Pages

Sep 16, 2014

வலைப்பூக்கள் தந்த விருது!..


வலைப்பூ விருதாய் வலம்வந்த ஒன்றென்
தளம்பூக்கச் செய்யும் தழைத்து!
எனக்கு அருமையான இந்த விருதினை மூவர் பகிர்ந்துள்ளனர்.
அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய நன்றியுடன் வாழ்த்துக்களும்!


அன்பின் மிகுதியால் வாய்த்த நல் விருது!
என்பணி இன்னும் உள்ளதெனச் சொல்கிறது…
காலம் கைகொடுக்கும் வரை தொடர்வேன்!
அன்பு நன்றியுடன் விருதிற்கான நிபந்தனைகளுடனும் இப்போது…

என்னை ஒருபொருட்டாய் ஏற்று விருதுகந்த
இன்னுயிர் நண்பர் இணைப்பு!

1). விருது  வழங்கியவர்களும் அவர்கள்
      தளத்திற்கு இணைப்பும்!

இவர் முதலில் எனக்கு இவ் விருதினைப் பகிர்ந்த வலைப்பதிவர்

நெஞ்சமெலாம் ஆன்மீக நேர்நெறி தான்சுமக்கும்
தஞ்சையார் தந்த விருது!

ஆலயத்திற்குச் செல்லாமல் அவர் தரும் பதிவுகள் படித்தாலே
கோயிலுக்குச் சென்ற பலன் கிட்டிடும்.
அருமையான ஆன்மீகத் தளப்பதிவாளர்!
ஐயா தஞ்சையம்பதி துரை செல்வராஜூ

அடுத்து..

பண்பான ஆசிரியை பார்புகழ்த் தென்றலாள்
அன்பாய் அளித்த விருது!
 
அன்பான ஆசிரியை.
அருமையான குறுங்கவிகள் கொட்டிக் குவிக்கும் பதிவர்
தென்றல் கீதா


தொடர்ந்து…

நட்புலக நாயகர் நண்பர் துளசிதரன்
பற்றுடன் படைத்த விருது!

பல்முகப் பதிவர். பதியும் விடயங்களும் அருமையானது.
துளசிதரன் தில்லையகம்


அடுத்து,..

2). விருதினைத்  தளத்தில் போட்டுக் கொள்ள  வேண்டும்.

பெருமைதரும் நல்லதொரு பேறாம் விருதை
அருமையாய் நான்பதித்தேன் ஆழ்ந்து!


அடுத்ததாக,

3). என்னைப் பற்றிச் சொல்ல வேண்டும்.


ஈழத்திற் பிறந்தேன்
இணையத்தில் இளமதியானேன்!
காலத்தில் மணமுடித்துக்
கண்டேன் மழலைகள் இருவர்!

தேசம் சேதமுறத்
தேடிவந்தது யேர்மனிக்கு
பாசக் குடும்பமாய்ப்
பதினெட்டாண்டுகள் வாழ்வு!

வீசிய புயலாக விதி
வீழ்த்தியது கணவரை!
பேசிய புலன்களும்
உணர்வும் ஓய்ந்திடவே!

கொடிய நிலையான
``கோமா´´வில் வீழ்ந்திடக்
கடினமாய்ப் போனதே
காலமுடன் வாழ்க்கையும்!

நெடிதான காலம்
பன்னிரண்டு ஆண்டுகள் 
உடன் வைத்திருந்தே உயிர்
காக்கின்றேன் இப்பொழுதும்!

இடையிட்ட காலம்
இனியதொண்டு தமிழிற்கு!
இங்குள்ள சிறுவர்களுக்கு
இருவருமே கற்பித்தோம்!

உடன்துணை படுக்கையாகத்
தடைப்பட்டது பணியாவும்!
தளராது தமிழ்போற்றக்
கற்கின்றேன் கவிஞரிடம்!

மிகக்கூற ஏதுமில்லை
மெதுவாகஎன் மூச்சடங்கும்வரை
இகவாழ்வில் இன்னும்தொண்டு
இயற்றவேண்டும் இறைதுணையே!


அடுத்ததாக - 

4). குறைந்த பட்சம் ஐந்து நண்பர்களுடன் இவ் விருதினைப்
                            பகிர்ந்து கொள்ள வேண்டும்.


மின்ன அளித்தேன் விருது!

அன்பாய் வலைப்பூ அதிரா அமைத்துகந்த
பண்பிற்கு ஈய்ந்த விருது!

அஞ்சு பழக்கிய கைப்பணிச் சீரெண்ணி 
விஞ்சிடத் தந்தேன் விருது!

பிரிய சகிக்குப் பெருமையுடன் தந்தேன்
அரியதமிழ் அன்பின் விருது!

அன்புநிறை சோதரன் ஆழ்கவிஞர் சீராளன்
மின்னிடத் தந்தேன் விருது!

வலைப்பூ நட்பொளிர வாய்த்தஇமா விற்கு
விளைத்தேன் இனிய விருது!

~~~~~~~~~~~~~~~~

விருதொன்று தந்து விளைந்திட்ட நட்பைப்
பெரிதென்று போற்றிடும் பெண்நான்! - அரியதமிழ்
கற்கும் மனத்தால் கவிதை புனைந்துள்ளேன்!
கற்றோர் பொறுத்தல் கடன்!


54 comments:

 1. அன்பின் சகோதரி..
  அனைத்தும் நலமாகும்..
  அவள் அருளே துணையாகும்!..

  எம்பெருமான் முன்னின்று முப்பொழுதும் காக்கட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் உடன் வருகை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!

   நீங்கள்தான் எனக்கு விருதையும் தந்து
   ஆரம்பித்து வைத்தீர்கள்.!

   இன்று இங்கு பதிவிலும் நீங்களே
   மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களுடன் ஆரம்பித்துள்ளீர்கள்!...

   மிக்க மகிழ்ச்சியுடன் என் நன்றியும் ஐயா!

   Delete
 2. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இளமதி.
  விருது தந்தமைக்கு நன்றிகள்.
  அழகியகவிதனை வடித்து
  அழகாக அறிமுகப்படுதிய பாங்கு வெகு சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய பிரியசகி!

   அன்பான வரவும் இனிய இரசனையோடு வாழ்த்தும் கண்டு
   உள்ளம் மகிழ்கின்றேன்!
   மிக்க நன்றி பிரியசகி!

   Delete
 3. காலம் செய்த கோலத்தினை, கடமை உணர்வால் வென்று கவிதை படைக்கும் உங்களுக்கு விருது கிடைத்தது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! வாருங்கள்!

   உங்கள் ஆழ்ந்த கருத்து என் உளச் சோர்வுதனை நீக்கிச்
   சுறுசுறுப்பாக்குகின்றது!

   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 4. விருது பெற்றமைக்கு
  வாழ்த்துக்கள் சகோ !


  நற்றமிழ் பாடும் நவயுக பாவரசி
  பெற்ற விருதுனக்கு பேறாகும் - வற்றா
  நதியாய் வளங்கள் நிறைந்திட வாழ்க
  மதியுள் மொழிபோல் மலர்ந்து !


  எனக்கும் விருதா ?

  நெஞ்சம் இனிக்க நினைவுக்குள் தேன்சுரக்க
  கொஞ்சும் கவிதந்த நல்விருதை - விஞ்சும்
  விழிநனைய வேட்கையுடன் வாங்குகிறேன் ! அக்கா
  அழியாமல் காப்பேன் அணைத்து!

  மிக்க நன்றி சகோ

  விருது பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்


  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரனே!

   நல்வாழ்த்து இங்கே நவின்றாய் சகோதரனே!
   இல்லாமல் போகட்டும் இன்னல்கள்! - வெல்லமென
   உன்றன் மொழிகேட்டு உள்ளம் இனிக்கிறதே!
   எம்முறவு ஓங்க இயற்று!

   அன்பான வரவிற்கும் இனிய கவி வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சீராளனே!

   Delete
 5. மிக்க நன்றி இளமதி .கொஞ்சம் நாட்களாக எழுதுவதில் ஒரு lazy இருந்து வந்தது எனக்கு ..முகபுத்தகமும் ஒரு காரணம்தான் :) இப்போ விருதை பெற்றுகொண்டதும் ஒரு உற்சாகம் பற்றிகொண்டார்போலிருக்கு ..விரைவில் இதனை எனது பதிவில் வெளியிடுகிறேன் ..விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!

   ஆமாம் அஞ்சு... போட்டா போட்டியாக வலையுலகில் பதிவிட்ட சாதனையாளர்கள் நீங்கள்.
   இப்பொழுது ஏன் இத்தனை கால இடைவெளி?...

   இப்பொழுதிலிருந்தாவது எழுதத் தொடங்குங்கள்.
   யாவும் சிறக்கும் விரைந்து!
   வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் இனிய நன்றி அஞ்சு!

   Delete
 6. உங்களைப் பற்றிய செய்திகள் வாசிக்கும் போது உங்கள் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது. இளைய நிலா முழு நிலாவாகப் பிரகாசிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்களைப் போன்றோரின் அன்பும் ஆசியுமே என்னை
   இன்னும் செய் என உரமூட்டுகிறது!

   பணிகளுக்கு மத்தியிலும் வலையுறவுகளைக் காணும்போது யானை பலம் கிடைத்ததாக எண்ணுகிறேன்.
   சுகம் விசாரிக்கவும் சுயநலமில்லாது தெரிந்ததைப் பகிரவும் தெரியாததை பயிலவும் வலைப்பூ மிக்க உறுதுணையாக இருக்கின்றது.

   நேரப் பற்றாக்குறைதான் மிகுந்த பிரச்சனை. தங்கள் ஆசிப்படி இன்னும் இன்னும் என் தொண்டினை ஆற்றுவேன்.

   அன்பான வரவுடன் ஆதரவான உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 7. வணக்கம் !
  விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்றுக் கொண்ட
  அனைவருக்கும் வாழ்த்துக்கள் அன்புத் தோழியே !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   உங்கள் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி!

   மிக்க நன்றி தோழி!

   Delete
 8. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 9. விருது பெற்றமைக்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்கள் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 10. வணக்கம் தோழி...சிரமங்கள் சூழ வாழ்ந்தாலும் தமிழ் உங்களைக்காத்திடுவாள்...விருது பெற்றமைக்கும் இனிய கவிதைகட்கும் வாழ்த்துகளும் நன்றியும்மா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத்தோழி!

   தமிழும் தமிழோடு உங்களைப் போன்றோரின் அன்புமே
   எனக்குத் துணை!
   உங்கள் அன்பு வாழ்த்தினுக்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 11. வாழ்த்துக்கள்,விருது பெற்ற தங்களுக்கு/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 12. ஆஹா! ட்ரிப்ள் சாட்!!! மூணு விருதுக்கு வாழ்த்துக்கள்:) உங்களை பற்றி இப்படி கவிதை எழுத உங்களால்தான் முடியும், மறுபடியும் க்வெல்லிங் அசத்தல் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   நீங்கள் வந்தாலே கலகலப்புக்குப் பஞ்சமில்லை..:)

   க்விலிங் ஆரம்ப காலத்தில் செய்து இங்கேயே சென்ற வருடம் பதிவிட்டது. மீண்டும் இங்கே இணைத்து விட்டேன்.

   பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 13. துயர் பல சந்தித்தபோதும் மாறாத உறுதியும் உழைப்பும் உங்களை உயர்த்தி உள்ளது. விருதுக்கு பொருத்தமானவர் நீங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பும் ஆதரவும் கண்டு நெகிழ்ந்தேன்!..
   துயரம் என்னைத் தூக்கி விழுங்கிவிடும் அபாயம் ஏற்பட்டது உண்மை!. அதிலிருந்து என்னை மீட்க வலையுலகு வந்தேன். கூடவே இருந்த தமிழார்வம் இந்த நிலைக்கு இப்போ கொண்டு வந்திருக்கின்றது.

   தங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 14. வணக்கம் தோழி.

  விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத் தோழி!

   தங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி!

   Delete
 15. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..
  இன்னுமின்னும் செழுமையான விருதுகள்
  உங்களை வந்தடைய என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சகோதரரே!

   தங்கள் வாழ்த்தும் இறைவன் ஆசியும் என்றும் இருந்திட்டால் எல்லாம் சிறப்பாக அமையும்.

   வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 16. வாழ்த்துக்கள் சகோதரி
  மிக்க மகிழ்வு
  மூன்றென்ன மூவாயிரம் விருதுகளுக்கு தகுதியானவர்கள் நீங்கள் ...
  தொடர்க

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மூவாயிரம் விருதுகளா??? அதிக ஆசைதான்!..:)

   இதுவே எனக்கு என்ன தகுதிக்கு வழங்கப்பட்டதோ?..
   அவர்கள் என்மீது கொண்ட அளவுகடந்த அன்பு. நம்பிக்கை! அதுவே பெரீய வரம்! கிடைத்ததே போதும்!

   உங்களின் அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 17. விருதுகளுக்கு வாழ்த்துகள்.

  உங்களைப் பற்றிப் படித்தபோது - உங்கள் துயரங்களையும் மனத்திண்மையுடன் எளிதாய்க் கடந்து வருகிறீர்கள் என்று தெரிந்தது. வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவுகண்டு மிகவே மகிழ்வடைந்தேன்!
   கருத்தினைக் கண்டு உளம் நெகிழ்கின்றேன்.
   வணங்குமளவிற்கு அப்படி மகானோ சாதனையாளரோ அல்லேன்.
   சாதாரணமானவள்தான் நான்!
   விதியின் சோதனை அதிகமாகி நிலை தடுமாற வைத்துவிட்டது.
   இருப்பினும் தமிழ்த்தாய் தந்த ஊக்கம் இங்கு என் பணி!...

   உங்கள் அன்பான வரவிற்கும் நல் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 18. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 19. தீயில் சுடர்பொன்னாய் தெய்வத் தமிழ்கவிதை
  ஆயும் இளமதியார் ஆட்டுவிக்கும் - நோயெல்லாம்
  வல்ல இறைநோக்க வாழ்வின் துயரகலும்!
  வெல்லுமவன் செய்வான் விதி!
  தங்கள் பெற்ற விருதுகள் கண்டு மகிழ்ச்சி!
  தங்களின் உளக்கிடக்கைகள் யாவும் மெய்ப்படும்!

  வேண்டுகிறேன்.
  வாழ்த்துகிறேன்.

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மாயா விதியும் மறைந்தே வதைப்பினும்
   தாயாய் வலையுறவு தானுணர்ந்தேன்! - தேயாது
   தேற்றி உடன்வரத் தேறிடுவேன்! நம்தமிழ்
   போற்றிப் படைப்பேன் புதிது!

   அன்பான வரவுடன் ஆதரவான நற்கவி வாழ்த்துகந்தீர்கள்!
   என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 20. சே...சே...சே.... இந்தக் கவித் தொல்லை தாங்க முடியலப்பாஆஆஆஆஆஆஆஆ.. புரிஞ்சால் ரசிப்பேன் நேக்கு இவங்கட தமிழ் புரியுதே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நல்லா இருந்த இளாமதியை.. கவிதாயினி ஆக்கியதால என்னால பேச முடியவில்லையேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.. ;)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா!..:)

   வரும்போதே சரவெடியோடு..:)

   ஒண்ணுமே புரியலையா உங்களுக்கு... எனக்கும்தான்..:))

   Delete
 21. 3ம் இலக்க கவி படித்து நெஞ்சம் கொஞ்சம் தள்ளாடியது... இதுவும் கடந்து போகும்.....

  விருது பெர்றா உங்களூக்கு வாழ்த்துக்கள்..

  மர்றூம் விருதினைப் பெர்றூக் கொண்டோருக்கும் வாழ்த்துக்கள்>...

  மிக்க நன்ரீ.

  என் கீ போர்ட் கோளாரால் எனக்கு தமிழில் ரைப் பன்ணாவே மனமில்லை.. அதனால்தான் இங்காலிப் பக்கம் வராமல் இருக்கிரேஎன்..

  ReplyDelete
  Replies
  1. தட்டெழுத்துப் பலகை சீர் செய்ய முடியாததோ?...

   புதிதாக ஒன்று அனுப்பிவிடுகிறேன். உங்கள் கருத்துரை எனக்கு மிக முக்கியமாச்சே!..:)

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!.. மிக்க நன்றி அதிரா!

   ஆ.. போகும்போது விருதினைத் தூக்கிக்கொண்டு
   போய்ப் பதிவிடுங்கள்!
   அங்கு வந்து பார்க்கின்றேன் நான்!..:)

   Delete

 22. வணக்கம்!

  பல்கும் விருதுகள் பாவையுனைத் தேடி!சீர்
  மல்கும் கவிதையுள் மகிழ்தாடி! - நல்குகிறேன்
  வல்ல கவிஞர் எனும்பட்டம்! வாழ்கவே
  நல்ல தமிழ்காத்து நன்கு!

  கவிஞர் இளமதி கட்டுகின்ற பாக்கள்
  புவியைப் புரட்டும்!சீர் போற்றும்! - செவியினிக்கப்
  பேசும் உரைத்திறனும் பேணும் கலைத்திறனும்
  வாசம் வழங்கும் வளர்ந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
  18.09.2014

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் மொழி கேட்டு பேச்சிழந்து போனேன் ஐயா!

   புதிய பதிவிட்டுள்ளேன்! அங்கு வாருங்கள்!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 23. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி!

   Delete
 24. வணக்கம்
  சகோதரி
  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அந்த விருதை மற்றவர்களுக்கு பகிர்தமைக்கு நன்றிகள் பல.
  சுய சிந்தனை அறிவோட்டத்தில்
  விடை சொல்ல முடியாத வரிகள்
  கவி நயத்துடன் சிந்து பாட
  துன் பம் கலந்த வரிகள் கண்டு.
  என் மனம் கண்ணீர் மல்கியது...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   விருதோடு கொஞ்சம் விபரித்தேன் என் வாழ்க்கையை..
   வருந்திட வேண்டாம். இதுவும் கடந்து போகும்!...

   அன்பான வரவிற்கும் நல் வாழ்த்திற்கும்
   இனிய நன்றி சகோ!

   Delete
 25. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி. மேன்மேலும் தொடர்ந்து விருதுகள் கிடைக்கட்டும்,
  தங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் உமையாள்!..

   தங்கள் அன்பு வாழ்த்துகளுக்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 26. வலைப்பூ மற்றும் versatile blogger விருதுகள் கிடைத்தமைக்கு
  கவிஞர் இளமதிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்களை கண்டதுமே ஒரு புத்துணர்
   உள்ளத்தில் தோன்றுகிறது!..

   அன்பான வரவிற்கும் இனிய நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 27. அன்புள்ள கவிஞர் இளமதி அவர்களுக்கு,
  ஈழத்துக் கவிஞராக இருக்க வேண்டும் என்று எண்ணி பின்னூட்டம் இட்டு இருந்தேன். ‘சேர்ந்ததா? சேரலையா’ என்று தெரியவில்லை.

  ‘ஈழத்திற் பிறந்தேன்
  இணையத்தில் இளமதியானேன்!

  ‘இடையிட்ட காலம்
  இனியதொண்டு தமிழிற்கு’

  -காலம் வாழ்த்தும் கவிதைப் பறவையை
  காணும் உலகம் வாழ்த்தும் இனிமேல்...
  நானும் உளமுவந்து வாழ்த்துகிறேன்
  நாளும் வாழ்ந்திரு... வளர்ந்திரு..

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜேம்ஸ் ஐயா!

   தங்களின் முதல் வருகை இங்கு!..
   மனமகிழ்வோடு வரவேற்கிறேன்!

   ஆச்சரியத்தில் அமிழ்ந்தேன் ஐயா!
   உங்கள் வாழ்த்தும் என்னை வேறோர் உலகிற்கு இட்டுச் சென்றது!.. மிக்க மகிழ்ச்சி!

   என் உயிரினும் மேலான தமிழோடுதான் வாழ்வு எனக்கு ஐயா!
   காலம் கைகொடுக்கும்வரை தொண்டு செய்வேன்!

   அன்பான வரவிற்கும் இனிய நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_