Pages

Aug 11, 2015

உன்னோடு!.. எனக்கு!..

உன்னோடு!... எனக்கு!..
(வெண்பாக் கொத்து)
~~~~~~~

குறள் வெண்பா!

உன்னோடு கொண்டேன் உயரன்பே! ஒண்டமிழே!
என்றும் அருள்வாய் எனக்கு!

 


நேரிசைச் சிந்தியல் வெண்பா!

உன்னோடு கொள்ளும் உயர்குணம் ஒன்றினையே
நன்றென்று நட்பெல்லாம் நல்குமே! - என்றுமிது
இன்பம் பெருக்கும் எனக்கு !

இன்னிசைச் சித்தியல் வெண்பா!

உன்னோடு காத்திடுக ஓங்கும் தமிழ்த்தாயை!
பின்னோடிப் போகும் பெருந்துயரம்! இச்செயலே

என்றும் நிறைவாம் எனக்கு!

நேரிசை வெண்பா!

உன்னோடு சுற்றிவரும்  உன்னத எண்ணங்கள்
மின்னலாய் எங்கும் மிளிர்ந்தனவே! - மென்மைமிகும்
நன்மொழி தென்மொழி! நாளும் கவிபாடி

இன்மொழி ஈவாய் எனக்கு!

இன்னிசை வெண்பா!

உன்னோடு வந்திட்ட உற்ற உறவுகளை
அன்போடு பற்றி அரவணைப்பாய்! நாடிழந்து
குன்றிக் கிடப்போர் கொடுந்துயர் நீக்குவதே
என்றும் கடமை எனக்கு!

பஃறொடை வெண்பா!

உன்னோடு வாழும் உயர்கல்விச் செல்வமே
பொன்னுக் கிணையாய்ப் பொருந்துமே! - நன்கிதனை
உன்மனத்தில் ஏற்றி உணர்ந்திவாய்! பைந்தமிழை
என்றும் தவறாது கற்றிடுவாய்! இவ்வுலகில்

சென்ற இடமெல்லாம் செந்தமிழைச் செப்பிடுவாய்!
துன்பம் தொடரா துனையே! இனியமனம்
குன்றென ஓங்கிக் கொழிப்புற வாழ்ந்திடுவாய்!
அன்புமொழி பேசி அகிலத்தை ஆண்டிடுவாய்!
நன்றி உனக்கு நவில்கின்றேன் என்மகனே!
என்றும்இச் சீர்..தா எனக்கு!

இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும்.
ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'உன்னோடு' என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன.
'எனக்கு' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

எங்கள் ஆசான் கவிஞர் கி. பாரதிதாசன் ஐயாவின் பதிவில்
அவர் தந்துள்ள வெண்பாக்களைக் காணலாம்.

கவிதைப் படங்கள் உதவி கூகிள்! நன்றி

50 comments:

 1. அபாரம். குறள் வெண்பா மட்டுமே இதுவரை முயன்றிருக்கிறேன். மற்றவை பற்றி துளியும் அறிந்திலேன். இங்கு எவ்வளவு சரளமாக வெண்பாக்களைப் புனைந்து வியக்கவைத்திருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி கீதமஞ்சரி!

   என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! அசுர வேகத்தில் வந்து பார்த்து வாழ்த்திவிட்டீர்கள்!..:)

   நானும் ஐயாவிடம் சமீபத்திற்தான் கற்றேன்.
   அதைப் பதிவிட்டேன். முயற்சி செய்யுங்கள் முடியும் உங்களாலும்!

   அன்பு வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 2. பதிவு பற்றிக் கருத்துக் கூற குறைந்த ஞானமாவது இருக்கவேண்டும் எனக்கு அது இல்லை. இருந்தாலும் படித்து ரசித்தேன். பதிவிட எவ்வளவு முடற்சி எடுத்தீர்கள்.?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ஐயையோ இப்படி நீங்கள் சொல்லலாமா?
   உங்கள் கருத்துகள் எம்மை இன்னும் சிந்திக்க
   வைக்கின்றன ஐயா!

   வரஅவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 3. அருமையான முயற்ச்சி ! வெண்பா எழுதும் ஆர்வம் இருக்கு ஆனால் விதிமுறை நினைவில் கொள்ளும் சக்தி இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் நேசன்!

   முயற்சி திருவினையாக்குமல்லவா!..
   நீங்களும் முயன்றிடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக
   மனதிற் பதியுங்கள். எல்லாம் முடியும்!

   அன்பான வரவிற்கும் பாராட்டிற்கும்
   வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete

 4. வணக்கம்!

  வெண்பாக் குலையை விருந்தாய்ப் படைத்துள்ளாய்!
  ஒண்பா ஒளிரும் உளத்துள்ளே! - விண்மதியே!
  சொன்ன நெறியுடன் துாய கருத்தேந்தி
  இன்னும் கவிகள் எழுது!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எழுதிடும் பாக்கள் எனையுயர்த்தத் தாங்கள்
   விழுதாய் இருந்திடுக வே!

   ஐயா! நாங்கள் எழுதும் பாக்கள் தங்களின் பாராட்டையே பெறுவதற்கும் தாங்கள் எங்களுக்குக் கற்றுத்தரும் முறையின் சிறப்பே காரணம் ஆகும்!

   இன்னும் கற்றுத் தேறித் தங்களின் மனங்குளிரச்
   செய்வேன் ஐயா!

   அன்பான வரவுடன் அழகிய வெண்பா வாழ்த்திற்கும்
   தமிழ்மண வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 5. வெண்பாக்களை ரசித்து மகிழ்ந்தேன்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பான வரவுடன் அருமையான ரசனைக்கும்
   வாழ்த்திற்கும் இனிய நன்றி ஐயா!

   Delete
 6. வணக்கம் சகோ பாராட்ட தகுதி இல்லை ரசித்தேன் நானும் கவிதை என்று நினைத்துக்கொண்டு எனது பதிவில் கலாமைப்பற்றி எழுதி இருக்கிறேன் நேரமிருப்பின் பார்க்கவும் நன்றி

  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ!

   அட.. என்ன இது!.. இப்படிச் சொல்வது?..
   அப்படியெல்லாம் இல்லை அவரவர் தனக்கு என்ன முடியுமோ அப்படிப் பா இயற்றுவது வழமைதானே!
   வந்து பார்த்துக் கருத்திட்டேன் உங்கள் கவிதையை!

   என்னவெனச் சொல்வேன்? உணர்ச்சிக் குழம்பல்லவா!
   கண்கள் கரைந்தன சகோ! அருமை! தொடருங்கள்!

   தங்களின் அன்பு வரவுடன் நல்ல ரசனையுடன் பாராட்டியும் வாக்கும் இட்டமைக்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 7. முத்தான முயற்சி பாராட்ட சொற்கள் தேடி நிற்கிறேன் தோழி. வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழியே!

   ம் ம் முத்தான முயற்சி இதுவென்றால் அங்கே
   உங்கள் சொத்தான சொக்கத்தங்க முயற்சி அல்லவா
   தூது!..:) அருமையோ அருமை!

   சொற்களெல்லாம் உங்கள் பாவிலேயே சொக்கிப் போய்க் கிடக்கின்றன..:))

   அன்பான வரவுடன் இனிய கருத்தும் வாழ்த்தும்
   வாக்கும் இட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தோழி!

   Delete
  2. வெண்பா கொத்தெல்லாம் பழக உங்களிடம் கற்க வேண்டும் தோழி. ஏதோ சிறுபிள்ளை போல கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

   Delete
 8. வணக்கம் சகோ.

  கவிஞர் ஐயாவின் மாணவர்கள் மாறி மாறி இப்படித் திணறடித்தால் என்போன்றவர்கள் என்னத்தான் செய்ய.......?! :(

  கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.


  வெண்பாக் ………….. கொத்து.  குறள்வெண்பா.

  வெண்பா வனமெங்கும் வீசுமழை ஏற்றருமைப்
  பண்பாடிப் பூக்குமலர்க் கொத்து

  நேரிசைச் சிந்தியல்

  வெண்பா ரகந்தன்னில் வேண்டாத்தீ நெஞ்சத்தாற்
  கண்மறைந் தாவர் கருவினையர் – புண்ணாக்கில்
  வண்பல் பதிக்குமவர் கொத்து!

  இன்னிசைச் சிந்தியல்.

  வெண்பா கடலென்றால் வீழ்ந்து நிறமாகும்
  விண்போல் பொருளென்க வாழ்செப்ப லோசையோ
  கண்சேர் அலைப்பூவின் கொத்து.

  நேரிசை அளவு.

  வெண்பா லதில்தேனை வார்த்தே அமுதாக்கி
  ஒண்பா அளிக்கும் உயர்கைகள் – மண்பால்
  திலக மெனநிற்குந் திங்கள் வனைய
  அலகாம் விழிதிறந்து கொத்து.

  இன்னிசை அளவு.

  வெண்பா விருந்தாக்க வேண்டும் தளைகொண்டு
  வண்பா திரள வருசீரால் கைசலித்துச்
  சத்தமிடுங் கோட்டான் குயிலோசை செப்பிடலாம்
  பித்தனிவன் சொற்சிரங் கொத்து.

  பஃறொடை.

  வெண்பா வகையொருங்கே வண்ணப் புலமைமதி
  மண்மா விருள்விலக்கி மாண்புரையக் – கண்கண்டு
  சேருவடி வீறுகொள வாறுபடு தூரகலக்
  காருமழை நீரிறையப் பேர்பெருகப் – பாரிடையே
  சிந்துமொழி முந்திவர வந்தவொளி மொந்தையமு
  துந்தொடரக் கந்தைமனப் பந்தெறியச் – சிந்தைநிறை
  முத்துமணி ரத்தினமா மத்தனையு முத்தமிழாள்
  நித்தம கத்துவிளக் கொத்து!

  நேரக்குறைவால் நேரடியே தட்டச்சுகிறேன். தவறிருக்கலாம்.
  பொறுத்தாற்றுங்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..

   தங்களின் வெண்பாக் கொத்தைக் கண்டு ஆடிப் போய்விட்டேன் ஐயா!

   நான் எங்கு போவேன்? என்னவென்று பதிலுக்குப் பாடுவேன்?..
   அவ்வ்வ்வ்...:’(

   என்னுடைய வெண்பாக் கொத்தையே ஒவ்வொரு பூக்கெட்டாகத் தேடி ஒழுங்கு படுத்திக் கொத்தாக ஆக்கிக் கட்டுவதற்கு எவ்வளவு நேரம் எனக்கு ஆயிற்று தெரியுமா?..

   நொந்து நூலாகிவிட்டேன்!

   உங்களுக்குப் பதிலுக்குப் பாடுவதென்றால்... பா..டுவ..தென்றால் ...........

   ஐயோ இந்த வாழ்வே போதாது ஐயா!..:)

   ஐயா!.. விளையாட்டாக நானும் எழுதினேன்.
   எதையும் விபரீதமாக எண்ணிவிட வேண்டாம்!
   தங்கள் பாக்கள் அத்தனையும் ஜொலிக்கிறது ஐயா!
   மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
   மிக மிக அற்புதமான சுவை! நறு மணம் வீசுகிறது!

   தங்கள் அன்பிற்கு என்ன சொல்வேன்?
   இனிய நல் வரவிற்கும் அற்புதமான வெண்பாக் கொத்திற்கும்
   வாக்கிற்கும் இதயம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
  2. லேய் மது இனி இந்தப் பக்கம் வருவ...

   Delete
 9. வெண்பாக்களை வரிசைக்கிரமமாய் தந்து சிறப்பாய் பாடி அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   தங்களின் தொடர் வருகையும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 10. ஆஹா அழகான பாக்கள் தோழி
  கலக்குகிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா..!..வாருங்கள் கிரேஸ்!..:)

   உங்களைக் கண்டதும் மகிழ்ச்சியே!
   பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 11. எல்லையிலா வானந்தம் கொண்டேன் உமது
  எழுத்தாற்றல் கண்டு தினம் !

  கல்லையும் கரைக்கும் கவிதைநடை மெல்லவே
  வெல்லும் உணர்வில் உயர்!

  வண்ணப்பூங் கொத்தொன்று வாங்கித் தரவேண்டும்
  நன்றி நவில உமக்கு !

  அருமை அருமை தோழி ! என்னென்று சொல்வேன் எழில் பொங்கும் உன் கவியழகை கண்டு. வார்த்தை இல்லை உனை வாழ்த்த ..! வாழ்க வளமுடன் நன்றி !

  ReplyDelete
  Replies
  1. முதல் குறளில் தவறு இல்லம்மா அதான்

   எல்லையிலா வானந்தம் கொண்டேன்நின் மின்னுகின்ற
   சொல்வன்மை கண்டு தினம் !

   Delete
  2. அன்புத் தோழி!

   பா எழுத முயலும் உங்களைக் கண்டு
   எல்லையில்லா ஆனந்தம் என்னுளம் கொண்டது தோழி!

   கல்லும் கரையுமென்றால் காணும் மனத்துயரை
   வெல்லுவேன் பாடி விரைந்து!

   வண்ணமாய்ப் பூங்கொத்து மாதேஉன் புன்னகை!
   எண்ணம் நிறைந்தாய் இனித்து!

   உங்கள் மகிழ்வுகண்டு என்மனமும் நிறைந்தது தோழி!
   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 12. வணக்கம்மா,
  பலமுறை வந்தும் பதில் சொல்ல தெரியாமல் சென்றேன்,
  ஆம் இரும்பு அடிக்கும் இடத்தில் ஈஈஈ க்கு என்ன வேலை,
  அழகிய பா ஆக்கத்தில் அமைதியாக செல்கிறேன்
  வாழ்த்துக்கள், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மா!..

   ஏன் பலமுறை வந்தும் பேசாமல் திரும்பினீர்கள்?..
   அவ்வளவு மோசமாகவாய் இருந்தனவோ பாக்கள்!..:)))

   ம்.. இதென்ன பேச்சு?.. இரும்பு, ஈ என்று?..
   அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சகோதரி!
   கற்கக் கற்கக் கிட்டும் எல்லோருக்கும் திறமை.
   நானும் இன்னும் மாணவிதான்!
   அமைதியாக இருந்தால் அமையாது ஒன்றும்.

   அன்பான வருகைக்கும் நகைச்சுவைக் கருத்திற்கும்
   வாழ்த்து மற்றும் வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 13. உங்களின் முயற்சி ஜொலிக்கிறது...! வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   நீங்கள் வந்து வாழ்த்தியதும் வலை ஜொலிக்கிறது!

   அத்தனைக்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 14. வணக்கம் மறுபடியும்...!

  அவசரமாய்ப் படிக்கப்பட்டு இடப்பட்ட எனது முந்தைய பின்னூட்டத்தில், உங்களின் வெண்பாக்கொத்தில் உள்ள ஒரு விகற்பத்தையும் ஒரு போருள் நுதலிப் போனதையும் கவனிக்கத் தவறிவிட்டேன்.

  இதோ அதைப் போல…..,

  குறள்.

  எந்தம் மொழிமேகம் என்மேல் பொழிதற்கே
  அந்தமில் லாதி துணை.!

  நேரிசைச் சிந்தியல்.

  எந்தம் இனம்கண்ட ஈடில் கவிவாணி
  உந்த னிணையடியை ஓதினேன் – சந்தநயம்
  தந்திடற்கு வாயே துணை!

  இன்னிசைச் சிந்தியல்

  எந்தம் படைப்பாக்க எண்ணத்தில் நீயிருக்கப்
  பந்தி விரிவிருந்தாய்ப் பாரிருக்கும்! கூறிடுவேன்
  சிந்தனைக்கு நீயே துணை.!

  நேரிசை அளவு.

  எந்தம் விழிமொழியும் ஏற்ற கவிச்சுவையும்
  சிந்தும் திறங்கொண்ட செந்தமிழே – வந்தனங்கள்
  முந்தை வினைப்பயனோ மூட னிவன்நாவில்
  வந்தவளே தாயே துணை!

  இன்னிசை அளவு.

  எந்தம் இலக்கியங்கள் எங்கும் நிறைந்தவளே!
  பந்தம் எனச்சொல்லப் பாவாய் எழுபவளே!
  கந்தல் பிறமொழிக்குள் கற்கண்டாய் நிற்பவளென்
  சொந்தமே நீயென் துணை!

  பஃறொடை.

  எந்தம் செழுந்தமிழில் ஏற்றசுவை சொற்கட்டிப்
  பந்தல் அமைக்கின்றேன் பாக்களெனச் – செந்தீயில்
  சந்த மரமெரித்துச் சாற்றுக் கவியாலிவ்
  விந்தை யுலகுணர வீசுகிறேன் – நொந்திடவோ
  முந்நீர் உலகிற்கு மூத்த எமதன்னை
  செந்நீர் உகுத்திடவோ கண்ணீராய்? – கொந்தளித்து
  முந்தி உயிர்காக்க முன்நிற்கும் மக்களவர்
  சந்ததியில் நானுமவர் சார்ந்திருப்பேன் - அந்தகராய்
  வெந்து கருக்கிடினும் வீழ்த்திடுனும் விட்டுவிடேன்!
  எந்தாயே நானுன் துணை!

  தேறுவேனோ?

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் என் வணக்கம் ஐயா!

   தேறுவேனோ என்றுநீர் தேம்புவதும் இங்கேனோ?
   வீறுடனே பாடுகிறீர் வெண்பாக்கள்! - பேறெனக்
   கொள்கிறேன்! உள்ளம் குளிர்ந்ததே! பொக்கிசமாய்
   அள்ளுகிறேன் அத்தனையும் என்னுடனே! - தெள்ளுதமிழ்த்
   தேன்சுவை தந்திடும் சீர்களும் நல்லதோர்
   வான்மழை போல்விழும் சந்தங்கள்! - நான்காணும்
   காண்ஒளிக் காட்சியே உம்கவிகள்! பாவலரே!
   வேண்டுகிறேன் இன்னும் விருந்து!

   நான் எழுதிய விதமாகவே எழுதி
   அருமையான வெண்பாக் கொத்து அள்ளித் தந்தீர்கள்!

   நீங்கள் அள்ளித் தருகின்ற பா!.. விருந்துண்டு
   மனம் நிறைந்து மகிழ்கின்றேன்!
   என்ன சொல்வேன்!.. மிக்க மிக்க நன்றி ஐயா!
   பதிலெழுதத் தாமதமாயிற்று மன்னியுங்கள்!

   Delete
 15. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவும் ரசனையும் வாக்கும் தருகிறது மகிழ்வு!
   மிக்க நன்றி சகோ!

   Delete
 16. மரபு பிழைக்கும்
  தலைக்கும் என்கிற நம்பிக்கையை தந்த பதிவு
  வாழ்த்துக்கள் சகோதரி..
  தொடர்க
  தம +

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரர் மது!

   பழுதின்றிப் பிழைக்க வைத்துவிடுவோம் ஒன்று கூடி!

   அன்பான வரவிற்கும் நல் ரசனையுடன் வாழ்த்து மற்றும்
   வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 17. Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   உங்கள் முதல் வருகை இங்கே!
   மட்டற்ற மகிழ்ச்சி! மிக்க நன்றி!

   Delete
 18. இலக்கண விளக்கம் படித்து வெண்பாக்களின் பெருமை தெரிந்து கொண்டேன். அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ!

   ஆகா!.. விரைவில் உங்கள் வலையில் நீங்கள் எழுதும்
   பாக்கள் காணப் போகின்றேன்! அருமை!

   இனிய வரவிற்கும் பாராட்டு மற்றும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 19. ரசித்தேன்
  மகிழ்ந்தேன்சகோதரியாரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவும் வாழ்த்துமே பெரும் ஆனந்தம்!

   அனைத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 20. பதிவும் பதிலும் காவியமே
  படைத்தீர் இளமதி ஓவியமே
  எதிலும் உமக்கென தனிபாணி
  எல்லையில் சுரக்கும் தமிழ்க்கேணி
  புதியன பூக்கும் நல்வயலே
  புனைந்திட இலக்கண வழிபயில
  முதியவன் நானும் வாழ்த்துகிறேன்
  முத்தமிழ் ஆகப் போற்றுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   என்னைப் புகழ்ந்து வாழ்த்தினீரே
    இங்கென் பேறு இதுவன்றோ!
   அன்பு கருணை ஆன்றோரின்
    ஆசி அருளும் கிடைத்ததுவே!
   என்றன் ஆசான் எமக்களித்த
    இந்தக் கொடைதான் என்பாக்கள்!
   நன்றி கூறி மகிழ்கின்றேன்!
    நாளும் நலமாய் நீர்வாழ்க!

   தங்களின் அன்பான வருகையுடன் இனிய பா வாழ்த்தும்
   கண்டே உள்ளம் மகிழ்ந்தேன்!

   மிக்க நன்றியுடன் பணிவோடு வாழ்த்துகிறேன் ஐயா!

   Delete
 21. மென்மைமிகும் நன்மொழி தென்மொழி! நாளும் கவிபாடி இன்மொழி ஈவாய் எனக்கு! ஈர்த்த வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் சகோதரரே!

   முதன் முறை இங்கு வந்துள்ளீர்கள்! மிக்க மகிழ்ச்சி!
   உங்கள் ரசனைக்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 22. வணக்கம்
  ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
  த.ம 15
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்!

   உங்களின் வருகையும் ரசனையும் வாக்குமே
   மிகச் சிறப்பு எனக்கு!
   மிக்க நன்றி சகோ!

   Delete
 23. அம்பாளடியாள்

  வணக்கம் தோழி !

  தேன்தந்து உள்ளாய்நீ தேவதையே வாழ்த்துக்கள் !
  நான்மயங்கி நிற்கின்றேன் நற்பாவால் !-மான்போல்
  மனம்கவரும் ஆற்றலினால் மண்மீது நாளும்
  உனதுபுகழ் ஓங்கும் உணர் !

  அப்பப்பா சொல்லவே தேவை இல்லை அருமை !அருமை !
  உன் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தேன் தோழி நிட்சயம்
  உன் புகழ் ஓங்கும் !வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழியே!

   தேன்பாக்கள் என்றே சிறப்பித்தாய் தோழியே!
   நான்போற்றும் ஆசானின் நல்ஆசி! - என்றுமே
   ஒன்றாய்நாம் கற்றடைவோம் உய்வு!

   உங்கள் அன்பும் ஆதரவுமே
   எனது எழுத்துக்களும் உரம்பெறக் காரணம்!

   அன்பான வரவிற்கும் வெண்பா வாழ்த்திற்கும்
   வாக்கிற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 24. அருமை அருமை! எங்களுக்கு அந்த அளவிற்கு அறிவு இல்லை சகோதரி...ஆனால் மிகவும் ரசித்தோம்....

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_