Pages

Nov 1, 2014

கண்மூடி வேண்டுகிறேன்!..


அன்பொன்றைத் தினம்வேண்டி ஏங்கும் நெஞ்சம்!
ஆழ்மனத்தில் பெரும்துன்பம் என்றும் தஞ்சம்!
இன்பொன்று சென்றதனை இதயம் மெல்லும்!
இழுத்துவிடும் உயிர்க்காற்றுக் கொதித்தே கொல்லும்!
மண்ணதனில் மாண்புறவே வாழத் தோன்றும்!
மலைபோல ஊழ்வினைகள் வந்தே ஊன்றும்!
கண்ணனவன் நல்வழியைக் காட்ட வேண்டும்!
கருணைமழை பொழிந்தென்னைக் காக்க வேண்டும்!கண்மூடி வேண்டுகிறேன்  அருள்வாய்! வாடும்
காரிகையென் காரிருளைக் களைவாய்! மேனி 
மண்மூடிப் போகுமுன்னே மங்கை  என்னை
மாண்போடு பணியாற்ற வன்மை ஈவாய்!
விண்ணாடிப் போகையிலும் என்றன் மூச்சு
வியன்தமிழைப் பாடுகின்ற வண்ணம் செய்வாய்!
என்னெஞ்சம் என்னவென்றே அறிவாய் கண்ணா!
எனக்கிந்த வரம்தந்து காப்பாய் மன்னா!


பாஞ்சாலி வேண்டியதும் ஓடி வந்தாய்!
பார்த்தனுக்குத் தேரோட்ட நாடி வந்தாய்!
பூஞ்சோலை மங்கையர்கள் கெஞ்சிச் கேட்கப்
பொற்குழலை இசைத்தழகாய் மகிழச் செய்தாய்!
சாஞ்சாடும் மழலையென ஆழ்வார் நெஞ்சம்
தாலாட்டி நெகிழ்ந்ததுபோல் வாழ்வை யாக்கு!
மாஞ்சோலை வாடுவதோ? மாய கண்ணா!
மழையாக உன்னருளைப் பொழிந்தே காப்பாய்!

~~*~~~~*~~~~*~~~~*~~~~*~~

படத்திற்குக் கூகிளிற்கு நன்றி!

75 comments:

 1. வணக்கம்
  சகோதரி

  மது சூதனைப்பற்றிய கவிதை நன்றாக உள்ளது பகிர் வுக்கு நன்றி.
  நன்றி
  அன்புடன்
  ரூபனி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மாதவன் தானிரங்க மாதிவள் பாட்டிற்குச்
   சோதரனுன் வாழ்த்தே சுடர்!

   உங்கள் முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்!
   மிக்க நன்றி சகோ!

   Delete
 2. குழலூதும் கண்ணனையே
  கொள்ளை கொள்ளும்
  கவியழகில் மயங்கியே
  உளம் நெகிழ்வான்!

  கண்மூடி நீ கேட்கும்
  அமைதியின்பம் விரும்பியே
  கேட்கின்ற வியன்தமிழும் வாடாத
  வரமாக தந்தே மகிழ்வான்!

  தேன்மழையே சிந்துதம்மா உந்தன்நாவில்
  சேர்த்திடுமே புவியளவு புகழனைத்தும்.

  நெஞ்சம் இனிக்க தந்தாய் இனிய பக்திப்பா நன்றி!
  தொடர வாழ்த்துக்கள் தோழி என்ன சொல்ல வார்த்தையில்லை.....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி இனியா!

   கோபாலன் உள்ளம் குதூகலித்தால் வாழ்வோங்கிப்
   பூபாளம் காணும் பொலிந்து!

   உள்ளம் நெகிழ இட்ட கருத்தும் கவியுங் கண்டு
   துள்ளுகிறது என்மனம்!

   கண்ணனருள் உங்களுக்கும் கிட்டட்டும்!
   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 3. அழகிய கண்ணன்படம் அதற்கேற்ற கவிதையும் கொள்ளை அழகு!

  ReplyDelete
  Replies
  1. அழகிற்கிற்கு அழகு சேர்த்த உங்கள்
   அன்பிற்கும் நன்றி தோழி!

   Delete
 4. //விண்ணாடிப் போகையிலும் என்றன் மூச்சு
  வியன்தமிழைப் பாடுகின்ற வண்ணம் செய்வாய்!//
  உங்கள் தமிழ் மனதை மயக்குகிறது .கண்ணனிடம் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் கண்ணன் நிறைவேற்றி வைப்பான்.ஏனெனின் கவிதைத் தமிழ் கண்ணனையும் கவர்ந்திழுக்கும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   வியன்தமிழ் கண்டு வியந்தீர்களோ?
   எங்கள் கன்னல்மொழி விந்தை மொழிதான்..!
   கண்ணன் என்றன் கோரிக்கையுடன்
   எல்லோர் வேண்டலையும் பூர்த்தி செய்வான்!

   அன்பான வரவிற்கும் அழகுமொழி வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 5. புதுச் சோலை நடுவினிலே
  பொங்கி வரும் நீரோடை இது.
  பாடிடுவேன் நானும் இதை இந்தக் கணம்
  பார்த்தனின் அருள் கிட்ட காத்திடுவேன்.

  சாரங்கனின் அருள் கிட்டிடவே
  சாரங்க ராகத்தில் முதல் பாடல்.

  ஷண்முக பிரியாவில் அடுத்த பாடல்
  முடிவும் சாரங்கா என
  மூன்று பாடல்களையும்
  பாடியிருக்கிறேன்.

  கேளுங்கள். உங்கள் நண்பர்களையும்
  கேட்டு பார்த்தனின் அருள் பெற்றிட
  வேண்டுங்கள்>

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பரந்தாமன் தானருளப் பாடுங்கள் ஐயா!
   இரங்கியே வந்திடட்டும் இங்கு!

   பாடல் தொடர்பிற்காக - லிங் - காத்திருக்கின்றேன் ஆவலுடன்!
   தாருங்கள் மகிழ்வோம் கேட்டு!...

   அன்பு வருகைக்கும் இனிய கவி வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. https://www.youtube.com/watch?v=zAbEC9s8StY

   subbu thatha

   Delete
  3. வணக்கம் ஐயா!

   பேரருள் தந்து பெருமானே காப்பனென்று
   ஈரமிகு பண்ணெடுத்து இங்கிசைத்தீர்! - சீரும்
   சிறப்புறவே பாடினீரே தேனினிமை! கேட்டேன்
   திறந்தவிழி ஓடும்நீர் சேர்ந்து!

   எனது கவிதை உயர்பெற்றது
   உங்கள் பாட்டிசையால்!.. மிக மிக அருமை!

   கண்மூடி நானே எழுதியதோ இப்பாடலென
   கேட்டு நின்றேன்!
   இரங்கநாதனை இரங்கவைக்கும் குரலினிமையும்
   சிறந்த இராகத்தெரிவும்!.. அற்புதம் ஐயா!

   மிக்க நன்றியுடன் வணங்குகின்றேன்!

   பாடலை அதனிடத்திற் பதிந்துள்ளேன் ஐயா!

   Delete
 6. கண்ணனவன் நல்வழியைக் காட்ட வேண்டும்..
  கருணைமழை பொழிந்தென்னைக் காக்க வேண்டும்!..

  தங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்!..

  கிருஷ்ண கானம் - செந்தமிழ் ஊற்று..
  அருமை.. இனிமை..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கிருஷ்ணன் உங்களைப் போன்று
   இத்தனை அன்புள்ளங்களும் எனக்காக வேண்டுவதாலும்
   நிச்சயம் அருளுவான் ஐயா!

   அன்பான வருகையுடன் இனிய வாழ்த்துத் தந்தீர்கள்!
   மட்டற்ற மகிழ்வுடன் என் இனிய நன்றியும் ஐயா!

   Delete
 7. //வியன்தமிழைப், இசைத்தழகாய் //
  கவிதைப் படித்த வெகுகாலம் பின்னும்
  இந்த வார்த்தைகள் மறக்காது
  அருமையான சொல்லாடல்
  தொடர்க சகோதரி

  மலர்த்தரு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   இசைத்த கவியில் இட்ட வார்த்தைகள்
   உள்ளந் தொட்டதைக் கண்டு மகிழ்கின்றேன்!

   அன்பான வருகையுடன் இனிய கருத்துப் பகிர்விற்கு
   இதயம் நிறைந்த நன்றி சகோதரர்!..

   Delete
 8. சாஞ்சாடும் மழலையென ஆழ்வார் நெஞ்சம்
  தாலாட்டி நெகிழ்ந்ததுபோல் வாழ்வை யாக்கு!

  அழகான பாடல் மனதை நிறைத்தது..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்கள் வருகையும் இனிய இரசனையும்
   எனக்குத்தரும் ஊக்கமென்பேன்..!

   பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி சகோதரி!

   Delete
 9. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவும் நற்கருத்திற்கும் இனிய நன்றி!

   Delete
 10. வென்றிடவும் வீழ்த்திடவும் வீரம் வேண்டாம்!
  .... விளித்திடுக அவன்நாமம் ஒன்றே போதும்!
  கன்றிடமே தாய்க்குள்ள உரிமை போலக்
  ..... கண்ணனுக்குத் தங்கள்பால் உறவே உண்டு!
  இன்றிருக்குந் துயரெல்லாம் இருளின் முன்னே
  ..... ஏற்றுகின்ற தீபத்தால் அகலல் போலே
  என்றும்‘உன் திருநாமம் ஏத்து கின்ற
  ....இளமதியார் துயர்தீர்க்க வாராய் கண்ணா!!!
  தங்களின் தமிழ்ச்சுவையில் கண்ணன் நிச்சயம் மயங்கி வருவான் . படுதுயர் யாவும் பனிபோல் நீங்குமவன் கதிரொளியால் சோதரி!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எண்சீர் விருத்தமதில் இட்ட கவிக்கருத்து
   விண்ணைத் தொடுதே விரைந்து!

   என்றன் துயர்நீக்க இட்டனை வேண்டலொன்று!
   நன்றியென்று என்நா நவின்றிடவே! - கன்றிடம்
   தாய்காட்டும் நற்கருணை தந்திடக் கண்ணனிடம்
   சேயெனவே நானிருப்பேன் சேர்ந்து!

   ஐயா!.. தங்கள் எண்சீர் விருத்தக் கருத்துப் பகிர்வு
   கண்டபின் என்ன நான் எழுதுவது எனத் தெரியாது
   திண்டாடி நிற்கின்றேன்! உங்கள் திறமைக்கு முன்
   எனது எழுத்துக்கள் மலையின் முன் சிறு கூழாங் கல்லே!..

   அத்தனைக்கும் என் உள்ளம் நிறைந்த
   உவகையோடு நன்றி ஐயா!

   Delete
 11. அழகிய வார்த்தைக் கோர்வை அருவியென கொட்டும் வார்த்தைகள். வியந்துபோகிறேன். தமிழ்த்தாய் எனக்கும் அருள்புரிய வேண்டுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி சசிகலா!

   அன்னை அருளுவாள் அன்பான ஆசானாய்!
   உன்னையேற்றும் பாதை உணர்!

   நம்தாய் தமிழும் நல்ல ஆசானும் இருந்தால்
   அதுவே நம் உயர்வுக்குப் போதும்!

   இந்தப் புகழெல்லாம் என்னைப் பயிற்றுவிக்கும்
   என் குருவிற்கே சமர்ப்பணம்!

   உங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 12. ''...பாஞ்சாலி வேண்டியதும் ஓடி வந்தாய்!
  பார்த்தனுக்குத் தேரோட்ட நாடி வந்தாய்!...
  நன்றாக அமைந்துள்ளது.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   அன்போடு வந்து ஆர்வமோடு இரசித்து
   உள்ளன்போடு வாழ்த்தினீர்கள்!
   என் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 13. படம் அழகான தெரிவு. கவிதை எப்பொழுதும் போல் அருமை.

  நீங்கள் வேண்டுவதெல்லாம் கிடைக்க என் பிரார்த்தனைகளும் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய இமா!
   காண்பதே அருமையாகிப் போனதே!..:(
   நலமாக இருக்கின்றீங்களோ?..

   நயமான வாழ்த்துக் கண்டு உளம் மகிழ்ந்தேன்!
   மிக்க நன்றி இமா!

   Delete
 14. மாஞ்சோலை வாடுவதோ? மாயக் கண்ணா!
  மழையாக உன்னருளைப் பொழிந்தே காப்பாய்! //

  கண்ணனின் அருள் மழை என்றும் உங்களுக்கு தமிழிலேயே பொழிந்து கொட்டும் தோழி.

  இளமதியின் இதயம் பொழிந்த பாமாலையை
  இடையர் குலத்தோன் கேட்டின் புற்று
  அருளவந்தான் ஆங்கே அகத்தின்கண் என்றும்
  செப்புவாய் தமிழ் என.

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி உமையாள்!

   இவளின் இதய இயக்கமே கண்ணன்
   துவளாமற் காப்பான் தொடர்ந்து!

   தயாபரன் தமிழறிவைத் தங்குதடையின்றி
   எல்லோர்க்கும் நல்கட்டும்!
   அன்பான கவி வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 15. அன்புச்சகோதரி,

  அன்பெனும் வெள்ளம் ஆறாய்ப் பெருக வேண்டும்
  துன்பெனும் துயரம் தூரவிலக வேண்டும்
  இன்பெனும் தமிழை இன்னும்பாட வேண்டும்
  என்னுடைய வாழ்த்து இன்னமும் கேட்க வேண்டும்!
  கண்மூடி வேண்டும் வரமெல்லாம் கிடைக்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   என்றுமே உங்கள் இனிதான வாழ்த்தெனக்கு
   நன்றாம் உயர்வுக்கும் நன்மருந்தாம்! - வென்றும்
   விதியை விலக்கவும் வேங்கடன் தாளே
   கதியொன்று என்றேனே கண்டு!

   தங்களின் அன்பிற் தோய்ந்தேன் ஐயா!
   உளமார்ந்த உங்கள் வாழ்த்தும் வேண்டுதலும்
   என்னை ஊக்குவிக்கின்றது!

   தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இங்கிருக்க
   எனக்கு ஏது குறை..! தமிழ்த்தாய் தடையின்றி அறிவைத்தர
   எழுதுவேன் இன்னும்!

   அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
  2. அன்புச் சகோதரி,

   மிக்க நன்றி.

   Delete
 16. கண்ணன் கவிதை இனித்தது! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 17. அழகான வரிகள் மனதைக்கொள்ளையடிக்கின்றன தோழி..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்கள் கவிதைகளைவிடவா என் கவிதைகள்
   மனதைக் கொள்ளை கொள்கின்றன..:)
   கவிதைக் கடலன்றோ நீங்கள்..!

   அன்பிற்கு மிக்க நன்றி கீதா!

   Delete
 18. கவிவரிகள் ஒவ்வொன்றும் மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க.
  "கண்மூடி வேண்டுகிறேன் அருள்வாய்! வாடும்
  காரிகையென் காரிருளைக் கலைவாய்! ""
  உங்கள் வேண்டுதல்பாக்கள் கண்ணன் காதில் கண்டிப்பா கேட்டிருக்கும். அழகான படத்தெரிவு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மு!

   இங்கு சிலரின் கருத்துகளுக்கு இடையிடையே மாறிப் பதில் - கருத்து எழுதும்போது சில தொடர் ஒழுங்குகள் குழப்பமாகி விட்டன. அதில் உங்களுக்கு இடும் கருத்தும் தடைப்பட்டுவிட்டது. வருந்துகிறேன்..!

   கண்ணன் காதில் கேட்டு கனவில் வந்து
   செய்தி சொன்னானே..:)

   அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி அம்மு!

   Delete
 19. மிக மிக அற்புதம்
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவுகண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!
   உங்கள் வரவும் கருத்துமே எனக்கு எப்போதும்
   மிக்க மகிழ்வைத் தருவதாகும்!

   வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா!

   Delete

 20. வணக்கம்!

  திருக்கண்ணன் பேரழகில் கோதை உள்ளம்
  திண்டாடி நிற்கின்ற காட்சி கண்டேன்!
  அரும்வண்ணச் சொற்கூட்டி மின்னும் பாட்டில்
  ஆழ்ந்துாறும் அன்பமுதை அள்ளி உண்டேன்!
  பெரும்மண்ணில் புரிந்திட்ட வினைகள் நீங்கிப்
  பிறவாமை எய்துவதே வாழ்வின் நோக்கம்!
  வருமெண்ணம் அத்தனையும் மாயோன் ஆக
  வரமுற்ற இளமதியே வாழ்த்து கின்றேன்!


  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எண்ணம் அறிந்(து)இட்ட எண்சீர் விருத்தமோ!
   பின்னுதென் நா!.தொலைத்தேன் பேச்சு!
    

   தரவேண்டும் பேரருளை வா!வா! கண்ணா!
     தயவாகக் கேட்கின்றேன் நீல வண்ணா!
   திரமாகக் குருவருளைக் கிட்டச் செய்வாய்!
     தினந்தோறும் கற்கஒரு வழிநீ சொல்வாய்!
   உரமாக என்ஆசான் இட்ட வாழ்த்து!
     உளம்மிகவே பூரித்து ஆடுது கூத்து!
   கரங்களிலே தமிழ்மகவு தவளப் பாட்டு!
     காலமெலாம் நான்பாடக் கருணை காட்டு!

   ஐயா!..
   உங்கள் எண்சீர் விருத்தத்தின் இனிமைக்கு
   முன் நின்று என்னால் எழுத முடியவில்லை!..

   உள்ளம் மிகுந்த களிப்போடு என் அன்பு நன்றியையும்
   வாழ்த்தினையும் கூறுகின்றேன்!

   Delete
 21. வணக்கம் சகோதரி !.தங்களின் கவிதை வேண்டல் என் மனதை எதோ செய்கிறது. மானிடனான என் மனத்தையே கசிந்துருகவைக்கிறது என்றால் , மதுசூதனன் மனதை மயங்கவைக்காதா என்ன..?
  தங்களின் கவிதை வரிகளைப் படித்தவுடன் எனக்கு கண்ணதாசனின் கவிதைவரிகள் நினைவுக்கு வருகின்றன...
  "பாஞ்சாலி பூந்துகிலைப் பற்றி இழுக்கையிலே
  ஆண்சாதி நானென்று அங்குவந்த கோபாலன்
  மான்சாதி வங்காள மங்கையரின் கண்ணீரை
  ஏன் காணவில்லை அது எனக்கும் தெரியவில்லை
  எல்லையில்லா துயர் தீர இறைவன் வரவில்லையெனில்
  இல்லையவன் என்பாரை இறைவனென நாம் துதிப்போம் "
  இவை கவியரசின் வரிகள்.(நினைவில் வந்ததை எழுதியிருக்கிறேன்..)
  "பாஞ்சாலி வேண்டியதும் ஓடி வந்தாய்
  பார்தனுக்குத் தேரோட்ட நாடி வந்தாய்!
  மாஞ்சோலை வாடுவதா ? மாயக்கண்ணா
  மழையாக உன்னருளைப் பொழிந்தே காப்பாய் "...என்ற வரிகளும் ,
  மேனி
  மண்மூடிப் போகுமுன்னே மங்கைஎன்னை
  மாண்போடு பணியாற்ற வன்மை ஈவாய் "....அடடா அற்புதமான வரிகள்.!
  நான் மட்டும் அரசனாக இருந்தால் ஆயிரமாயிரம் பொற்காசுகளை அள்ளித் தந்திருப்பேன்..! இருந்தாலுமென்ன அதைவிட மதிப்புமிக்க என் அன்னைத் தமிழால் வாழ்த்துகிறேன்..!
  வாழ்க தமிழுடன்.!
  வாருங்கள் என் "எண்ணப்பறவை"க்கு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வாருங்கள்!.. தாங்கள் ஆயிரம் பொற்காசுகள் தரப்போவதாகச் சொன்னவுடன் அதைப் பெற்று கொள்ளப் போதிய திடமான கொள்கலன் தேடிவர நாட்களாகிவிட்டன ஐயா!..
   வந்துவிட்டேன்!..:))

   கண்ணதாசன் வரிகள் அத்தனையையும் மனப்பாடம்
   செய்து வைத்திருக்கின்றீர்களே..! மிகச் சிறப்பு ஐயா!
   சில வரிகள் கேட்டதாக சிறிது ஞாபகம் வருகிறது எனக்கும்!
   அவரின் கவிதைகள் அத்தனையும் அற்புதமன்றோ!

   நானும் பயிலுவதை அவ்வப்போது இங்கு கொஞ்சம் எழுதிவிடுகிறேன்.
   உங்களைப் போன்றோரின் ஆதரவும் ஊக்கமிகு நற் கருத்துகளும் என்னை மேலும் வளரச் செய்கின்றன ஐயா!

   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   சிறகடித்துப் பறக்கும் எண்ணப் பறவையைக் கண்டேன் ஐயா!
   மிக அருமை! வாழ்த்துக்கள்!

   Delete
 22. ஆஹா... சூப்பரா... அதுவும் எனக்குப் புரிகிறமாதிரி இம்முறை கவிதை... பாடல்போல எழுதியிருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா!..

   அது என்ன எனக்கும் புரிகிறமாதிரி..கர்ர்ர்ர்...:)
   பூனை கண்ணை மூடி இருந்தா
   பூலோகம் இருண்டதென அர்த்தமோ..!
   எல்லாம் விளங்கும்.. ஆனா.. விளங்காது..:)

   வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அதிரா!

   Delete
 23. அற்புதமான வரிகள்! சகோதரி!

  விண்ணாடிப் போகையிலும் என்றன் மூச்சு
  வியன்தமிழைப் பாடுகின்ற வண்ணம் செய்வாய்!
  என்னெஞ்சம் என்னவென்றே அறிவாய் கண்ணா!
  எனக்கிந்த வரம்தந்து காப்பாய் மன்னா!//

  கண்டிப்பாக உங்கள் நெஞ்சம் அறிந்த அக்கண்ணன் தங்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அருள்வார்! அதுவும் தமிழ் தங்கள் மனதில் தழைத்தோங்க அருள்வார். அப்போதுதானே எங்களுக்கு உங்கள் கவிதைகளை வாசிக்க முடியும்!

  மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பு வரவும் இனிய இரசனையும்
   எனக்கு மகிழ்வாயிருக்கிறது...
   எனது எழுத்துக்களையும் இப்படித் தேடி இரசிக்கும் அன்புள்ளங்கள் வலையுலகில் கிட்டியதற்கே அன்னைத் தமிழிற்கு காலத்திற்கும் என் தொண்டினைச்
   செய்யக் கடமைப்பட்டவளாவேன்..!

   தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரர்!

   Delete
 24. கவிதையில் கண்ணனிடம் வேண்டுவது கிடைக்க நானும் பிரார்த்திக்கின்றேன் மழையாக பொழியட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நேசன்!

   தங்கள் அன்பிலும் உள்ளம் நெகிழ்கின்றேன்!

   பிரார்த்தனைக்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி நேசன்!

   Delete
 25. இளமதி,

  கவிதையும், படமும் போட்டி போடுகின்றன. உங்களின் விருப்பத்தை நிச்சயம் கண்ணன் நிறைவேற்றுவான்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சித்ரா!

   நீண்ட இடைவெளியின் பின்னர் காண்கின்றேன்..!

   உங்கள் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 26. // கண்ணனவன் நல்வழியைக் காட்ட வேண்டும்!
  கருணைமழை பொழிந்தென்னைக் காக்க வேண்டும்!//

  தங்களின் கவிதை மழை போலவே கண்ணனின் கருணை மழையும் உங்களுக்கு கிடைக்கட்டும்.....

  அருமையான கவிதை இளமதி. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   கருணை மழை பொழிந்தானே கார்மேக வண்ணன்!
   அருமையான நல்ல வலையுறவுகளை எனக்கு நல்கி!

   தங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 27. தங்களுடைய கவிதையில் கண்ணன் உருகினானோ இல்லையோ, இல்லை இல்லை கண்டிப்பாக அவன் உருகியிருப்பான்.
  நாங்களும் உருகிவிட்டோம்....
  அருமை சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சொக்கன்!

   உங்கள் அன்பும் இரசனையும் என்னை உருக்கிவிட்டது..:)

   அன்பான வரவிற்கு அகம் நிறைந்த நன்றி சகோ!

   Delete
 28. வணக்கம் !

  அருமையான பாடல் !மனம் மகிழ வைத்த தோழிக்கு என்
  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்பாளடியாள்!

   உங்களின் மன மகிழ்ச்சியே என் பாக்கியம்!..:)
   தங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 29. உள்ளம் எதுவெனவே உன் கண்ணன் அறிவான்
  ஊற்றாகி வேண்டுவன கொணர்ந்தே தருவான்

  அருமையாக கண்ணனை வேண்டி பாடியுள்ளீர்கள் சகோதரி அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் தினேஷ்குமார்!

   ஊற்றாகி வந்து உணரவைக்கும் கண்ணனைப்
   போற்றாத வாழ்க்கையே பொய்!

   தங்களின் உணர்வுமிக்க இரசனைகண்டு
   உள்ளம் நெகிழ்ந்தேன்! வரவிற்கும் வாழ்த்திற்கும்
   அன்பு நன்றி சகோதரர்!

   Delete
 30. எனக்கு கவிதை ரசிக்கத்தான் தெரியுங்க. உஙகளைப்போல எழுத்ல்லாம் வராது. நான் ரசித்தவரை கவிதை ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ஸ்ரீவத்சன்!..
   தங்களின் முதல் வருகை இங்கென எண்ணுகிறேன்..
   மிக்க மகிழ்ச்சி!

   கவிதை நன்றாக இருக்கின்றதென ரசிப்பதே
   உங்களுக்குள்ளும் கவிதை ஆற்றல் சிறிதேனும் இருப்பதாற்தானே!.. ஆர்வமிருப்பின் சிறியகவிதைகளாய்
   எழுதிப் பாருங்கள். முயற்சி திருவினையாக்கும்!

   அன்பான வரவிற்கும் ரசிப்பிற்கும் இனிய நன்றி சகோதரர்!

   Delete
 31. மாஞ்சோலை வாடுவதோ? மாய கண்ணா!
  மழையாக உன்னருளைப் பொழிந்தே காப்பாய்!//

  கவிதை அருமை. கண்ணன் அருள் கண்டிப்பாய் உண்டு. நம்பிக்கையுடன் அவனடி தொழுவோம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோமதி அக்கா!

   கண்ணன் திருவடி களையட்டும் குறைகளை..
   வேண்டுதல் தொடர்கிறது..
   அன்பான வரவிற்கும் உளம் நிறையத் தரும் ஆதரவிற்கும்
   மனமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 32. மனங்களை கொள்ளை கொண்டு விட்டது கவி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   இந்தியாவால் மீள வந்துவிட்டீர்களோ?..
   பதிவு ஒன்றும் இடவில்லையோ?..

   வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 33. இனிய வணக்கம் சகோதரி...

  மாயம் புரியும் மந்திரக் கண்ணன்
  மயங்கியே போயிருப்பான் உங்கள் இந்தக் கவிதை கண்டு.
  நெஞ்சில் நிழலாடும் எண்ணங்களை
  நித்திய சொற்களால் ஆரமாக்கி
  நீலவண்ணனுக்கு நீங்கள் சூட்டிய பாமாலை
  இனிது இனிது....
  காத்திட வருவான் கார்மேகவண்ணன்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மகேந்திரன்!

   நீண்ட இடைவெளியின் பின் உங்களைக் காண்பதும் மகிழ்வே!
   நீலமேகன் நீங்கா நல் உறவுகளாக உங்களையெல்லாம்
   வலையுலகில் தந்திருக்கக் கவலை எனக்கேது..
   அதுவே வரமன்றோ!

   தங்களின் அன்பு வரவிற்கும் இனிய ரசனை மிக்க
   கருத்துப் பகிர்விற்கும் உளமார்ந்த நன்றி சகோதரர்!

   Delete
 34. மாயம் செய்தாயோ..! கவியால் மாயக்கண்ணனை..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவும் மாயக்கண்ணன் லீலையேதான்!
   மட்டற்ற மகிழ்ச்சி! மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 35. எண்ணங்கள் எல்லாம் இனிதே நிறைவேற
  கண்ணன் அருள்வான் கனிந்து.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   இங்குற்று வாழ்த்தியே இன்குறள் ஈந்தீரே
   பொங்கிற்றே உள்ளமும் பூத்து

   அருமையான குறளுக்கு
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 36. \\விண்ணாடிப் போகையிலும் என்றன் மூச்சு
  வியன்தமிழைப் பாடுகின்ற வண்ணம் செய்வாய்!\\
  கண்கள் பனிக்கச்செய்த கவின்மிகு வரிகள். மனம் நிறைந்த பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதமஞ்சரி!

   நீண்ட காலத்திற்குப் பின்பு உங்களை இங்கு காண்பது மகிழ்ச்சி!

   அன்பு வரவுடன் உணர்வுமிக்க ரசனைக்கும் வாழ்த்திற்கும்
   மனமார்ந்த நன்றி சகோதரி!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_