Pages

Dec 13, 2014

வண்ணப் பறவை நானாகி!..


வண்ணப் பறவை நானாகி
வானிற் பறக்கும் ஆசையுடன்
எண்ணச் சிறகைத் தான்விரித்தே
எழுதும் கவிதை கேளுங்கள்!
கண்ணிற் கண்ட காட்சியெலாம்
காற்றில் கலைந்து போய்விடும்முன்
விண்ணில் இருந்து கூறுகிறேன்
விழைந்து கேட்பீர் நண்பர்களே!

தேடிக் கண்டேன் மலர்ச்சோலை
தேனைச் சொட்டும் கனிவகைகள்
நாடி அழைத்த நறுமலர்கள்
நானும் மயங்கி நின்றேனே!
கூடி மகிழும் குருவிகளும்
கோல எழிலாய்ப் பொன்மயிலும்
பாடிக் களிக்கும் கவிக்குயிலும்
பார்த்தேன் வியப்பு மேலிடவே!

நடையைப் பயிலும் நதிமகளும்
நாடும் புள்ளி மானினமும்
இடையிற் கண்ட புலியினமும்
இருக்கும் வனத்தைக் கடந்தேனே!
குடையாய் விரிந்த மரக்கிளையில்
குதிக்கும் குரங்கைக் கண்டேனே!
தடையே இன்றி வான்வெளியில்
தாவித் தாவிப் பறந்தேனே!

வானை முட்டும் மலையுச்சி!
வந்து தழுவும் குளிர்தென்றல்!
சேனை போன்று முகிற்கூட்டம்
சிலிர்க்கச் செய்யும் மழைத்தூறல்!
தேனைப் பருகும் பொன்வண்டு!
சிரிக்கும் சிட்டு! வெண்கொக்கு!
பானை போன்ற வானமதில்
பறந்தேன்! படர்ந்தான் பரிதியுமே!

சிந்தை மயக்கும் இயற்கையிலே
சேர்த்த மகிழ்வு போதுமென
விந்தை வியப்புங் கூடவர
வேகம் கொண்டு பறந்திட்டேன்!
எந்தை தாயும் வாழ்ந்திட்ட
எழிலாம் ஈழம் சென்றேனே
நொந்தேன் மனமும்! வீழ்ந்தேனே!
நொடிந்த எம்மின் இனங்கண்டே!

 
  பொல்லா அரசின் சிறைச்சாலை
போட்ட கம்பிக் கூட்டுக்குள்
அல்லல் வாழ்க்கை அன்றாடம்
அடிமை ஆனார் எம்தமிழர்!
கல்லை உடைக்கும் பெண்ணிடத்தில்
கையில் ஆயு தம்கொண்டோர்
பல்லை நெருமி மிரட்டுவதைப்
பார்த்தே சிலையாய் உறைந்திட்டேன்

சொல்ல முடியாத் துயரங்கள்
சுருங்கித் துவளும் புண்வாழ்வு!
நல்லோர் உலகில் யாருமின்றி
நாயாய் நலியும் நம்முறவு!
வெல்லும் காலம் விரைந்திடவே
வேண்டி நானும் அழுகின்றேன்
வல்ல இறையின் துணைவேண்டும்
வாட்டும் தீமை அகன்றிடவே!

ஆண்ட தமிழன் தன்னிலத்தை
ஆளும் காலம் மலராதோ?
நீண்ட கொடுமை முடிவுற்று
நேயம் எங்கும் வீசாதோ?
தோண்டச் சுரக்கும் நீராகத்
தொடர்ந்தே இன்பம் ஊறாதோ?
வேண்டித் தொழுதேன் வல்லவனை
விண்ணீர் கண்ணிற் பெருகியதே!

காவல் காக்கும் தீயவர்கள்
காமப் பார்வை! பெரும்கொடுமை!
கூவம் ஆற்றைத் தம்மனத்துள்
கொண்ட கொடியோர் அழிவாரே!
ஏவும் கணையைத் தூள்தூளாய்
இறையச் செய்யும் தமிழ்மறவர்
நாவும் வரண்டு வாடுகிறார்
நானும் வரண்டு வீழ்ந்தேனே!

எங்கள் நாடு! தேன்கூடு!
இன்பத் தமிழின் பூக்காடு!
சங்கக் கால மாண்புகளைத்
தாங்கித் தழைக்கும் தமிழ்வீடு!
பொங்கும் அலைகள் தாலாட்டப்
பொலிந்து மணக்கும் புகழேடு!
எங்கும் இன்று துயர்வாட்டும்!
எல்லாம் மாறும்! தமிழ்வெல்லும்!
 ~~~~0~~~
படங்கள்: நன்றி கூகிள்!

49 comments:

 1. இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வரும் வேளையில் ஈழக் கொடுமை விரிகிறதே...துயரம் தான் தோழி..தமிழ் வெல்லும் ஊர் நாள்!!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   இயற்கையோடு இணைந்ததே வாழ்க்கை! ஆனால் எம்மவர்
   வாழ்க்கை நடந்த நிகழ்வுகளால் இயற்கையிலிருந்து பிரிக்கப்பட்டு வேறுவிதமாக இப்போது மாறிவிட்டதே..!

   காலம் விடைதரட்டும்! முதல் வருகையுடன் முத்தான கருத்திட்டமைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 2. வண்ணப்பறவை படும் துன்பத்துக்கு
  விரைவில் விடிவுகாலம் பிறக்கட்டும்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   அன்பான வரவுடன் இட்ட இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 3. பொங்கும் அலைகள் தாலாட்டப்
  //பொலிந்து மணக்கும் புகழேடு!
  எங்கும் இன்று துயர்வாட்டும்!
  எல்லாம் மாறும்! தமிழ்வெல்லும்!///
  நிச்சயம் தமிழ் வெல்லும்
  தமிழினம் தலைநிமிரும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்களின் உரத்த குரலொன்றே போதும்
   இயிர் பெறும் தமிழினம்!

   அன்பு வரவுடன் அருங்கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 4. அனைத்தும் ஒரு நாள் மாறும்... நம்பிக்கை தான் வாழ்க்கை....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   நானும் அதே நம்பிக்கையிற்தான் இருக்கின்றேன்!

   வரவிற்கும் கருத்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 5. இது உங்களின் கவிதைகளில் ஆகச்சிறந்த கவிதை சகோதரி!!!!
  இதை மட்டும்தான் சொல்ல முடிகிறது.
  வார்த்தைகள் வசமிழக்கின்றன!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. விந்தை புரியும் தமிழ்மகளின்
   விரல்கள் வரைந்த ஓவியமோ?
   கந்தல் மரபில் பட்டுடுத்திக்
   கவிதை மகளின் நாட்டியமோ?
   சந்தக் குயிலோ சலங்கையொலி
   சிந்தும் இசையோ? கண்டிடவே
   வந்தேன்! திகைத்தேன்!! இளமதியார்
   வலையோ? வலைதான்! சிக்கிவிட்டேன்!!!
   நன்றி அம்மா!

   Delete
  2. வணக்கம் ஐயா!

   சந்தக் குயிலும் நானல்லேன்!
     சாற்றப் பண்ணுந் தானறியேன்!
   விந்தை மிக்க பா..வீணை
     மீட்டும் மேதை நீரன்றோ!
   சிந்தை கொண்ட செய்திகளைத்
     சீராய்ப் பாடத் தெரியாமல்
   கெந்தும் புலுனி நிலையிலுளேன்
     கேலி செய்தல் வேண்டாமே!

   // இது உங்களின் கவிதைகளில் ஆகச்சிறந்த கவிதை சகோதரி!!!! //..

   தாங்களே இப்படிச் சொல்வது கண்டு ஆச்சரியமுடம்
   உண்மைதானா என என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்!..:)

   தங்களைப் போன்றோரின் அன்பும் ஆதரவுமே
   எனது படிப்படியான வளர்ச்சிக்கு காரணமாகும் ஐயா!

   இனிய கவிக்கருத்திற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 6. வலியை சொல்லும் கவிதை வாசிக்க, இதயமும் வலிக்கிறதே.
  நிச்சயம் எல்லாம் மாறும் , தமிழ் வெல்லும் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி அனிதா சிவா!

   இங்கு தங்களின் முதலாவது வருகை கண்டு
   மிக்க மகிழ்ச்சி!

   இதயங்களைப் பிளந்து எம் உறவுகளின்
   இன்னுயிர்களைப் பறித்திடப் பதறிய
   நினைவுகள் இன்னும் என் நெஞ்சில்
   நிறைந்துள்ளது தோழி!

   அதன் தாக்கமே வலிதரும் கவிதை!..

   தங்களின் அன்பான வரவும் அருமையான கருத்துங் கண்டு
   மகிழ்வோடு என் நன்றியையும் உங்களுக்குக் கூறுகின்றேன்!
   மிக்க நன்றி தோழி!

   Delete
 7. //எங்கும் இன்று துயர்வாட்டும்!
  எல்லாம் மாறும்! தமிழ் வெல்லும்!..//

  அழகான வர்ணனைகளுடன் கவிப் பயணம்!..
  அஞ்ச வேண்டாம்.. தமிழே நிச்சயம் வெல்லும்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பு வருகையுடன் உவகையும் கொண்ட
   வாழ்த்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   நன்றி ஐயா!

   Delete
 8. அன்றைய அமைதியான பூமியும், போருக்குப்பின் இன்றைய ஈழமும் மொத்தமுமாய் மாறித்தான் விட்டது அல்லவா? வலி புரிகிறது! அருமையான பாடல்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்றிருந்த பூமியும் இன்றில்லை அங்கிருந்த எத்தனையோ
   உறவுகளும் இன்று இல்லவே இல்லையே!..:(

   வலியுணர்வு கண்டு வரைந்த அருமையான கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 9. முதல் பத்தியே அமர்க்களமாக ஆரம்பிக்கிறதே..
  ஆனால் போகப்போக சகோதர சகோதரிகளின் வலியை உணர்வுப்பூர்வமாக சொல்லுகிறது.
  அந்த இறுதி வரி - "/எல்லாம் மாறும்! தமிழ்வெல்லும்!//"
  கண்டிப்பாக சகோ, தமிழ் ஒரு நாள் நிச்சயம் வெல்லும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   சிரிப்பது போலத்தோற்றம் தந்தாலும்
   உள்ளே அழுதுகொண்டு தானிருக்கின்றோம்!..

   உள்ளுணர்வுகளை ஒளிவின்றி உரைத்தேன் கவியில்!
   கண்டு கருத்திட்டு ஆதரிக்கும் உங்களுக்கும்
   என் மனமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 10. வெல்லும் காலம் விரைவில் வந்திட வேண்டும் என்பதே எல்லோரதும் அவா. எண்ணச்சிறகை விரித்து எழுதிய கவிதை அருமை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்புப் பிரியசகி!

   உங்களுக்கும் தெரியும் அந்த வலிகள்!
   காலம் கனியட்டும்! காண்போம் அமைதியை!

   அன்பு வரவிற்கும் நல்ல கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி பிரியா!

   Delete
 11. //நீண்ட கொடுமை முடிவுற்று
  நேயம் எங்கும் வீசாதோ?
  தோண்டச் சுரக்கும் நீராகத்
  தொடர்ந்தே இன்பம் ஊறாதோ?//

  நிச்சயம் நேசம் மலரும்! இன்பம் தொடர்ந்து ஊறும் இளமதி! மனக்கலக்கம் மாறும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மனோ அக்கா!

   எங்கள் உணர்வில் உங்கள் அக்கறைகண்டு
   உள்ளம் நிறைந்தேன்!

   அன்பிற்கு மிக்க நன்றி அக்கா!

   Delete
 12. அன்புச் சகோதரி,
  அன்புச் சகோதரி,

  எண்ணப் பறவை...!

  சிறந்து வாழ்ந்த தமிழினத்தைச்
    சிதைத்தே வாழ்தல் பொறுக்காமல்
  உறவுப் பறவைக் கூட்டத்தை
    உங்கள் சிறகால் காக்கின்றீர்!
  பறக்கும் எங்கள் மனம்உங்கள்
    பாசம் தேடி ஓடிவர
  பிறக்கும் கவிதை பேரின்பம்
    படைப்பீர் பருக வருகின்றோம்!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சோறு கிடையா தென்றாலும்
     சோர்வு காணா தெம்மனமே!
   வீறு கொள்ளா திருந்தே..எம்
     வேகம் குன்ற விடுவோமோ?
   ஆறும் மனதும் விடுதலையால்
     ஆள்வோம் நாள்வர நம்மையேநாம்!
   கூறும் உணர்வும் கேட்டீரோ
     குவித்தேன் கரங்கள் நன்றியோடே!

   அன்பு கொண்டு அழகிய விருத்தம் அமைத்து
   அருமையாக வாழ்த்தினீர்கள் என்னை! இனிமை!

   என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. நன்றி சகோதரி.

   Delete
 13. எல்லாம் மாறும் சகோதரி....

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரர் குமார்!

   ஒரு வாசகம் என்றாலும் உயர் வாகசம் சகோ!
   அன்பிற்கு மிக்க நன்றி!

   Delete

 14. வணக்கம்!

  மாயக் குயவன் வடிவாக
    வார்த்த பானை வானென்று
  நேயத் தமிழில் கவி..தந்த
    நிலவே! வாழ்க பல்லாண்டு!
  காயம் கொண்ட தமிழீழக்
    காட்சி நெஞ்சைப் பிளக்கிறது!
  தீய பகைவா் செய்தவினை
    திரும்பி அவரைத் அழித்திடுமே!

  வானைத் துடைக்கும் கோலாக
    வளா்ந்து நிற்கும் நெடுமரத்தில்
  தேனை நிகா்த்த கனியுண்டு
    தெற்கே பறந்த கவிக்குயிலே!
  யானை அதிரப் படைநடத்தி
    இருந்த தமிழா் துயா்கண்டு
  பானை ஒழுகும் நெஞ்சுற்றாய்!
    பகைவர் அழிவார்! தமிழ்வெல்லும்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு   

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சீரைக் கேட்டு நின்றோமா?
     சீலம் தவறி நடந்தோமா?
   பாரை ஆளக் கேட்டோமா?
     பண்பாய் உரிமை கேட்டோமே!
   வேரைக் கெல்லி வீசியதும்
     வீணர் ஆனோம் என்றிருப்பர்!
   கூரை பிரித்து கொட்டிடுவர்
     கொட்டம் அடங்கும் அப்போதே!

   உணர்ச்சி மிக்க விருத்தங்களால்
   உரைத்தீர்கள் பல உண்மைகளை ஐயா!

   தங்கள் வரவினாலும் இனிய வாழ்த்தினாலும்
   கவிபுனைய இன்னும் மனத்திடம் பெற்றேன் ஐயா!
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 15. அருமைத் தமிழ் நேச தேசத்தை, அங்குள்ள தமிழ்மணத்தை, எல்லாம் இழந்த சோகத்தை,பறந்த நிலையில் சொல்வதை, ஜெட் வேகத்தைவிட, வேகமாகவும், மனப் பாசத்தை இதைவிட எப்படிச் சொல்ல முடியும். நல்ல காலம் பிரக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதையும் உன்னால் இயற்றப்பட வேண்டும். நல்லெண்ண அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா!

   உங்கள் அனபும் வாழ்த்தும் கண்டு உள்ளம் நெகிழ்கின்றேன்!..

   கூடவே உங்கள் ஆசியும் என்னை வழிநடத்துகிறது!
   அன்பிற்கு மிக்க நன்றி அம்மா!

   Delete
 16. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் அன்பும் ஆதரவுமே சிறப்பு!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 17. வானில் பறக்கும் வண்ணப்பறவைக்கும் எத்தனை சோகங்கள்! பாருங்கள் சகோதரி எத்தனை அழகான வரிகள் ஆனால் சோகம் நிறைந்து...

  சொல்ல முடியாத் துயரங்கள்
  சுருங்கித் துவளும் புண்வாழ்வு!
  நல்லோர் உலகில் யாருமின்றி
  நாயாய் நலியும் நம்முறவு!
  வெல்லும் காலம் விரைந்திடவே
  வேண்டி நானும் அழுகின்றேன்
  வல்ல இறையின் துணைவேண்டும்
  வாட்டும் தீமை அகன்றிடவே!

  ஆண்ட தமிழன் தன்னிலத்தை
  ஆளும் காலம் மலராதோ?
  நீண்ட கொடுமை முடிவுற்று
  நேயம் எங்கும் வீசாதோ?
  தோண்டச் சுரக்கும் நீராகத்
  தொடர்ந்தே இன்பம் ஊறாதோ?
  வேண்டித் தொழுதேன் வல்லவனை
  விண்ணீர் கண்ணிற் பெருகியதே!//

  விரைவில் துன்பம் எல்லாம் நீங்க பிரார்த்தனைகள். தமிழன் ஆளும் நாளும் விரைவில் வரும் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   ஒவ்வொரு உயிருக்கும் அதனுள்ளும் வருத்தங்கள்
   இருக்கத்தானே செய்யும்..!

   பறக்கும் பறவையாய் தாய்நாட்டின் சில வலிகளைச்
   சொல்ல வந்தேன்!
   அன்பு வரவிற்கும் நற் கருத்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 18. நிலை மாறும்
  நின் கவலை போகும்

  தமிழ் அழகாக வந்து விழுகிறது உங்களிடம். இது போல் எழுத ஆசை ...( பேராசை படக்கூடாது என எனக்கு சொல்லிக் கொள்கிறேன்)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!..

   உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!..
   அட ..! உங்களுக்கும் எல்லாம் வரும்.! வருகிறதே!..:)
   நான் நன்றாகவே ரசிக்கின்றேன் உங்கள் பதிவுகளை!
   முயன்றால் முடியாததில்லை..!..:)

   Delete
 19. அழகிய கவிதை.

  என் ஒரு சிறிய வேண்டுகோள் இளமதி... இன்னும் ஏன் சோகமாகவே ஈழத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகள் வடிக்கிறீங்க... இப்போ எவ்வளவோ மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றனவே... கொஞ்சம் மகிழ்ச்சியாக்கி கவி வரைந்தால்.. மனங்களும் மகிழ்ச்சியாகும்...

  அதற்காக பழசை மறக்கலாம் என்றில்லை... அதிலிருந்து கொஞ்சம் வெளியே வருவது நல்லதென நினைக்கிறேன். கிண்டக் கிண்டக் கவலைகள் கூடும்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு அதிரா!..

   மிக்க நன்றி!..

   மாற்றங்கள் வருகின்றனதான்.. ஆனாலும் அங்கங்கே
   வெளியே தெரியாத சோகம், நெருக்கடிகள் இன்னும் இருக்கின்றன!..

   நீங்கள் சொல்லி நான் கேட்காததுண்டோ..!..:)
   மகிழ்வு கலந்த படைப்பு..!!! முயற்சி செய்கிறேன்!
   கவிதை எனில் எல்லாம் கலந்திருக்க வேண்டும் என்பது உண்மையே!

   முயன்று பார்க்கின்றேன்! ஹா ஆ..! ஒரு விடயம்..!!
   அப்படிப் பதிவு நான் இங்கு போடும் போது
   நீங்க இங்க த ம வாக்குப் போட்டிடோணும்..! டீல்..:))

   மிக்க நன்றி அதிரா!..:)

   Delete
  2. ஆவ்வ்வ்வ் தமிழ் மணத்தில் இணைந்தாச்சோ? வாழ்த்துக்கள்.. கலக்கிடலாம்:).

   நான் எங்கும் வோட்டுப் போட்டிட்டேன்ன்ன்ன் எனக் கூவுவது குறைவு ஆனா போகும் இடங்களில், தமிழ் மண வோட் இருந்தால் போட்டு விட்டுத்தான் வருவேன்.

   Delete
 20. அன்புத் தோழியே அற்புதம் அற்புதம் !

  வண்ணச் சிறகை நீவிரித்து
  விண்ணில் பறந்தாய் வெண்ணிலவே
  கண்ணில் கண்டகாட்சி யெல்லாம்
  எண்ணத் தந்தாய் கவியினிலே

  பண்ணும் பாட்டும் சேர்ந்திடவே
  எண்ணம் எல்லாம் இனித்திடுமே
  பொன்போல் பூமியும் மின்னியதே
  பூவாய் இன்று வாடிடுதே

  இன்பம் சூழும் நேரமதில்
  ஈழம் சென்றாய் இளையவளே
  வன்மம் கொண்ட வாழ்வதனை
  வருந்தி வடித்தாய் வல்லவளே

  துயரச் செய்தி கேட்டேனே
  துடித்துக் கொண்டே துவண்டேனே
  புயலாய் பாய்ந்தே சென்றங்கே
  பொருதும் எண்ணம் தோன்றியதே.

  ஆஹா அருமை தோழி அதிசிறந்த கவிதை அருமையான கற்பனை மெய்மறந்து போனேன்மா really wow தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. அன்பு இனியா!

   எங்களின் ஊரில் எதிரிகை ஓங்குவதோ?
   பொங்கும் உணர்வைப் புரிந்தீரே! - மங்காப்
   புகழ்பெறச் செய்வோம்! புலர்ந்திடும் ஈழம்!
   இகம்மகிழ்ந் தேற்றும் இனித்து!

   அன்பான வரவுடன் அருமையான கவிதையால்
   அகம்மகிழச் செய்தீர்கள்! மிகச் சிறப்பு!
   எங்கள் கனவுகள் நனவாகும் நாள் தூரமில்லை!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 21. விண்ணில் பறந்த வேகத்தில்-நெஞ்சில்
  விளைந்த சொற்கள் சோகத்தில்
  கண்ணில் நீரும் கசிந்திடவே-தந்த
  கவிதை நெஞ்சை நசித்திடவே
  எண்ணில் துயரம் கொண்டேனே-தீரா
  இளமதி வேதனைக் கண்டேனே
  மண்ணில் ஒருநாள் ஈழம்தான்-தனித்து
  மலரும் வளமை சூழும்தான்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மண்ணிற் கண்ட அவலங்கள்
     மாயச் செய்தால் மகிழ்வோமே!
   கண்கள் பெருக்கும் கண்ணீரும்
     காயக் கவலை பறந்திடுமே!
   எண்ணில் இதனை எல்லோரும்
     இன்றே ஈழம் மலராதோ?
   பண்ணாற் சேர்ந்தீர் புலவரையா!
     பாவை இட்டேன் நன்றிகளே!

   அன்பான வரவுடன் உணர்மிகக் கூறிய அருமையான கவியூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 22. வணக்கம்
  சகோதரி
  வண்ணப்பறவையாய் பறந்தோம்
  வாழ்வு நலம்பெற வாழ்ந்தோம்
  எண்ணக் கனவுகள் வளர்த்தோம்
  ஏணிபோல் உயர்ந்து நின்றோம்
  ஏற்றங்கள் வந்ததால் எண்ணங்கள் -எழுந்தது
  உணர்ச்சிகள் வந்தது உத்வேகம் பிறந்தது.
  நிறங்கள் பார்(த்)தார்கள்
  பின்பு தரங்களும் பிரித்தார்கள்
  சிதைந்தது உடல்கள் மாண்டது பிஞ்சுகள்
  கவிதையில் ஏக்க உணர்வு புரிகிறது..இரசனை மிக்க வரிகள் விடிவுகாலம் பிறக்கும் அதுவரை காத்திருப்போம்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ரூபன்!

   ஏற்றங்கள் வேண்டியே ஏங்கிடும் நெஞ்சங்கள்!
   மாற்றமொன்றே காணல் மகிழ்வு!

   உணர்வோடு தந்த கவிவரிகள் அருமை!
   வரவிற்கும் அன்பு நன்றி சகோ!

   Delete
 23. வண்ணப் பறவை நீயாகி வடித்த விருத்தம் அழகு சகோ

  படித்தேன் ரசித்தேன் அருமை அருமை

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. எண்ண இனித்திடும் எம்தமிழின் பேரழகு!
   பண்ணிடப் பாசிறக்கும் பார்!

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_