Pages

Nov 15, 2014

நன்றி கூறுகின்றேன்!..


வெற்றி கிடைத்ததாய் மெச்சிய செய்தியைப்
பெற்றதும் இன்றுநான் பேச்சிழந்தேன்! - கற்றவர்
ஊட்டிய நல்வித்தை ஊக்கமிது! என்..நன்றி
கூட்டினேன் கைகள் குவித்து!

கண்ணன் திருவருளால் கன்னல் தமிழருளால்
நண்ணும் மலைபோல் நலமென்பேன்! - திண்ணமுடன்
மேலும் திறன்மேவ மேலோர் புகழ்நூலை
நாளும் தொழுதிடுவேன் நான்!
~~~~~~~~~~~~~~


வணக்கம் அன்பு உறவுகளே!..

சென்ற ஆவணி மாதம் சகோதரர் ரூபன் மற்றும் ஐயா யாழ்பாவாணன் அவர்களால் தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற்றது யாவரும் அறிந்த ஒன்றே!


அதிலே முதலாம் இடத்தை எனது படைப்பு பெற்றுக்கொண்டது
என்பதனை அறிந்து ஆச்சரியமுடன் மிகவும் மகிழ்வடைகின்றேன்!

எனது நன்றியினை எப்படிச் சொல்வது எனத் திகைத்து நிற்கின்றேன்!

இத்தகைய வெற்றி பெறுமளவிற்கு என் வளர்ச்சி உள்ளதெனில்
அப்பெருமை அன்னைத் தமிழிற்கும்
கவிஞர் கி. பாரதிதாசன் ஐயாவுக்குமே சேரும்!

எனது எழுதும் ஆற்றலுக்கு உறுதுணையாகவும், மரபிலக்கணத்தில் எனக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்தும், இலக்கணச் சுத்தமாக எழுதக் கற்பித்துக் கொண்டிருக்கும் ஐயாவுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டவளானேன். எப்படி அடைப்பேனோ தெரியாத நிலையில் உள்ளேன்!..
என் வணக்கத்தையும் நன்றியையும் கூறிக்கொள்கின்றேன் ஐயா!

மேலும், எனது எழுத்துகளுக்கு வலையுலக உறவுகளான உங்களாற்றான் ஓர் அங்கீகாரம் கிட்டியதுடன் இவ்வெற்றிக்கு அடிகோலியது என்றால் மிகையில்லை!
ஈட்டிய புகழும் பெருமையும் உங்களனைவருக்கும் சேரும்!
யாவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கின்றேன்!

இப்போட்டிக்கு நடுவர்களாகப் பணியாற்றிய
நடுவர்கள் :

கவிஞர் கி. பாரதிதாசன். -பிரான்சு. www.bharathidasanfrance.blogspot.com

கவிஞர் இரமணி. -இந்தியா www.yaathoramani.blogspot.com

வைத்தியர் திருமிகு முருகானந்தன். -இலங்கை. www.muruganandanclics.wordpress.com

ஆகியோருக்கும், போட்டி நிர்வாகக் குழுவினர்:

திரு.பொன்.தனபாலன் - இந்தியா. www.dindiguldhanabalan.blogspot.com

திரு.இராஜ முகுந்தன் - கனடா. www.valvaiyooraan.blogspot.com/

திரு.அ. பாண்டியன் - இந்தியா. www.pandianpandi.blogspot.com

திரு. கா. யாழ்பாவாணன் - இலங்கை. www.eluththugal.blogspot.com

திரு.த. ரூபன் - மலேசியா. www.tamilkkavitaikalcom.blogspot.com

ஆகியோருக்கும் என் உளமார்ந்த இனிய நன்றி!

மேலும் மேலும் உங்கள் அனைவரினதும் ஊக்கத்தினை நல்கி
எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்! மிக்க நன்றி!!!


கூகிள் படங்களுக்கும் நன்றி!

100 comments:

 1. தீபாவளி கவிதைபோட்டியில் முதல் பரிசு வென்றதற்கு கூடை கூடையாய் வாழ்த்துக்கள் இளமதி !!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்பு அஞ்சு!

   ஓடோடி வந்து இங்கும் முதலாவதாக உங்கள்
   வாழ்த்தினைக் கூறியுள்ளீர்கள்!

   பூக்கூடையா? பழக்கூடையா? அன்புக் கூடையல்லவா..!..:)
   வாழ்த்துக் கூடைக்கு மிக்க நன்றி அஞ்சு!
   நான் இன்னும் பறந்த நிலையில்தான் இருக்கின்றேன்!..:)

   Delete
  2. கவிஞரே என்னை மறந்து விட்டீர்கள் தானே?!
   நான் தானே முதலில் வாழ்த்தியது..!
   இப்போது மூன்றாம் முறையாகவும் வாழ்த்திவிடுகிறேன்.

   “உங்கள் தமிழ் வென்றது.

   வாழ்த்துகள் கவிஞரே!

   சென்றகவி நன்றெனவே ஒன்றிமன மன்றுரைய
   இன்றுலகக் குன்றிலொளி என்றிடவே - வென்றமதி
   கார்விலகக் கூர்நுதியின் போர்முனைவாள் கீறலிலே
   தூறலிடு வார்தமிழும் பார்! ““

   Delete
  3. மீண்டும் அன்பு வணக்கம் ஐயா!

   இன்றுவந்து சொன்னகவி என்றுமென தெண்ணதிலே
   நின்றுதரு கின்றபுகழ் நீண்டதுவே! - கன்னற்பா
   கற்றிடுவேன் விற்பனரே! காற்றுவிசை தோற்கவரும்
   சற்குருவின் சொற்படித்துத் தான்!

   வந்து தந்த வாழ்த்துக் கண்டு கொண்டுவந்தேன்
   சொந்தச் சரக்கு..:)

   ஐயா!..இங்கு வந்து வாழ்த்தியதில் தோழி அஞ்சுவை முதலெனக் குறிப்பிட்டேன்.. நீங்கள் தான் அங்கும் இங்கும் முதலில் வாழ்த்துக் கூறியவர். மறப்பேனா உங்களை...

   மழைக் காலமானாலும் மந்தி கொம்பிழக்கப் பாயாது.. அதுபோல நானும் எந்த நிலை வந்தாலும் நன்றி மறவேன் ஐயா!..

   மீண்டும் இங்கு வந்து வாழ்த்தினால் எழுதலாம் என எழுதி ஆயத்தப் படுத்தி வைத்திருந்தேன்! இப்போ நேரம் இங்கு காலை 4.50. இன்னும் தூங்காமல் உங்கள் வரவுப் பதிவுக்காக இருந்தேன் ஐயா!..அதற்குள் பலருக்கும் கருத்திட வேண்டியதாயிற்று! சிறிது தாமதமானதற்கு வருந்துகிறேன்!..

   முதல் வாழ்த்தும் முத்தான வாழ்த்தும் உங்களதே!..
   மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  4. உங்கள் ஆசிரியர் விரும்பாத முடுகு தான் இவ்வெண்பா.
   ஆனால் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் தமிழ்மணத்தில் முடிவுகள் கண்டதும் தடுமாற்றமின்றித் தமிழ்மணந்து வந்துவிட்டது.
   உங்கள் ஆசான் திட்டினாலும் பரவாயில்லை என்றுதான் பின்னூட்டமிட்மாக வெற்றிக் கவிதையின் பின்னும், பின்முந்தைய பதிவின் பின்னும் இட்டுப்போனேன்.
   காலையில்தான் உங்களது நன்றி அறிவிப்புக் காண நேர்ந்தது.
   அதுதான் தாமதம்.

   நன்றி கவிஞரே!

   Delete
  5. ஓ.. அதன்னாலென்ன..புலியைப் பார்த்துப் பூனையும் சூடுபோட்டதாக நானுமல்லவா எழுதிவிட்டிருக்கின்றேன் புலவரே!
   விழுந்தால் திட்டு இருவருவருமே வாங்கிக் கொள்வோம்!..:))

   மீண்டும் மனமார்ந்த நன்றி புலவரே!..:)

   Delete
  6. புலிக்கும் பூனைக்கும் நிறைய வேறுபாடுண்டு!
   புலி கொல்லப் படவேண்டியது.
   பூனை கொள்ளப்பட வேண்டியது ! ( என்னைவிட அதிரா அறிவார்களே இதை இன்னும் நன்றாய்...?!)
   புலி அன்பறியாதது.
   காட்டில் திரிவது.
   பூனை புலியானால் கொல்லப்படும்.
   எனவே ஏன் பூனை புலியாகச் சூடு போட வேண்டும்?
   எனக்கு விளங்கவில்லை.
   பின்பு
   ““மழைக் காலமானாலும் மந்தி கொம்பிழக்கப் பாயாது.““
   என்ன ஒரு ( ஒருவா... ஓரா.... அதற்கும் உங்கள் ஆசானிடத்திலிருந்து பாட்டிருக்கிறது) அருமையான பழமொழி சகோதரி!
   அற்புதம்.
   இது போன்ற பழமொழிகளை எங்கிருந்துதான் தருகிறீர்களோ?

   சோழனைச் சினந்து கம்பராமாயணத்தை அவனவையில் அரங்கெற்றாமல் திருவரங்கத்தில் அரங்கேற்றக் கம்பன் புறப்பட்டபோது அவனை நோக்கிச் சினந்து பாடியதாக ஒரு பாடலைக் குறிப்பிடுவார்கள்.

   “ மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?
   உன்னைஅறிந் தோதமிழை யோதினேன் ? - என்னை
   விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
   குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?

   கற்றாரை விரைந்தேற்றுக் கொள்ளாத நாடில்லை.
   மன்னனைக் குரங்காக்கி எவனாயிருந்தாலும் பற்றிடக் கொம்பான கொம்பன் நான் எனக் கம்பன் பாடிய புலமைச் செருக்கு மிக்க பாடல் இது.

   ஆனால் நீங்கள் சொன்ன பழமொழி சிந்திக்க வைத்துவிட்டது.

   “மழைக் காலமானாலும் மந்தி கொம்பிழக்கப் பாயாது.“

   இந்தப் பார்வையில் பாடலை அணுகினால் என்ன?

   யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

   நன்றி!

   Delete
  7. ஐயா.. புலவரே!..

   உங்கள் கேள்விகளும் பதில்களும் கண்டு திக்குமுக்காடிப் போனேன் ஐயா!.. நேரமும் போதவில்லை.. ஒவ்வொன்றாகப் பதில் தருகின்றேன்! இப்போது..

   //ஏன் பூனை புலியாகச் சூடு போட வேண்டும்?
   எனக்கு விளங்கவில்லை...//

   புலி காட்டு மிருகம். அதிலும் வரிப்புலி கோடுள்ளது. பார்கவே பயமாக இருக்குமாம். ஆகவே பூனைக்கு உடலில் அப்படி இல்லாததால் நிறக் கட்டியால் தன்னுடலில் கோடு போட்டல் அழிந்திடுமே...! அதனால் சூட்டுக்கோலால் தன்னுடலில் கோடிழுத்து தானும் பயங்கரமான - பலமான மிருகமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முனைந்ததாம்..

   நானும் உங்கள் வழியைப் பின்பற்றி பாட்டெழுதினேன்..!
   முடுகு வெண்பாவோ கடுகு வெண்பாவோ நானறியேன் புலவரையா.. அதுதான் அப்படிச் சொன்னேன்..:)))

   இப்போ சரியா.. அதன் விளக்கம்...:)))

   பின்னர் வருகிறேன்.. மிகுதிக்கும்..

   மழைக் காலமானாலும் மந்தி கொம்பிழக்கப் பாயாது
   பாட்டு ரெடியா..:)

   Delete
  8. ”மழைக்கால இருட்டானாலும், மந்தி கொப்பிழக்கப் பாயாது”..

   “இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது”:)

   Delete
 2. என் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தையில்லை. உங்கள் எழுத்திற்கான அங்கீகாரம் இது. தொடர்ந்து எழுத வேண்டும் இளமதி.

  என் அன்பு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புனிதா!

   வாருங்கள்!.. முதல்வரவொடு முத்தான வாழ்த்துத் தந்தீர்கள்!
   மனம் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றது..!

   முடிந்தவரை முயற்சி கைவிடேன்!
   எனது எழுத்துக்கள் தொடரும்..:)
   வாழ்த்திற்கு அன்பு நன்றி புனிதா!

   Delete
 3. வணக்கம்!

  கொத்து மலர்க்காடாய்க் கோலக் கவிபடைத்து
  முத்து நிலவே முதல்வந்தாய்! - சித்தம்
  குளிர்ந்து குவிக்கின்றேன் வாழ்த்துக்கள்! வாழ்க
  ஒளிர்ந்து! புகழில் உயா்ந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சித்தம் சிறகடிக்கச் சீரான வாழ்த்தளித்தீர்!
   நித்தம் இதுபோல நேராதோ! - முத்தமிழைக்
   கற்றுக் களித்திடவே கன்னல் கவியரசே
   பற்றினேன் உம்மின் பதம்!

   தங்கள் கருணையாற் கண்ட வெற்றியிது!
   இன்னும் ஒளிரக் கற்க ஆவலுடையேன் ஐயா!..

   இனிமையான வெண்பா வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. தத்தித் தவழ்ந்த குழந்தைக் கரம்பிடித்தே

   எத்திக்குஞ் செல்ல இறகொன்றை – புத்திமதிக்

   கிட்டுக்கண் பட்டுப்பா தொட்டுத்தேன் சொட்டப்பண்

   மெட்டுத்தான் கட்டும்பூ மொட்டு!

   இது உங்கள் ஆசானுக்கான வாழ்த்து!

   நன்றி ஆசானே!

   நன்றி கவிஞரே!!!

   Delete

  3. இலக்கணச் செல்வருக்கு என் வணக்கமும் நன்றியும்

   செல்லும் இடமெல்லாம் செந்தமிழின் சீா்பாடி
   வெல்லும் வழியை விளைத்திடவே - சொல்லுருக
   முத்தமிழில் வித்தைபல சித்தமுற நத்திடவும்
   புத்தமுத முத்துமதி பூத்து!

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
 4. தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்!
  பரிசில் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களினதும் சகோதரர் ரூபனினதும் தமிழ்த் தொண்டுக்கு
   என் வாழ்த்துக்கள்!
   தங்கள் வாழ்த்தும் எனக்குப் பெரு மகிழ்வே ஐயா!

   மிக்க நன்றி!

   Delete
 5. கவிதை போட்டியில் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இளமதி.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோமதி அக்கா!

   தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   அன்பு நன்றி அக்கா!

   Delete
 6. வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லிட்டுப் போறேன் மற்றவையெல்லாம் புரியாணி கிடைத்ததன் பின் தான் :)

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ ஆத்மா!..

   புரியாணி அதிராவும் அஞ்சுவும் ரெடி பண்ணுறாங்கோ!..
   கொண்டு வந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்..:))

   அன்புடன் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 7. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   வாழ்த்திற்கு மிக நன்றி!

   Delete
 8. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .......இது போல் பல வெற்றிக் கனிகள் கிட்ட இறைவனை வேண்டுகிறேன்,,,,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அனுராதா பிரேம்!

   தங்கள் இனிய வாழ்த்தே அத்தனை தித்திப்பு!.. மிக்க மகிழ்சி!
   அன்புடன் நன்றி தோழி!

   Delete
 9. மிகுந்த மகிழ்ச்சி தோழி!!! தோழிகளும் சகோக்களும் கலந்துகொண்ட போட்டியில் உண்மையில் யார் தான் வெல்ல போகிறார்களோ எனும் ஆர்வம் உங்களைவிட எனக்கு தான் அதிகம் இருந்தது!! சிவகுமாரன் அண்ணா இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறார். மிக்க மகிழ்ச்சி!! இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ மைதிலி!!

   அட என்ன வெறுங்கையை வீசிட்டு வந்து போறீங்க..:)
   ஒண்ணுமே இல்லையா..:))) வெண்பா, குறள் இப்படி இதனைக்கேட்டேன்..!.
   நானும் உங்க ரசிகையாயிட்டேன்.. தெரியாதோ..:)

   ம்.. எனக்கு இது கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று! எழுதியபோதே போட்டிக்குன்னு இல்லை.. ஒரு ஊக்குவிப்பு அப்பிடீன்னு எழுதியிருந்தேன்.. ஆனாலும் முண்டியடிச்சு முன்னுக்கு வந்தது ஆச்சரியமே எனக்கு!..:))

   ஆமாம் சகோதரர் சிவகுமாரரையும் வாழ்த்தியிருந்தேன்!
   உங்கள் இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி மா!

   Delete
  2. உசுப்பேத்தி வெண்பாவைக் கேட்டாலே நானும்
   உடம்பு ரணம்கொள்ளப் பாடுகிறேன் - தோழி!
   தவறின்றி பாசெய்யும் வித்தை முயல்வேன்
   தவியாதீர் வெண்பா தேடி:)))

   Delete
  3. விசுக்கென்று கோபத்தில் வேண்டாமென் பீரோ?
   உசுப்பேத்திப் பார்க்கின்றோம் உம்மை! - கொசுவென்றே
   வெண்பா அடித்தடித்து வீழ்த்துகிறீர்!!! அய்யைய்யோ
   கண்பட்டு போகும் கவி!

   “தேடி“ யதில்தான் ஒரு கொசு தப்பித்துக் கொஞ்சம் ரத்தம் குடித்துவிட்டது!

   விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!
   இனி வெண்பா விடாது உங்களை!!!!!!
   வாழ்த்துகள்!!

   Delete
  4. அன்பு மைதிலி!..

   உட்காயம் காண உசுப்பேத்திக் கேட்டோமோ
   விட்டுடாதீர் எம்மை வெறுத்து!

   சரி!.. சரி!!... சரி செய்தாற் போச்சு . வாருங்கள் மீண்டும்!..:)

   ஐயா புலவரே!..

   இன்னிசைவெண்பா!

   உசுப்பேத்தி ஊக்குவித்து ஊட்டுமும் ஆற்றல்
   பொசுக்கென்று போமோ புலவீரே! வீசுபுயல்
   வேகமாய் வெண்பா தருவாரே மைதிலி!
   யோகமிதைக் காண்போம் இணைந்து!..:)

   Delete
  5. புலம் என்பதற்கு இறுகிய மண் என்றும் பொருளுண்டு.
   நீங்கள் சொல்லும் போதெல்லாம்“ மண்ணாங்கட்டியே “ என்று சொல்வதாக வே எனக்குப் படுகிறது.
   தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள் சகோ!

   Delete
  6. ஐயா!

   //புலம் என்பதற்கு இறுகிய மண் என்றும் பொருளுண்டு....//

   எனும் இத்தொடரில் இங்கு எங்குள்ளது இச்சொல்
   எனத் தேடுகிறேன்... தெளிவுபடுத்துங்கள்..
   திருத்துகின்றேன்!..:)

   மிக்க நன்றி..ஐயா!
   கவனித்திற் கொள்வேன் இனி!

   Delete
  7. புலமென்ற அச்சொல் புலவீரில் உண்டே
   இலமென்று யார்சொன் னது?

   சகோ நீங்கள் இப்பொழுதெல்லாம்புலவரே புலவரே என்கிறீர்கள் அல்லவா அதனைக் குறிப்பிட்டேன்.

   சீராளரைச் சிறிது நாளாய் வலைப்பக்கம் காணோமே...
   என்ன ஆயிற்றென அறிவீர்களா? சகோ?
   நன்றி

   Delete
  8. ஐயா!...
   புல... இல்லை வேணாம்.. நான் ஒன்றும் கூறவரவில்லை...

   அவ்வ்வ்வ்வ்....:(
   இப்படிப் போவேனென்று நினைத்தீர்களோ.. இருங்கள்
   இப்போதைக்கு நேரம் குறைவாக இருக்கிறது...
   வருவேன் மீண்டும்!..நன்றி ஐயா!

   சீராளன் என் தம்பி வந்திருக்கின்றார் இங்கு இன்று..:)
   இப்பொழுதான் காண்கிறேன்!
   மட்டற்ற மகிழ்வில் என்னுள்ளம் இன்று...:))

   Delete

  9. வணக்கம்!

   விசுக்கென்று கோபம் விளைந்தாலும் வெண்பா!
   பொசுக்கென்று பூத்துப் பொலியும்! - உசுப்பேத்தி
   என்னை விடுவாரேல் எல்லாக் கவிமணக்கும்
   அன்னைத் தமிழின் அருள்!

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
 10. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் இனிய வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 11. மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி...எல்லா வளமும் நலமும் எப்போதும் கிடைக்கட்டும்மா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   தங்கள் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி மா!..

   Delete
 12. வாழ்த்துக்கள்.இன்னும் இன்னுமாய் நிறைய எழுதுங்கள்,நிறைய பரிசுகளை வெல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் இனிய வாழ்த்திற்கு
   உளங் கனிந்த நன்றி!

   Delete
 13. வாழ்த்துக்கள் தோழி...நிறைய எழுதுங்கள்...மேலும் மேலும் வெற்றிகள் தொடரட்டும்.தமிழ் பயணம் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   ஆமாம்.. என் பணி இன்னும் அதிகரித்துள்ளது!..:)

   தங்கள் இனிய வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 14. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   நீண்ட காலத்தின்பின் உங்கள் வருகை இங்கு! மகிழ்ச்சி!
   நலமாக உள்ளீர்களா?..

   தங்கள் இனிய வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 15. உரை நடையில் வாழ்த்துகிறேன்.தொடரட்டும் வெற்றிக் குவிப்புகள்,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பெருந்தகையே!

   உரைநடை என்றாலும் உண்டோ நிகரே!
   வரையறை இல்லாத வாழ்த்து!

   உங்கள் பெருந்தன்மையற்ற வரவும் வாழ்த்துமே
   நான் பெற்ற பேறுதான் ஐயா!

   உளம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 16. அன்புச் சகோதரி,

  இளமதியார் நீர்பெற்ற இன்பப் பரிசை

  உளமார வாழ்த்துகிறேன் உய்வாய்! - களம்காண்பாய்

  தாய்த்தமிழன் சீர்வாழத் தாய்மண்ணில் மாதவத்தால்

  வாய்பிளக்கும் வாய்ப்பைப் பெறு.

  தமிழ்த்தாய் மரபிலுறும் தேக்கத்தை நீக்கி

  சிமிழாய் ஒளிகாட்டு வாய்!

  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளுடன்,

  மாறாத அன்புடன்,

  மணவை ஜேம்ஸ்


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சிறப்பான வெண்பா செதுக்கிய வாழ்த்து
   திறந்திட என்னறிவு சேர்த்தீரே! - சீராகப்
   பாவியற்றக் கற்பேன் பலநுட்பம்! பைந்தமிழ்
   கூவிவரக் காண்பீர் கொழித்து!

   உங்கள் அன்பும் ஊக்கந்தரும் ஒப்பற்ற வாழ்த்தும்
   என்னை இன்னும் வளர்க்க உதவும் ஐயா!

   இனிய வெண்பா வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. நெஞ்சார்ந்த நன்றி.

   Delete
 17. அன்புத் தோழியே தாமதத்திற்கு மன்னிக்கவும். வெற்றிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!. மிக்க மகிழ்ச்சி ஆனால் எனக்கு அப்பவே தெரியுமே நான் எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அதனால் எனக்கு ஆச்சரியம் இல்லை. ஹா ஹா மேலும் தளைத்தோங்க என் நல்லாசிகள்.....!

  விண்ணிலவே பெற்றாய் வியந்திடவே நல்விருது
  வெண்பாவில் பன்னாள் வடித்தகவி - கண்டோரும்
  நல்கிய நற்சான்றில் மின்னிடும் நின்புகழ்
  பல்லாண்டு பூவில் பதிந்து!

  சொல்ல மறந்துவிட்டேன் இபொழுது தான் வந்து பார்த்தேன் பின்னர் இதை எழுதி வர தாமதமாகி விட்டது.  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய தோழி இனியா!

   என்னுள்ளம் துள்ள இயற்றினீர் ஓர்வெண்பா!
   பொன்னாக இன்று பொலிகிறதே! - கன்னற்
   கனிமொழி கூட்டிக் கவிவாழ்த்துத் தந்தீர்
   இனியா!.என் நன்றியிட்டேன் இங்கு!

   தாமதமானால் என்ன தரும் உளமார்ந்த இந்த வாழ்த்து
   அதுவொன்றுக்கு நிகர் ஏதம்மா!..
   உள்ளம் உணர்ச்சிக் குவியலில் கிடந்து புரள்கிறது எனக்கு!
   உங்கள் வெண்பா என்னை வேறுலகத்திற்குக்
   கொண்டுபோய்ச் சேர்த்திட்டது!.. வியந்து நிற்கின்றேன்!

   என்மே விழுந்த மழைத்துளியே..
   இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?..! ம்.. பதில் சொல்லம்மா..!!!

   அற்புதம்! அகமகிழ்வோடு என் அன்பு நன்றி தோழி!

   Delete
  2. தோழி!...
   // என்மே விழுந்த மழைத்துளியே..
   இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?..! //

   என்மேல்... ல் விழுந்துவிட்டது ஏற்கனவே..:))
   பிடித்துக் கொண்டுவந்தேன். சேர்த்து வாசியுங்கள் இப்போது..:)

   என்மேல் விழுந்த மழைத்துளியே..
   இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?..!..........

   Delete
 18. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   வாழ்த்திற்கு இனிய நன்றி!

   Delete
 19. தீபாவளி கவிதைபோட்டியில் முதல் பரிசு வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் தொடரட்டும் வெற்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்களின் அன்பு வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 20. வாழ்த்துக்கள்
  சகோதரி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றியுடன்
   அதே வாழ்த்துக்கள் உங்களுக்கும்!..

   Delete
 21. வணக்கம் !

  வாழ்த்துக்கள் தோழி !வெற்றி வாகை சூடிக் கொண்ட தங்களுக்கு என்
  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத்தோழியே!

   நீண்ட நாட்களாகக் காண்வில்லையே! நலமா?..

   அன்பு வரவுடன் அகம்மகிழத் தந்த வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 22. வணக்கம்
  கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். மேலும் விபரம் பார்வையிட இதோ முகவரி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...: ரூபன்& யாழ்பாவாணன்  இணைந்து நடத்திய  உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ரூபன்!

   உங்களின் இந்த அறிவிப்பைக் கேட்ட நேரந் தொடக்கம்
   என் கால்கள் நிலத்தில் படாது பறந்த நிலையானேன்..!
   அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த நிலை!.

   உங்களின் ஊக்கத்தினை என்னவெனச் சொல்வேன்!
   உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

   அனுப்பிவைக்கின்றேன் விபரங்களை!

   வாழ்த்திற்கு உளமார்ந்த இனிய நன்றி ரூபன்!

   Delete
 23. முதலிடம் பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் முதல் வருகையும்
   மகிழ்வான வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!

   அன்புடன் நன்றி ஐயா!

   Delete
 24. முன்பு ஒரு பின்னூட்டம் அனுப்பி விட்டு ஓட வேண்டியதாகிவிட்டது, என்ன எழுதினேன் என சரியாக தெரியவில்லை.

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இளமதி...

  பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆஆஅணி:) ரெடி:) எங்கே கொண்டு வந்து வைக்கட்டும்:).. அதுக்குப் பின் ஆருக்கு ஐஸு வேணும்.. ஐ மீன் ஐஸ் கிரீம்.. ஆருக்கெல்லாம் அகர் அகர் வேணும்.. ஆருக்கெல்லாம் பாயாசம் வேணும் இப்பவே கைகளைத் தூக்குங்கோ மீ கணக்கெடுக்கோணும்.. அஞ்சு கிச்சினில நிக்கிறா:) அவவுக்கு சொல்லத்தான்:)..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா!...

   உங்கள் வாய் முகூர்த்தம் பலித்திருக்கின்றது..:)
   அளவில்லாச் சந்தோசம் பொங்குதே!.:)

   பேச்சு பேச்சா இருக்கும் இந்த இளமதியிடம்..
   சொன்ன சொல் மாறமாட்டன். அதுவும் நீங்க கேட்டு இல்லையென்பேனோ?.. கிட்டும் விரைவில்..:))

   அதுக்கு முன் உங்கட விலாசம் ப்ளீஸ்ஸ்....:)))

   பிர்ர்ர்ராஆணி வேணாமெண்டு சொல்லீட்டினம்.
   கார்த்திகை மாசம் பிறந்திட்டெல்லோ..விரதம் ஆரம்பமாகிட்டுதாம்..:)

   வாழ்த்திற்கும் கலாய்ப்புக்கும் மிக்க நன்றி அதிரா!

   Delete
 25. அச்சச்சொ முன்பு ஒரு பின்னூட்டம் போட்டனே பெரிய வாழ்த்தெழுதி.. கிடைக்கேல்லையோ????

  ReplyDelete
  Replies
  1. ...ங்கை... போட்டனீங்க...:0

   Delete
 26. போட்டியில் வெற்றிபெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இளமதி.
  இவ்வெற்றி உங்கள் திறமையை மென்மேலும் வளர உந்துசக்தியாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அன்பு அம்மு!..

   உங்கள் வாழ்த்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   ஓம்..! வெற்றிகளோடு இன்னும் பொறுப்பும் கூட ஏறியிருக்கு..
   வாளை நிமிர்த்திப் போட்டுட்டு ஏறி நடக்க வைச்சிருக்கினம்..:(
   கொஞ்சம் பிசகினாலும் கதை கந்தல்..:)

   சந்தோஷம் எவ்வளவு வந்திச்சோ அதே அளவு
   திகிலும் சேர்ந்தே வந்திருக்கு..!!!

   உங்களைப் போன்றோரின் இனிய கருத்துக்கள்
   என்னை வளர்க்கும் உந்து சக்தி என்பதில் ஐயமில்லை!
   முயற்சிக்கின்றேன்!.

   மிக்க நன்றி அம்மு!

   Delete
 27. ///நன்றி கூறுகின்றேன்!..//// நோஓஓஓஒ நன்றி எல்லாம் எதுக்கு, முதல்ல ட்ரீட்டைக் குடுங்கோ.. மீக்கு:)..

  ReplyDelete
  Replies
  1. ட்ரீட்டோ.?. தந்திட்டாப் போச்சு!..:))

   Delete
 28. நாம் ஒரு விஷயத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கிறோம் எனில், அது சம்பந்தமாக எமக்கு ஊக்குவிப்பு கிடைக்கும்போது, மனத் திருப்தி ஏற்படுவதோடு இன்னும் எம்மை அத்துறையில் வளர்க்க அது உதவி செய்கிறது... அப்படித்தான் இதுவும்..

  இப்பரிசு கிடைத்தது.. உங்களை இன்னும் பல கவிபடைக்க உற்சாகத்தை அ:ள்ளிக் கொடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை...

  நானும் எவ்ளோ நாளாத்தான் கேட்கிறேன்.. அதிராபற்றி ஒரு கவிதை எழுதுங்கோ என.. என்னைப்பற்றி எழுதமாட்டாவாமாம்ம்ம்ம்ம்ம்ம்:)).

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அதிரா..! எங்கள் ஆர்வத்துக்கு - தகுந்த படைப்புகளுக்குக் கிடைக்கும் ஆதரவே இன்னும்
   ஊக்கமுடன் உற்சாகமாக எம்மை இயங்க வைக்கும்!

   அவ்வகையில் எனக்கு இங்கு வந்து வலையுறவுகள் தரும் ஆதரவும் அக்கறையான புத்திமதிகளும் மிக்க பயனுடையவை! பெறுமதியானவை!
   அதனாலேயே பரிசு பெறுமளவிற்கு உயர்வு கண்டது எனது எழுத்துக்கள்!
   ஆகவே, இப்பரிசு எனக்கு மட்டுமல்ல என்னை ஊக்குவித்து
   உயர்வடையச் செய்த அன்பு வலையுறவுகள் அனைவருக்குமே சேரும்!

   யாவருக்கும் என் உளமார்ந்த இனிய நன்றி!

   எல்லாவற்றிற்கும் காரணமான நீங்களே
   இந்த மகிழ்வுக்கும் பெருமைக்கும் உரியவர்!

   மிக்க மிக்க நன்றி அதிரா!

   Delete
 29. மனமார்ந்த வாழ்த்துகள் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிநயா!

   உங்கள் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 30. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சகோ.
  நீங்கள் மேலும் மேலும் பரிசுகள் வாங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் வாழ்த்துக்கள் பாரட்டுக்கள் யாவற்றிற்கும்
   மனமார்ந்த நன்றி சகோ!

   Delete
 31. வாழ்த்துக்கள் ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மிக்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு!

   Delete 32. கற்றதமிழ் உண்டு கரும்பாக்கி இப்புவியில்
  பெற்றாய் பரிசு பெருங்கவியே - சிற்றம்
  பலத்தான் சிகைதழுவும் பால்நிலவாய் பாரில்
  வலம்வர வேண்டும் வளர்ந்து !

  நன்றே செய்வாய் நலம்பெறுவாய்
  நாளும் சிறப்பு பெற்றிடுவாய்
  இன்றே தொடங்கும் எதிர்காலம்
  இனிக்க வைக்கும் எந்நாளும்
  பொன்னும் புகழும் புவிமீதில்
  பொழியும் போதும் உன்மனதில்
  என்றும் வாழும் எம்தமிழே
  எழிலாய் வளரும் நன்கறிவேன் !

  அன்னை மண்ணும் அதன்சிறப்பும்
  அழகாய் சொல்லும் கவியமுதே
  புன்னை வனத்துப் பூங்குயிலாய்
  புலத்தில் பாடி பறந்திடுவாய்
  என்னை ஈன்ற தாய்போல
  என்றும் அன்பை சொரிபவளே
  இன்னும் இன்னும் பரிசுகளை
  இனிக்க இனிக்க பெற்றிடுவாய் !

  வாழ்த்துக்கள் சகோ இளமதி மென்மேலும் வளர நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சீராளனே!

   உற்ற சகோதரனாய் உள்ளாய் எனக்குநீ!
   பற்ற முடியாதோ பைந்தமிழை! - நற்றவமாய்
   நம்மாசான் அன்புண்டு! நாங்களும் கற்போமே!
   பெம்மானின் பேரருட் பேறு!

   இன்றோர் வாழ்த்து நல்கியே
    என்னை உயர்த்தி மகிழ்ந்தனை!
   நன்றாம் இனிமை கூட்டியே
    நாளும் உவக்கத் தந்தனை!
   வென்றேன் போட்டிக் கவியிலே
    வேண்டும் மேலும் கற்பதே!
   செல்வேன் தேடித் கவிஞரைச்
    சீராய்ப் பாக்கள் யாக்கவே!

   உங்கள் அன்பான வரவொடு இனிய வெண்பா, விருத்த
   வாழ்த்துகளுக்கு என் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete

  2. வணக்கம்!

   சிற்றம் பலத்தான் சிகைதழுவும் சீர்பிறையைக்
   கற்ற தமிழில் கவிதந்தார்! - நற்றமிழை
   நாளும் குடிக்கின்ற நம்மினிய சீராளர்!
   தோளும் கொடுப்போம் தொடா்ந்து!

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
 33. // பொன்வித்தே யாகினும்போ டும்வித் துயிர்கொள்ளின்
  நன்றே விளையும் நிலம் ! //

  அன்றைக்கே சொன்னோம்ல ம்ம் விளைந்திடிச்சி
  ஹா ஹா ஹா ! உண்மையில் விதைத்தது எல்லாம் உயிர்வித்துக்கள்
  அவ்வவ்வ்வ்வ் !

  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. நன்றே விளைய நலமே பெருகிட
   இன்னும் படிப்போம் இணைந்து!

   நன்றி!...:)

   Delete
 34. அன்பின் சகோதரி..

  தங்களின் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்வெய்தினேன்..
  மேலும் பல வெற்றிகளைத் தாங்கள் எய்த வேண்டும்..

  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவும் வாழ்த்துமே இணையில்லா மகிழ்வெனக்கு!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 35. மகிழ்ச்சியில் பாட மனமே குதிக்கும்
  புகழ்ச்சியே என்றும் உனக்கு.

  மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. புகழ்ச்சியே என்றும் பொலிந்தே இருந்தால்
   நிகழ்ச்சி சிறக்குமே நீண்டு!

   வாங்கோ தோழி!
   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி மா!

   Delete
 36. வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   Delete
 37. மிகச் சிறந்த படைப்பு
  பரிசுகளும் படைப்புகளும் தொடர
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் அன்பான வரவிற்கும்
   இனிய நல் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 38. தவற விட்டு விட்டோம் சகோதரி! மன்னிக்கவும் முதலில்.

  தாங்கள் வெற்றி பெற்றதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாரட்டுக்கள்!

  ReplyDelete
 39. வணக்கம் சகோதரரே!

  தங்கள் வாழ்த்துக் கண்டு அகம் மகிழ்ந்தேன்!
  இதில் தாமதம் என்றெல்லாம் வருத்தம் இல்லை.
  வந்ததும் வாழ்த்தியதுமே உங்கள் அன்பினைக் காட்டுகின்றதல்லவா?..!

  மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரரே!

  ReplyDelete
 40. மனம் நிறைந்த வாழ்த்துகள் இளமதி. நானும் கூடை கூடையாய்த் தருகிறேன் என் அன்பை. பெற்றுக்கொள்ளுங்கள். கவிதைப்போட்டியில் பரிசு பெற்றீர்கள் தெரியும். இங்கே கவிப்பின்னூட்டங்களிலும் ஒரு போட்டி நடக்கிறதே.. கலக்குங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதமஞ்சரி!

   தங்களின் வாழ்த்தினை எத்தனைதடவை கேட்டாலும்
   நான் கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை..:)

   கவிப்பின்னூட்டம் செய்வதிலில் ஒரு சுயநலமும்தான்..
   நாமும் நம் வலையிலேயே அவரவர் கருத்துகளுக்கேற்ற கவிதைப் பின்னூட்டத்தினை எழுதிப் பார்க்கமுடிகிறதே..:)

   ஆனாலும் பெரீய கவிஞர்களுடன் எழுதுவது பயம் நிறைந்த அனுபவம்தான்..!

   அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி கீதமஞ்சரி!

   Delete
 41. Replies
  1. மிக்க நன்றி சகோதரரே!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_