Pages

Nov 30, 2014

நினைவுகள்!..


எங்கள் ஆசான் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயாவின்
தலைமையில் இன்று 30.11.2014 நடைபெறும்
திருஅருட்பா அரங்க நிகழ்வுக் 
கவியரங்கத் தலைப்பிற்கு எழுதிய 
விருத்தப் பாமாலை!
 ~~~~~~~~~


நினைவுகள் எம்மை என்றும்
நிழலெனத் தொடரும் அன்றோ!
வனைபொருள் வார்ப்புப் போல
வருஞ்சுழல் சுழலாய் நெஞ்சில்
பினைந்திடும் உணர்வுக் கோர்வை
பிறக்குதே கவியாய் இங்கு!
முனைகிறேன் நினைவைச் சொல்ல
முயற்சிதான் பொறுமை காப்பீர்!

சில்லெனத் தழுவுங் காற்று
சிந்தையில் நினைவைத் தூண்டப்
புல்வயல் பனிநீர் சேர்த்துப்
புதுச்சுவை அறிந்த காலம்!
மெல்லிய மழையின் தூறல்
மிருதுவாய் மண்ணில் தூவ  
செல்லமாய் நனையும் என்னைச்
சினந்திடும் அன்னை காண்பேன்!

இரவினில் நிலாச்சோ றென்றே
எமக்கிடும் தாயின் அன்பு!
உறவுடன் பிறந்தோர் ஒன்றாய்
உவந்துளம் உண்போம் அந்நாள்!
வரமெனக் கிடைத்த வாழ்வு
வகையிலும் மேன்மை உண்டு!
சிறப்புறும் நினைவாய்க் காதல்
சிறகொடு பறந்த காலம்!

தொடர்ந்ததே நாட்டிற் போரும்
சூழ்ந்ததிற் கண்டோம் துன்பம்
இடம்பெயர்ந் தவலம் உற்றோம்
எம்நிலம் தொலைத்தே நின்றோம்!
கடல்கடந் தீழம் விட்டுக்
கண்களும் கரைந்த காட்சி
உடலுயிர் நீங்கும் காலம்
உறும்வரை நினைவில் வாழும்!

அணைத்தநற் தலைவன் கண்ட
அதிர்வுறு விபத்தாற் கோமா
பிணைந்தது வினைதான் என்று
பேசினர் நினைவில் உண்டு!
துணையுயிர் காக்க நாளும்
தொடர்ந்தலை கின்ற போதும்
இணையிலா வலைப்பூ நட்பால்
இளமதி வாழ்க்கை நீளும்!
~~~~~~~~~


கூகிள் பட உதவிக்கும் நன்றி!

55 comments:

 1. அன்புச் சகோதரி, அறுசீர் விருத்தங்கள் அருமை! கடைசி விருத்தம் படித்து அதிர்ந்துபோனேன். தங்கள் தமிழால் என்றும் தலைநிமிர்ந்து நிற்கிறீர். சகோதரி, தங்கள் தமிழ்மேல் எனது மதிப்புப் பலமடங்கு உயர்ந்துவிட்டது. “இதுவும் கடந்துபோகும்“ நலமே வளரும். வாழ்த்துகள் தங்கையே.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   இருகரங் கூப்பியே இட்டேனென் நன்றி!
   பெருமனங் கொண்டீர் பிரபு!

   உடன் வருகையுடன் உளமாற ஆறுதல் கூறினீர்கள்!
   கண்டு மனம் நெகிழ்ந்தேன்!..
   காலத்தின் சுழலில் மாட்டிய வாழ்வு!..
   தங்களைப் போன்றோரின் அன்பே அருமருந்து..!
   தொடர்வேன் இயன்றவரை தமிழ்த்தாய் துணையுடன்..

   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 2. பாமாலை! அருமை சகோ,,, வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி!

   Delete
 3. இளமதி வாழ்க்கையும் இன்றோடு நீளும்
  வளம்பெறும் வானோரும் வந்தே - உளமோடு
  உள்ளுறையும் உன்வலிகள் போக்கிடுவர் ! ஆன்றோரும்
  அள்ளித் தருவர் அறிவு !

  அழகான விருத்த பாமாலை சகோ இனிமை இனிமை
  வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ சீராளன்!

   வளம்பெற வாழ்த்தி உளம்நிறைந்து நின்றீர்!
   பலமோடு பாசமாய்க் கண்டேன்! - நலமுற
   நாளுமே வேண்டிடும் நல்லுறவே! வல்வினை
   வீழ்ந்திடும் உம்மால் மிரண்டு!

   அன்புடன் வந்து பாமாலையை இரசித்து வாழ்த்தியமைக்கு
   உளமார்ந்த நன்றி உறவே!

   Delete
 4. என்ன அற்புதமான கவிதை.உள்ளத்தை உருக்கியது.
  நல்லதே நடக்கும் நம்புவோம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   கவிதை எழுதும்போது கற்பனையாய் ஏதேனும்
   எழுதத் தெரியாமல் உண்மையை எழுதிவிடுகிறேன்...
   இது படிப்பவர் மனதைப் பாதிக்கும்போது கவலையாக
   இருக்கின்றது..!

   தங்கள் அன்பிற்கும் ஆறுதல் வார்தைகளுக்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 5. மாறுமே காலம் பெண்ணே!
  மனதிலே உறுதி கொள்வாய்!
  தேற்றவே நாங்கள் உள்ளோம்!
  தேவையா இனியும் துன்பம்!
  இளமதி எங்கள் தோழி!
  இனிமையாய் என்றும் வாழ்வாய்!!
  நல்மனம் கொண்ட நீயும்
  நலம்பெற வாழ்த்தும் நெஞ்சம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்பு மைதிலி!

   மாற்றமே வாழ்வில் மலர்ச்சி தருமென்றே
   தேற்றினீர் தோழி தெளிவாக! - ஏற்றமுற
   என்றும் உடனுற்ற என்றன் உறவுகளே!
   இன்னலினி இங்கெனக்கு ஏது!

   அன்பான வரவுடன் தேற்றிடும் உங்கள் ஆதரவுக் கவி கண்டு
   எத்தகைய துன்பத்தையும் தாங்கிடும் மனவலிமை
   பெற்றதாக உணர்கின்றேன்!..

   மிக்க நன்றி தோழி!

   Delete
 6. கலைமகள் தேர்ந்த பிள்ளை
    கவிதைகள் முல்லை! வாழ்வில்
  அலைவரும்! புயலில் நெஞ்சம்
    ஆடிடும்! ஏறுந் தோணி
  நிலைகெடும்! சற்றே நிற்க
    நீரினில் எழுத்தாய் மாறும்!
  விலையிலா எழுத்தின் வாளால்
    வெட்டுக விதியே தோற்கும்!

  அருமை சகோதரி! நிச்சயம் உங்கள் துயரம் ஒரு நாள் மாறும்!
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   விதியது விட்டோட வெட்டும் எழுத்தை
   மதியிவள் கற்கும் வழியுளதோ?.! - மாதிவள்
   வாழ்வில் வணங்குந் தமிழ்தாங்க என்னுயிர்
   வீழுமுன் ஈவேன் விரைந்து!

   வாழ்வில் வரும் விதிப்பயனின் தாக்கத்தால் துவண்டிடாமற்
   தேற்றும் உங்கள் இனிய பண்பையும், கவிதையையும்
   கண்டு கண்கள் கரைந்தேன்!

   காலம் கைகொடுக்கும்! நம்புகிறேன்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 7. அணைத்தநற் தலைவன் கண்ட
  ///அதிர்வுறு விபத்தாற் கோமா
  பிணைந்தது வினைதான் என்று
  பேசினர் நினைவில் உண்டு!
  துணையுயிர் காக்க நாளும்
  தொடர்ந்தலை கின்ற போதும்
  இணையிலா வலைப்பூ நட்பால்
  இளமதி வாழ்க்கை நீழும்!///
  கலங்க வேண்டாம் சகோதரியாரே
  இதுவும் கடந்து போகும்
  நன்மை தங்களை நாடி வரும்
  மகிழ்ச்சி தங்களைத் தேடி வரும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் பரிவுகண்டு துயர் கலையும் ஐயா!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 8. சிறப்பான வரிகள்...

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 9. அருமையான கவிதை வரிகள் !
  ஊர்நினைவுகள் .நிலவொளியில் இரண்டு கிண்ணத்துடன் பாற்சோறு சாப்பிட்டது நினைவில் வந்தது எனக்கும் ..
  இறைவன் துணை மற்றும் அன்பு நட்பூக்களின் பிரார்த்தனை எப்பவும் உங்களுக்குண்டு .

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!

   கடந்து போன பசுமை நினைவுகள்!..
   மீட்டிப் பார்க்கும் சுகமும் இனிமைதான்..:)

   உங்கள் அன்பும் அறிவேன் நான்!
   உளமார்ந்த நன்றி அஞ்சு!

   Delete
 10. அருமையான வரிகள் சகோதரி! நல்லதே நடக்கும் என நம்புவோம். இதுவும் கடந்து போகத்தனே செய்யும்! மனதைத் தொட்ட வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   ஆமாம் நடந்தவை, கடந்தவை மீளாது..
   இனிமைகளை மீட்டிப் பார்ப்பது மனதிற்கு ஏக்கத்தைத்
   தந்தாலும் கிடைத்தவரை மகிழ்வே!

   தங்கள் அன்பிற்கும் என் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 11. // துணையுயிர் காக்க நாளும்
  தொடர்ந்தலை கின்ற போதும்
  இணையிலா வலைப்பூ நட்பால்
  இளமதி வாழ்க்கை நீளும்!..//

  அன்பின் சகோதரி..
  கலங்க வேண்டாம்.. தெய்வம் துணையுண்டு..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் ஆசியும் ஆதரவான பிரார்த்தனையும் அறிவேன் நான்!

   தங்களின் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 12. ///நினைவுகள் எம்மை என்றும்
  நிழலெனத் தொடரும் அன்றோ!///
  ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:)... இந்தக் கவிதையில் தப்பிருக்கிறது:).. நான் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்.. எனக்கு தமிழ்ல “டி” ஆக்கும்.. எங்கிட்டயேவா?:).. அன்றோ எண்டால் என்ன?:))... ஹையோ முருகா.. எங்கே என் கட்டிலடி.. ஒளிஞ்சிடுவோம் முதல்ல:)...

  வாழ்த்துக்கள் இளமதி... வரவரக் கலக்குறீங்க.. ஆனா என்னைப் பற்றித்தான் கவிதை எழுத மாட்டேன் என அடம்புய்க்கிறீங்க:)

  ReplyDelete
  Replies
  1. // நினைவுகள் எம்மை என்றும்
   நிழலெனத் தொடரும் அன்றோ//

   இதை இப்படி மாற்றினால் ஓகே வா அதிரா ?

   நினைவுகள் எம்மை என்றும்
   நிழலெனத் தொடரும் தானே //

   Delete
  2. அன்பு அதிரா!..

   உங்கள் கலகலப்புக் கண்டால் துயரம் பஞ்சாய்ப் பறந்திடுமே!..

   உங்களுக்காக கவிதை எழுதி தனிப்பதிவே போடுகிறேன் ஒருநாள்.. சரியா!..:)

   அன்பிற்கு மிக்க நன்றி அதிரா!

   Delete
 13. வணக்கம் !

  இன்பத் தமிழை இதயத்தில் சுமந்து என்றும் போல்
  இன்றும் புதுமை படைத்தாய் என் அன்புத் தோழியே !வாழிய
  நின் புகழ் நல் வளங்களும் நலன்களும் பெற்று .துயர்களைக்
  கடந்தொரு இன்பமான வாழ்வு வாழும் காலம் உனதாக நானும்
  இங்கே இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் கவலைகளைத் துறந்து
  வாழும் நிலை உருவாகும் தோழி கவலை வேண்டாம் அமைதி
  கொள்வாய் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத் தோழியே!

   இன்பத் தமிழை இடையறா தோதியே
   அன்பைப் பெருக்கிட ஆவலே! - நன்றென்றே
   நாளும் படித்திட நான்வேண்ட நல்லிறை
   சூழத்தந் தோர்நற் றொடர்பு!

   உங்கள் அன்பில் நெக்குருகினேன் தோழி!
   மிக்க நன்றி!

   Delete
 14. நம்பிக்கைத் துணையோடு உம்மைத்
  தும்பிக்கையான் காக்க வேண்டும்.
  கவலையை கட்டி யணைத்தபடியே
  உள்ளோம் தனியே தாங்களல்ல.
  இறையருள் கிட்டட்டும்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி!

   தும்பிக்கையான் துணையோடு நம்பிக்கை தர
   உங்களைப் போன்றோர் இருக்க இல்லை எனக்குக் கவலை!..

   அன்பான உணர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

   Delete
 15. அருமை அருமை...இளமதியே...
  கலங்கவேண்டாம்...காலம் கனியும்...

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி உமையாள்!

   காலங்கனியுமென இனிய வார்த்தை சொன்னீர்கள்!..
   இதயம் நிறைந்ததம்மா..!
   என்றும் என் நன்றி உங்களுக்கு!

   Delete
 16. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் சகோதரி.
  நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   காலமும் கடவுள் கருணையும் கலந்தே வந்தால்
   காரிகை என் வாழ்வு அமைதி பெறும்!

   அன்பிற்கு உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 17. துணையுயிர் காக்க நாளும்
  தொடர்ந்தலை கின்ற போதும்
  இணையிலா வலைப்பூ நட்பால்
  இளமதி வாழ்க்கை நீளும்!//

  வாழ்க்கைதுணை நலம்பெறுவார் இறைவன் அருளால். நட்புகளின் வாழ்த்தால் இளமதி நலம் அடைவார்.

  பாமாலை அருமை.
  விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   தங்களின் அன்பான வாழ்த்தினால் நலம் காணுவேன் நிச்சயம்!

   வேண்டல்கள் வீண் போகாதே!

   அன்புக்கு உளமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 18. செல்லமாய் நனையும் என்னைச்
  சினந்திடும் அன்னை காண்பேன்!//அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவிற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 19. விருத்தப்பா சொன்ன வியன்மதியே! நித்தம்
  வருத்தமும் ஏனோ? வளா்தமிழ் அன்னை
  துணையாய் உனக்குத் தொடர்தே இருக்கக்
  கணையாய்ப் பறக்கும் கவி!
  இணையில்லா இணைய நட்பே. நலம் பெற வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   தொடராய்த் தமிழாள் துணைவரவே துன்பம்
   இடரா திருந்திடும் என்பேனே! - தேட
   வளமாய் நலமொடு வாழ்வுறவே தோழி
   அழகாய்த்தந் தீர்பா!.. அணைத்து!

   இனிய பாவால் தொட்டீர் எனதுள்ளம்!
   மிக்க நன்றி தோழி!

   Delete

 20. வணக்கம்!

  பிரான்சு கம்பன் கழக மகளிா் அணி மாதந்தோறும் நடாத்தும்
  கவியரங்க நிகழ்வுக்குத் தொடா்ந்து பா படைத்து வருகின்றீா்! வாழ்த்துக்களும்! நன்றியும்!

  நெஞ்சுள் நிலைத்த நினைவுகளை வெண்மதியார்
  கொஞ்சும் தமிழில் கொடுத்துள்ளார்! - விஞ்சும்
  சுவையுண்டோம்! துாய சுடர்கவிச் சீராய்
  அவைகண்டோம் என்றே அறி!

  ஊழ்வினை என்றே உரைத்த கவிபடித்து
  ஆழ்மனம் பொங்கி அழுகிறது! - வாழ்வினில்
  எல்லாம் கடந்தேகும்! எந்நாளும் எவ்விடத்தும்
  எல்லாம் அறிந்தானை ஏத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..

   கம்பன் கழக மகளிர் அணி மாதந்தோறும் நடாத்தும் கவியரங்கில் பா படைத்துப் பாட எமக்குக் கிடைத்த நற் பேறல்லவோ இது!..
   இதற்கு நன்றியெல்லாம் நமக்கு நீங்கள் சொல்வதா?.. வேண்டாம் ஐயா!

   எம்மை வளர்த்துக் கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பிது!
   அதற்காக உங்களுக்குத்தான் நாம் நன்றி கூறக்
   கடமைப்பட்டுள்ளோம்..
   மிக்க நன்றி ஐயா!

   எல்லாம் அறிந்த இறைவனை ஏற்றியே
   பொல்லா வினைதீரப் போயழுதேன்! - அல்லலறப்
   பாடுக பைந்தமிழைக் காண்பீர் நலம்சூழும்
   ஆடுவீரென் றான்!..ஐயன் அன்பு!

   நெஞ்சம் நிறையவே நீவிர் தருகின்றீர்
   பஞ்சு மிருதான பாக்களையே! - அஞ்சாமற்
   பாடிக் களிக்கின்றேன்! பாட்டரசே உம்மருளால்
   தேடியே பெற்றேன் திரு!

   அன்பான வரவுடன் இனிய வெண்பா வாழ்த்தினால்
   என் மனம் ஆறுதலடையவும் இன்னும்
   கற்றுயர ஊக்கமிகு வழி கூறினீர்கள்!

   தங்களின் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 21. வணக்கம் சகோதரி
  துயரத்தைக் கூட கவிபாடி ஆற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு தங்கள் எழுத்துக்கள் சாட்சி. இறுதி வரிகள் இதயம் விம்மியதையும் கண்கள் குளமாகியதையும் தவிர்க்க முடியவில்லை சகோதரி. இணைய வானில் எங்களைப் போன்ற நட்சத்திரக் கூட்டங்களுக்கு என்றும் தாங்கள் இளமதி. இணைய நட்புக்கு பெருமையும் சேர்த்துள்ளீர்கள், தேய்பிறை நாட்கள் எல்லாம் மறைந்து இனி என்றும் வளர்பிறையாய் வான் நிலவு ஜொலிக்க என் இறை வேண்டல் தொடரும். நன்றிங்க சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே! வணக்கம்!

   நினைவுகளை மீட்டொரு கவியெழுதப் போன இடத்தில்
   துணைக்கு நடந்ததை மறந்து - மறைத்து எழுத்தத் தெரியவில்லை!.. ஆனால்.. அதுவே இப்படி வலையுறவுகளின் மனதைக் குடைந்துவிட்டதென்பது கவலையைத்தருகின்றது!..

   இருப்பினும் உங்களைப் போன்று இங்கு எனக்குப் பக்கபலமாக இத்தனை அனபுள்ளங்கள் இருக்கின்றனர் என்று காணும்போது மலைபோன்ற அத்தனை துயரமும் சிறு குறுணிக் கற்களாக மாறியதை உணருகின்றேன்!..

   உளவலிமை உங்கள் எல்லோரினது ஆதரவாலும் இன்னும் கூடியுள்ளது! இயன்றவரை வலை வானில் இந்த இளையநிலாவின் பயணம் இருக்கும்! ஒளிதரும்!

   உங்கள் அன்பில் நெகிழ்ந்துவிட்டேன் சகோ!
   உளமார்ந்த நன்றி!

   Delete
 22. வணக்கம் சகோ
  நெஞ்சிற் பதிந்து பறந்தல் அரிதல்ல
  பஞ்சும் நெருப்பும் பருவத்தின் கூரென்றான்
  அஞ்சும் வயதெட்டி வந்தது காயமென்றும்
  எஞ்சும் எழுத்துகள் ஆற்றட்டும் வினை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அஞ்சும் விதியை அகற்றிடவே தந்திட்ட
   விஞ்சும் கவியோ வியப்பு!

   உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ!

   Delete
 23. அன்புச் சகோதரி,  நினைவலைகள்...!

  விண்ணின் மழைக்கு நனையாது
  வியந்தே கண்ணாய்க் காத்தாயே
  எண்ணும் போதும் உனதன்பை
  எழுதும் போதும் சுகமாகும்
  வண்ணக் கவிதை வளமாகும்
  வாசல் தட்டும் இதமாக...!
  மண்ணில் தூவும் மழைபோல
  மகிழ்வாய் மலர்வாய் எப்போதும்!


  உன்னை எறும்பும் தீண்டாது
  உழைத்தே வளர்த்த உம்தந்தை
  அன்பாய் பேணும் உனதுள்ளம்
  அகலா தவரைக் காக்கின்றாய்
  மண்ணின் வீரம் ஊட்டிட்டே
  மனதில் மானம் விதைத்தாயே
  பெண்ணின் பெருமை பேசிடஉன்
  பேரும் புகழும் போதாதோ?


  நாட்டை விட்டே வந்தாலும்
  நாடும் மொழியும் விழியாக
  பாட்டை என்றும் உயிராக்கிப்
  பாடை கட்டு எதிரிக்கு!
  ஈட்டி போலப் பாய்ந்திட்டே
  இதயம் தைக்கும் உன்பாடல்
  நாட்டில் புரட்சிப் பூபாளம்
  நாளை பாடி மகிழட்டும்!

  நன்றி.

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..

   என்றன் அன்பு ஐயாவே!
     ஏற்றி உம்மை வணங்குகின்றேன்!
   உன்றன் உணர்வுக் கவிகண்டே
     உள்ளம் உருகி நிற்கின்றேன்!
   தென்றற் காற்றும் சிலநேரம்
     சீறும் புயலாய் வருவதுண்டே!
   கண்டேன் அதுபோல் வாழ்வினிலே
     கண்கள் நினைவாற் கரைந்திடவே!

   பின்னும் இன்பம் துன்பமெனப்
     பெற்றோம் வாழ்வில் பலவுண்டு!
   இன்னல் தீர்க்க இங்குறு..நீ.
     என்றே என்தாய் பணித்திட்டாள்!
   கன்னற் தமிழும் வலையுறவும்
     கண்டே அமைதி கொள்கின்றேன்
   மின்னல் போன்று இல்லாமல்
     வேண்டும் தொடரும் உறவுகளே!

   ஐயா! என் நினைவுக் கவியிற் கதையைக் கூறி மனம் வருத்தியமைக்கு வருந்துகின்றேன்!..
   இருப்பினும் எத்தனை உறவுகள் இந்த வலைப்பூவில் எனக்கு என எண்ணி மனம் தேறுகின்றேன்!

   அன்பின் நெகிழ்வாய் அமைத்த அருமையான விருத்தப்பாக்கள்
   என் உளம் நிறைத்துக் கண்ணீர் பெருக்கின ஐயா!

   உங்கள் ஆதரவிற்கும் உளமார்ந்த அன்பிற்கும்
   என் இதயங்கனிந்த அன்பு நன்றியும் வணக்கமும் ஐயா!

   Delete
 24. அன்புத் தோழியே
  மதிநுட்பம் கொண்ட மாதே
  விதியை எண்ணி மாளாதே
  தமிழ்மொழியே யுன்வலிமை அது
  உமியல்ல உனைவிட்டு நீங்க
  உன்வாழ்வு வளமாக உன்வசமான
  அன்னை மகிழ்வோடு ஈந்த வரம்!
  என்றும் தொழுதேத்திப்பாடு வலையுறவின்
  அன்பென்றும் உனைசூழும் நாளும்
  உன்அன்பை நாடி என்றும்
  தொடர்வேனே நானும்!
  கண்கள் கலங்கவைக்கும் கவிதை.
  என்னே கவிதை ரசித்தேன் ஒவ்வொரு வரிகளையும் வேதனை மிக!
  தொடர வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே ....!

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழியே!..

   எங்கள் மதியும் விதிமுன்னே
     இல்லா தோடிப் போகிறதே!
   திங்கள் வானில் இருந்திடலே
     சேரும் சிறப்பு அதற்குண்டாம்!
   மங்கும் வினையை விரட்டிடவே
     மண்ணில் இறையே துணையாகும்!
   உங்கள் அன்பும் ஆதரவும்
     உற்ற வரையும் இலைவலியே!

   அன்பாகக் கவிதை தந்து அரவணைத்தீர் அகம் நிறைத்தேன்!..

   என்றென்றும் உங்கள் அருகாமை இருக்க
   எனக்கிலை ஒரு குறையே!
   நெகிழ்ந்தேன் நினது அன்பாலே என் தோழியே!

   மிக்க நன்றி மா!

   Delete
 25. வணக்கம்
  சகோதரி
  துயரத்தை கொழுவைத்து
  சுடர் ஏற்றி விட்டீர்
  அணையாத சுடராக
  ஆழ் மனதில் அச்சாணிப் பிடி....

  அருமையாக உள்ளது சகோதரி... காலம் விரைவில் பதில் சொல்லும் கவலைகள் ஒரு நாள் நீங்கும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   துயரத்தைத் தூக்கிலிடத் தோள்கொடு தோழா!
   உயர்வினைக் காண்பேன் உவந்து!

   அன்பிற்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 26. அருமையான கவிதை வாழ்த்துக்கள்
  "..இரவினில் நிலாச்சோ றென்றே
  எமக்கிடும் தாயின் அன்பு!.." உண்மைதான்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைத்தியரையா!

   தங்கள் அன்பு வருகை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 27. இணையிலா வலைப்பூ நட்பால்
  இளமதி வாழ்க்கை நீளும்! = மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பு வருகை கண்டு நானும் மகிழ்கின்றேன்!
   மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_