Pages

Aug 6, 2015

பாடிடவா தாலாட்டு!...



மன்னவனே! பாடிடவா தாலாட்டு வாய்..திறவாய்!
இன்னும்நீ தூங்கி இருக்கவோ என்பாட்டு!
என்னவரே உன்உறக்கம் ஏனின்னும் தீரவில்லை!
சின்னவிழி தான்திறப்பாய் தாலேலோ!
தேவனேஎன் நாதனே தாலேலோ!



மண்ணுலகில் வாழ்ந்தோமே மாண்பாக! ஊழ்வினை
பெண்னெனது ஆசையெலாம் பேர்த்தெடுத்துப் போட்டதே!
வண்ணமய வாழ்வெனது வாடிய பூவாகக்
கண்ணுறக்கம் காணவில்லை தாலேலோ!
காலமுமே தூங்கியதோ தாலேலோ!

பட்டதுயர் கொஞ்சமோ பாரினிலே பாவையிவள்
கிட்டவந்து பாடுகிறேன் கேட்கலையோ ஐயனே!
சட்டெனவே ஆண்டு பதின்மூன்றும் சாய்ந்ததே!
தொட்டிற் குழந்தையோ தாலேலோ!
தூங்குகிறாய் நீதொடர்ந்து தாலேலோ!

வரம்தந்த சாமியும் வாய்மூடி இருக்க,
தரமில்லை இவளென்று தள்ளியே நிற்க,
உரமில்லா நற்பயிராய் ஓய்ந்து கிடக்க,
மரமாகிப் பாடுகிறேன் தாலேலோ!
மன்னவனே கண்விழிப்பாய் தாலேலோ!
~~~~~~~~~~

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி

60 comments:

 1. Replies
  1. வணக்கம்! வாருங்கள் சகோ!

   உங்களின் உடன் வருகையொடு நல் ரசனையும்
   வாக்கும் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
  2. பட்டதுயர் கொஞ்சமோ பாரினிலே பாவையிவள்
   கிட்டவந்து பாடுகிறேன் கேட்கலையோ ஐயனே

   அருமையான வரிகள் சகோ செல்லில் படித்ததை மீண்டும் வந்து படித்தேன்

   Delete
  3. மீண்டும் வந்து படித்து ரசித்தமைக்கு
   மிக்க நன்றி சகோ!

   Delete
 2. உறக்கம் கலையட்டும். உற்சாகம் பிறக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. உறக்கம் கலையாதா எனக் கேட்டுப் பாடினேன்.
   அன்பு வரவிற்கும் நற் கருத்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 3. அருமை சகோதரியாரே
  அருமை
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 4. அற்புதம் அற்புதம்
  அமைந்த வார்த்தைகளும் பொருளும்..
  மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் அன்பு வரவும் ஆழ்ந்த ரசனையும்
   வாழ்த்துமே மிக அற்புதம்.
   மகிழ்ச்சி கொண்டேன் ஐயா!
   மிக்க நன்றி!

   Delete
 5. இளைய நிலா என்பதை
  முழு நிலா என நிச்சயமாய்
  மாற்றிக் கொள்ளலாம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அட.. அப்படியா ஐயா!
   நீங்கள் சொன்னால் நிச்சயம் அதில் செறிந்த
   அர்த்தம் உண்டு.
   மகிழ்வுடன் நன்றி ஐயா!

   Delete
 6. Replies
  1. த ம வுக்கும் நன்றி!

   Delete
 7. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   வரவும் ரசனையும் வாக்குமே அருமை!
   மிக்க நன்றி சகோ!

   Delete
 8. Replies
  1. வாருங்கள் சகோ குமார்!

   அருமைக்கும் மிக்க நன்றி!

   Delete
 9. வணக்கம்,
  மரமாகி நீ பாடும் பாட்டெல்லாம் மன்னின்
  உரமாகி போகும் விந்தை அறியாயோ
  மன்ன னவன் கண்விழித்து உன்தோல் சாய்ந்து
  கன்னித் தமிழ் பா கேட்பானே கன்னல்
  கரும்பின் சாறுதேன் கலந்துநீ ஊட்டும்
  பாஅருந்த வருவான் கலங்காதே மனமே
  வாழ்த்துக்கள் சகோ,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்கள் அருமையான பாவினால் என் அகம் தொட்டீர்கள்.
   நானும் அதற்காகவேதான் தூங்குபவரை
   துயில்வதோ நீயின்னும் எனக்கேட்டுப் பாடினேன்.

   இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 10. படிக்கக் கஷ்டமாக இருக்கிறது இளமதி. கவிதையாக மட்டும் இருந்திருந்தால் அருமை. வாழ்க்கையே என்று மனது கூவுகையில் என்ன செய்வது. கடவுளே கண்திறந்த பார் என்று மனதிற்குள் கூறிக் கொள்கிறேன். பதிவு வருமா தெரியாது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   பதிவுகள் கனமாக என் உணர்வுகளே காரணம்.
   படிப்போரை வருந்தச் செய்வதற்காகப் பாடவில்லை.
   என் மனக் குமுறலைக் கொட்டினேன் இப்படி!

   தங்களின் அன்பும் ஆதரவும் எல்லாத் துயர்களையும்
   நீக்குமென நம்புகிறேன் அம்மா!

   மிக்க மிக்க நன்றி தாயே!

   Delete
 11. தாலாட்டுப் பாட்டினுள் சொல்லொணாத வேதனைகளை வைத்துப் பாடுதலும் ஒரு மரபு...

  எனினும் - எங்கும் நலமே விளைக!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மகிழ்வோ துக்கமோ எங்காவது கொட்டிடும் போது
   சற்று ஆறுதல் கிட்டுகிறது. அதுவும் இங்கென்
   வலையுறவுகள் அனைவரும் எனக்குத் தரும் ஆறுதலே
   மிகுதிப் போரட்டத்திற்கும் எனக்குக் கிட்டும்
   மாபெரும் சக்தி!
   அன்பு வரவிற்கும் நல் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 12. சகோ வணக்கம்.

  கத்துங் கடற்றிரை யுத்தத் திடலெறி
     கெடலுடை யுடல்நடுவே
    கதறும் புலமறுந் துதறும் நிலமழும்
     விதமுனிற் சிதறியதோ
  நித்தம் நினைவெழச் சித்தங் கனவுழ
     நனவெனும் புனைவுகளின்
    நெருக்கத் தமிழ்கையில் விருப்பக் குமிழிகள்
     நிழலெனு மழல்வெடிக்கும்!
  வித்தும் பதிந்தென்‘அ கத்தும் சதியெனும்
     விதிகுழி மிதிபடவே
    வெள்ளம் இடிகரைந் துள்ளம் இடரிருள்
     விடிந்தெழ முடிந்திலையோ!
  பித்தம் உறைமன மெத்தை யுறங்கிடும்
     பாலனே தாலேலோ!
    சந்தக் கனவிலுன் சிந்தை யெழும்பிடச்
     சந்திர தாலேலோ!

  நலமெழ வேண்டல்கள்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நலமெழ வேண்டலுடனான தங்களது பா மிக அருமை சகோதரரே!

   Delete
  2. வணக்கம் ஐயா!

   பற்றிடும் வேதனையைப் பாவிசைத்தேன்! உள்மனப்
   புற்றிலுறை ஆழ்துயரைப் போட்டெரிக்க! - சுற்றமெனக்
   கொண்டேன் வலையுறவைக் கூடவே ஆறுதல்
   கண்டேன்! வலியைக் கடந்து!

   நீங்கள் தந்த தாலாட்டு மிக அருமை ஐயா!
   அதுபோல் எழுத முயல்வேன்.
   துயிலெழுப்பும் தாலாட்டு இது.
   அவர் துயில் தொடரானது.!.. தீராதது.!
   உணர்வுகளும் தூங்காது விழித்திடாரோ?
   அந்தத் துயில் தீர்ந்தெழாரோ எனப் புலம்பிப்
   பாடிய தாலாட்டு ஐயா!

   தங்களின் அன்பான வரவுடன் அற்புதமாக
   நலம் பெற வேண்டித் தாலாட்டும் தந்தீர்கள்.

   அனைத்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 13. உறங்க வைக்கத் தான் தாலாட்டு என்று எண்ணிக் கொண்டிருந்தேன் , எழுப்பவும் தாலாட்டா.?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா! சற்று மாறுதலாக எழுதியுள்ளேன்.

   வரவுக்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 14. கவிதை அருமை! ஆனால் வேதனை மிக்கதாய் இருக்கிறது. தங்களின் நலம் வேண்டி பிரார்த்தனைகளுடன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் அன்பு வரவிற்கும் நலம் வேண்டிய பிரார்த்தனைக்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 15. வணக்கம் தோழி!
  நேற்றைய தங்களின் சிந்துப்பாடலைக் கண்டு மனம் மிகவும் மகிழ்ந்து இங்கு வாழ்த்திவிட்டுப் போக வந்தேன்.
  தங்களின் இப்பாடல் கண்டு மனம் சொல்லொனாத் துயரத்தில் ஆழ்ந்தது.
  எல்லாம் விரைவில் நலமாகும் தோழி.

  இதய வலியதனை என்னென்று சொல்ல
  உதயம் வருமே உனக்கு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   தாலாட்டுப் பாடியே தந்தேனோ நோவுனக்கு!
   வேலா துணை!..வா விரைந்து!

   மனதின் துயருரைத்து உங்கள் யாவருக்கும்
   வேதனை தந்தமைக்கு வருந்துகிறேன் தோழி!..

   சுமை அதிகமாகி உதிர்ந்துவிட்டது தாலாட்டாக இங்கே!.

   அன்பான வரவுக்கும் ஆறுதல் மொழிக்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 16. வணக்கம்

  வேதனையின் உச்சம் வரிகளில் இளையோடியுள்ளது காலம் பிறக்கும்... நிச்சயம்.. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 11

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ!

   காலம் துணையாக நானும் வேண்டுகிறேன்!

   அன்பான வரவுடன் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 17. கல்லும் உருகும் கவிதை, உறக்கம் விழித்து , தேவன் வருவார் . வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அக்கா!

   தங்களின் வேண்டுதல் போலவே நடந்திட நானும்
   வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.

   அன்பு வரவுடன் நல் ஆறுதல் மொழிக்கும்
   உளமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 18. //வரம்தந்த சாமியும் வாய்மூடி இருக்க,
  தரமில்லை இவளென்று தள்ளியே நிற்க,
  உரமில்லா நற்பயிராய் ஓய்ந்து கிடக்க,
  மரமாகிப் பாடுகிறேன் தாலேலோ!
  மன்னவனே கண்விழிப்பாய் தாலேலோ!//
  கண்விழிக்க ஒரு தாலாட்டு...
  பதிமூன்று வருட போரட்டம் வெல்லவேண்டும் ..
  தம +

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரரே!

   மிக்க மிக்க நன்றி!

   Delete
 19. அன்புள்ள சகோதரி,

  மன்னவனின் விழிதிறக்க மனமுருகிப் பாடுகின்றாய்

  உன்னவனின் உறக்கத்தை உசுப்பியே எழுப்புகின்றாய்

  என்னபாடு படுகின்றாய் ஏங்கியே வாடுகின்றாய்

  பெண்பாடும் பாட்டுக்குப் பெருமகனே கண்திறவாய்!

  நன்றி.
  த.ம.15

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   என்னவன் கண்விழிக்க இட்டவுன் வேண்டலுக்குக்
   கண்ணன் தருவானே காப்பு!

   தங்களின் அன்பான வரவுடன் உளம் கரைந்து தந்த வேண்டலுக்கும்
   இதயம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 20. அருமையான தாலாட்டு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பான வரவுடன் நிறைவுதரும் கருத்திற்கும்
   மனம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 21. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பான வரவுடன் மனம் நிறைவுறத் தந்த கருத்திற்கும்
   மனம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. எண்ணிலாத் துன்பமேந்தி ஏங்கிடக் கண்டுநானும்
   வெந்நீரில் வீழ்ந்தாற்போல் வெந்து துடிக்கின்றேன்
   துன்பம் தொடராமல் கண்ணனவன் காத்தருள்வான்
   என்றுமினி உன்அருகி ருந்து !

   இன்னல்கள் நிறைந்ததுதான் இவ்வுலகு
   ஏக்கங்களும் தாக்கங்களும் எம்வரவு
   பண்ணிட்ட பாவங்கள் பின்தொடர
   பாவம்நாம் பதறுகிறோம் எந்தநாளும்
   விண்ணாதி விண்ணர்களும் தப்பவில்லை
   விதியிட்ட சாபத்தை வென்றதில்லை
   கர்ணனவன் கதிரவனின் புத்திரனே
   கடைசியிலே கதியற்றுப் போனானே.
   அன்புத் தோழியே !
   கலங்காதேம்மா காலங்கள் மாறும் கனவுகள் ஈடேறும் என்று நம்புவோம். தங்கள் கைவண்ணத்தில் தாலாட்டும் மிளிர்ந்ததும்மா .நன்றி ..! வாழ்த்துக்கள் ...! பிழைகள் இருந்தால் சுட்டுங்கள் தோழி தாமதத்திற்கு மன்னிக்கவும். தாமதம் ........புரியுதா .....


   பாமீட்டி பாவைநீ வாட்டும் துயரனைத்தும்
   தீமூட்டி யேஎரித்து தீர்!

   Delete
  2. அன்புத் தோழியே!

   கண்ணனே காத்திடென்று பாடினாள் என்தோழி!
   மண்ணிலே மாதவன் வந்தருள்க! - கண்ணொழுக
   வேண்டுகிறேன்! காட்டுன் கருணை இவளுக்கும்!
   மாண்புடன் கேட்டாள் வரம்!

   நெகிழ்ந்திட்டேன் உங்கள் பாக்கள் கண்டு!..
   என்ன சொல்வேன்?.. எல்லோர் மனமும் வேதைப்பட வைப்பதாக என் பாவும் அதன் பொருளும் அமைந்துவிட்டதே!...

   இத்தனை பேரின் உள்ளத்திலும் நான் இருக்கின்றேன் என்பதுவும் ஒரு பெரிய ஆறுதல்தான் தோழி!
   உங்களாலும் என் மனம் இப்போ இலகுவாகியுள்ளது.
   கவலைகளை ஒதுக்கி இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்.
   கவலை கொள்ள வேண்டாம்! எல்லாம் இறை சித்தம்!

   அன்பு வரவிற்கும் உளமார்ந்த ஆறுதலிற்கும்
   இதய பூர்வமான நன்றி தோழி!

   Delete
 23. வலி நிறைந்த தாலாட்டும்மா....

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி!

   அன்பான வரவுக்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 24. https://www.youtube.com/watch?v=prKi-Cm3n8E

  thalaattu paattu ketka ingu vaarungal.

  subbu thatha.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் குரலில் இந்தத் தாலாட்டினைப் பாடக் கேட்டு
   என்னையே நான் மறந்தேன்!..
   அற்புதமாக இருக்கின்றது!
   என் கவிதைக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள் ஐயா!

   எப்படி எனது நன்றியினைச் சொல்வேன்!
   இங்கு பதிவு செய்யும் பெட்டகத்தில் இதனையும்
   சேர்த்துவிட்டுள்ளேன் ஐயா!

   மீண்டும் மீண்டும் நீங்கள் பாடும்வகையிலான
   பாடல்களை நான் எழுத நீங்கள் பாடிட வேண்டும் என்பது
   எனது ஆவலாக இருக்கிறது!

   மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete
 25. அருமையான தாலாட்டு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   அன்பான வரவுக்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி

   Delete
 26. மண்ணுலகில் வாழ்ந்தோமே மாண்பாக! ஊழ்வினை
  பெண்னெனது ஆசையெலாம் பேர்த்தெடுத்துப் போட்டதே!
  வண்ணமய வாழ்வெனது வாடிய பூவாகக்
  கண்ணுறக்கம் காணவில்லை தாலேலோ!

  இன்று தான் உங்கள் தளம் வந்தேன் இளமதி. உங்கள் கவிதைகளைப் படித்து வியந்தேன். தாலாட்டுக் கவிதை மனதை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. இதுவும் கடந்து போகும் என்று தைரியமாய் இருங்கள். அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி கலையரசி!

   தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்கின்றேன்!

   சோகத்திலும் கண்ட சுகமாக உங்கள் வரவு இங்கு!

   தங்களின் அன்பும் ஆறுதலும் உண்மையில்
   என்னை நெகிழ்த்துகிறது.

   தங்களின் அன்பான வரவுடன் நிறைவுதரும் கருத்திற்கு
   மனம் நிறைந்த நன்றி சகோதரி!

   Delete
 27. வணக்கம் சகோ !

  தாலாட்டுப் பாட்டிற்குள் தாயுள்ளம் படும்பாடு
  தரணிக்கும் சாபம்தான் பாரு
  காலாட்டாக் கணவன்றன் கைதொட்டுப் பேசத்தான்
  கண்முட்டிப் போகும்தான் நீரு !

  ஏனிந்த விதியென்று எவருக்கும் புரியாமல்
  எமையிங்கு படைத்திட்டான் பிரம்மா
  ஏழைக்கும் வாழ்வுண்டு இறப்புக்கும் பதிலுண்டு
  இதயத்தில் வலிநீக்கி இரம்மா !

  நிறைவற்றுப் போகின்ற நீருன்றன் விழியுள்ளே
  நெடுங்காயம் தருகின்ற தாக்கம்
  இறைவீட்டுத் திண்ணைக்குள் எறும்பொன்று உணவின்றி
  இருந்தார்ப்போல் என்நெஞ்சின் ஏக்கம் !

  வலி நிறைந்த உன் கவியில் வாடிப் போகும் மனம்
  என்றும் மகிழ்வாய் இருக்க இறை துணை இருக்கட்டும் சகோ
  வாழ்க வளமுடன்
  தம கூடுதல் ஒரு வாக்கு

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சீராளா!

   எனைத்தேடி உறவொன்று இரங்கியே பாடக்கண்டு
   என்துயரம் கொண்டதே அணை!
   துணைகோடி வந்தாலும் துயர்தீர உடனென்றும்
   தோள்தரும் அன்பொன்றே இணை!


   வினையென்று வரும்போது வீழ்ந்தவர் கோடியுண்டு
   விதியென்று சொல்வதன்றோ உண்மை!
   கதியற்றுப் போகேன் கண்ணன் திருவருளுண்டு
   மதிநானும் செல்வேனவன் அண்மை!

   அன்போடு வந்து மனமுருகப் பாடினீர் சகோதரரே!
   மறுமொழி எழுதவும் ஏதும்தோன்றாமல் இருந்துவிட்டேன்!

   ஆத்மார்த்தமான உங்கள் அன்பிற்கு
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 28. வணக்கம்!

  மீட்டும் கவிதையுள் காட்டும் துயர்கண்டு
  மூட்டும் அனலேறி மூச்சயர்ந்தேன்! - தீட்டுகின்ற
  பாட்டும் அழுதுருகும்! பைந்தமிழ் போக்கிடுவாள்
  வாட்டும் வினையை வடித்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. ஐயா..!

   வாட்டும் வினையைத் தொலைக்கும் வழியாகப்
   பாட்டிசைக்கக் கற்றுத்தா பண்!

   தங்களின் வழிகாட்டலோடேயே நான் மேலும்
   கற்றுப் பாட்டிசைக்க வேண்டும்.

   என்றென்றும் என் நன்றியும் வணக்கமும் ஐயா!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_