Pages

Sep 29, 2014

யாதுமாகி நின்றாய்!..


எங்கள் ஆசான் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயாவின் இல்லத்தில்
28.09.2014 அன்று நடைபெற்ற திருஅருட்பா அரங்க நிகழ்வுக்
கவியரங்கத் தலைப்பிற்கு எழுதிய கவிதை!

யாதுமாகி நின்றாய் எனக்குக் - கண்ணா!
தீதுநன்றைத் தெரிய வைத்தாய்!
பேதையென்றே எண்ணி என்னைப் - பாரில்
பேசும்வாயைச் சேர்த்துத் தைத்தாய்!

பாதையெனக்குக் காட்டி நன்றாய்ப் - பயின்று
பாடிடவே இன்பம் விளைத்தாய்!
கீதைதன்னைக் காட்டி நன்றாய் - வாழ்வின்
கீர்த்திகளை அள்ளி அளித்தாய்!

தோன்றுகின்ற துன்பம் தொலைய - என்றும்
தோழமையாய் நன்றேருந்தாய்!
தோல்வியெனைத் தொடரா வண்ணம் - உன்றன்
துணையெனக்கு வேண்டும் விருந்தாய்!

மேவுநலம் யாவும் சேர்ந்து - புகழில்
மிளிர்ந்திடவே வாழ்வை வடிப்பாய்!
தாவுசிறு மழலை நானும் - தந்த
தமிழமுதை நன்றே குடிப்பாய்!

மோதுகின்ற சூதும் வாதும் - எங்கும்
முடிவுபெற உலகைக் காப்பாய்!
ஏதொன்றும் அறியா எனக்கும் - கவிதை
எழுதுகின்ற சீரைச் சேர்ப்பாய்!

சாதுபலர் சாற்றும் நெறிகள் - பாரில் 
தந்தென்னைக் காப்பாய் பொற்பாய்!
போதுமெனக்குப் பொல்லாக் கொடுமை! - கண்ணா!
யாதுமாகி என்றும் நிற்பாய்!

~^~~^~~^~~^~~^~~^~


என்நாவில் ஏற்று!வளந்தரும் சொற்களால் வாயாரப் பாட
உளந்தனில் என்றும் ஒளிர்வாய்! - நிலந்தனில்
நின்னருள் நாடினேன்! நீலவண்ணா! நற்றமிழை!
என்நாவில் நன்கிருக்க ஏற்று!

~~~~~~~~~~


62 comments:

 1. அருமையான கண்ணன் பாடல் சகோதரியாரே...!!!

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்களின் உடனடி வரவும் வாழ்த்தும்
   மன மகிழ்வைத் தருகிறது!

   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
  2. கவிதை மிக அருமையாக இருக்கிறது இளமதி.
   நீலவண்ணன் கருணை என்றும் உண்டு உங்களுக்கு இளமதி.
   வாழ்த்துக்கள்.

   Delete
  3. வணக்கம் கோமதி அக்கா!

   உங்கள் இனிய இரசனையும் அன்பு வாழ்த்தும் கண்டு
   உள்ளம் நெகிழ்ந்தேன்!

   என் அன்பு நன்றி அக்கா!

   Delete
 2. அருமையான பாடல் !!!!
  இந்த அழகிய தமிழை ரசிக்கவாது எனக்கு அறிவை கொடுத்த இறைவனுக்கு நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!

   பாடலை இரசித்தீங்களா.. மகிழ்ச்சி!...:)

   நல்ல அறிவு எல்லாம் உங்களுக்கும் நிறையவே உண்டு!. அதிலும் நம் தாய்மொழியில் திறமையும் உண்டு.!

   நல்ல நல்ல எழுத்தாளர்களின் கதைகள் நிறைய வாசிப்பீங்களே.. எனக்கும் தெரியும்தானே!..:)

   மரபுக் கவிதை என்றவுடன் சிலர் பின்வாங்குவது தெரிந்த விடயம்தான். ஆனாலும் இலகு சொற்பதங்களுடன் எளிமையாயும் மரபு மாறாமலும் எழுதலாம் என்று நான் என் ஆசானிடம் கண்டு கொண்டேன்! கற்கின்றேன்!.

   உங்கள் அன்பான வரவு மிகுந்த மகிழ்வாக இருக்கின்றது அஞ்சு! வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 3. அருமை
  அருமை
  சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பு வரவுடன் இனிய இரசனை
   என்னை மகிழ்விக்கின்றது ஐயா!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 4. கண்ணக்கவி கண்டேன் - என்
  கண்ணில் ஒற்றிக் கொண்டேன் - நின்
  எண்ணக் கவி கற்கண்டு
  எமது பதிவு My India By Devakottaiyan

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   கண்களில் ஒற்றுங்கள் கண்ணன் திருப்பாதம்!
   எண்ணம் முழுதும் இனிப்பு!

   அன்பு வருகைக்கும் இனிய கவிக் கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 5. கண்ணனும் அழகு
  அவ்வழகனைப் பாடும்
  கவிதையும் அழகு.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   நலமாக இருக்கின்றீர்களா?..
   நீண்ட காலத்தின் பின்பு காண்கின்றேன் உங்களை!
   மட்டற்ற மகிழ்ச்சி ஐயா!

   அன்பான வரவுடன் இனிய இரசனை
   கண்களைக் கசிய வைத்தது ஐயா!

   மிக்க நன்றி!

   Delete
 6. தங்கள் பாவண்ணம் கண்டு
  எந்தன் எண்ணம் நன்றென்று
  சொல்லிக் கொள்ளும் என்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பான தங்கள் வரவும் இனிய இரசனையும்
   கருத்துக் கவியும் கண்டு மனம் மகிழ்ந்தேன்!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 7. தாவுசிறு மழலை நானும் - தந்த
  தமிழமுதை நன்றே குடிப்பாய்!


  அப்பப்பா ...சிறப்பான வரிகள் ....நெஞ்சை அள்ளும் கருத்து ...வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அனுராதா பிரேம்!

   அப்பப்பா... உங்கள் இரசனையும் அற்புதம்!
   மிக்க மகிழ்ச்சி! வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 8. மோதுகின்ற சூதும் வாதும் - எங்கும்
  முடிவுபெற உலகைக் காப்பாய்!
  Nanru sis,,
  Vetha.Lanagthilakam

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்கள் அன்பும் ஆதரவும் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்!
   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 9. கண்ணனின் கானம் தமிழ் பாலில் அதிரசம்...நன்றி தோழி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் உமையாள்!

   ம்... பாலொடு அதிரசம்!...:)
   உங்கள் இரசனையும் தனித்துவமானது!

   மிக்க மகிழ்ச்சி தோழி!
   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete

 10. வளந்தரும் சொற்களால் வாயாரப் பாட
  உளந்தனில் என்றும் ஒளிர்வாய்! - நிலந்தனில்
  நின்னருள் நாடினேன் நீலவண்ணா நற்றமிழை
  என்நாவில் நன்கிருக்க ஏற்று!..

  பக்தி மணம் கமழ்கின்றது. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் வாயால் இப்படிக் கேட்க என் மகிழ்வு
   இரட்டிப்பாகின்றது ஐயா!
   வருங்காலங்களில் பக்தியையும் பாவாகத் தொடர
   இது அத்திவாரமே!..

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 11. ஏதுமறி யாதநிலை ஈங்கிவ ளிர்க்கில்லை
  யாதுமறி கண்ணனவன் யாசித்தே - ஓதுமடி
  யார்குறையை ஒட்டிவிடும் உள்ளன்பால்! யாவரையும்
  ஓர்மையுற வைப்பான் ஒளிர்ந்து !

  உங்களுக்கும் கண்ணன் ஆசி கிடைக்கட்டும்
  வாழ்த்துகிறேன்

  அழகாய் இருக்கு சகோ வாழ்க வளமுடன்
  படித்தேன் ரசித்தேன் அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. ஏற்றும் சுடரிருக்க எவ்விருளும் நில்லாதே!
   அற்றிவரு கண்ணன் அருகிருக்க - போற்றுகவிச்
   செல்வி உமைச்சுற்றிச் செம்மையினி கூடாதோ?
   அல்லல்போ காதோ அகன்று?
   நல்ல பாடல் கவிஞரே!
   ந்ன்றி!

   Delete

  2. வணக்கம் சகோ தவறுக்கு வருந்துகிறேன்
   திருத்தம் செய்திருக்கிறேன் !

   ஏதுமறி யாதநிலை ஈங்கிவ ளிற்கில்லை
   யாதுமறி வான்கண்ணன் யாசிப்பான் - ஓதுமடி
   யார்குறையை ஒட்டிவிட உள்ளன்பால்! யாவரையும்
   ஓர்மையுற வைப்பான் ஒளிர்ந்து !

   அவசரம் அதனால் கவனிக்கவில்லை அப்படியே தட்டச்சு பண்ணி அனுப்பிட்டேன் மீண்டும் பார்த்து பயந்திட்டேன் பொறுத்தருள்க !


   Delete
  3. வணக்கம் அன்புச் சீராளனே!..

   எல்லாம் அறிந்தவர் எங்கள் பெருமாளே!
   கல்லாய் இருந்தவளைக் கற்பித்தார்! - உள்ளார்
   இலாதார் எதுவுமே எண்ணார்! அவரைத்
   தொளாமல் உயர்வேது சொல்!

   அன்பான வரவுடன் இனிமையான வெண்பாக் கருத்தும் தந்தீர்! உளம் நிறைந்தேன்!
   மிக்க நன்றி சகோ!

   எழுதும்போது தவறு ஏற்படுவதும் திருத்துதலும் இயல்புதானே! கவலை வேண்டாம் சகோ!

   Delete
  4. வணக்கம் விஜு யோசெப் ஐயா!

   அல்லல்போம்! மங்கைக்கு ஐயன் அருளிருக்கச்
   சொல்லக் கிடையாது துன்பமே! - செல்ல
   இனிக்குமுளம் மாயனிடம்! என்றன் வினையைத்
   தணிக்குமே நாள்வரத் தான்!

   தங்கள் அன்பு வருகையும் ஆதரவான நல் வெண்பாவும்
   உள்ளம் நெகிழ்துகிறது ஐயா!
   மிக்க நன்றி!

   Delete
 12. வணக்கம் !

  அருமையான கண்ணன் பாடல் !வாழ்த்துக்கள் என் அன்புத்
  தோழியே !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   கண்ணன் கருணை எல்லாம்!

   வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 13. அருமையான கவிதை சகோதரி! இப்படி எல்லோரும் போட்டி போட்டு எழுதினால் ......ரசித்தோம்!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   ஒரு நிமிடம் ஆடிப்போனேன்!..
   படிக்க யாரும் வரமாட்டார்களோ என்று!..:)

   உங்கள் கலகலப்பான கருத்துரைக்கும்
   வாழ்த்திற்கும் இனிய நன்றி சகோ!

   Delete
 14. இனிமையான பாடல்.

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி அருணா!

   வாழ்த்திற்கு அன்பு நன்றி!

   Delete
 15. தோல்வியெனைத் தொடரா வண்ணம் - உன்றன்
  துணையெனக்கு வேண்டும் விருந்தாய்!நிச்சயமாக வருவான் தோழி! அருமை அருமை ! வாழ்த்துக்கள் ...!

  நம்பினோர் தன்னை கைவிடானே கண்ணன்.

  கண்ணனை கருத்தினில் வைக்க கவலைகள்
  தீரும் தன்னால்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய இனியா!

   கண்ணனைக் கேட்டேன்! காட்டினான் பாதை!

   அன்பு வரவுடன் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete

 16. வணக்கம்!

  கண்ணனே தாயானான்! கண்ணனே சேயானான்!
  கண்ணனே காக்கும் குருவானான்! - கண்ணனே
  என்றன் உயிரானான்! இன்பத் தமிழானான்!
  என்றும் எனக்குள் இருந்து!

  நீல நிறவண்ணன் கோல எழிற்கண்டால்
  காலம் கவிபோல் கமழ்ந்திடுமே! - ஞாலமுயா்
  சீரேற்றேன்! சிந்தை சிரீதரனைச் செப்புகின்ற
  கூரேற்றேன் இன்பம் குவித்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   யாதுமாகி எம்முடன் இங்குற்ற ஆசானே!
   ஏது கவலை இனியெமக்கு! - ஓதுவோம்
   நற்பாக்கள்! காண்போம் நலம்மிகவே! தோன்றிடும்
   பொற்காலம் ஓங்கும் தொடர்ந்து!

   தங்கள் வழிகாட்டலுடன் தொடர்கின்றேன்!..
   தங்களின் அன்பான வரவிற்கும்
   இனிய வெண்பாக் கருத்திற்கும் உளமாந்த நன்றி ஐயா!

   Delete
 17. தமாதாமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.
  அருமையான ஒரு கண்ணன் பாடல். ரசித்து படித்தேன்.
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   நீங்கள் வந்ததே மகிழ்வாயிருக்கையில்
   தாமதம் எல்லாம் ஒன்றுமே இல்லை!

   இனிய வரவுடன் நல் வாழ்த்திற்கும் அன்பு நன்றி சகோ!

   Delete
 18. https://www.youtube.com/watch?v=xG3JyC9qWWM
  இங்கே உங்கள் பாடலை ஆனந்த பைரவி ராகத்தில்,
  கேட்கலாம்.

  ஒரு ஐந்து பெண்கள் கண்ணன் முன்னே கோலாட்டம் போட்டு பாட
  அழகெனத் திகழும்.

  சுப்பு தாத்தா.

  www.subbuthatha.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   யாதுமாகி நின்றான் கண்ணன்! - வந்து
   சேதி சொன்னான் என்காதினிலே!
   தோதாய்ச் சுப்புத்தாத்தா பாடத் - தோழி
   சென்று கேட்பாய் என்றே!

   என்னவெனச் சொல்வேன் ஐயா!
   அற்புதம்! அற்புதம்!
   கற்பனையில்.. கண்ணனுடன் கோதையர் கும்மியடித்து
   ஆடுவதாய்க் கண்டேன்!
   மிக அருமையாகப் பாடியுள்ளீர்கள்!

   வாழ்த்த வயதில்லை! இருந்தும் உளமார்ந்த நன்றி கூறி
   உங்கள் நலனைக் காக்க அந்த மாயவனை வேண்டுகிறேன்!

   ஐயா!..

   இங்கே உங்கள் பாடல் பதியும் பெட்டகத்தில்
   இந்தப் பாடலையும் இணைத்துள்ளேன்!
   மீண்டும் அன்புடன் நன்றி ஐயா!

   Delete
  2. ஆஹா மிக மிக அற்புதமான பாடல்.

   Delete
 19. கண்ணன் கவி கொண்டு கட்டி இழுத்துவந்தாய்
  வண்ணத் தமிழ் மொண்டு சிந்தை கிறங்கி வந்தேன்
  எண்ண எழில் கண்டு நித்தம் வியந்தவள் நான்
  பண்ணால் வாழ்த்துகிறேன் தாயே நீ வாழ்க

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோதை!

   பண்ணொன்றுப் பாடிப் பரந்தனை என்நெஞ்சில்!
   இந்நாளே நன்நாள் எனக்கு!

   கண்டு கனகாலமாச்சு!.. நலமோ மகளே!..

   வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி மா!

   Delete
 20. தோன்றுகின்ற துன்பம் தொலைய - என்றும்
  தோழமையாய் நன்றே இருந்தாய்!
  தோல்வியெனைத் தொடரா வண்ணம் - உன்றன்
  துணையெனக்கு வேண்டும் விருந்தாய்!
  என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சசிகலா!

   தங்களின் வரவும் வாழ்த்தும் தருகிறது
   மட்டற்ற மகிழ்வை எனக்கு!

   மிக்க நன்றி தோழி!

   Delete
 21. வணக்கம் சகோதரி உங்களின் வலைப்பூவைக்கோர்த்து இன்று வலைச்சரம் அமைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா!

   சூட்டிய பாமாலை சொக்கவைக்க! என்னையும்
   காட்டிய உன்றன் கருணையென்னே! - பாட்டிசைக்கும்
   பாவையுன் அன்பில் பறக்கின்றேன்! தோழியுன்
   சேவையினை வாழ்த்தினேன் சேர்ந்து!

   இப்பொழுதான் அங்கு சென்று கருத்திட்டு வந்தேன்!
   எப்படி என் மகிழ்ச்சியையும் நன்றியையும்
   உங்களுக்குச் சொல்ல!...

   கண்ணீர்தான் பூக்களாகின்றன! சொரிந்தேன் நன்றியாக!

   வாழ்க வளமுடன் தோழி!

   Delete
 22. கவிதை அருமையாக இருக்கிறது இளமதி! இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ அக்கா!..:)

   உங்களை இங்கு காண்பதும் என் பேறுதான்!

   வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 23. அன்புள்ள கவிஞர்.திருமதி. இளமதி அவர்களுக்கு,

  வணக்கம். ‘ யாதுமாகி நின்றாய்! ‘ -கவிதை நன்றாக இருக்கிறது. தீதுநன்றைத் தெரிய வைத்தாய்!...
  போதுமெனக்குப் பொல்லாக் கொடுமை! ’
  -வேண்டும் வரம் கண்ணன் கொடுக்கிறானோ இல்லையோ...
  தங்களின் தமிழ் அன்னை கண்டிப்பாகக் கொடுப்பாள்.

  நண்பர் திரு.விஜு அவர்களின் வலைப்பூவில் பின்னூட்டம் கண்டேன். மகிழ்ச்சி. அவர்தான் வலைப்பூ பற்றியும்...எனது வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தும், உதவிகள் பல செய்தும் வருகிறார் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்
  கொள்கிறேன்.
  அவரும் கூகுள் + வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார். வேறு வெப்சைட் மாற்ற முயற்சி செய்கிறேன். இணையம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  எனது வலைப்பூவில் ‘பாலோயர்’ ஆக தாங்கள் வருகை புரிந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   முதற்கண் தங்கள் வரவிற்கு என் நன்றி!
   மிகுந்த மகிழ்வெய்துகிறேன்!.

   தமிழன்னையும் அவளைச் சற்றும் குறைவிலாமற் காக்கும்
   எங்கள் ஆசான் கவிஞர் ஐயாவும் எனக்கு வரமே!

   தங்கள் அன்பு கண்டு நெகிழ்ந்தேன் ஐயா!
   இனிய வரவிற்கும் நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   தங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்கின்றது.
   பதிவுகளும் அருமை ஐயா! தொடர்கிறேன்!...

   Delete
 24. அன்பின் இளமதி, மரபிலக்கணத்தோடு எழுதும் கவிதைக்கு என்ன பின்னூட்டம் இடுவது என்று தெரியவில்லை, ஆனால் கவிதை அழகாய் வந்திருக்கிறது என்று சொல்லமுடியும். பதிவின் தலைப்பு என்னை ஈர்த்தது. இதே தலைப்பில் நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். எந்த இலக்கண வரம்பிலும் சேராதது. ஆனால் உள்ளத்தில் இருந்து பொங்கி வந்த வரிகள் இந்த பாடறியாதவன் எழுதியது நீங்கள் படிக்க வேண்டும் என்னும் ஆவலினால் உந்தப் பட்டுசுட்டி தருகிறேன்
  gmbat1649.blogspot.in/2011/06/blog-post_18.html வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் அன்பான வரவும் இனிய இரசனையும் கண்டு
   கண்கள் கசிந்தன.

   பாடறியாதவன் என்று நீங்கள் உங்களைத் தாழ்த்திச் சொல்ல வேண்டாம் ஐயா!
   மரபுக் கவியாற்றல் முறைப்படி கற்றிடக் கைதேறும்!

   உங்கள் எழுத்துக்களும் ஒன்றும் குறைந்தவை இல்லை.
   எண்ணங்களை இலாவகமாக இனிமையாக எழுதும் வல்லமை கொண்டவர் நீங்கள்!
   அதுவும் இரசிக்கக் கூடியதே!
   சோர்ந்திட வேண்டாம். தொடருங்கள்!...

   அங்கு வந்து பார்த்து, உருகிக் கருத்தும் இட்டேன்.

   யாவற்றிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 25. கவிதையில் நிச்சயம் கண்ணன் சொக்கித்தான் போயிருப்பார் அவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறீங்க கவிதையை.
  //நின்னருள் நாடினேன்! நீலவண்ணா! நற்றமிழை!
  என்நாவில் நன்கிருக்க ஏற்று// நிச்சயம் அவனருள் என்றுமிருக்கும் உங்களுக்கு.
  நன்றிகள்.-

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அன்பு அம்மு!

   கண்ணன் என் நெஞ்சில் என்றும் உள்ளவன்.
   அவன் பெயரில் கவி எழுத இப்பொழுதான் கூடிற்று.
   உங்கள் இரசனையும் வாழ்த்துங் கண்டு மகிழ்ந்தேன்!

   உளமார்ந்த நன்றி அம்மு!

   Delete
 26. அன்புள்ள கவிஞர்.திருமதி. இளமதி அவர்களுக்கு,
  வணக்கம். தாங்கள் பின்னூட்டம் இடுவதற்கு வசதியாக இப்பொழுது mozilla firefox திறந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருகைதந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.

  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மிக்க மகிழ்ச்சி!
   அங்கு வந்துப் பார்த்துக் கருத்துப் பதிவு செய்துவிட்டேன்.
   நேர நெருக்கடி காரணமாக எல்லாப் பதிவுகளும்
   பார்த்துக் கருத்திட முடியவில்லை. அவ்வப்போது அவற்றையும் பார்க்கின்றேன்.

   இங்கு வந்து அறியத் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 27. அருமை!கவிதை மனதுக்கு இனிமை சேர்த்தது
  வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் வளர்க்கும் பாரதிதாசன் ஐயா அவர்களின் பணி போற்றுதற்குரியது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவும் நற் கருத்தும்
   இனிமைக்கு இனிமை சேர்க்கின்றது!

   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 28. கவிதை அருமை...
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 29. அருமையான பாடல். வாழ்த்துகள்.....

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_