Pages

Dec 29, 2014

புதியதோர் உலகம் செய்வோம்!..

எங்கள் ஆசான் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயாவின்
தலைமையில் 27.12.2014 சனிக்கிழமை நடைபெற்ற
திருஅருட்பா அரங்க நிகழ்வுக் கவியரங்கத் தலைப்பிற்கு
எழுதிய விருத்தப் பாமாலை!
---0---
எனது பாமாலையை அரங்கில் வாசித்துப்
பெருமை சேர்த்த கவிஞரும் என் அன்புத் தோழியுமாகி
திருமதி. அருணா செல்வம் அவர்களுக்கு
என் உளமார்ந்த நன்றி!
---0---
எண்சீர் விருத்தம் : காய் காய் மா தேமா

புதியதொரு உலகத்தைச் செய்ய வேண்டிப்
புறப்படுவீர் தோழர்களே கைகள் கோர்த்து!
விதியெனவே வாய்மூடிக் காலம் போக்கும்
வேடிக்கை நிலைதொடர வேண்டாம் வாரீர்!
கதியென்று கிடப்பதனாற் கடவுள் வந்து
கண்ணீரை மாற்றுவரோ? கடமை யோங்க 
மதியினையே நன்காய்ந்து இயங்க வேண்டும்!
மடமையெனும் முட்செடியை எரிக்க வேண்டும்!

மூச்சடக்கிக் கடலுக்குள் மூழ்கித் தானே
முத்தெடுப்பார்! தொடர்முயற்சி வெற்றி நல்கும்!
பாச்சலின்றிக் கிடப்பதுவோ? பதுங்கி நின்று
பாழ்பட்டுப் போவதுவோ பாரில் வீணே?
பேச்சினொடு வளர்கிறதே சாதிச் சண்டை!
பிடுங்கியதை வேரோடு பொசுக்க வேண்டும்!
வீச்சென்று செல்கின்ற அம்பைப் போன்று
விரைந்துலகில் செயலாற்றி வெல்ல வேண்டும்!

குணமென்னும் ஒழுக்கத்தை எந்த நாளும்
குன்றாமல் காக்கின்ற கொள்கை ஏற்போம்!
வனவிலங்காய்ப் பெண்ணினத்தை வேட்டை ஆடும்
வல்லரக்கர் வாலினையே நறுக்கி வைப்போம்!
மனையறத்தை மாண்புடனே மக்கள் ஏற்று
மகிழ்வுறவே சட்டங்கள் இயற்றிக் காப்போம்!
இனங்களிடை ஒற்றுமையைப் பேண வேண்டும்!
எல்லோரும் இன்பமுடன் வாழ்தல் வேண்டும்!

உழைப்பாலே இவ்வுலகை உயர்த்த வேண்டும்!
உயிரனைத்தும் சமமென்னும் சட்டம் வேண்டும்!
பிழைப்பிற்காய் நேர்மைதனை விற்குங் கூட்டம்
பெருமைகளின் சீருணர்ந்து திருந்த வேண்டும்!
விளைச்சலுற விவசாயப் புரட்சி வேண்டும்!
விண்வெளியை மாசின்றிக் காக்க வேண்டும்!
மழைபொழிந்து மண்குளிருந்து மகி்ழ்ச்சி பொங்க
மரங்களையும் வனங்களையும் காக்க வேண்டும்

இன்னுலகில் ஏழ்மைதனை ஒழிக்க வேண்டும்!
இருப்போர்கள் இல்லார்க்குக் கொடுக்க வேண்டும்!
பொன்னெனவே பொலிகின்ற புதுமை போற்றிப்
பூக்காடாய்ப் புத்துலகம் மணக்க வேண்டும்!
கன்னலென இனிக்கின்ற தமிழை, வீசும்
காற்றாகக் கமழ்ந்திடவே பரப்ப வேண்டும்!
இன்னலெனும் சொல்லுக்கே இடமே இன்றி
எத்திசையும் இன்பவொளி ஒளிர வேண்டும்!

வல்லரசு கொல்லரசு போடும் ஆட்டம்
வாலிழந்த பட்டமென வீழ்தல் வேண்டும்!
கல்லரசு கழியரசு இழிவை மாய்த்துக்
கலையரசு கனியரசு கமழ வேண்டும்
நல்லரசு  நனியரசு என்றே வாழ்த்த
நற்குறளை ஏற்றுலகம் சுழல வேண்டும்!!
பல்லரசும் ஒன்றாகச் சேர வேண்டும்!
பாருலகே ஓர்குடியாய் வாழ வேண்டும்!
----~~~~~----


புத்தாண்டே பொலிந்திடுக!


இனிமைக் காலம் எதிர்கொள்ள
இன்பத் தமிழால் இணைந்திடுக!
கனிவே கொண்ட நன்மனத்தார்
கலந்து நாளும் நலம்பெறுக!
தனித்தே இல்லை தமிழரெனத்
தரணி காக்கத் திரண்டிடுக!
மனிதம் போற்றி மாண்புறவே
மலரும் ஆண்டே பொலிந்திடுக!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள்!!!

படங்கள் உதவி கூகிள்!

77 comments:

 1. அருமையான எண்சீர் விருத்தங்கள் கவிஞரே..!
  தங்களுக்கு வாழ்த்துகள்!
  தங்கள் ஆசான் நிச்சயம் தங்களை நினைந்து பெருமைப்படுவார்!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!.

   தங்களின் மின்னல் வேக வரவும் அன்பு வாழ்த்தும் கண்டு
   மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்!.
   ஆசான் ஐயாவின் வழிகாட்டலாலேதான் இவ்வளவிற்கேனும் என்னாலும் எழுத முடிகிறது!
   அத்தனை பெருமையும் ஐயாவுக்கே!..

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   தங்களின் கவிப்பின்னூட்டத்திற்காய் காத்திருக்கின்றேன்!..:)

   Delete
 2. நல்லரசு நனியரசு என்றே வாழ்த்த
  நற்குறளை ஏற்றுலகம் சுழல வேண்டும்..
  பல்லரசும் ஒன்றாகச் சேர வேண்டும்
  பாருலகே ஓர்குடியாய் வாழ வேண்டும்!..

  - அந்த நாளும் வந்திடாதோ!.. - என மனம் ஏங்குகின்றது..

  நல்லதொரு பாமாலையை வழங்கிய சகோதரிக்கு
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எல்லோரும் அந்த ஒரு நாள் என்றெனவே காத்திருக்கின்றோம்!..

   அன்போடு வந்திங்கு அருமையாகக் கருத்துக் கூறி
   வாழ்த்தியமைக்கு என் உளமார்ந்த நன்றியுடன்
   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 3. வணக்கம் !

  அருமையான பா மாலை !சொல்ல வந்த நற் கருத்தினைச் சொல்லி
  முடித்த விதம் கண்டு வியக்கின்றேன் தோழி ! உங்களுக்கும் என்
  மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .மென்மேலும் தமிழ் போல்
  தரணியெங்கும் புகழ் பெறுக .தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இனிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .வாழ்க வளமுடன் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத் தோழியே!..

   இனிமைக்கு ஓர் உதாரணம் எங்கள் அம்பாளடியாளன்றோ!..

   இனிக்கின்றது உங்கள் வரவும் இனிய வாழ்த்தும்!
   அன்பு நன்றியுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
   என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 4. இனங்களிடையே ஒற்றுமை பேணுவோம்
  இனிதாய் வாழ்வோம்
  அருமை சகோதரியாரே
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் வரவும் வாழ்த்துங்கண்டு
   உள்ளம் நிறைகிறது!..

   உளமார்ந்த நன்றியுடன் தங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 5. இன்னுலகில் ஏழ்மைதனை ஒழிக்க வேண்டும் !
  இருப்போர்கள் இல்லார்க்குக் கொடுக்க வேண்டும்
  அருமை, அருமை சகோதரி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உண்மைதானே!.. இல்லாமையை அகற்ற
   ஒரே வழி அதுதானே!..:)

   தங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களும் சகோதரரே!

   Delete
 6. எண்ணற்ற வேற்றுமைகள் ஏமாற்றி வாழும்
  எத்தரிடை பட்டுலகம் ஏங்குகின்ற போதில்
  புண்ணுற்ற மானுடத்தில் புன்மையினைச் சீறிப்
  புறப்பட்ட போர்வாளாய்ப் பொங்குதமிழ்ப் பாடல்
  பெண்ணுற்ற பேறினைப்போல் பாரதியின் தாசர்
  புலமைமகள் படைத்தளித்த புதுப்பரணி காண
  கண்ணுற்ற தென்பேறாம்! இளமதியார் என்னும்
  கவிக்கடலின் அலைபடுநான் காணாமல் போனேன்!!!

  அருமை சகோ!

  இது காய் காய் காய் தேமா

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..

   சொல்லும் பாட்டில் சோர்வு நீங்கச்
     சூழும் சுகம்தானே!
   வெல்லுங் காலம் விரைந்து காண
     வீழும் பகைதானே!
   மெல்லப் பாடி மிகவே புகழ்ந்தீர்
     மேவும் நட்பினாலே!
   கல்லும் கரையும் கவிதை கண்டேன்
     காப்பேன் நன்றியோடே!

   தங்களின் மீள்வருகையும் இனிய கவிப்பின்னூட்டமும்
   கண்டு மிக்க மகிழ்வடைகின்றேன்!

   அன்பு நன்றியுடன் இனிய புத்தாண்டு
   நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் ஐயா!

   Delete
 7. சிறப்பான விருத்தம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியுடன்
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 8. விருத்தப் பொருத்தத்திற்கு
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்களின் அன்பு வாழ்த்தினுக்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 9. வணக்கம்
  சகோதரி
  சொல்லிய பா மலையில் எத்தனை விடயத்தை உள்ளடக்கியுள்ளீர்கள் எல்லாம் நன்றாக உள்ளது சொல்லி முடித்த விதம் சிறப்பு...
  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  தங்களுக்கான பதக்கம் சான்றிதழ் என்பன அனுப்பபட்டுள்ளது..மிக விரைவில் வந்தடையும் என்பதை மகிழ்சியாக அறியத் தருகிறேன்.. வந்த பின்பு அறியத்தரவும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்போடு வந்து அருமையான கருத்துப் பகிர்ந்தீர்கள்!
   வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றியுடன்
   உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

   பரிசு கையிற் கிடைத்ததும் கட்டாயம் உங்களுக்கு
   அறியத் தருவேன்! மிக்க மகிழ்ச்சி!

   Delete
 10. நல்ல கவிதை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ குமார்!

   வாழ்த்திற்கு அன்புடன் என் நன்றி!

   Delete
 11. அருமையான கவிதை.
  புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் இனிய வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றியுடன்
   உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

   Delete
 12. சாதிச்சண்டை, மடமை, வல்லரக்கர் வால் அறுத்தல் , விவசாயப்புரட்சி, நல்லரசு தரவேண்டும் என வேண்டுதல்.. அப்பப்பா.. எவ்வளவு அழகான சிந்தனை. உங்களுக்கு தமிழ் அன்னை தனியாக சிறப்புற கவனித்துள்ளார் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தமிழ் அன்னையின் செல்லப் பிள்ளைகள் நாமெல்லோருமே!..:)
   அவளுக்கு எம்மில் வேறுபாடில்லாத அன்பு என்றுமே!
   கவனிப்புடன் அவ்வப்போது கண்டிக்கவும் செய்வாள்!.
   என்னைக் கண்டித்திருக்கின்றாளே..!..:)

   Delete
 13. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதுவருடம் தங்களுக்கு மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் அமைய பிரார்த்திக்குறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றியுடன்
   என் இனிய வாழ்த்து உங்களுக்கும் சகோ!

   Delete

 14. வணக்கம்!

  எட்டுத் திசைகளிலும் இன்பத் தமிழோசை
  முட்டும் உலகை மொழிந்துள்ளீர்! - கொட்டும்
  மழையெனப் பாக்கள் வடித்துள்ளீர்! முற்றல்
  கழையென உண்டேன் களித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பெற்றவை அத்தனையும் பேறேதான்! உங்களால்
   உற்றோமிங் கேநாம் உயர்வுமே! - பற்றுடன்
   போற்றிப் பயின்றிடப் பூக்குதே பா!.மலர்!
   ஏற்றுவோம் பாடல் இசைத்து!

   அத்தனை மகிழ்வும் பெருமையும் உங்களையே சேரும்!

   தங்களின் அன்பான வரவிற்கும்
   இனிய வெண்பா வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

   Delete
 15. ஆகா...! அருமையான கவிதை...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் இனிய வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றியுடன்
   உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

   Delete
 16. விடையேதும் தெரியாமல் வாழும் எம்மை
  வழிநடத்தி செல்லுகின்ற விவேகம் வெல்லும்
  மடைதிறந்த வெள்ளமாய் பாயும் ஆற்றல்
  மகுடமென உன்தலையில் வந்தே அமரும்
  படைதிரட்டி வருமாறு அழைத்த போதும்
  பாதிவெற்றி கிட்டியது போன்ற மகிழ்வு
  குடைஒன்றின் கீழ்வாழ நாமும் நல்ல
  கொற்றவனும் எங்களுக்கு வந்தே சேரும்

  நற்கருத்து அத்தனை யும்நவிலக் கண்டும்நின்
  சொற்றிறனை எண்ணி வியக்கின்றேன் - பற்பலரும்
  போற்றி பணிகின்ற கற்பகத்தாள் கண்ணில்விழ
  பெற்றிடுவாய் அத்தனையும் காண் !  அருமை அருமை தோழி !என்னே சொல்லாடல் மெய்சிலிர்க்க. எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்மா !
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத் தோழியே!

   நற்றமிழ்த் தாயவள் நல்லன்பே உள்ளது!
   உற்றிடுமோ சோகம் உடனிங்கு! - பற்றுடனே
   வந்து படித்தீரே வாழ்த்துக் கவிகளே!
   சொந்தமே வாழ்க சுடர்ந்து!

   அன்பில் அகம் மகிழ்ந்து உறைந்திட்டேன் இனிய இனியாவே!
   கவி வாழ்த்துகளுக்கும் உளமார்ந்த நன்றியுடன் உங்களுக்கும்
   என் இனிய நல் வாழ்த்துக்கள்!

   Delete
 17. புதியதோர் உலகம் செய்வோம் என்று அற்புதமான கருத்துக்களை முன்வைத்து துவங்கும் ஆண்டை வரவேற்ற விதம் வெகு சிறப்புங்க தோழி. அகமகிழ்ந்தேன். தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்பு சசிகலா!

   உங்கள் அன்பும் என் உள்ளம் நிறைத்தது!
   இனிய வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 18. புத்தாண்டு வாழ்த்தாக பொங்கிவந்த இக்கவிதை
  புத்தியில் நட்டதே தெளிவு:)
  விருத்தம் அருமை...கடல் போல் இளமைதியார்,
  கடக்க முயல்கின்றேன் நான்!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புத் தோழி!

   இன்முகமும் என்றும் இனிமையும் தாங்கிய
   நன்மன மைதிலி நட்பு! ..:)

   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 19. ஆஹா ஆஹா அழகாய் இருக்கே !

  என்னென்று சொல்லிடுவேன் இன்பத் தேனாய்
  என்நாவை நனைக்கிறதே பாடும் போதில்
  பொன்னென்ன புகழென்ன பொய்யே எல்லாம்
  புதுமையிது புத்துலகின் பேறே! வானில்
  மின்னுகின்ற விண்மீனாய் சொல்லின் ஆழம்
  மிகுகின்ற இடங்கண்டேன் வியந்து நின்றேன்
  புன்னைவனப் பூங்குயிலாய் ! பாடும் பூவாய்
  புலனினிக்க வைத்திடுவாய் வாழ்த்து கின்றேன் !


  அழகாய் இருக்கு சகோ மாதம்தோறும் கண்டு மகிழ்கின்றேன் நன்றி

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும்
  வாழ்க வளமுடன்  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சீராளன்!

   புதுமையோடு பாடும் புயற்கவி உன்முன்
   இதுவொன்று மேயில்லை இங்கு!

   அன்பான வரவிற்கும் இனிய கவியூட்டத்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 20. அன்புச் சகோதரி,

  புத்தாண்டு பிறக்கின்ற புதிய வேளை
    புண்பட்டு துடிக்காமல் புகழே பெற்று
  வித்தாக விதைத்தினிய விடிவு காண
    விதையெல்லாம் நல்மரமாய் விடியல் கீதம்
  எத்திக்கும் ஒலித்திடவே எடுப்பாய் நல்ல
    எச்சரிக்கை மணியொலிப்பாய்! எதிரி வீழ்ந்து
  தித்திக்கும் ஈழமினி உதயம் என்ற
    தேன்வந்து பாயட்டும் காத்திருப்போம்!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   கொத்தோடு பூத்தூவிக் கொண்டாட காண்பீரே!
   புத்தாண்டு கூட்டும் பொலிந்து!

   எங்கள் கனவுகள் பிறந்திட்ட இந்த ஆண்டிலாவது
   நிறைவேற வேண்டும் ஐயா!

   அன்போடு வந்து அருமையான விருத்தம் பாடி
   ஊக்குவிக்கும் உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

   Delete
 21. தோழிக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 22. இந்தப் புத்தாண்டில் புதியதோர் உலகம் படைப்போம் முயர்சிப்போம் சகோதரி!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றியுடன் உங்களும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

   Delete
 23. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

   Delete
 24. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 25. பாக்களும் படங்களும் அருமை தோழி!

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 26. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 27. மிகவும் நன்றாக உள்ளது!!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  வாழ்க வளமுடன்!!
  உமா பிரியா.

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!

   Delete
 28. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 29. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி!

   அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 30. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மனோ அக்கா!

   Delete
 31. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

   Delete
 32. https://www.youtube.com/watch?v=hqTcky7Vjx8
  you may listen to your song "vannamigu vadhanam adi" here.

  subbu thatha.
  All the Best.
  Happy new year.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   இனிய புதுவருட வாழ்த்துக்கள் உங்களும் ஐயா!

   உங்களின் குரலில் எனது கவிதை “வண்ணமிகு வதனமடி”
   எத்தனை அருமையாக ஒலிக்கிறது!..

   எங்களின் கவிதைகளை தேர்ந்தெடுத்து அழகிய அருமையான
   மெட்டுப் போட்டு மிக மிக இனிமையாகப் பாடி இந்தப்
   பாடலுக்கும்புகழ் சேர்த்தீர்கள்!..
   கேட்டு மெய் மறந்தேன் ஐயா! இன்னும் கொஞ்சம் கவிதையில் திருத்தம் செய்திருக்க மிகச் சிறப்பாக வந்திருக்குமோ?..

   கற்றுக் கொள்பவளின் கவிதைக்கும் வந்த பேறுதான் இது ஐயா!
   உளமார்ந்த நன்றி ஒருகோடி முறை சொல்லினும் போதாது!..

   வாழ்த்தி வணங்குகிறேன்!

   பாடலைப் பதிவுப் பெட்டகத்திற் சேர்த்துவிட்டேன்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 33. அற்புதமான கவிதை
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அனபு வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!

   அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 34. அருமையான பாடல்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   தங்களின் அன்பு கண்டு மனம் மிகவே மகிழ்கின்றேன்!
   எனது பாடலை அரங்கில் வாசித்து எனக்குப் பெருமை
   சேர்த்தீர்கள்! அதற்கு முதற்கண் என் உளமார்ந்த நன்றி தோழி!

   உங்களுக்கும் நன்றியுடன்
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

   Delete
 35. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

  http://blogintamil.blogspot.in/2015/01/hawa-mahal.html

  முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சகோதரி!

   ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த இனிய செய்திகண்டு
   செயலிழந்தேன் சில நிமிடங்கள்!...

   வந்து பார்த்து மகிழ்ந்து, கருத்துப் பதிந்தேன்!

   உங்கள் அன்பிற்கும் என்னையும் ஊக்குவிக்கும் இனிய மனத்திற்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

   Delete
 36. எண்சீர் விருத்தம் கண்டேன்!-நல்
  இன்சுவை உணவே உண்டேன்
  பண்சீர் அமைத்துப் பாட-இதைப்
  படிப்பவர் மனதில் ஆட
  தண்சூழ் அலைகள் மோத-ஒலித்து
  தரணியில் கடலும் ஓத
  மண்சீர் மணக்க வந்தாய்-இள
  மதியென் மகளே தந்தாய்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பண்சீர் எடுத்துநற் பாக்களைப் பாடிடவே
   கண்போல் மொழியுளதே காண்பீரே! - எண்ணம்
   சிறக்க எழுதினீர் தேன்கவிதை! ஐயா!
   மறப்பேனோ உங்களின் மாண்பு!

   தங்களின் அன்பான வரவோடு இனிய கவிவாழ்த்தும் கண்டு
   உள்ளம் மகிழ்ந்தேன்! மிக்க நன்றி ஐயா!

   Delete
 37. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
  தங்கள் பதிவு இல்லம் வந்து திரும்புகிறேன்
  (வருடம் பிறந்து நாட்கள் நாலு ஆகிவிட்டதே )
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வந்து தேடி ஊக்கபடுத்தும் நல்லுள்ளம் கண்டு
   உங்கள் அன்பினில் ஆழ்ந்தேன் ஐயா!..
   மிக்க நன்றி! ஆமாம் இன்றுடன் 1 வாரமாகிறது வருடமும் பிறந்து. பதிவேற்ற வேண்டும் ..
   வழமையான சில தாமதங்கள்!..
   பதிவு ஏற்றம் செய்வேன் விரைவில்!..
   அன்புக்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 38. தாமதமான புது வருட வாழ்த்துக்கள் இளமதி. நற்கருத்துக்களை அழகிய சொற்கள் கொண்டு இனிய பாமாலையாக புனைந்து இருக்கிறீங்க. கவிஞர் ஐயாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். மிக நன்றாக இருக்கு .பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ.. பிரியசகி!

   தாமதம் என்பதெல்லாம் ஒன்றுமில்லையே...!
   அன்போடு வந்து ஊக்கப்படுத்துதலே
   பெரிய பேறென நினைக்கின்றேன்!.. மட்டற்ற மகிழ்ச்சி!

   உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
   மிக்க நன்றி பிரியசகி!

   Delete
 39. இன்னுலகில் ஏழ்மைதனை ஒழிக்க வேண்டும்!
  இருப்போர்கள் இல்லார்க்குக் கொடுக்க வேண்டும்!
  பொன்னெனவே பொலிகின்ற புதுமை போற்றிப்
  பூக்காடாய்ப் புத்துலகம் மணக்க வேண்டும்!
  கன்னலென இனிக்கின்ற தமிழை, வீசும்
  காற்றாகக் கமழ்ந்திடவே பரப்ப வேண்டும்!
  இன்னலெனும் சொல்லுக்கே இடமே இன்றி
  எத்திசையும் இன்பவொளி ஒளிர வேண்டும்!//

  அருமையான கவிதை. ஊருக்கு போய் விட்டதால் இப்போதுதான் படிக்கிறேன்.
  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_