Pages

Dec 24, 2014

வண்ணமிகு வதனமடி!..


அறுசீர் விருத்தம்: காய் காய் காய் காய் மா தேமா 

வண்ணமிகு வதனமடி வான்வெளியின் வெள்ளியடி
வாழ்வின் சீரே!
என்னைநீயும் அழைக்கையிலே ஏழிசையாய்க் கேட்குதடி
என்றன் சேயே!
கண்ணிமையைச் தான்சிமிட்டிக் காட்டுகின்ற வித்தைகளைக்
காணும் போது
பெண்ணிவளின் பிறப்பினிலே பெற்றவரம் நீ!.என்றே
பெருமை கொண்டேன்!


கொச்சைமொழி பேசுகிறாய்! கோலவிழி காட்டுகிறாய்!
குளிர்ந்த தேனே!
இச்சையெலாம் தீரவுனை என்றனுக்கே இங்களித்தான்
இறைவன் தானே!
மிச்சமுள என்வாழ்வு மேலோங்கும் உன்னன்பால்!
மீட்டும் யாழே!
உச்சமெனும் வரமானாய்! ஒண்டமிழின் சுவையானாய்!
உயிரே! வாழ்வே!


அம்மாஎன்று அழைத்தவுடன் அங்கமெலாம் உருகுதடி!
கன்னம் தன்னில்
உம்மாஒன்று அளித்தவுடன் உச்சிவரை ஏறுதடி
உவகை வெள்ளம்!
சும்மாஉன் முகங்காணச் சுரக்குதடி கற்பனைகள்!
சுகந்த பூக்கள்
செம்மாந்து வாழ்த்துதடி சித்திரமே உன்னழகை!
செழித்து வாழ்க!

தாயென்னும் நற்பேற்றைத் தந்தவளே! தண்ணிலவே!
தந்த சோற்றை
வாயுண்ணும் காட்சியினை வளர்தமிழில் வடித்திடவே
வார்த்தை இல்லை!
காயொன்றை நீஎடுத்துக் கடிக்கின்றாய்! காய்கனிந்து
கன்னல் நல்கும்!
சேயுன்னை நினைத்தவுடன் சிந்தைக்குள் வீசுதடி
தென்றல் காற்றே!


பாடத்தைப் படிக்கின்றாய்! பைந்தமிழை இசைக்கின்றாய்!
பாங்காய் வீட்டின்
கூடத்தை அமைக்கின்றாய்! கொத்துமலர் இடுகின்றாய்!
கோலம் போட்டு
மாடத்தை அழகாக்கி மாயவனைத் தொழுகின்றாய்!
மணக்கும் கோதை
வேடத்தை நீயேற்று விளைக்கின்ற செயலெல்லாம்
வெற்றி கொள்ளும்!
 ~~~~~~~~~~~~~~

என்றன் மகளே! இனியதமிழ் போல்வாழ்க!
உன்றன் பணிகள் ஒளிர்ந்து!
~~~~~~


 வலைப்பூ உறவுகள் அனைவருக்கும் 
இனிய நத்தார் - புதுவருட வாழ்த்துக்கள்!

படங்கள் நன்றி கூகிள்!

57 comments:

 1. வணக்கம்
  சகோதரி
  அழகு தமிழில் செப்பிய வரிகளில்
  ஆயிரம் வார்த்தைகள் புரையோடி
  ஆயிரம் கருத்தை சொல்லுது...
  பாச உணர்வை அழகு தமிழில் சுவை ததும்ப சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது..
  இரசனை மிக்க வரிகள்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.. சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ரூபன்!

   அன்புடன் வந்தே அளித்திட்ட வாழ்த்தினால்
   என்னுளம் பூக்கும் இனித்து!

   உடனடி வருகையுடன் உங்கள் இனிய ரசனை கண்டு
   உள்ளம் மகிழ்ந்தேன்!

   அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 2. வணக்கம்!

  காலாட்டும்! கையாட்டும்! கண்காட்டும்! கலைகாட்டும்!
       காதல் ஊட்டும்!
  மேலாட்டும் மணிகண்டு விரித்துக்கை விரல்காட்டும்!
       மீனைப் போன்று
  வாலாட்டும் வித்தைகளை வகைவகையாய்த் தாம்காட்டும்!
       வடிவாய்த் துாக்கித்
  தாலாட்டும் வண்ணத்தில் தமிழ்மதியார் கவிதந்தார்!
       தழைத்து வாழ்க!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தானூட்டும் தமிழறிவு தழைத்தோங்க வேண்டுமென்றே
      தன்னை ஈந்து!
   தேனூட்டும் சிட்டெனவே தெரிந்தெமக்குக் கற்பிக்கும்
      சிறப்பும் என்னே!
   நானூட்டும் இக்கவியால் நலஞ்சூழப் பெருகுகின்ற
      நன்மை எல்லாம்
   வானூட்டும் மாமழைபோல் வழங்கிடுவேன் உங்களுக்கே!
      வணங்கி நின்றேன்!

   ஐயா!...
      தங்களிடம் கற்றுக்கொள்ளும் வகையில் எனக்கிருக்கும்
   மிகக் குறைந்த அறிவைக் கொண்டு எழுதும் பாக்களுக்குத் தாங்கள் தரும் ஊக்கம் கண்டு கண்கள் மல்கக் கரங்கள் கூப்பி வணங்குகின்றேன்!

   தங்களின் அன்பிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 3. தாய்மையின் இதமும் தமிழின் இனிமையும் போட்டி போட்டு ரசிக்கவைக்கும் அழகு. தாய்மனம் நிறைத்த பூரிப்பு இங்கே கவிதையாய் பீறிட... சுவைத்து ரசித்து வாழ்த்துகிறேன் நானும். அன்பான வாழ்த்துகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதமஞ்சரி!

   தாய்மகள் பாசம் தரக்கண்டேன் அங்கேநான்!
   பாய்ந்ததே என்னுள் பரந்து!

   தாங்கள் அங்கு தந்ததைவிடவா இது..!..:)
   அன்போடு வந்து அழகாய் ரசித்து வாழ்த்தினீர்கள்!
   உளம் நிறைந்தது எனக்கும்!

   உளம் நிறைந்த நன்றி கீதமஞ்சரி!

   Delete
 4. என்னவென்று சொல்வது...? ரசித்தேன் பலமுறை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சகோதரரே!

   உங்கள் அன்பு வரவும் ரசனையுடன் கூடிய
   வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 5. அருமை சகோதரியாரே
  அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பிற்கும் இனிய கருத்திற்கும்
   என்றும் என் நன்றி உங்களுக்கும் ஐயா!

   Delete
 6. //பாடத்தைப் படிக்கின்றாய்! பைந்தமிழை இசைக்கின்றாய்!
  பாங்காய் வீட்டின்
  கூடத்தை அமைக்கின்றாய்! கொத்துமலர் இடுகின்றாய்!
  கோலம் போட்டு
  மாடத்தை அழகாக்கி மாயவனைத் தொழுகின்றாய்!
  மணக்கும் கோதை
  வேடத்தை நீயேற்று விளைக்கின்ற செயலெல்லாம்
  வெற்றி கொள்ளும்!//
  பொதுப்புத்தியில் உறைந்த பெண்களுக்கான கருத்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதர் மது!

   ஒரு புதிய சொல் அறிந்தேன் “பொதுப்புத்தி”..:)

   Delete
 7. குட்டிம்மவிற்கு ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பு வாழ்த்து
   என் அன்பு மகளாகும் அத்தனை பேருக்கும் சேரும்!..:)

   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 8. அம்மா...உம்மா...சும்மா..
  அருமையா எழுதியிருக்கீங்க. வாசிக்கவும் சுவராசியமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ விச்சு!..:)

   ஒரு எதுகை மோனைக்காய் எழுதியது
   உங்களிடம் வந்து ஒட்டிக்கொண்டதோ..:)

   இனிய ரசனைக்கு இதயம் நிறைந்த நன்றி சகோ!

   Delete
 9. மார்கழிப் பனிபோல் மனதை வருடுகின்றது - கவிதை!..
  இனிமை!.. அருமை!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ”மார்கழிப் பனிபோல்”.. அடடடடா..... என்னவொரு
   இனிய சொல்லாடல்!!
   எனக்கும் உங்கள் வரவும் இனிய கருத்தும்
   அத்தனை குளிர்சியாக இருக்கின்றதையா!..

   அன்போடு என் நன்றி உங்களுக்கும்!

   Delete
 10. அம்மாஎன்று அழைத்தவுடன் அங்கமெலாம் உருகுதடி!............ஆகா ...அருமை.......வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி அனுராதா!

   தங்கள் வரவும் வாழ்த்தும் தருகிறது மகிழ்வெனக்கு!
   மிக்க நன்றி சகோதரி!

   Delete
 11. அன்னை ஈந்த தமிழமுதம்!
  அதுவே இனிக்கும் பாவமுதம்!
  முன்னை செய்த தவமிதுவோ!
  முத்தாய்ப் பெற்ற வரமதுவோ!
  எண்ண இனிக்கும் இப்பிறப்பும்
  எழுத இனிக்கும் இப்பாட்டும்!
  உன்னைப் போற்றி வணங்கிடுவேன்!
  உயிராய் எண்ணி உவந்திடுவேன்!

  மெய்சிலிர்த்தேன். அம்மாவென அழைத்து அழதுவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சசிகலா!

   எண்ணம் இனிக்கவே என்றும் உடனிருக்கும்
   வண்ணத் தமிழாள் வரமிதுவே! - கண்ணெனக்
   காக்கின்ற எம்ஆசான் காட்டுங் கருணையே
   பூக்கிறது பா!.பார் பொலிந்து!

   உங்கள் கண்ணீர் என்னையும் கலங்க வைத்துவிட்டது!

   அன்னைத் தமிழாளின் மக்கள்தானே நாமெல்லோரும்!..
   அவளிருக்கையில் ஏது குறை?..

   அழகிய கவிக்கருத்திற்கும் அன்பிற்கும்
   மிக்க நன்றி சகோதரி!

   Delete
 12. இச்சையெலாம் தீரவுனை என்றனுக்கே இங்களித்தான்
  இறைவன் தானே!
  மிச்சமுள என்வாழ்வு மேலோங்கும் உன்னன்பால்!
  மீட்டும் யாழே!
  உச்சமெனும் வரமானாய்! ஒண்டமிழின் சுவையானாய்!
  உயிரே! வாழ்வே!//

  வாழ்த்து கவிதை அருமை. தாயின் அன்பை அழகாய் சொல்லும் கவிதை. தாயும், சேயும் வாழ்க வளமுடன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   தங்களின் அன்பினால் தமிழ்த்தாயும் அவள் சேய்களும்
   நலமாக இருப்பார்கள்! வாழ்த்திற்கும் மிக்க நன்றி அக்கா!

   Delete
 13. அழகான விருத்தம் அருமையா இருக்கு

  வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சீராளன்!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 14. மாடத்தை அழகாக்கி மாயவனைத் தொழுகின்றாய்!
  மணக்கும் கோதை
  வேடத்தை நீயேற்று விளைக்கின்ற செயலெல்லாம்
  வெற்றி கொள்ளும்!...
  Happy chritmas and new year wishes..
  Vetha.Lanagthilakam.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்களின் இனிய வாழ்த்திற்கு நன்றியுடன்
   உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!

   Delete
 15. ஆஹா அருமை... புதுவருடத்தை வரவேற்க மிக மகிழ்வோடு இனிமையான ஒரு கவி வடிச்சிருக்கிறீங்க இளமதி... வாழ்த்துக்கள்.

  இனி வரும் காலங்களில் இப்படியே தொடர்ந்து மகிழ்வுறக் கவி வடித்துப் பகிர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா!...

   உங்களின் அன்புக் கட்டளையை மீறிடாமல் சொன்ன சொல்லைக் காக்க இங்கு இந்த மகிழ்வான
   கவிதை தந்துவிட்டேன்!..:)

   வருங்காலங்களில் தனியே மகிழ்வென்றில்லாமல் கலந்து தருகின்றேன்! .. தனியே மகிழ்வும் ரசிக்க முடியாததாகிவிடும்!..:)

   அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி அதிரா!

   Delete
 16. ஏன் தோழி பொண்ணுன இதெல்லாம் பண்ணினா தான் அழகா??? அதைவிடுங்க எனக்கு பிடித்தவரி
  அம்மாஎன்று அழைத்தவுடன் அங்கமெலாம் உருகுதடி!
  கன்னம் தன்னில்
  உம்மாஒன்று அளித்தவுடன் உச்சிவரை ஏறுதடி
  உவகை வெள்ளம்!
  எதை ஒவ்வொரு அம்மாவும் feel பண்ணமுடியும்:) அவ்ளோ அழகு:) பாரதி சொன்ன மாதிரி கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொல்லுதடி......இல்லையா:) பாரதியை நினைவுபடுத்தும் அழகிய தாலாட்டு:))

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி!

   அம்மாவுக்குத் தன் பொண்ணுங்க இப்படிச் செய்தாற்தான் பிடிக்கும் என்றில்லை..
   நல்லதெனச் செய்வது எல்லாமே பிடிக்கும்தானே!...:)

   உங்கள் அன்பான கருத்திற்கும் இனிய ரசனைக்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 17. அன்புள்ள சகோதரி,

  வண்ணமிகு வதனத்தால் வார்த்தளித்த பூங்குயிலின்
    வசந்தப் பாட்டு
  எண்ணமிகு பெண்ணினத்தின் ஏற்றமிகு பெருமைகளை
    எழுச்சி யாக
  கன்னல்தேன் தமிழாலே கன்னிக்குச் சொல்லிட்டாய்
    கனிவாய் நீயே!
  கண்ணுக்குள் பிள்ளையையே காத்திட்ட இளையநிலா
    காட்டி னாயே!!!
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கன்னற்றேன் சுவைகூட்டிக் களிப்போடு கவியாலே
     கருத்தும் இட்டீர்!
   மின்னுகின்ற தாரகையால் மிளிருமொளி வலைபரவ
     வியந்தேன் இன்று!
   என்றுமென்றன் வளர்ச்சியிலே ஏற்றமுறத் தருகின்றீர்
     இனிய ஊக்கம்!
   நன்றியிதை மறவாது நானுமக்குச் சொல்வேனே
     நாளும் எண்ணி!

   உங்களின் அன்பான வரவும் அழகிய இனிய விருத்தப் பா
   கருத்தினையுங் கண்டு அகம்மிக மகிழ்கின்றேன்!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 18. அம்மாஎன்று அழைத்தவுடன் அங்கமெலாம் உருகுதடி!
  கன்னம் தன்னில்
  உம்மாஒன்று அளித்தவுடன் உச்சிவரை ஏறுதடி
  உவகை வெள்ளம்!
  இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் கவிஞரே.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் ரசனையும் எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது!

   அன்பிற்கு மிக்க நன்றி சகோ!

   Delete
 19. அருமையான கவிதைகள் சகோ!!!!

  தேனூறும் வாய்மழலை தாய்மடியில் கிடக்கின்ற
       தங்கக் கட்டி!,
  பாநூறு படைத்தவரும் பார்த்தறியா படைத்தறியா
       கவிதைச் சிற்பம்!
  கானாறு! கற்பகங்கள் கவினுறவே கண்வெல்லக்
       காணுங் காட்சி!
  வானேறும் இளமதியார் வடித்திட்டார் வாய்பிளந்தேன்!
       வார்த்தை யற்றேன்!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சீருடைய செந்தமிழிற் தேனூற்றிச் செய்தளித்தீர்
       சிறப்பாய் ஓர்பா!
   கூருடைய சொல்லாற்றல்! குளிருடைய சீரசைவு!
       கொள்ளை கொள்ளும்!
   தாருடைய நல்லடிகள்! தாழையெனக் கற்பனைகள்!
       தழைத்தே ஓங்கும்!
   பேருடைய பெருங்கவியே! பேச்சிழந்தேன் விழியொழுகப்
       பிதற்று கின்றேன்!

   உங்கள் அன்பான வரவும் இனிய விருத்தப்பாக் கவிக்கருத்துங் கண்டு நான்தான் வாய்பிளந்து நிற்கின்றேன்!..:)

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி!!

  கவிதை மிக அருமை!!

  வாழ்க வளமுடன்!!
  உமா பிரியா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   நலமாக இருக்கின்றீர்களா?.. தங்களின் வரவுகண்டு
   உள்ளம் மகிழ்ந்தேன்!..:)
   அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களும் நலமாக உள்ளாரா?
   மிகவும் விசாரித்தேன் எனக் கூறுங்கள்!!!

   அதிர்ச்சியுடன் மகிழ்வு தரும் உங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு நான் பெருமை கொள்கின்றேன்!

   மிக்க நன்றி சகோதரி!

   Delete
  2. நலமாக இருக்கிறேன் இளமதி!!
   சில ஆண்டுகளாக வலைப்பூக்களுக்கு வராமல் இருந்தேன். இப்பொழுது தொடர்த்து வரவேண்டும் என்றுள்ளேன். இறைசித்தம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

   வலைப்பூக்களில் வருவதை சகோதரர் ஹைஷ் நிறுத்தியதில் இருந்து அவருடன் தொடர்பும் இல்லை. இறையருளால் நிச்சயம் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன்.

   வாழ்க வளமுடன்!!
   உமா பிரியா.

   Delete
 21. அழகான கவி ஒவ்வொரு பாவும் தனித்துவம் .பாடத்தைப்படிக்கின்றாய் பிடித்த வரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் நேசன்!

   உங்களின் இனிய வரவுடன் அருமையான ரசனை கண்டு
   உள்ளம் நிறைந்தது!..

   மிக்க நன்றி சகோ!

   Delete
 22. சிறப்பான வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   தங்களின் அன்பும் என்னை ஊக்குவிக்கின்றது சகோதரரே!
   மிக்க நன்றி!

   Delete
 23. ரசிக்க வைத்த கவிதை அக்கா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் குமார்!

   உங்கள் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 24. வாழ்த்த வகையறியேன் வார்த்தைகளும் கோத்தறியேன்
  சூழ்நிலைகள் ஏதும்இங் கில்லைசுட ரும்படியாய்
  சொற்றொடர் ஈட்டவே சுட்டாலும் தப்பன்றோ
  கற்றாலும் அருளின்றிக் கிட்டாது !

  மழலைபேச்சு மதிமயங்கும் மல்லிப்பூ வாய்சிரிப்பு
  குழலிசைக் கீடாமோ கொன்றுவிடும் உயிரை
  கெஞ்சிடும்அ வள்கண்கள் விஞ்சும் அனைத்தையுமே
  நெஞ்சில் பதித்தாய் வடித்து!

  அறுசீர் விருத்தம் !
  அருமை அருமை ! என் அன்புத் தோழியே ! என் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்மா .....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் என்னினிய தோழியே!...

   கன்னித் தமிழாளைக் காலமும் கற்றிடவே
   மின்னிவரும் பாக்கள் மிளிருமே! - என்றும்
   இனிமை! குதூகலம்! எம்மோடு காண்பீர்!
   தனிமையும் நீங்குமே தான்!

   உங்கள் அன்பும் வாழ்த்தும் என் உள்ளம் நிறைத்தது!..
   மிக்க மகிழ்ச்சி!.. வாழ்த்திற்கு நன்றியுடன்
   உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 25. இந்த வகை அறுசீர் விருத்தத்தை அதிகமாக வாசித்ததில்லை. அருமையான கவிதையை ரசித்தேன். நானும் ஆற்றேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அறுசீர் விருத்தம் பலவகையுண்டு என என் ஆசான் கூற
   நானும் அறிந்துகொண்டேன்!..

   தங்களின் அன்பு வருகைக்கும் இனிய ரசனைக்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 26. அருமை அருமை வேறு என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 27. அன்புச்சகோதரியே இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
  கம்பன்வீட்டுக்கட்டுத்துரையே கவிபாடும் பொழுது
  ஐயாவின் வ்ழித்தோன்றல் பாடுவது ஆச்சர்யமில்லை
  ஐயாபாரதி தாசன்,ஊமைக்கனவுகள்,சீராளன் இவர்கள் தளம்
  கண்டாலே ஓட்டம் தான் இப்போ நீங்களும் என்னை
  ஓடவைக்கிறீர்கள், என்தளம் வந்து கருத்திட்டமைக்கு
  நன்றி சகோதரி.

  படித்து முடிக்குமுன்னே
  துடித்துப் போனேனம்மா
  கண்கள் நிறைந்ததம்மா
  கண்ணீரும் வழிந்ததம்மா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சகோதரியே!

   எங்கனின் ஆசான் இனிய கவிஞரொடு
   தங்கத் தமிழாளும் தந்தவரம்! - இங்குற்ற
   உங்கள் வரவினால் உற்றேன் மனமகிழ்வு!
   பொங்குதே நன்றிகள் பூத்து!

   உங்களின் முதல் வரவோடு மனம் நிறைந்த வாழ்த்துக் கண்டு
   மிக்க மகிழ்வுறுகின்றேன்!..
   இனியதமிழ் ஈர்க்குமே என்றும் அதுதான் நானும் ஓடோடிச் சென்று பார்ப்பது வழக்கம்!
   பயந்து ஓடவேண்டியதொன்றுமில்லை..:)

   இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றியுடன் உங்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி!

   Delete
 28. இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
  http://blogintamil.blogspot.com/2015/02/1.html

  ReplyDelete
 29. நல்வணக்கம்!
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துகளுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  http://youtu.be/KBsMu1m2xaE

  (எனது இன்றைய பதிவு
  ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
  படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_