Pages

Aug 1, 2015

தமிழ்போல் வாழ்வோம்!...


கண்ணா! உன்றன் குரல்கேட்கக்
  கன்னி நெஞ்சம் அலைவதுமேன்?
வண்ணான் துவைக்கும் செயலாக
  வனிதை மனத்தைத் துவைப்பதுமேன்?
அண்ணா போன்று மேடையிலே
  அழகாய்ப் பேசும் சொல்லழகா!
புண்ணாய் வாட்டும் இப்பொழுதைப்
  போக்கப் பூந்தேன் மருந்திடுவாய்!ஏனோ என்னை மறந்தனையோ?
  எல்லாத் திசையும் உன்னுருவே!
மானோ? மயிலோ? என்றுரைத்து
  மயங்க வைத்த மொழியெங்கே?
தேனோ? தினையோ? தீங்கனியோ?
  தேவா உன்றன் கவியாக்கம்!
ஊனே உருகி வாடுகிறேன்
  உள்ளம் உவக்க விருந்திடுவாய்!

வீரப் பார்வை பாய்ச்சாதே!
  வேகும் கஞ்சாய்க் காய்ச்சாதே!
ஓரப் பார்வை ஒவ்வொன்றும்
  உயிரைப் பிழிந்து குடிக்குதடா!
ஈரம் இன்றி இருப்பதுவோ?
  இளமை வாட நடப்பதுவோ?
தாரம் ஆக்கி என்வாழ்வு
  தழைக்க இன்பம் பொழிந்திடுவாய்!

அல்லும் பகலும் உன்னெண்ணம்!
  அடுப்பில் கூட உன்தோற்றம்!
பல்லும் துலக்கிக் கண்ணாடி
  பார்க்க அங்கே உன்னுருவம்!
செல்லும் சோலைப் பாதையிலே
  சிரிக்கும் வண்டாய் உனைக்கண்டேன்!
கொல்லும் இரவு காலத்தை
  வெல்லும் உன்றன் கனவுகளே!

முள்ளாய் இருந்த என்வாழ்வை
  முல்லைக் காடாய் நீசெய்தாய்!
வில்லாய்ப் பாயும் கற்பனைகள்!
  வியக்க வைக்கும் ஒப்பனைகள்!
எல்லாப் பிறப்பும் உன்னுடனே
  இணையும் வாழ்வை வேண்டுகிறேன்!
சொல்லால் பொருளால் சுவைகூட்டும்
  தூய தமிழ்போல் நாம்வாழ்வோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~

பட உதவி கூகிள்! நன்றி!

42 comments:

 1. இருவரும் இணைந்து தூய தமிழ்போல் வாழ வாழ்த்துக்கள் !

  ரசித்துப் படித்தேன், அழகிய கவிதை இளமதி !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சித்ரா!..:)

   தங்களின் முதல் வருகையும் இனிய வாழ்த்தும் கண்டு
   அகம் மகிழ்ந்தேன்!
   ரசித்துப் படித்தீர்களா?.. மிக்க மிக்க நன்றி!..:)

   Delete
 2. மீண்டும் தமிழ் இனிமையாய்ப் பொங்குகிறதே தோழி :-)
  அருமை, மனமார்ந்த வாழ்த்துகள்
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி!..

   உங்கள் அன்பு வரவும் வாழ்த்தும் கண்டு
   உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது!..:)

   வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete

 3. வணக்கம்!

  உள்ளம் உருகும் வண்ணத்தில்
    ஒளிரும் காதல் கவிதைக்குள்
  வெள்ளம் போன்று தேன்பாயும்!
    விருத்தம் விருந்தின் சுவைகூட்டும்!
  துள்ளும் இளமை உணர்வேந்தித்
    தூய தமிழின் வளமேந்தி
  அள்ளும் அழகாய் இளமதியார்
    அணிந்த புலமை வாழியவே!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உள்ளம் என்றும் உவகையுறும்
    உங்கள் அன்பு வரவாலே!
   வெள்ளம் போலே விருத்தங்கள்
    விரைந்து எழுத முடிகிறதே!
   துள்ளும் தமிழின் சீரெடுத்துச்
    சொல்வேன் மேலும் கற்றிடவே!
   அள்ளி இன்னும் அறிந்திடவே
    அருள்வீர் கற்கை நெறிகளையே!

   தங்களின் அன்பான வரவுடன் இனிய விருத்தம் தந்து ஊக்குவிக்கும் உங்கள் மனம் கண்டு பூரித்தேன்!

   வாழ்த்துக்கும் வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 4. அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   தங்களின் வருகைக்கும் ரசனைக்கும்
   வாக்கிற்கும் மிக்க நன்றி!

   Delete
 5. ஏக்கங்களுடன் ஆரம்பித்து சிறப்பாக முடித்தீர்கள்... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   சற்று மாறுதலாக இப்படி எழுதினேன்.
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   இனிய ரசனைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

   Delete
 6. "சொல்லால் பொருளால் சுவைகூட்டும்
    தூய தமிழ்போல் நாம்வாழ்வோம்!" என்ற
  அடிகளின் உண்மையை உணர்வோம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 7. படித்தேன்
  ரசித்தேன்
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்புடன் வந்து படித்து ரசித்தமைக்கும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 8. எல்லாப் பிறப்பும் உன்னுடனே
  இணையும் வாழ்வை வேண்டுகிறேன்..
  சொல்லால் பொருளால் சுவைகூட்டும்
  தூய தமிழ்போல் நாம்வாழ்வோம்!..

  அழகு.. இனிமை.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 9. தூய தமிழாய் ஆஹா... என்னவொரு ஆனந்த வரிகள் . வாழ்த்துகள்! வாழ்த்துகள்! தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   ஆஹா...! நீங்களே படித்து வியக்குமளவிற்கு
   என் படைப்பு அமைந்தது என் பாக்கியமே!
   அன்புடன் வந்து படித்து ரசித்தமைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
  2. அன்புத்தோழிக்கு இதென்ன நீங்களே என்றெல்லாம் சொல்வது? நான் தங்களை விட வயதிலும் அறிவிலும் மிகச்சிறியவள் யாப்பிலக்கணத்தில் தவழும் குழந்தையல்லவா? தங்களைப்போன்றவர்களைப் பார்த்தே கற்க ஆவல்கொண்டேன். இன்னும் கற்றபாடில்லை. மிகுந்த மகிழ்ச்சி வலையுலகில் தங்கள் வருகை தங்களின் அமுதகானத்தில் மூழ்க காத்திருக்கிறேன். நன்றிங்க தோழி. நமக்குள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லையே. ஆதலால் நான் தங்களுக்கு சமமும் அல்ல. தாங்களும் எனக்கு ஆசிரியரே.

   Delete
  3. வாருங்கள் அன்புத் தோழியே!..:)

   நீங்களே எமக்குள் பெரியவர் சிறியவர் பேதம் இல்லை என்றபின்பு // தங்களைவிட வயதிலும் அறிவிலும் மிகச்சிறியவள் // என்று இரண்டு உம் எதற்கு இங்கு!..:)
   முதலாவது உம் ஏற்றுக் கொள்கிறேன். உங்களைவிட வயதால் மூத்தவள்தான் நான்.
   அதற்காக அறிவில் என்று சேர்த்துக் கூறக்கூடாது. சரியா!
   உங்கள் எழுத்துகளின் திறமை உங்களுக்கே தெரியவில்லைப் போலும்!
   அத்தனை சிறந்த கவிஞர் நீங்கள். எனக்கு இங்கு எழுதிய பாவகை கற்பனை எழுத்தாற்றல் ஏனோ கைவரவில்லை. மிகவே சிரமப்பட்டு எழுதினேன்!!!
   உங்களுக்கோ எல்லா வகையான பாக்களும் கைவந்த கலையாச்சே!
   அதனாலேயே // நீங்களே படித்து வியக்குமளவிற்கு
   என் படைப்பு அமைந்தது என் பாக்கியமே!// என்றெழுதினேன். தோழி!..:))
   நாமெல்லாம் கற்றலைப் பொறுத்த மட்டில்
   எங்கள் கவிஞர் ஐயாவின் அன்புக்குரிய குழந்தைகளே!

   Delete
  4. வணக்கம் தோழி!
   இறுதியாகச் சொன்னதை ஏற்கிறேன்.
   நாமெல்லாம் கற்றலைப் பொறுத்த மட்டில்
   எங்கள் கவிஞர் ஐயாவின் அன்புக்குரிய குழந்தைகளே!

   Delete
 10. என்ன சொல்லி தேற்றிடுவேன்
  என்னருமை தோழியேயென்
  கண்ணும் கரைய கவிபடைத்தாய்
  கற்பனைக்கும் உயிர்கொடுத்தாய்
  எண்ணித் துணியும் கருமமெல்லாம்
  இனிமைசேர்க்க வேண்டிட்டே
  பண்ணில் பாடி பரவசமாய்
  பாழ்பொழுதை போக்கிடுவாய்


  மெய் சிலிர்க்க வைக்கிறதும்மா தங்கள் இன்கவிகள் காண.
  பதிவைக் கண்டதுமே நேரில் கண்டது போன்றே மகிழ்கிறது உள்ளம். வாழ்க நலமுடன் என்றும். நன்றி நன்றி ! வாழ்த்துக்கள்மா தொடரட்டும் தொடரட்டும் மேலும் ...!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி!..

   என்றன் உள்ளம் நிறைந்தவளே!
    இனிய இனியா தோழிநீயே!
   இன்றென் பாட்டின் பொருளறிந்தே
    இட்ட கவியை என்னவென்பேன்?
   மன்றம் வந்து பாடுகின்றேன்
    மனதில் கள்ளம் ஏதுமில்லை
   சென்ற காலம் மீள்வதில்லை
    சேர்த்தேன் மாற்றம் பாவினிலே!

   இத்தனை வாஞ்சையோடு இட்ட விருத்தக் கவி கண்டு
   உள்ளம் சிலிர்த்திட்டது தோழி!..
   கவிதை எழுதும்போது பக்தி, வீரம், நட்பு, காதல்..
   இப்படிப் பலதரப் பட்ட உணர்வு மிக்க கவி எழுதிட வேண்டி
   இம்முறை கற்பனையாய் இப்படிக் காதற் கவிதை
   வடித்தேன். அவ்வளவே!..:)

   உங்களின் அன்பு வருகைக்கும் கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 11. வணக்கம் சகோ.

  கொல்லும் பார்வை குறுநகையும்
    கொடுக்கும் இன்பம் ஆயிரமாம்!
  எல்லை இல்லாப் பரம்பொருளை
    எண்ணல் எழுதல் அற்புதமாம்!
  சொல்லில் தமிழின் சுவையருவி
    சிந்தும் அழகுத் தோரணங்கள்
  வெல்லும் படைகள்!மனம்சரணாம்!
    வாழி இளமதி யின்கவிகள்!

  அருமை. இனிமை.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   இல்லை எனக்கு இதுஎல்லை!
    என்றன் எண்ணம் பாடுவதே!
   அல்லும் பகலும் தொழுகின்ற
    ஐயன் தாளும் தொழுவேனே!
   கல்லும் கரையத் தினம்பாடும்
    கவியே உன்றன் கருத்துணர்ந்தேன்!
   கொல்லும் வினைகள் தீர்ந்திடவே
    கொடுப்பேன் பாடல் கரங்குவித்தே!

   உள்ளன்போடு உரைத்திட்ட உங்கள் விருத்தப் பா கண்டு
   உற்சாகம் கொண்டேன்! உங்கள் கூற்று உண்மை!.. உண்மை!
   மேலே தோழி இனியாவுக்குக் கூறியதுதான்.
   இவ்வகையாய்ப் பா எழுத ஏதோ கொஞ்சம் முயன்றேன்!..:)

   தங்களின் அன்பு வருகைக்கும் இனிய கவி வாழ்த்திற்கும்
   வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 12. **
  முள்ளாய் இருந்த என்வாழ்வை
    முல்லைக் காடாய் நீசெய்தாய்!
  வில்லாய்ப் பாயும் கற்பனைகள்!
    வியக்க வைக்கும் ஒப்பனைகள்!
  எல்லாப் பிறப்பும் உன்னுடனே
    இணையும் வாழ்வை வேண்டுகிறேன்!
  சொல்லால் பொருளால் சுவைகூட்டும்
    தூய தமிழ்போல் நாம்வாழ்வோம்!**
  இதை விட வேறு செல்வம் வேண்டுமா என்ன//?!!! அழகு!! வாழ்த்துக்கள் தோழி!! அவ்வாறே அமையட்டும்:)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி மைதிலி!

   எல்லோரும் விரும்புவது அன்பான அழகான
   வாழ்வைத்தானே!..:)

   அன்பான வரவுடன் இனிய நற்கருத்தும் வாழ்த்தும்
   வழங்கினீர்கள். மிக்க நன்றி தோழி!

   Delete
 13. நினைத்ததைச் சொல்ல நிறையவே மெனகட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 14. சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 15. அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   தங்களின் அன்பான வரவுக்கும் நற் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 16. சொல்லால் பொருளால் சுவைகூட்டும்
    தூய தமிழ்போல் நாம்வாழ்வோம்!//

  அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   அன்பு வரவுக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 17. அருமையான கவிதை தமிழ்போல இல்லை இனிதொரு மொழி.

  ReplyDelete
  Replies
  1. உண்மை நேசன்!
   தமிழ்மொழிக்கு ஈடாக வேறு என்ன உளது!

   சொல்லும் பொருளும் தேன்சுவை!
   பிரிக்க முடியாததல்லவா!..:)

   அன்பு வரவிற்கும் நல் ரசனைக்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 18. தமிழ் வெளயாடுது...
  அருமையான கவிதை
  வாழ்த்துக்கள் சகோதரி
  தம +

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ!.. வாங்கோ!.. சகோ!..:)

   நலமாக இருக்கிறீங்களா?
   சரியா சொல்லீட்டீங்க...
   தமிழோடு நாம் விளையாடிப் பார்க்கின்றோம். அவ்வளவே!..:)

   அன்பான வரவு, ரசிப்பு, வாழ்த்து + த ம வுக்கு
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 19. வணக்கம்மா,
  வாழ்த்துக்கள் தூய தமிழ் போல் வாழ,,,,,,,,,,,
  கவி வரிகள் அருமைம்மா,,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி சகோதரி!
   வாழ்க்கை தூயதாக இருக்க நம் மொழியும்
   ஒரு காரணமே!..

   இனிய வரவும் அருமை ரசனையும் மகிழ்வைத் தருகிறது.
   மிக்க நன்றி சகோதரி!

   Delete
 20. முள்ளாய் இருந்த என்வாழ்வை
    முல்லைக் காடாய் நீசெய்தாய்!
  வில்லாய்ப் பாயும் கற்பனைகள்!
    வியக்க வைக்கும் ஒப்பனைகள்!
  எல்லாப் பிறப்பும் உன்னுடனே
    இணையும் வாழ்வை வேண்டுகிறேன்!
  சொல்லால் பொருளால் சுவைகூட்டும்
    தூய தமிழ்போல் நாம்வாழ்வோம்!

  இவ்வரிகளை மிகவும் ரசித்தேன். தூய தமிழ் போல் வாழ்க வளமுடன்!
  பாராட்டுக்கள் இளமதி!

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_