Pages

Nov 22, 2014

மாவீரர் சோதி!..


நம் தமிழீழ மண்மீட்புக்காகத் தம் இன்னுயிரை
ஈந்த மாவீரர்களுக்கு என் நீங்கா நினைவோடு
இப் பாமாலையைச் சமர்ப்பிக்கின்றேன்!...
~^~~^~~^~
மண்மீட்கப் போராடி மாண்டார் - அவர்
மாவீரர் என்றும்நம் மனதோடு வாழ்வார்!
கண்போல இனம்மானம் காத்தார் - நம்
கருத்தோடு ஒன்றாகிப் புகழாகப் பூத்தார்!
விண்சென்று வாழ்ந்தாலும் மறவோம் - வீர
வேங்கைகளின் பெயர்சொல்லிக் கூத்தாடி வருவோம்!
பண்கொண்டு பாடிடுவோம் நாளும் - மறவர்
பாட்டெழுதும் பொழுதெல்லாம் துடிக்குமே..என் தோளும்! 

மொழிஎங்கள் மூச்சென்று சொல்வோம் - அதன்
முன்னேற்றம் நம்வாழ்வின் உயர்வென்று கொள்வோம்!
வழிஒன்று படைத்திங்குச் செல்வோம் - பாரில்
வாழ்காலம் தமிழ்காத்துப் பகைவர்களை வெல்வோம்!
விழிதிறக்கக் கனவுகளைச் சேர்ப்போம் - நாமே
விழுதாகி வேர்கொண்ட இனமானம் காப்போம்!
பழியேற்று வாழ்வதுவும் நன்றோ - நம்
பாட்டன்தன் மண்மீட்கா வாழ்ந்துபுகழ் உண்டோ?

நாட்டிற்கே உரமாகிப் போனார்! - நம்
நலத்திற்கே போராடி மாவீரர் ஆனார்!
காட்டிற்கும் பெரும்வீரம் தோன்றும்! - அவர்
கால்பட்ட இடமெல்லாம் உரிமைவிதை ஊன்றும்!
பாட்டிற்கே புல்லரித்துப் பொங்கும் - அவர்
பட்டகதை நாமுரைக்கச் சொல்லெங்கே தங்கும்!
வீட்டிற்குள் உறங்குகின்ற கோலம் - நம்
விதியென்று சொல்லுவதால் வருமோபொற் காலம்?

ஒற்றுமையால் வந்திடுமே வாழ்வு! - தூளாய்
உடைப்பட்டுப் பிரிந்திட்டால் வந்திடுமே தாழ்வு!
நற்றலைமை நமக்கீந்த பாதை - ஏற்று
நடைபோட்டால் நீங்கிவிடும் தன்னலத்துப் போதை!
பெற்றவளைக் காப்பதுதான் கடமை - கேட்டுப்
பெறுவதுவோ? உணர்ந்திடுக விடுதலையின் உரிமை!
நற்றவத்து மாவீரர் கொடியை - ஏந்தி
நாமெழுவோம்! தமிழ்அணிவாள் மின்னுமணி முடியை!  

வலைவீசிப் பிடிக்கின்றான் எதிரி - அவன்
வால்தன்னை நறுக்கிடுவோம் ஓடிடுவான் பதறி!
மலைபோல உறுதிகொள் தமிழா! - மண்ணின்
மைந்தர்கள் அழுவதுவும் மரபன்று எழடா!
தலைகொய்யப் பார்த்ததுவும் போதும் - உன்
தன்மானம் பொங்கியெழச் சங்கெடுத்து ஊதும்!
சிலைபோல நின்றிடுமோ நீதி? - நல்ல
தீர்ப்புக்கே ஏற்றிடுவோம் மாவீரர் சோதி!

 ~~~~~~~~~~~~

 
கூகிள் படங்களுக்கும் நன்றி!

60 comments:

 1. மொழிஎங்கள் மூச்சென்று சொல்வோம் - அதன்
  முன்னேற்றம் நம்வாழ்வின் உயர்வென்று கொள்வோம்!
  வழிஒன்று படைத்திங்குச் செல்வோம் - பாரில்
  வாழ்காலம் தமிழ்காத்துப் பகைவர்களை வெல்வோம்!
  விழிதிறக்கக் கனவுகளைச் சேர்ப்போம் - நாமே
  விழுதாகி வேர்கொண்ட இனமானம் காப்போம்!
  பழியேற்று வாழ்வதுவும் நன்றோ - நம்
  பாட்டன்தன் மண்மீட்கா வாழ்ந்துபுகழ் உண்டோ?

  வலி நிறைந்த வரிகள் என்றாலும் மாவீரர் நினைவைப் போற்றும் கவிதை... மாவீரர் வழி நடப்போம்... தமிழ் காப்போம்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உணர்வோடு உடன் வந்திங்கு உரைத்த நற்கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   வெல்லும் மாவீரர் இலட்சியங்கள் விரைந்து!

   Delete
 2. கார்த்திகை வந்தாலே.. மாவீரர் நினைவு தானாக வந்து விடும்.. இம்முறை அழகிய கவிதையில்.. ஒரு அஞ்சலி செலுத்தியிருக்கிறீங்க.. நானும் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓம் அதிரா...!

   மனம் கனத்துவிடுகிறது மாவீரர்களை நினைக்கும்போது!..

   அவர்கள் தியாகம் வீண்போகாது!
   கிட்டும் எல்லாம் எமக்கு!..

   உங்களின் அன்பான பிரார்த்தனைக்கு
   மனமார்ந்த நன்றி அதிரா!

   Delete
 3. ஒற்றுமையால் வந்திடுமே வாழ்வு! - தூளாய்
  உடைப்பட்டுப் பிரிந்திட்டால் வந்திடுமே தாழ்வு!

  ஜோதியாய் ஒளிரும் நினைவலைகள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்கள் உணர்வுமிக்க ஆதரவிற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 4. நம்பிக்கைக்கு மரணம் என்பதில்லை ! அவர்களின் இலட்சியமும் கனவுகளும் நிறைவேற பிராத்திக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. உண்மை அஞ்சு..!
   நம்பிக்கையோடுதான் நாமும் இன்னமும் இருக்கின்றோம்!

   அன்பான பிரார்த்தனைக்கு உளமார்ந்த நன்றி அஞ்சு!

   Delete

 5. வணக்கம்!

  மாவீரர் மாண்பேந்தும் பாட்டு - கேட்டு
  மணித்தமிழின் மாட்சிமையை உலகுக்குக் காட்டு!
  பாவீரர் பாவலரைக் கூட்டு - பொல்லாப்
  பகையோட வைத்திடுவார் பாட்டாலே வெட்டு!
  வா..வீரா் சோதியினை ஏற்று - தமிழ்
  வரலாறாய் வாழ்பவரின் திருவடியைப் போற்று!
  தா..வீரர் கொள்கையெனும் ஊற்று - இத்
  தரணியெங்கும் வீசட்டும் சுதந்திரப்பூங் காற்று!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ஏதிலிகள் என்றெம்மை எண்ணி - எங்கள்
   இனமதனை அழித்திடவே நினைக்கின்றான் உன்னி!
   சேதிவரும் விடியலோடு நண்ணி - வானில்
   செந்தணலின் சிவப்பாகத் தெரியும்பார் மின்னி!
   பாதியிலே விட்டழிந்து போகோம்! - எங்கள்
   பக்கத்துத் தமிழகமே நீ!..இருக்க வேகோம்!
   நீதியொன்று கிட்டட்டும் சாகோம்! - தேசம்
   நிமிர்ந்துயரக் கொடிபறக்கும் நிச்சயம்நாம் காண்போம்!

   அன்போடு வந்திங்கு ஆதரவாக
   அருமையான உணர்வுமிக்க சிந்திசைத்தீர்கள்!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 6. மண்மீட்கப் போராடி மாண்டார் - அவர்
  மாவீரர் என்றும்நம் மனதோடு வாழ்வார்!
  கண்போல இனம்மானம் காத்தார் - நம்
  கருத்தோடு ஒன்றாகிப் புகழாகப் பூத்தார்!//

  மாவீரர்கள் நினைவை போற்றும் கவிதை அருமை இளையநிலா.
  அவர்கள் கனவு நனவாக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   எங்கள் கனவுகள் பலிக்க உங்கள் கரங்களும்
   எம்முடன் இணைந்திருப்பது மகிழ்வே!
   மிக்க நன்றி அக்கா!

   Delete
 7. வணக்கம் சகோதரி..! நெருப்பு வரிகள்...
  " வலைவீசிப் பிடிக்கின்றான் எதிரி - அவன்
  வால்தன்னை நறுக்கிடுவோம் ஓடிடுவான் பதறி!
  மலைபோல உறுதியைக்கொள் தமிழா! - மண்ணின்
  மைந்தர்கள் அழுவதுவும் மரபன்று எழடா!"......
  உணர்வுகொள்ளவைக்கிறது உங்கள் வரிகள்..!..தீயாய் எறிந்த தியாகங்கள்,ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   வழமைக்கு மாறாய் பல வேலைகள் சூழ்ந்தமையால் பதிலெழுதத் தாமதமானேன்! வருந்துகிறேன்!..

   ஒளிமயமான நம் எதிகாலத்திற்காய் பேரொளியாகிப் போனவர்களை நினைவு கொள்கின்றோம்!..
   உங்கள் உணர்விற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 8. Replies
  1. வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!

   அன்பு வரவும் ஆதரவுக் கர நீட்டலுக்கும்
   இதயபூர்வமான நன்றி!

   Delete
 9. \\விழிதிறக்கக் கனவுகளைச் சேர்ப்போம் - நாமே
  விழுதாகி வேர்கொண்ட இனமானம் காப்போம்!
  பழியேற்று வாழ்வதுவும் நன்றோ - நம்
  பாட்டன்தன் மண்மீட்கா வாழ்ந்துபுகழ் உண்டோ?\\

  மாவீரர் நினைவில் மனமெழுதிய கவிதை நெஞ்சில் பாரம் கூட்டுகிறது. கோடி நம்பிக்கைகள் கூடி பல்கிப் பெருகி பயனளிக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதமஞ்சரி!

   தங்கள் வரவும் நம்பிக்கை துளிர்க்க வைக்கும் கருத்தும்
   எமக்கு உரமூட்டுகிறது!..
   மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி!

   Delete
 10. “மலைபோல உறுதியைக்கொள் தமிழா! - மண்ணின்
  மைந்தர்கள் அழுவதுவும் மரபன்று எழடா!“
  ---- இப்படிப் பாடத் தமிழ்நாட்டுத் தமிழர் எமக்குத் தகுதியில்லை சகோதரி. ஒரு பெரும் வரலாற்றுக் குற்றவாளிகள் நாங்கள்.
  உங்கள் உணர்வில் நெஞ்சு கசியக் கலந்து கொள்கிறோம்.
  உணர்வில் எழுந்த உங்கள் கவிதை, ஈடேறும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் உணர்வுகண்டு கண்கள் பனித்தன..!
   தகுதி என்பதெல்லாம் எல்லார்க்கும் உண்டு. சில சூழ்நிலைக்
   காரணணிகளாற் தகுந்த நேரத்தில் உதவிட முடியாமற் போயிருக்கக் கூடும்!..
   உங்கள் உணர்வே எமக்குப் பெரும் பலம் ஐயா!
   தோள் கொடுத்தீர்கள்!.. கொடுக்கின்றீர்கள்!
   இன்னும் கொடுப்பீர்கள்! நம்பிக்கை நிறையவே வைத்துள்ளோம்!
   அன்பொடு ஆதரவாய்ப் பகிர்ந்த நற் கருத்துக்களுக்கு
   உளமார்ந்த நன்றி ஐயா!

   வீட்டில் சூழ்நிலை நெருக்கடி ஆதலினால்
   என் பதிற்கருத்துத் தாமதமாகிவிட்டது ஐயா!.. வருந்துகின்றேன்..!

   Delete
 11. சிறப்பு...

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   இனிய வரவுடன் கருத்துப் பகிர்விற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 12. மிக அருமையான வரிகள்! ஆனால் வலி இழையோடும் வரிகள்!

  தங்கள் எல்லோரது வலிகளும் விரைவில் நீங்கிடவும், மாவீரர்களின் தியாகம் வென்றிடவும் பிரார்த்தனைகள்!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மாவீரர் தியாகம் மதிப்பிட முடியாத ஒன்று!
   நடந்தேறிய நிகழ்வுகளின் வலி மனதில் ஆழப் பதிந்துவிட்டது..!

   அன்பான வரவுடன் உணர்வுப் பகிர்தலுக்கு
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 13. வணக்கம் சகோதரி..! நெருப்பு வரிகள்...
  " வலைவீசிப் பிடிக்கின்றான் எதிரி - அவன்
  வால்தன்னை நறுக்கிடுவோம் ஓடிடுவான் பதறி!
  மலைபோல உறுதியைக்கொள் தமிழா! - மண்ணின்
  மைந்தர்கள் அழுவதுவும் மரபன்று எழடா!"...ஆஹா என்ன ஒரு உணர்ச்சி மிகுந்த கவிதை !

  பெற்றவளை புறந்தள்ளல் தகுமோ
  புறப்படுநீ போர் தொடுத்து காக்க
  தமிழ் மண்ணுக்கு மணிமகுடம் சூட்ட என்று மொழிந்தீர் அன்புத் தோழியே அங்கமெல்லாம் சிலிர்க்க அருமை அருமை காலத்தே தந்த கவிதை சிறப்பே கார்த்திகை வந்தவுடனேயே கனக்கிறது இதயம்.
  வாழ்த்துக்கள் தோழி ....!
  ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய தோழியே!

   களங்கண்ட மாவீரர் கண்களின் தீயென்
   உளமுள்ள தென்று உணர்!

   மண்மீளக் கிட்டுமென மரணமும் தூசாக
   நிலங்காத்துப் போரிட்டுக் கண்மூடிப் போனவர்களை நினையாமல் இருப்போமோ..!
   நினைவோடு நெஞ்சம் கொதிக்கின்றது!..
   விரைவில் விடை கிடைக்கும்!..

   அன்பான வரவிற்கும் ஆக்ரோஷமான உணர்வுக் கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete

 14. இப்பொழுதுதான் கண்டேன்!!!

  “பாட்டோடு வீரப்பால் ஊட்டி – நம்மைப்
    படைத்தவளை அழிப்பதற்குப் படைதிரட்டிக் காட்டி
  தீட்டென்று தமிழரெமை நினைக்க, – வீரர்
    தருக்கரின குருதியினால் தமிழமுடி நனைத்தார்!
  சூட்டுக்கோல் சிறைகம்பி தூக்கு – உங்கள்
    துப்பாக்கி பீரங்கி கொண்டெம்மைத் தாக்கு!
  வீட்டுக்கு ஒருபிள்ளை எழுவான் – எங்கள்
    வீரத்தின் விதைசாகா! விடியத்தான் உழுவான்!““

  சகோதரி உங்களைப் போல் எழுத முடியவில்லை.
  உங்களிடம் தோற்கிறேன்.
  அதனால் என்ன..
  தமிழ்தானே வென்றது.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கொட்டென்று முரசறைந்து கூவி - நாங்கள்
   கொள்வோமே வெற்றியெனும் கொடியேந்தித் தாவி!
   விட்டோடும் பகைகொண்ட பாவி - தேடி
   வீழ்த்தும்நாள் புவிகண்டு மெச்சும்பூத் தூவி!
   கட்டோடு வாழும்நாம் ”தீவி”! - எம்மைக்
   கண்டாலே பகைகலங்கிப் போகாதோ ஆவி!
   சுட்டாலும் உணர்வோடு மேவி! - ஈழச்
   சுதந்திரமே நம்தாகம் துணையாவாள் தேவி!

   ஐயா!..
   //சகோதரி உங்களைப் போல் எழுத முடியவில்லை.
   உங்களிடம் தோற்கிறேன்...//
   இப்படி இனியொருபோதும் சொல்லாதீர்கள் ஐயா!!!..

   உங்கள் உணர்வுக் கவிதையும்
   ஒன்றும் சோடை(தொய்ந்து)போனதல்ல..!
   நெஞ்சில் உரங்கொண்ட வீர வரிகள் ஐயா!

   தாய்த்தமிழின் பிள்ளைகள் அல்லவா நாமெல்லோரும்..!
   அவள் என்றும் எம்மோடிருக்க எமக்குள்
   வேண்டாமே உயர்வு தாழ்வு..!

   உன்னதமான உங்கள் உணர்விற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 15. வலைவீசிப் பிடிக்கின்றான் எதிரி - அவன்
  வால்தனை நறுக்கிடுவோம் ஓடிடுவான் பதறி..
  மலைபோல உறுதிகொள் தமிழா! - மண்ணின்
  மைந்தர்கள் அழுவதுவும் மரபன்று எழடா!..

  - வீரம் பொங்கித் ததும்புகின்றது..

  கனக்கின்றது நெஞ்சம் - கவிதாஞ்சலியில்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கனக்கும் நெஞ்சம் கணமும் நினைக்கின்றது
   மாவீரர் தியாகங்களை!..

   அன்பிற்கும் நல் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 16. மொழிஎங்கள் மூச்சென்று சொல்வோம் -
  அஞ்சலிகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்கள் ஆதரவிற்கும் மிக்க நன்றி!

   Delete
 17. அன்புச் சகோதரி,

  மாவீரம் காயுமோ? மாண்ட மலர்தருக்கள்
  தூவியபல் வித்துத் துளிர்க்கட்டும்! - ஏவியோன்
  காலனானால் என்ன? கதைமுடிக்கக் கற்பிக்கும்

  சூல்கொள் தமிழுன் சுடர்!!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மாவீரம் காயுமோ? மாண்பு மிகப்பெரிது!
   பாவீரர் பாடல்கள் பார்த்தோமே! போர்வீரர்
   காப்பார்கள் மண்ணோடு கண்போல மானமுமே!
   தோப்பாகும் ஈழம் தொடர்ந்து!

   உணர்வுமிக்க வெண்பா தந்து உறவுக்குக் கைகொடுத்தீர்கள்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 18. தன் நிலம் காக்க இன்னுயிர் ஈந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்! அவர்களின் இலட்சியங்கள் ஒருநாள் விருட்சமாகட்டும்! சிறப்பான அஞ்சலிப்பாடல்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தன்நலம் காணா எம்முயிர்த் தியாகச் சுடர்கள் அவர்கள்!
   இன இலட்சியத்திற்காய் ஒலித்த உங்கள் குரலிற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 19. நாட்டிற்கே உரமாகிப் போனார்! - நம்
  நலத்திற்கே போராடி மாவீரர் ஆனார்!

  உணர்வுப்பூர்வமான வைரவரிகள் அருமை,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   நம் ஈழமன்ணின் சொத்தாம் வைர வைடூரியங்கள் மாவீரர்கள்!

   மனதிற்கொண்ட மதிப்பிற்கு உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 20. வணக்கம்
  மாவீரர் தினம் மறக்கக் கூடாத தினம்
  உங்களின் கவிதையில் வந்தது மகிழ்வு ..
  மாவீரர் போற்றுவோம்
  எதிரியின் வால் இன்னும் அகப்படவில்லை திமிரில் ஆடிகொண்டிருகிறது
  விரைவில் நறுக்குவோம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   வாலை நீட்டிய எதிரி வகையாய் மாட்டும் நாள் தூரமில்லை..!
   குதறப்படுவான் கையில் அகப்பட்டால்!!!

   வலுச்சேர்க்கும் வார்த்தைகள் தந்து
   உறவுக்கு உயிரூட்டினீர்கள் சகோதரரே!
   மிக்க நன்றி!

   Delete
 21. கருவோடு இனமழித்துச் சென்றான் - உலகின்
  கொல்லாமை கற்பித்த புத்தனையும் கொன்றான்
  விருத்தியில்லை இனியென்றான் ஈழம் - அவனின்
  விழியறியா(து) மாவீரம் விதைத்திட்ட ஆழம்
  தெருவோடு சுமந்திடுவான் ஒருநாள் - பாவத்
  தேகத்தை அழித்தெமக்கு தந்திடுவான் பெருநாள்
  உருவாகும் ஈழத்தின் ஒளியில் - எதிரி
  உணர்வெல்லாம் சருகாகும் மரணத்தின் நொடியில்!

  சொல்லல்ல உங்கவியின் ஊற்று - ஈழச்
  சோகத்தில் எரிகின்ற செந்தமிழின் கீற்று
  எல்லோரும் வணங்குகின்ற வாரம் - இனியும்
  எமக்கில்லை கண்ணீரின் கனம்கொண்ட பாரம்
  வில்லெடுத்து இடைவாளும் தீட்டு - பகைவன்
  விடமழித்த புகழ்சொல்லி வீணையதை மீட்டு
  வல்வையின் புதல்வனவன் மீள்வான் - எங்கள்
  வரலாற்றுத் தலைவனென வம்சத்தை ஆள்வான் !

  கார்த்திகை பூக்கின்ற மாதம் - உயிரில்
  கண்விழிக்கும் மாவீரர் உரம்கொண்ட பாதம்
  போர்க்களத்தில் பொழிந்திடுமே மேகம் - மறவர்
  பூதவுடல் பூரிக்க உயிர்கொள்ளும் தேகம் !

  அழகிய உணர்வுகள் ஒன்றிணைந்த பாமாலை சகோ வாழ்த்துக்கள்
  மாவீரர் கனவுகள் நனவாக வாழ்த்துகிறேன் ஈழமண்ணின் மைந்தனாய் நானும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீராளன்!

   போர்வீரம் போற்றியவர் வீரம்! - மண்ணிற்
   போராடி உயிர்நீத்த மாவீரர் வாரம்!
   சேர்ப்போமே அவர்கொண்ட தீரம்! - நாளும்
   சூட்டிடுவோம் உலகுணரப் புகழாலே ஆரம்!
   கூர்மைமிகு கொள்கையினைக் கோரும்! - பண்பு
   குன்றாத ஆயுதமாய் எழுத்துலகைப் பாரும்!
   வேர்விடவே வேண்டியதைக் கூறும்! - உண்மை
   வெளிச்சமுற இணைந்துசுடர் ஏற்றுவோமே வாரும்!

   உள்ளத்து உணர்வு பொங்கச் சூட்டிய கவிச்சரம் அருமை!
   உலகம் உண்மைய அறியும் நாள் அருகேதான்..!

   அன்பிற்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றி சகோ சீராளன்!

   Delete
 22. உணர்ச்சிப் பூர்வமான வரிகள். அனைத்திலும் நெருப்பு கக்குகிறது.
  "//நாட்டிற்கே உரமாகிப் போனார்! - நம்
  நலத்திற்கே போராடி மாவீரர் ஆனார்!//"

  உண்மையான வரிகள்.  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உள்ளத்தில் நெருப்பொத்த உணர்வு
   நீறுபூத்த தணலாக இன்னும் இருக்கிறது!
   தீப்பிழம்பாக எரிந்து தீமைகளைத்
   தொலைக்கும் நாள் விரைவில்!..

   உணர்விற்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 23. மாவீரர் கனவுகள் தங்கள் வரிகளில் கண்டேன். நனவாகும் நம்பிக்கையில் தொடர்வோம். நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத் தோழி!

   மா வீரம் மதிப்பிடக் கூடியதோ?.. நானும் நனவாகும் அந்தத்
   திருநாளுக்காக காத்திருக்கின்றேன்!..

   ஒளிர்விக்கும் உங்கள் உணர்விற்கு என் நன்றி தோழி!

   Delete
 24. பாட்டன் மண் காக்க வேண்டுமே..எதிரியைத் துரத்த வேண்டுமே? ஒற்றுமை உணர்வு கொள்ள வேண்டுமே..நம் தமிழைப் போற்றவும் வேண்டுமே..உங்கள் உணர்வு அனைவரும் பெற வேண்டுமே..

  அருமை தோழி, ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப் பூர்வமாய்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு கிரேஸ்!

   இழந்த எங்கள் சொத்துக்கள் எல்லாம் திரும்புமா?..
   ஒன்றா இரண்டா உயிர்களும் அல்லவா?..

   உரிமைக்காய் எரிமலையாய் உணர்வு கொள்வோம்!

   தாங்கும் தங்களின் உணர்வுக்கும் எங்களின் நன்றி தோழி!

   Delete
 25. வார்த்தைகளில் வலியும், ஆவேசமும் எங்களால் உணர முடிகிறது.எம்மினம் அழிவதை கையாலாகாமல் வேடிக்கைப் பார்த்த ரணம் - நெஞ்சு வேகையிலும் ஆறாது.
  http://sivakumarankavithaikal.blogspot.com/search/label/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே!

   ரணங்கள் தாங்கப் பிணங்களோ நாம்?..
   இன்னும் சதையும் இரத்தமும் உயிரும் உணர்வும் ஒட்டியிருக்கின்றது... ஓய்வதாகாது..!
   உங்கள் உணர்வுகள் உறுமியது அங்கு கண்டேன்!
   பேச நா எழவில்லை சகோதரரே!
   உணர்வோடு என் நன்றி!

   Delete
 26. நீண்ட பாமாலை மாவீரர் அஞ்சலிக்காக. மிக அருமையான வரிகள். புனைந்த பாமாலையில் நானும் கரைந்தேன் நினைவுகளுடன்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்பு அம்மு!

   மனதில் மண்ணின் நினைவும் மாவீரர் மகத்துவங்களும்
   அத்தனை நீளமானவை... அதில் .01 பங்கென்றாலும்
   எமது செயல்களில் இருக்க வேண்டுமே..!

   உணர்வில் ஒன்றிக் கரைந்த உங்களுக்கும் என் நன்றி அம்மு!

   Delete
 27. இதுவரை நான் எழுதிய மறுமொழிகள் என்ன ஆயிற்று தெரியாது.
  எவ்வளவு உணர்ச்சி பொங்கக் கவிதை எழுதுகிறாய். அதற்கேற்ப பதிலெழுதக் கூட வருவதில்லை எனக்கு. பாராட்டுகள் எல்லா விதத்திலும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா!

   உணர்வுகள் பொங்க உதிர்த்திட்ட வார்த்தை
   மனதிலே கொண்டேன் மதித்து!

   தங்களின் தளம் வரமுடியாத பணிச் சுமை அம்மா!
   தங்களின் மட்டுமல்ல பல நட்புக்களின் வலைத் தளங்களுக்குமே தற்போதுள்ள நெருக்கடி நிலையால் என்னாற் சென்று கருத்திட முடியவில்லை..!

   மனம் வருந்துகிறேன்!..
   ஆயினும் கிடைக்கின்ற நேரங்களில் என் ஆதரவை எல்லோருக்கும் நல்குவேன்!
   தங்களின் தளம் வந்து கருத்திட்டபின்பே இங்கு இதனை எழுதுகிறேன்!. பரிவோடும் பாசத்தோடும் தேடிய அன்பு அம்மாவுக்கு இதயம் நிறைந்த நன்றி!

   Delete
 28. நன்றி பெண்ணே. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. இதெற்கெல்லாம் நன்றி ஏனம்மா!..:)

   Delete
 29. வணக்கம்
  சகோதரி
  எல்லைகள் தாண்டி விடியும் பொழுதே
  அவகளில் விழிகளில் விழிக்கும்
  தளராத உணர்வுடன்
  தன் மானத்துடன் வாழ
  தன் இனத்துக்காக போராடிய வீர மறவர்கள்
  இவர்கள் எம் தேசத்தின் காவல் தெய்வங்கள்
  தினம் தினம் பூசிக்கப்பட வேண்டியவர்கள்..

  கவிதைப் பாவில் சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. எங்கள் தெய்வங்களன்றோ அவர்கள்..!

   நினைவிற் கலந்த உங்களுக்கும்
   இதயம் நிறைந்த நன்றி சகோதரரே!

   Delete
 30. மாண்டார் இல்லை மாவீரர்-ஈழ
  மண்ணை ஆள வருவாரே
  ஈண்டார் மறுப்பார் அதையின்றே- தமிழ்
  இன்னமே மகிழ நனிநன்றே
  பூண்டாய் அழிவர் பாவிகளே- கடல்
  பொங்கிட அன்னவர் ஆவிகளே
  வேண்டுவ நாமும் இத்தினமே-ஈழ
  விடுதலை நாடும் நம்மனமே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எங்கள் மனவுரம் இன்று அறிந்திடத்
   தங்கான் எதிரி தரித்து! - உடலெங்கும்
   ஏறிய ஓர்ம உணர்வினைக் கண்டிடப்
   பாறி விழுவானே பார்!

   அருமையான கவிதையால் ஆழ்ந்த
   உணர்வினைக் கூறினீர்கள்!
   உங்கள் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_