேன்கொடுக்கும்! இவ்வுலகில்
   பேர்கொடுக்கும் அன்பின் பெருக்கு!

   ஐயா! என் திறமை இங்கு ஏதுமில்லை.
   எல்லாம் நீங்கள் கற்பித்த வரம்! மிக்க மகிழ்ச்சி ஐயா!

   உங்கள் அன்பான வரவிற்கும்
   இனிய வெண்பா நல் வாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 3. Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் வரவிற்கும் இனிய ரசனைக்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 4. இளமையைக் காக்கும் இனிமையைக் கூட்டும் இன்சொல் குறித்துப் புனைந்த கவி அழகு இளமதி. புதுக்கவிதைக்கே விழிபிதுங்கும் எனக்கு நீங்கள் புனைந்த அறுசீர் விருத்தம் பிரமிப்பைத் தருகிறது. உங்களுக்கும் புலவர்களை உருவாக்கும் பாரதிதாசன் ஐயாவுக்கும் வணக்கங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதர் பால கணேஷ்!
   நீண்ட காலத்திற்குப் பின்பு உங்கள் வருகை இங்கு கண்டு மகிழ்கின்றேன்!
   பார்த்துப் பிரமிக்குமளவிற்கு நான் எழுதியுள்ளேனா? ரொம்பப் புகழ்கின்றீர்களே சகோ!
   இப்பொழுதான் கற்கத் தொடங்கியுள்ளேன். இன்னும் இருக்கிறது நிறைய.
   உங்களின் வரவிற்கும் நற் கருத்திற்கும் மனமுவந்த நன்றி சகோதரரே!
   அன்பு வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 5. அருமை..... பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய பாராட்டிற்கும்
   நன்றியுடன் வாழ்த்துக்களும்!

   Delete
 6. தமிழ் விளையாடுகின்றது.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பான வரவிற்கும் இனிமையான கருத்துடன் கூடிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!
   உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

   Delete
 7. நல் வார்த்தைகளும் இன் சொல்லும் என்றும் பயன்தருமே/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பான வரவும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 8. இன்தரும் சொற்கள் இகத்தில் நமைக்காக்கும்!
  பின்வரும் சந்ததிக்கும் பீடு

  இனிமை கொஞ்சும் வரிகள் அருமை..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்கள் அன்பான வரவும் இனிமையான கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

   Delete
 9. அருமையாக இருக்கிறது சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பான வரவும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 10. மிகவும் அழகாக எழுதி உள்ளீர்கள் சகோதரி! குறள்களும் அற்புதம்! இனிமையான வரிகளும் கூட....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பான வரவும் ரசனைமிக்க கருத்தும் கண்டு
   மிக்க மகிழ்வடைகின்றேன்!
   நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 11. இளைய நிலா...
  விளயாடுகிறது...
  தமிழ் நிலாவோடு...!!!

  அசத்தல் இளமதி
  நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் தங்களிடம்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ உமையாள் காயத்ரி!

   அசத்தல் வரிகளுடன் அரிய ரசனை உங்களதும்!..
   மிக்க மகிழ்ச்சி சகோதரி!
   என்னிடம் கற்கவா?.. உஷ்ஷ்ஷ்!... என்னிடம் என்ன இருக்கு.
   எல்லாம் எங்கள் குரு கவிஞர் ஐயாவிடம்தான்.
   வாருங்கள் கற்போம் அவரிடம்!

   வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

   Delete
 12. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் அன்பான வரவும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு ஐயா!

   Delete
 13. அருமையான பாடல்கள். யாப்பிலக்கணம் கற்று கவிதை எழுத் முயன்றதுண்டு. ஆனால் அவை சரியான வார்த்தைகள் கிடைக்காதபோது இலக்கணத்துக்காக தேவைப் படாத வார்த்தைகள் வந்தமர்ந்து கொள்வதால் இப்போதெல்லாம் முயற்சிப்பதில்லை. மரபு கவிதை எழுதுவோரைப் பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமை வருவதுண்டு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கற்கும் ஆவலிருந்தால் வயதெல்லாம் ஒரு தடையே இல்லை ஐயா! எங்கள் கவிஞர் ஐயா பக்கம் வந்து பாருங்கள்...
   அப்புறம் தடுமாறும் வார்த்தைகளெல்லாம் தரமாகச் சரியாக உங்கள் கவிதைகளில் வந்தமர்ந்து கொள்ளும்.

   உங்களின் அன்பான வரவுடன் இனிய ரசனைமிக்க கருத்துக்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 14. இலக்கண முறைப்படி எழுதிய கவிதைகள் மனதை கவர்ந்தன! அருமையான செய்யுள்கள், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   அன்பான வரவுடன் இனிய கருத்துக்கள் கூறி ஊக்கப்படுத்துகின்றீர்கள்.
   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!

   Delete
 15. என் சொல்வேன் தோழி !
  நின்புலமை கண்டு
  பெருமை கொள்கிறேன்

  இன் சொல் கொண்டு
  தண்பட பேசிடு
  புண் படாது ! என வாழ்வு சிறக்க
  வழங்கினாய் அழகு தமிழில்
  அறிவுரை சிலிர்த்தேன் நான்.

  இந்த சீர் எல்லாம் எனக்கு தெரியாதம்மா. ஆனால் குறளையும் பொருளையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய தோழி இனியா!

   சீரெனச் சிந்தை சிறந்தாற் கவிபாட
   வேரெனப் பற்றும் விரைந்து!

   உங்களுக்கா தெரியாது..:)
   அப்படியொன்று இல்லையே உங்களிடம்!
   முயலுங்கள் முடியும் எல்லாம்.

   அன்பான வரவுடன் இனிய ரசனை கண்டு நெகிழ்ந்தேன் தோழி!
   நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 16. இலக்கணத்தை புரிஞ்சுகிறதே கஷ்டம்!! அதை உடனே ஒரு பாட்டில் முயற்சி பண்ணி பார்கிறீங்க பாருங்க!! பெரிய விஷயம் தான் தோழி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மைதிலி!

   நீங்களுமா இப்படிச் சொல்ல... இல்லவே இல்லை!
   உங்களுக்கே புரியலைன்னா நான் என்ன சொல்ல என்னை...:)

   உங்களுக்கே தெரியும் எதையும் படிப்பதோடு நிற்காமல் நாமும் அதிலே முயன்று பார்க்கும்போது தவறுகள் வந்தாலும் மனதில் கொஞ்சமேனும் பாடம் பதியப்பட்டுவிடும். அவ்வகையில் நானும் எதையும் உடனேயே முயற்சிப்பது வழமை. அதையே இங்கும் பதிவாக்கினேன்.

   உங்கள் இனிய ரசனை கண்டு மிக்க மகிழ்ச்சி தோழி!
   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

   Delete
 17. நான் இலக்கணம்னு சொன்னாலே ரொம்ப தூரம் ஒடுறவன், இதுல நீங்க செய்யுள் இலக்கணம், அது இதுன்னு என்னமோ சொல்றீங்க. ஆனா ஒண்ணு நீங்க இப்படியெல்லாம் பேர் வச்சு எழுதியிருந்தாலும் , எனக்கும் அந்த கவிதை புரிகிறதே என்பது தான் ஆச்சிரியமான விஷயமே..

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மரபு இலக்கணக் கவிதை என்றால் நானும் உங்களைப் போன்றே கடந்த காலங்களில் இருந்தேன்.
   எங்கள் கவிஞர் ஐயா பாரதிதாசன் அவர்களின் வலைப்பூவில் அவரின் கவிதைகளை மரபிலக்கணத்துடன் எத்தனை இலகுவாக மிகச் சாதாரணமான சொற்களை வைத்தே பாடியிருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
   பேரவா கொண்டு அவரிடமே கற்க ஆரம்பித்தமையால் மிகக் கொஞ்சமாயேனும் நானும் அவ்வகையாய்ப் பாக்களை இயற்றக் கற்றுக்கொண்டு வருகிறேன்.

   அதில் சிறிதளவேனும் தேறியுள்ளேன் என்பதை இங்கு உங்கள் ரசனையே சொல்கிறது. மிக்க நன்றி சகோதரரே!
   அன்புடன் என் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete


 18. பாவலர் பாடம் படித்துப் பயன்பெற
  நாவிலூறும் நற்றமிழ் நன்று !

  சொல்லொன்றின் உள்ளே சுடர்விடும் நற்பண்பு
  வல்லபெரும் வாழ்வின் வழி !

  அறுசீர் விருத்தம் அரும்பொற் குறள்கள்
  நறுமணம் கண்டது நா !

  அத்தனையும் அழகு அருமை
  வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சீராளன்!

   சீர்பெருகச் சீராளன் தந்த குறட்பாக்கள்!
   பேரினைக் கூறவே பீடு!

   இளங் கவிஞரின் வரவும் இனிய குறட்பாக்களும் காண
   உளம் நிறைந்தது!..

   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கும்!

   Delete
 19. சக்கப் போடு போடு ராஜா
  உன்காட்டில மழை பெய்யுது...

  அம்மாடியோவ்... இலக்கணத்தை கற்று உடன் பாக்கள் எழுதுகிறீர்கள். உங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்கு இப்படி பாட வேண்டும் எனத்தோன்றிற்று.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம் சகோதரி!

   உங்களின் முதல் வருகை இங்கு கண்டு மகிழ்வுற்றேன்!

   உள்ளம் துள்ள உவகை பொங்க அள்ளித்தந்த வாழ்த்து கண்டு
   மிகவே மகிழ்கின்றேன்! உங்களாலும் முடியும்...
   எழுதுங்கள்!

   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

   Delete
 20. உங்கள் பதிவை தொடர்கிறேன்.
  நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள் ஐயா!

   முதல் வருகையாக இங்கு உங்களைக் காணுகின்றேன்.
   மிக்க மகிழ்ச்சி ஐயா!

   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கும்!

   Delete
 21. பாடல் அருமை சகோதரி!
  பாடல் முழுவதும் இரு அசைகள் கொண்ட சீரினைக் கொண்டு,
  விளம் - மா- தேமா என்ற அமைப்பில் எழுதிப் பாருங்கள்.
  ஓசை சிறக்கும்.
  வெட்டிடாக் குழியில் உள்ளம்
  .........வீழ்த்தினாய் விழியின் வீச்சில்
  கட்டினாய், என்னைக் காதல்
  .......கயிறினால், உன்றன் எண்ணம்
  தொட்டிடும் போதோ என்னில்
  .......துளிர்க்குமோர் கவிதை எண்ணம்
  பட்டிடா தாக்கும், வந்து
  ........ பார்த்திடின் உன்னை ஆக்கும்!
  “ஆய்ந்துநற் சொற்கள் அடுக்கும் இளமதியார்
  வாய்த்த தமிழ்கொள் வரம்“
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தேர்ந்து பதிவிடும் சிந்தனைச் சிற்பிநீர்!
   சேர்ந்தே சுவைத்தீர் சிறந்து!

   உங்கள் கூற்று உண்மைதான் ஐயா! இங்கு இந்த அறுசீர் விருத்தம் எமது ஆசான் தந்த இலக்கண விதிக்கு அமைய எழுதிப்பார்த்ததே.
   நீங்கள் எழுதிக்காட்டிய அறுசீர் விருத்தம் தரும் சுவை சொல்லுதற்கு முடியுமோ! அள்ளிக் கொண்டு போய்விட்டது!
   மிக அருமை ஐயா!

   அன்பு வரவிற்கும் இனிய கவிக் கருத்துப் பகிர்விற்கும்
   என் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 22. Replies
  1. வணக்கம் ஐயா!

   அங்கு வந்து கண்ணுற்றேன்..
   மனதில் பதித்துக்கொண்டேன்!

   நன்றியுடன் வாழ்த்துக்களும்!

   Delete
 23. வேதனை வினைசொற்கள் ஓடட்டும்..
  அருமை ...
  உங்கள் கவிதைகளை தொகுத்து ஒரு ஆப்பிள் ஆப்பாக அல்லது ஈ.புக்காக வெளியிடலாம். '

  ஆனால் ஐ.எஸ்.பி.என் வாங்க வேண்டும்

  ஆப்பிள் ஸ்டோரில் விற்பனைக்கு வைக்கலாம்..
  சில மாதங்கள் கழித்து எனது வீட்டுக்காரம்மாவின் கவிதைகளை இப்படி வெளியிட உத்தேசம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரரே!..

   அட.. இதுகூட நல்ல யோசனைதான்..:)
   ஆமா உங்க வீட்டுக்காரம்மாவின் கவிதைகளை நீங்க சொல்லுவது சரிதான்.
   ஆனா என்னோட கவிதையை இப்படிச் சொல்லி என்னைக் கேலி பண்ணலியே...:)
   நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லீடுங்க. அதுக்கு இப்பிடியெல்லாமா சொல்லணும்.. வடிவேலு பாணியில்...
   “ வேணாம்.. அழுதுடுவேன்...:))”

   உங்க இரசனை கண்டு உள்ளம் பூரித்தேன் சகோ!
   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
  2. உண்மையில் தோன்றியதை மட்டுமே பகிர்ந்தேன் சகோதரி...
   கேலி ஒன்றும் இல்லை ...

   Delete
  3. சகோதரரே!..

   சும்மா தமாஸ் பண்ணினீர்களென நினைத்தால்
   இப்போ இப்படிச் சொல்லி எனக்கு குளிர் ஜுரம் வந்தாற்போல
   பயத்தில் நடுங்க வைக்கின்றீர்களே..:)

   அவ்வளவிற்கு நன்றாகவா இருக்கு எனது படைப்பு!..:)
   நன்றி! நன்றி! மிக்க நன்றி சகோ!

   Delete
 24. உங்களின் யாப்பிலக்கணம் கற்கும் ஆர்வமும் கவிதை எழுதும் திறனும் என்னை அசர வைக்கின்றன‌ இளமதி! மேன்மேலும் சிறந்திருக்க என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மனோ அக்கா!

   அன்பின் வரவொடு ஆழ்ந்த இரசனை என்னை இன்னும்
   எழுதிடத் தூண்டுகிறது...

   மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் அக்கா!

   Delete
 25. வணக்கம்
  சகோதரி
  செப்பிய வரிகள் என் சிந்தையில் ஊறுது.
  சிந்திக்க சிந்திக்க சிகரமே ஆடுது.
  சிந்தையில் உள்ளம் துள்ள.
  சிந்திய பாக்களை கற்று மகிழ்ந் தேன்
  நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. சகோதரி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே!

   ஆர்ப்பரிக்கும் உங்கள் அழகான நற்கருத்து
   சீர்பெருகச் செய்யும் சிறந்து!

   மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

   Delete
 26. எனக்குத் தெரியாத தலைப்பு; புரியாத தலைப்பு.
  இருப்பினும்... ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ரீச்சர்..:)

   உங்களுக்குத் தெரியாத தலைப்பா இது.. ம்ஹும்!..
   நல்ல கதைதான்!...:)

   இருந்தும் ரசித்தமைக்கும் வாழ்த்திற்கும்
   அன்பு நன்றி இமா!..:)

   Delete
 27. "..நல்வார்த்தை இன்றி நலமின்றி நட்பின்றிக்
  கல்லாகும் வாழ்வினைக் காண்பாயோ? .."
  அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைத்தியரையா!

   உங்கள் வரவும் ஆழ்ந்த ரசிப்பும் கண்டு மகிழ்ந்தேன்!
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 28. வணக்கம் !
  அறுசீர் விருத்தத்தால் அகத்தைக் குளிர்வித்த அன்புத் தோழிக்கு
  என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் .

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி!
   உங்கள் கால் இப்போ சுகமாகிவிட்டதா?

   உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_