Pages

Jan 8, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்!...

கேட்டால் கேளுங்கள்!...


"அட்வைஸ்கள்" பற்றித் தொடர்ப் பதிவாக எழுதும்படி அவர்கள் உண்மைகள் பதிவர் சகோதரர் மதுரைத் தமிழன் அவர்கள் ஆரம்பித்துக்
காகிதப் பூக்கள் அஞ்சுவை அழைக்க அஞ்சு பதிவெழுதி
என்பக்கம் அதிராவைத் தொடரில் இணைக்க அதனைத் தொடர்ந்த அதிரா 
இப்போது என்னை எழுதும்படி அழைத்துள்ளார். அன்பான அழைப்பிற்கு நன்றி!..

இப்பதிவினில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எனக்கும் பெரிதாக அனுபவங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆயினும் எனக்கு என் பெற்றோரிடமிருந்தும், கணவரிடமிருந்தும், நண்பர்கள், நலம் விரும்பிகளிடமிருந்தும் முக்கியமாக இங்கே முகம் தெரியா உறவுகளான வலையுறவுகள் உங்களிடமிருந்தும் நான் பெற்ற பெறும் அனுபவங்கள் அட்வைஸ்கள் என்பனவற்றில் சிலவற்றை இங்கு பகிர்கின்றேன்.
பதிவு சுயசரிதமாகவோ அலட்டலாகவோ இருக்கும் மன்னித்துக்கொள்ளுங்கள்.
பதிவும் நீண்ண்ண்டு போயிற்று!..வேறுவிதமாக எழுதத் தெரியவில்லை எனக்கு!...

நான் இலங்கைத் தீவில் பிறந்தவள். அன்பான பெற்றார். ஒரு தம்பி ஒரு தங்கை.
அப்பா என்னிலும் மிகுந்த அன்பானவர். அப்பாவுடன் இருந்த (திருமணம் செய்து நான் வெளியேறும்) காலம்வரை பெரிதாக அட்வைஸ் கேட்குமளவிற்கு என் செயல்கள் இருந்ததில்லை. அப்படிக் கேட்டதாக நினைவிலும் இல்லை. அப்பாவின் எண்ணம்போல் இருந்தேன் என்பதனை, " அக்காவைப் பார் நல்ல பிள்ளை. வேளைக்கு எழும்பிப் படிக்கிறாள். வீட்டில அம்மாவுக்கு உதவி செய்கிறாள். சொன்னா சொன்னதைத் தட்டாமல் செய்வாள். அவளைப் பார்த்து நீயும் திருந்தோணும்" என்று அடிக்கடி தம்பிக்குச் சொல்லிக் காட்டும்போது தெரிந்துள்ளேன்..:)
அப்பாவிலும் நிறைந்த பாசம் என்றால் அம்மா என் உலகம்! எனக்கு வேண்டிய தேவை எல்லாம் அம்மாவிடம் சொல்லிப் பெற்றுக்கொள்வேன்.
பழக்க வழக்கங்கள் சொல்லித்தருவா. சமையல், வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் எனக்கு அனுபவம் என் அம்மாவிடமிருந்தே கிடைத்தன. ஒவ்வொரு விடயத்திற்கும் நுட்பமாக எனக்குப் புரியவைத்து வாழ்க்கைப் பாடத்தைப் கற்பித்திருந்தா. என் தங்கை சிறுவயதில் சில வேளைகளில் சில விடயங்களில் பொறுமை இல்லாமல் இருந்தால் அம்மா "கிரிசாம்பாளின் பொறுமைக் குணத்தால்தான் அவளுக்குக் கிடைச்ச மோதகத்துக்குள் மோதிரமே கிடைச்சது நீயும் பொறுமையா இரு. உனக்கும் கிடைக்கும்" என்பா
அம்மாவும் அத்தனை பொறுமையானவ. எத்தனை கஷ்டம், நெருக்கடி வந்தாலும் ஏன் சமயத்தில் அப்பாவே ஏதாலும் ரென்ஷனாகி கோபமாகப் பேசினாலும் மிக மிகப் பொறுமையாகச் சிரித்துக் கொண்டு குறைந்த தொனியில் பதில் சொல்லுவா
நானும் "பொறுமை" என்றால் என்ன என்பதனை என் அம்மாவிடமிருந்தே கற்றேன்! மேலும் எதிலும் ஆசைப் படாத குணம், யார் என்ன கேட்டாலும் உடனேயே கொடுத்துவிடும் தன்மை, இரக்க சுபாவம் இதுவெல்லாம் அம்மாவிடமிருந்து நான் கற்ற, பெற்ற அனுபவங்கள் எனலாம்.

நான் பாடசாலைப் படிப்பை முடித்து அதனைத் தொடர்ந்து கர்நாடக சங்கீதம் யாழ் நுண்கலைக் கல்லூரியில் கற்றுவந்தேன்.
5 வருடப் படிப்பு அது. 3ம் வருடம் படிக்கும்போது தூரத்து உறவான என்னவர் அறிமுகத்துடன் தொடர்ந்தது காதல்.
அந்த நேரம் (இன்றைக்கு 30, 35 வருடங்கள் முன்னர்காதலிப்பது என்றாலே பல குடும்பங்களில் ஏதோ செய்யக்கூடாத பெரீய குற்றத்திற்குச் சமமானதுபெரும்பான்மையான காதல்கள் தோல்வியையே சந்திந்திருந்தன.
இதை ஆரம்பித்து வைத்தது என் கணவரே. தன் காதலை என்னிடம் சொன்னபோது நான் அதனை ஏற்காது மறுத்தேன். மறுபடியும் என்னைக் காணும்போதெல்லாம் கேட்டுத் தொல்லைப் படுத்த இல்லை என அவருக்குச் சொல்லிவிட்டு வீட்டில் என் பெற்றாருக்குச் சொல்லாமல் என் அம்மாவின் தங்கை சித்தியிடம் சொன்னேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் என் சித்திக்கும் எனக்கும் 5 வயதில் தான் வித்தியாசம்...:)) சித்தி என் சினேகிதிபோலத்தான் எனக்கு. எல்லாம் அவவிடம் சொல்வேன் அவவும் என்னுடன் பழகுவது அப்படித்தான். இந்த லவ் விடயம் இப்படி இவர் என்னைக் கரைச்சல்ப் படுத்திறார் எனக்கு விருப்பமில்லை என்று சித்திக்குச் சொல்லஎங்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்ன "நீ யாரை விரும்புகிறாய் என்பதைவிட உன்னை யார் விரும்புகிறார்களோ அதுவே உயர்ந்தது" என்ற பொன்மொழியை  அன்று என் சித்தி எனக்குச் சொல்லி என்னைச் சிந்திக்க வைத்தா. அதுவே என் வாழ்க்கையை இவரோடு சேர்த்தது.
 5 வருடக் காதலில் 4 ம் வருடமே என் பெற்றோருக்குத் தெரிவித்தேன். 5ம் வருடம் அவர்கள் விருப்புடன் மணமுடித்தேன்.
உண்மையில் சித்தி சொன்ன கண்ணதாசன் வரிகளால்தான் என் வாழ்வு இவருடனானது. இவரின் அன்பு அளப்பரியது. வாழ்ந்த காலம் கொஞ்சமாகிப் போனாலும் மகிழ்விற்குக் குறைபாடே இல்லாமல் அத்தனை சந்தோசமாக இவருடன் வாழ்ந்திருந்தேன். மிகுந்த அமைதியும், துணிவென்பதே இல்லாதகூடவே பயந்த சுபாவமுமான என்னை அத்தனை சுறுசுறுப்பும், என்ன விடயமெனினும் சட்டெனக் கிரகிக்கும் தன்மையும் கொண்ட என் கணவர் கணமேனும் விலகாமல் தைரியமூட்டி வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று கற்பித்தார்
ஊரில் மின்சாரவியற் பொறியியலாளராக வேலை செய்தார். திருகோணமலையில் வேலை செய்து வரும்போதுதான் இனக் கலவரத்தில் அகப்பட்டுக் காடுகளுக்குள் வாரக்கணக்காகச் சாப்பாட்டுக்கும் வழியின்றித் தவித்து அல்லல்பட்டிருந்தோம். இப்படியே தொடர்ந்து 2 வருடங்கள் பயத்துடனே நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்தோம். இடைப்பட்ட காலத்தில் 3 தரம் ஆர்மியால் தங்களின் காம்ப் இல் மின்சாரம் தடைப்பட்டிருக்கு வந்து பாருங்கள் என்று கணவரைக் கூட்டிச்சென்று உள்ளே நாள்முழுக்க வைத்திருந்து வெளியேவிடும் கொடுமைக்குள்ளானோம்.. அடிக்கடி இப்படி நடந்துவந்ததால் அங்கிருக்க முடியாமல் உயிரக்காக்கவென 3 வயதும் 5 மாதக் குழந்தையுமான இரு பிள்ளைகளுடன் நாட்டைவிட்டு வெளியேறி ஜேர்மனிக்கு அகதிகளாக அரசியல் தஞ்சம்கோரி வந்து சேர்ந்தோம்...

இங்கு அகதிகளாக வந்தவர்களுக்கு வேலைதேட ஆரம்பத்தில் அனுமதி இல்லை. மேலும் ஜேர்மனிய மொழி கற்றுச் சான்றிதழ் பெற்று, ஊரினில் கற்ற தொழிற்கல்வியை இங்கு அதை உறுதிப்படுத்திய சான்றிதழும் பெற்றாலொழிய தரமான மதிப்பான வேலை செய்யவும் முடியாத சட்டம் இருந்தது. இதன் காரணமாகப் போதிய வருமானம் இல்லை. காலம் கடந்தது. ஜேர்மனிய டொச் மொழி கற்பது என்பதும் ஆங்கிலம் போல அவ்வளவு சுலபமாயும் இல்லை. நாடுவிட்டு வந்த துயரம், இந்நாட்டுக் கலாச்சாரம், மனநிலை விரக்தி இப்படிக் கஷ்டங்கள் அதிகரிக்க, வருமானத்திற்கு வழி தேட வேண்டுமென வேறு வழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் பிள்ளைகளைகளையும் கவனித்துக்கொண்டு இருவரும் செய்து வந்தோம். என் கணவர் மின்சாரவியற் பொறியியலாளராக ஊரில் மதிப்பாக வேலை செய்தவர். இங்கு மணித்தியாலச் சம்பள, நாட் சம்பள வேலைக்காரனாகப் பல இடங்களில் வேலை செய்தார். நானும் கிடைக்கின்ற கிளீனிங் வேலைகள் செய்துவந்தேன். ஊரில் தனது சம்பளம் போதுமென ஆசிரியத்தரம் படித்து முடித்திருந்த என்னை வேலைக்குப் போகவிடவில்லைவிரும்பவில்லைஇங்கு வந்து இருவரும் இப்படியான வேலைகள் செய்து வாழ்வதை மனவேதனையோடுதான் எதிர்கொண்டார். இந்தக் கஷ்டம் எம்மோடு போகோணும் எம் பிள்ளைகள் இருவரும் நல்ல படிப்புப் படித்து நல்ல வேலை செய்யோணும் அவர்களை நல்லாய்ப் படிப்பிக்கோணும் என்பார்

மிகுந்த தமிழ் மொழிப் பற்றுள்ளவர்.. ஊரிலிருக்கும்போது பத்திரிகைகள், வானொலிக்குக் கதை, கவிதை எழுதியவர்
நாம் வந்திருக்கும் இந்த நாட்டில் வசிக்கும் ஊரில் உள்ள எம் ஈழத்தவர் பிள்ளைகளுக்குச் சொந்தச் செலவில் ஊரிலிருந்து புத்தகங்கள் வாங்கிப் 10 வருடங்கள் கிட்டத்தட்ட 120 சிறார்களுக்கு இலவசத் தமிழ்க் கல்வியைப் போதித்து வந்தார். நானும் என்னுடன் இன்னும் 4 ஆசிரியைகளுமாக சேவை செய்துவந்தோம். கற்பிக்கும்போது தாய்மொழியின் அவசியத்தை எப்பொழுதும் அறிவுறுத்துவார். தாய் மொழி தெரியாதவன் தன் முகம் தெரிதவனாவான் என்பார்.
இப்படியான காலகட்டத்திற்தான் வேலைத்தளத்தில் விபத்திற்காளாகிப் 14 வருடக் கோமாவில் படுக்கையாகி மீளாமல் 2016ல் இறையடி சேர்ந்தார்.... 

இவர் கோமாவாகிய பின்னர் 2 வருடங்கள் இவர் தொடக்கிய தமிழ்க் கல்விப் பாடசாலையை அங்கு கற்கும் மாணவச் செல்வங்களின் பெற்றாரின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்கள் உதவியுடன் பாடசாலையை நிர்வகித்துக் கற்பித்து வந்தேன். ஆயினும் வீட்டில் இவருக்கான பணிகள் அதிகமானதால் தொடர்ந்து செயற்பட முடியாமல் வேறொருவரிடம் பாடசாலையைக் கையளித்துவிட்டேன். இன்றும் எம்மிடம் கற்ற மாணவர்கள் என்னைக் கண்டால் ரீச்சர் சுகமாக இருக்கின்றீர்களோ என்று கேட்பார்கள்.
உங்களாலும் மாஸ்டராலும் நாங்கள் தமிழ்மொழியக் கற்று இன்று தமிழில் எழுதவும் வாசிக்கக்கூடியதாகவும் உள்ளோம். ஊருக்குப் போனால் வயசான தாத்தா, பாட்டி, அப்பம்மா, அம்மம்மாவோடு சந்தோசமாகப் பேசக்கூடியதாக இருக்கு என்று சொல்லி மகிழ்கின்றார்கள். இதெல்லாம் இவரின் முயற்சிக்கும் செயலுக்குமான பலன்களாகும்.

இவர் படுக்கையாகிய போதும் (ஆரம்பத்தில் அவரே தந்த அந்த மனத்தைரியத்தினால்பிள்ளைகள் இருவரையும் நன்றாகக் கல்வி கற்கவைத்து நல்ல பிரஜைகளாக வளர்த்துத் தகுந்த வேலை கிடைக்கவும் தொடர்ந்து சிறந்த மணவாழ்க்கை அமையவும் செய்துள்ளேன்

இவரின் கோமா நிலையின்போது இணையத்தள வாசிப்பில் என்னை ஈடுபட வைத்தது சகோதரர் ஹைஷ் என்னும் வலையுலக நட்புறவின் மறைபொருள் ரகசியமெனும் ஆன்மீகத் தளப் பதிவுகள்தான்அதிரா, பிரியாவுக்குத் தெரியும்! அந்த நேரத்தில் வலையுலகினைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்பவும்தான்..:)
மகனின் வழிகாட்டலோடு இடையிடையே ஹைஷ் அண்ணரின் வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு வந்துள்ளேன். அப்போதுதான் அதிராவின் என்பக்கம் வலைத்தளம் அறிமுகமானது எனக்கு. அங்கும் அதிராவுக்கும் பின்னூட்டம் எழுதிவந்தேன். அங்கே அஞ்சு, இமா, பிரியாவும் அறிமுகமானார்கள். இதனைத் தொடர்ந்து அதிரா என்னை வற்புறுத்தி எனக்கென ஒரு வலைத்தளம் அமைத்து எழுதுங்கள் மாறுதலையும் ஆறுதலையும் தரும்வழி இதுவாகும் என ஆலோசனை சொன்னார். கூடவே அஞ்சுவும் இணைந்துகொண்டார். நான் இல்லை எனக்கு வேண்டாம் என்ன எழுதுவதென எனக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்லி அழுதும் விடாப்பிடியாக அதிராவே இந்த இளையநிலாவை உருவாக்கித் தந்தார். எழுதுவற்குக்கூட அதிராவிடமிருந்தே கற்றுக் கொண்டேன். தொடர்ந்து அஞ்சு செய்யும் குவிலிங் கைவேலைகள் என்னை ஈர்க்கவே அவரின் உதவியையும் பெற்று ஏதோ ஒரு சில குவிலிங் நானும் செய்திருந்தேன்.
என் கணவரின் கோமா நிலையினால் மனநிலை பாதிக்காமல் அன்றும் நான் காப்பாற்றப்பட்டதற்கு உண்மையாக அதிராவே முக்கிய காரணமாவார்!

ஆரம்பத்தில் பதிவுகளாக எனக்கிருந்த தமிழ்ப் பற்றினால் மனம் போன போக்கில் கவிதை சில எழுதிப் பதிவிட்டேன். அதனைக்கண்ட கவிஞர் பாரதிதாசன் ஐயாகொஞ்சம் மரபினையும் படி சிறப்பாகக் கவிதை எழுதலாம் என்று சொல்லிக் கற்பித்துத்தந்தார். அதன் பலனே இப்போது நான் எழுதுவது. ஆசானுக்கும் என் நன்றிகள்! கற்றது கைம்மண் அளவும் இல்லை. இன்னும் கற்க வேண்டும்.

நாடிழந்து, கொண்ட வாழ்வும் இழந்திட்ட நிலையில், என் மனமும் பேதலித்து முற்றுமுழுதாகச் செயற்திறனிழந்தது. அப்படியிருந்த என்னை அதிரா, அஞ்சு, பிரியா, சீராளன், இமா என இந்த அன்புறவுகள் ஓயாமல் தேடி, மெயில் எழுதி வாருங்கள், வந்து வாசியுங்கள், பின்னூட்டமிடுங்கள், பதிவிடுங்கள் என்று இப்போது மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர். என்னை இயங்கவைத்து உங்கள் எல்லோரின் அன்பையும் நான் பெற்றிட வைத்துள்ளனர்இப்போது உங்கள் அனைவரின் அன்பினாலே தான் நான் இன்றும் இவ்வளவிற்கேனும் இயங்கிக் கொண்டு, எழுதிக்கொண்டு இருக்கிறேன்!

அன்னை தந்தை தந்த புத்திமதி என்னை ஆளாக்கியது!
என் கணவரின் ஆத்மார்த்த அன்பும் வழிகாட்டலும் வாழ்க்கையை அழகாக வாழ வைத்தது, வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது!
இப்பொழுது இந்த வலையுலகு தந்த, நான் கண்டெடுத்த அன்புறவுகள் உங்களால்தான் இன்னும் இந்த இளமதியின் இயக்கம் தொடர்கின்றது!

இப்பொழுதும் இந்தப் பதிவினை எப்படி எழுதலாமென தனது பதிவின் பின்னூட்டத்தில் எனக்கு யுத்தி(ஐடியா) சொன்னதும் அதிராதான்!!!
அதிராவுக்கு எனது நன்றிகளைக் கோடிமுறை சொன்னாலும் போதாது!..
வலையுலக உறவுகள் உங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியுடன்
அன்பான நல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!

இத்தொடர்ப் பதிவைத் தொடரும்படி பதிவர்கள்
சீராளன்: என்னுயிரே
கீதா: கீதமஞ்சரி ஆகியோருடன்
இன்னும் எழுத விரும்பும் அனைத்துப் பதிவினரையும் அழைக்கிறேன்!

99 comments:

 1. மீதாஆஆஆஆஆன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:) நில்லுங்கோ படிக்கிறேன் சத்தமா:)

  ReplyDelete
  Replies
  1. ஆ... அதிராஆ... வாங்கோ!..:)

   Delete
  2. ஓம் நீங்கதான் முதலாவதா வந்தீங்கள். சந்தோசமாக இருக்கு அதிரா!
   சுருக்க எவ்வளவோ முயன்றும் பதிவு நீண்ண்ண்டு போயிட்டுது..:(

   Delete
 2. அடடே... வந்துட்டன் படிக்கப்போறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ..:)

   நிதானமாகப் படியுங்கள். ஒன்றும் புதியதில்லை..:)

   Delete
  2. வணக்கம் சகோ தொடங்கும்போது ஜாலியாக படிக்க வந்தவன் முடிக்கும்போது மனம் கனத்து விட்டது.

   தங்களது வாழ்க்கை முறை ஓரளவு நான் அறிந்தவன் என்றாலும்... எவ்வளவு இன்னல்களை கடந்து வந்து இருக்கின்றீர்கள்...

   இனி நடப்பவை நல்லவைகளாக இறையருள் கிடைக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

   Delete
  3. அடக் கடவுளே... எனது பதிவு உங்களின் மனதைக் கனக்க வைத்துவிட்டதே!... என்னால் உண்மைக்குப் புறம்பாக எதையும் கற்பனையில் எழுதத் தெரியவில்லை சகோ!...
   எழுதிவிட்டுப் போய்விடுகின்றோம். படிப்பவர் மனத்தை எப்படி வருத்திவிட்டது பாருங்கள்!
   இங்கே அட்வைஸ் எங்கிருந்து பெற்றேன் ஏன் பெற்றேன் என்பதனை மொட்டையாக ஓரிரு வரிகளில் சொல்லிட என்னால் முடியவில்லை. தேவைகருதி வருந்தக் தக்க சில விடயங்களைச் சொல்ல வேண்டியதாயிற்று...
   இன்னும் வலியொடு பெற்ற பல அனுபவங்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் இங்கு சொல்லாமல் தவிர்த்துவிட்டேன். அந்த அனுபவங்களை மட்டும் வாழ்விற்குத் தேவையான அட்வைஸாக எனக்குள் பதிந்துவிட்டு ஏனையவற்றை றேசர் - அழிறப்பரால் அழித்துக்கொண்டு வருகிறேன்.
   திரும்பத் திரும்ப அவற்றை முன்னிலைப் படுத்த உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது..:)

   ஆமாம் சகோ!.. நடந்தவை நடந்தவைகளே! இனி நடப்பவை நல்லதாக இருக்குமென நம்புகிறேன்.
   எல்லோருக்கும் மனச்சாந்தியும் அமைதியும் கிடைக்கட்டும்!

   அன்பான வரவுடன் ஆதரவான கருத்துப் பகிர்தலுக்கு
   நன்றியுடன் என் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
  4. ///எழுதிவிட்டுப் போய்விடுகின்றோம். படிப்பவர் மனத்தை எப்படி வருத்திவிட்டது பாருங்கள்!//

   இத்தோடு அழுகை எல்லாம் ஓயட்டும்:) இனியும் அழுதழுது போஸ்ட் எழுதினால்ல்... தேம்ஸ்ல தள்ளிடுவேன் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்:))..

   Delete
  5. ஓ..கே அதீஸ்...:)
   சொல்லீட்டிங்க எல்லோ செஞ்சிடுவோம்..:))

   Delete
 3. வாவ் !! அனுபவங்கள் நமக்கு சிறந்த ஆசான் .மிக அழகா நேர்த்தியா எழுதி இருக்கீங்க ...
  குவில்லிங் குழந்தை அழகாய் சிரிக்கிறா :)
  அவள்டை ரி எடுத்து வாசிக்கிரமாதிரி இருக்கு .
  உங்களுக்கும் கண்ணதாசன் அங்கிள் குருவா :)
  நீங்க மியூசிக்கும் படிச்சீங்களா ? அப்போ நல்ல குரல் வளமிருக்கும்னு நினைக்கிறேன் .
  அப்பா அம்மா ஊர் நினைவுகள் யாருக்குமே மறக்காதவை .அதிராவின் பதிவில் அடிக்கடி சொல்வாங்க அந்நாளைய ஊர் எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கை என்றெல்லாம் ..எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்திருப்பீர்கள் இல்லையா பிரச்சினை ஏற்பட்ட காலகட்டத்தில் :( அதுவும் நம்ம ஊரில் வாழ்க்கையே வேறு ..ஜெர்மன் லைஃப் வேறு ..ஜெர்மானியர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் முதலில் அவக மொழியை கற்றுத்தேறணும்னு பிடிவாதம் உண்டு அது நல்லதே .இங்கே இங்கிலாந்தில் 40 வருடமாக வாழும் பல் குஜராத்தியருக்கு இன்னமும் ஆங்கிலம் எட்டாக்கனிதான் :( ஏனென்றால் இங்கிலாந்தில் நிறைய வசதிகள் ட்ரான்ஸ்லேட் செய்ய மொழிபெயர்ப்பாளர் எல்லாம் இருக்காங்க .நானே சிலருக்கு சில வருஷமும் கவுன்சலிங் நேரம் உடன் சென்றேன் .

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு..
   ஆமாம் வாழ்வில் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறோம். எழுதவும் படிக்கவும் காலம் போதாது.
   கவிஞர் கண்ணதாசனின் எழுத்திற்கு அடிமை என்னவர். என்னவர் மூலமே நானும் கவிஞரின் புத்தங்களைப் படித்திருந்தேன்.

   குவிலிங் குழந்தைக்கு இப்போ 3 வயதாகுமே..:)) அழகுச் செல்லம்தான்.
   நான் செய்தவற்றில் என்னக்குப் பிடித்ததில் இதுவும் ஒன்று!

   ஜெர்மனிய வாழ்க்கை உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
   மொழி வெறியர்கள் என்று ஆங்கிலேயர் இவர்களைக் கூறுவர்.
   அப்படி அவர்கள் தாய்மொழிப் பற்றுள்ளவர்கள்!

   ஆரம்பத்தில் நாமும் படாதபாடு பட்டுப் படித்துத் தேறிவிட்டோம் இப்போது.
   நம் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்.
   தாய்மொழியாம் தமிழ், ஆங்கிலம், ஜேர்மனிய டொச், பிரென்ச் மொழின்னு படித்துத் தேறிவிட்டனரே..:)

   Delete
 4. உங்கள் கணவரின் வழிநடத்துதலால் உங்களுக்கும் எளிதில் எதையும் கற்கும் கிரகிக்கும் குணம் மற்றும் ஆர்வம் கிடைத்துள்ளது இதுவும் ஒரு நல்ல அனுபவத்தில் விளைந்தது .
  பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பது நம் தாய்மொழியல்லவா ,,எத்தனை பெரிய விஷயம் ..ஊருக்குப் போனால் வயசானதாத்தா, பாட்டி, அப்பம்மா, அம்மம்மாவோடு சந்தோசமாகப் பேசக்கூடியதாகஇருக்கு என்று சொல்லி மகிழ்கின்றார்கள். இதெல்லாம் இவரின் முயற்சிக்கும்செயலுக்குமான பலன்களாகும்.. // வாசிக்கவே சந்தோஷா இருக்கு அந்த தாத்தா பாட்டிக்கு எத்தனை சந்தோஷத்தை கொடுத்திருக்கிங்க //இப்பவும் எப்பவாது மாதம் ஒருமுறை ஸ்கூலுக்கு விசிட் செஞ்சு உங்களுக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுங்க பிள்ளைகளுக்கு .அதேபோல் குயில்லிங் இல் யாரும் தமிழ் எழுத்துக்களை செய்து (ஓரிருவர் ) தவிர கண்டதில்லை நீங்க செய்யுங்க நேரம் கிடைக்கும்போது அ ஆ இ ஈ செய்து சிறு பிள்ளைகளுக்கு பரிசாக தரலாம் தமிழ் குடும்பங்களில் .
  ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு எப்பவும் எனக்கு பிடிபடாதது ஆங்கிலத்துடன் கலக்கும் :)
  எனக்கு புரிகிறதுஎத்தனை கஷ்டமாயிருந்துருக்கும் அப்போ என்று .

  அழகா சரளமான எழுதியிருக்கீங்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .தொடர்ந்து கவிதையும் குவில்லிங்கும் தொடரட்டும் இங்கே :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அஞ்சு!.. அந்தச் சிறார்களுக்கு சிறார்கள் என்றால் மழலையர் வகுப்பிலிருந்து ஆண்டு 10 வரை மாணவச் செல்வங்கள் எம்மிடம் கற்றார்கள்! மிகுந்த கவனத்துடன் அக்கறையாகப் படிப்பித்தோம்.
   4 , 5 வயதுக்கார மழலை மாறாத பிஞ்சுப் பாலகர் பாலர் வகுப்பில் வந்து சேருவார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவும் நேர்த்தியாக எழுத வைப்பதிலும் நமக்கே தமிழ் மறந்துவிடுமோ என்றாகிவிடுவதும் உண்டு..

   'அ' னாவை முதலில் சுழித்து அப்படியே கீழே இழுத்துக் கீறுங்கள் என்றால் முதலில் எழுத்தின் முடிவில் ஒரு கோடு போட்டு றிவேசில் எழுத ஆரம்பிப்பார்கள். வட்டத்தை விடக் குத்துண்ண |கோடு அவர்களுக்குச் சுலபமாக வரும்...:))
   கதைகள் சொல்லத் தொடங்கினால் அவர்கள் தங்கள் வீட்டுக்கதையெல்லாம் சொல்லத் தொடங்கிவிடுவார்கள். அதையெல்லாம் கேட்டுச் சிரித்து ஆடிப் பாடி அவர்களுக்கு வகுப்பெடுப்பது என்றால் எனக்குக் கொள்ளை ஆசை..:) அதுவும் ஒரு பொற்காலம்தான்!..

   க்விலிங்கில் அ, ஆ எழுத்துக்கள் நன்றாக இருக்கும்தான். நல்ல யோசனை அஞ்சு. நன்றி!,
   உங்கள் திருவாய் மொழியென க்விலிங் ஆசிரியை உங்களின் ஆசீர்வாதத்துடன் விரைவில் ஆரம்பிக்கின்றேன்.
   உங்களின் அன்பில் நெகிழ்ந்தேன் அஞ்சு! இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்!

   அன்பான வருகையுடன் இதமான கருத்திட்டீர்கள்!
   உளமார்ந்த நன்றியுடன் என் நல் வாழ்த்துக்கள் அஞ்சு!

   Delete
  2. ///ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு எப்பவும் எனக்கு பிடிபடாதது //

   ம்ஹூம்.. ஏதோ டமில் மட்டும் ரொம்ம்ம்ம்பப் பிடிப்பட்டு விட்டதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  3. ஹலோ மியாவ் :) நான் A எடுத்தேன் தமிழில் நீங்க D :)

   Delete
  4. அஞ்சூ... ஹா..ஹா..! இது நல்லா இருக்கே..:))

   Delete
 5. ///பதிவு சுயசரிதமாகவோ அலட்டலாகவோ இருக்கும் மன்னித்துக்கொள்ளுங்கள்.///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அட்வைஸ் ஜொள்ளுங்கோ எனக் கேட்டால் சுயசரிதை எழுதிட்டீங்க எண்டெல்லாம் ஜொள்ள மாட்டோம்ம்.... நாம ஆரூஊஊஊஊ:)) அன்ன மாக்கும் அன்னம்:)).. அதாவது அன்னம் என்ன பண்ணும் தெரியுமோ?:)).. சரி வாணாம்ம்ம் அதை விட்டிட்டு விசயத்துக்கு வாறேன்ன்..

  இளமதி இதில இருக்கும் முதல் மகிழ்ச்சி.. கூப்பிட்டமைக்காக எழுதிப் போஸ்ட் போட்டிட்டீங்க... அதுக்கு முதலில் நன்றி_()_

  அடுத்தது, நீங்க எழுதியுள்ளவற்றில் நிறைய அனுபவங்கள், பொறுமையைக் கடைப்பிடித்தல் என இருக்கு.. அப்போ அதிலிருக்கும் அட்வைஸ் ஐப் பொறுக்குவதுதானே நம் வேலை.

  ReplyDelete
  Replies
  1. //நாம ஆரூஊஊஊஊ:)) அன்ன மாக்கும் அன்னம்:)).. அதாவது அன்னம் என்ன பண்ணும் தெரியுமோ?:))//
   எப்ப தொடக்கம் நீங்க அன்னம்மாக்கா சே..சே.. அன்னமாகின்னீங்க?....
   பூஸ் எண்டுதானே உங்களை எல்லாரும் சொல்லீனம். நானும் அப்பிடித்தானே இவ்வளவு நாளும் நம்பிக்கொண்டிருக்கிறன்...:))

   Delete
  2. ஹா ஹா ஹா அது குணத்தால அன்னம்:)) ஹையோ ஹையோ இப்பூடி எல்லாம் குறொஸ் குவெஷன்ஸ் கேட்கினமே வைரவா:))

   Delete
 6. ///அன்பான பெற்றார்/// நெல்லைத்தமிழனுக்கு முன் நான் கண்டுபிடிச்சிட்டேனாக்கும்.. மீக்கு டமில்ல டி எல்லோ.. அது பெற்றோர்:) ஹா ஹா ஹா:)..

  மறந்திருந்த கிரிசாம்பாள் பெயரை நினைவு படுத்திட்டீங்க... மோதிரக் கதை தெரியும் பெயர் மறந்து விட்டிருந்தேன்...

  அப்போ நீங்க அவ்ளோ தைரியமா 4 வருடம் வெயிட் பண்ணி.. அப்பா அம்மாவிடம் பெர்மிஷன் வாங்கி கலியாணம் முடிச்சனீங்க.. இப்போ எதைப்பார்த்தாலும் பயம்ம்ம்ம்மாக்கிடக்கூ என நடுங்குறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  ///அப்போதுதான் அதிராவின் என்பக்கம் வலைத்தளம் அறிமுகமானது எனக்கு. அங்கும் அதிராவுக்கும் பின்னூட்டம் எழுதிவந்தேன்.///

  ஹலோ நீங்க பழசை மறந்திட்டீங்கபோல:)) இதுக்கு முன்னமே அறுசுவையில் நாங்க கை கோர்த்திட்டமே:)).. பிறகு என்னைக் காணாமல் நீங்க தேடித்திரிஞ்சு ஹைஷ் அண்ணனின் நட்புப் பகுதியில் வச்சுக் கண்டுபிடிச்சீங்க திரும்படியும் என்னை ஹா ஹா ஹா:))

  ReplyDelete
  Replies
  1. //ஹலோ நீங்க பழசை மறந்திட்டீங்கபோல:)) இதுக்கு முன்னமே அறுசுவையில் நாங்க கை கோர்த்திட்டமே:)).. பிறகு என்னைக் காணாமல் நீங்க தேடித்திரிஞ்சு ஹைஷ் அண்ணனின் நட்புப் பகுதியில் வச்சுக் கண்டுபிடிச்சீங்க திரும்படியும் என்னை ஹா ஹா ஹா:))//

   ஓம் அதிரா.. அறுசுவையையும் மறந்ததினால் எல்லாம் மறந்திடிச்சு!.. நீங்கள் சொல்லத்தான் நான் நினைவு கொள்கின்றேன்.
   ஹைஷ் அண்ணரை அங்கு வைத்துத்தானே நாம் அறிந்துகொண்டோம்...
   பின்னர்தானே அவர் தனக்கென வலத்தளம் உருவாக்கினார்... ஸ்..ஸ்..ஸ்...... வரவர நானே என்னை யாரெனக் கேட்கப்போகிறேன் போலகிடக்குகூ...:(
   உண்மையில் மறதி ஏற்கனவே இருக்கு. இப்ப கடந்த ஒரு வருடத்துக்குள் இன்னும் அதிகரித்துக்கொண்டு போகிறது.
   செக்கப் செய்தேன். மூளைக்கு இரத்தம் போகிறது ஸ்லோஓஓஓவாம்...:) இருந்தாற்போல் மயக்கமும் வரும்.... ஹா ஹா ஹா...:)

   எனக்கு எல்லாம் பயமயம்.... காத்து உரமாய் வீசினாப் பயம்! காக்கா கரைஞ்சால் பயம்! எங்களின் மீரா கொஞ்சம் சத்தமாய் மியாஆஆ என்று கத்தினாலும் பயம்... :))) தெனாலி போல எண்டு நினையுங்கோவன்...:)

   ஹா.. அதீஸ்!.. உங்களின் பாணியியில் கிரிசாம்பாள் கதையை ஒருக்கா ஶ்ரீராமுக்குச் சொல்லிவிடுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்..

   Delete
  2. //வரவர நானே என்னை யாரெனக் கேட்கப்போகிறேன் போலகிடக்குகூ...:(///

   அது ஓக்கே:) ஏன் அஞ்சுவைக்கூட ஆர்ரூஊஊஊஊஊ எனக் கேழுங்கோ பட் மீயை மட்டும் மறந்து போயும் கேட்டிடாதீங்க:) ஏன் நீஇங்க என் பெயரை கையில பச்சை குத்தக்கூடாது இளமதி?:) ஹா ஹா ஹா ஹையோ சரி விடுங்கோ முறைக்காதீங்கோ:)..

   என்னாதூஊஊஊஊஊ கிரிசாம்பாளை ஸ்ரீராமுக்கு அறிமுகம் செய்து வைக்கிறதோ?:)).. நோஓஓஓஓஒ நா வர மாட்டேன் உந்த வெளாட்டுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பிறகு மீதேன் கம்பி எண்ண வேண்டி வரும்:))... ஹா ஹா ஹா ஓகே..

   Delete
  3. அதானே பார்த்தேன் மியாவ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு உலகமே தேடி தெரியுது :) பச்சை குத்தினா கண்ணுமண்ணு தெரியாம அடி விழும் இளமதி :))

   Delete
  4. அய்யோ.. அப்பிடியா அஞ்சு.. வேணாம் பச்சை. கறுப்பில குத்திக்கிறேன்..
   அப்போ யாருக்கும் தெரியாதில்ல... :)))

   Delete
  5. சோகமான கதையை எழுதும்போது, அதில் எழுத்துப்பிழை காணலாமா? அதுவும்தவிர, அதிராவின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, மற்ற எல்லார் எழுத்திலும் negligible பிழைதான் இருக்கு என்பதால் அதைப் பற்றி எழுதமாட்டேன் :-)

   Delete
 7. /// நான் இல்லை எனக்கு வேண்டாம் என்ன எழுதுவதென எனக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்லி அழுதும் விடாப்பிடியாக அதிராவே இந்த இளையநிலாவை உருவாக்கித் தந்தார். எழுதுவற்குக்கூட அதிராவிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.///

  அந்த ஃபீஸ் இன்னும் தந்து முடிக்கேல்லை நீங்க மறக்க வாணாம்ம்ம்:))...

  அட்வைஸ் என... எல்லோரும் அரைச்ச மாவையே திருப்பி அரைக்காமல்.. இப்படிச் சொன்ன விதமும் அழகுதான்...

  நல்லாத்தான் இருக்கு ... உங்கள் போஸ்ட்டை அடிக்கடி எதிர்பார்க்கிறேன்ன்.. அடுத்து குயில் கார்ட்:))

  மேலே இருக்கும் குயிலில் செய்த குட்டி அக்காவை:) முன்பு இங்கு போட்டிருக்கிறீங்கதானே.. சூப்பர்ர்ர்:)..

  ReplyDelete
  Replies
  1. //அந்த ஃபீஸ் இன்னும் தந்து முடிக்கேல்லை நீங்க மறக்க வாணாம்ம்ம்:))...//
   ஓம் அதிரா... எப்ப தந்து முடிப்பனோ? இந்தப் பிறப்பில முடியாது எண்டுதான் நினைக்கிறன். அடுத்த பிறவியில் வட்டியோடு தாறேன்...:)

   க்விலிங் தங்கச்சிக்கு இல்ல அவ உங்கட அக்கா. அவக்கு 3 வயசாகுது.
   புதுசா ஏதும் செய்ய இனித்தான் பேப்பர், பசை எல்லாம் தேடோணும். அஞ்சு ரீச்சர் என்ன செய்யோணும் எண்டு ஹோம்வேர்க் தந்திட்டா. கெதியா செய்து காட்டுறேன்...:)

   சந்தோசம் அதிரா! உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இன்னும் வழிநடத்தும்!
   என்றென்றும் இது நிலைக்க வேண்டிக்கொள்கிறேன்.

   நன்றிகள் பலவோடு என் இனிய வாழ்த்துக்கள் அதிரா!

   Delete
  2. ///ஓம் அதிரா... எப்ப தந்து முடிப்பனோ? இந்தப் பிறப்பில முடியாது எண்டுதான் நினைக்கிறன். அடுத்த பிறவியில் வட்டியோடு தாறேன்...:)//

   ஹலோ உந்தக் கதை எல்லாம் வாணாம்ம்.. எனக்கு அடுத்த பிறப்பில் எல்லாம் நெம்ம்ம்பிக்கை இல்லை:))..

   ///க்விலிங் தங்கச்சிக்கு இல்ல அவ உங்கட அக்கா. அவக்கு 3 வயசாகுது///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதைத்தானே மீயும் ஜொன்னேன்ன்:)) என்னமோ ஆச்சு இளமதிக்கு ஹையோ ஹையோ:))

   Delete
 8. சிலரது ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுத்து முன்னேற்றுவது நல்லது அதனினும் நல்லது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வது வாழ்த்துகள் நிலா உங்கள் பதிவுகளை நான் ரெகுலர்ராகவாசிப்பவன் க்வில்லிங் செய்ய ஆர்வம் ஏற்படுத்தியதும் ஒரு விதத்தில் நீங்கள்தான் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையாராவது எழுதுவார்களா என்றி ருந்தது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள் ஐயா!

   தங்களின் ஆதரவு கண்டு மனம் மகிழ்வெய்தினேன்.
   சிலர் வாழ்வில் சிலவகையான துன்பம் தொடராகிறது.
   தொடக்கம் என்றொன்றிருந்தால் முடிவு என்பதும் இருக்கும்.
   நல்லவையே எல்லோருக்கும் நடக்கட்டும்!

   க்விலிங் நீங்கள் செய்து பார்த்தீர்களா ஐயா?
   எனக்குக் க்விலிங் ஆசிரியை காகிதப் பூக்கள் வலைத்தளப் பதிவர் ஏஞ்சலின் - அஞ்சு அவர்களே!
   அவரின் வலைத்தளத்தில் இன்னும் அழகான க்விலிங் செய்து போட்டிருக்கிறார்.

   அன்பான வரவுடன் ஆதரவாய் ஊக்கம் தரும்வகையில் கருத்திட்டீர்கள்.
   உளமார்ந்த நன்றியுடன் என் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 9. I am at work now.i will come later

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே! வணக்கம்!
   வரவு கண்டு மிகுந்த சந்தோஷம் கொள்கின்றேன்!

   தங்களின் தொடர் இங்கே என்னையும் விடவில்லை...:)

   Delete
 10. மனம் கனமாகி விட்டது இளமதி உங்கள் பதிவைப்படித்த போது!வேறு எதுவும் எழுத எனக்கு வார்த்தைகள் வரவில்லை!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா!

   இங்கு மறைக்கப்பட வேண்டிய என் வாழ்வின் சில பக்கங்கங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டியதாயிற்று. பதிவின் அவசியம் கருதி சில விடயங்களை எழுதிவிட்டேன்.
   எல்லோரும் அன்பு நிறைந்த அதே சமயம் இளகிய மனமுடையவர்கள்.
   வருத்தம் தரச் செய்தது கொடுமைதான்.
   இனி இப்படி எழுதிட அவசியம் ஏற்படாதென எண்ணுகிறேன்!

   அன்பான கருத்திற்கு உளமார்ந்த நன்றி அக்கா!
   வாழ்த்துக்கள்!

   Delete
 11. வணக்கம் சகோ !

  விரிவான பதிவாக இருந்தாலும் அழகாக இருக்கிறது கா
  அட யாருக்குத்தான் வலிகள் இல்லை எல்லாவற்றையும் கடந்து இன்று தைரியமாக எழுந்து நிற்கும் உங்களைப் பார்த்து இன்னும் பெருமை கொள்வார்கள் உங்கள் அன்புக்கு உரியவர்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன் பழைய இளமதி யாக மரபுக் கவிகளோடு விரைவில் வாருங்கள் எதிர் பார்க்கிறேன் .....! ஆமா எப்போவாவது நலம் விசாரிக்கும் என்னையுமா அதிரா அஞ்சு பட்டியலில் சேர்த்து இருக்கீங்க அவ்வ்வவ்வ் ......

  எல்லாவற்றுக்கும் பதில் நாளை சொல்கிறேன் ஆமா ஆண்டு தொடங்கிய முதல் நாளே மூச்சு முட்ட வேலை செய்தோம் அது இன்றும் தொடர்கதையா போய்க்கிட்டு இருக்கு இதில தொடர்பதிவு வேறயா ம்ம்கும் ஒரு பதிவு இடவே ஒருநாள் விடுமுறை எடுக்கணும் போல இருக்கே அப்படி விடுமுறை எடுத்தாலும் பதிவு எழுதுவது என்பது இப்போதைக்கு ம்ம்ஹூம் ......அன்பின் வேண்டுகையை நிராகரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் முடிந்தால் எழுதுகிறேன் கா ........................

  மீண்டும் சந்திப்போம் வாழ்க நலம்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ சீராளன்! வணக்கம்!

   ஆமாம் சோகமில்லா வாழ்வு என்று யாருக்கும் இல்லை.
   ஆனால் அதிலிருந்து வெளிவருவதில்தான் நாம் வித்தியாசப்படுகிறோம்.
   ஒரு சிலரால் சில நாட்கள், வாரங்கள், மாதங்களில் தங்களைச் சுதாகரித்திட முடிகிறது.
   நான் ஒரு விதமானவள்! ஒரு தந்தையின் கைவிரல்களைப் பிடித்துக் கொண்டு நடக்கும் சின்னப் பிள்ளை போல் என்னவரோடு என் வாழ்க்கை இருந்தது.
   அது இன்றில்லாமல் பொய்த்துப் போனதை ஏற்கவும் முடியாமல், ஏமாற்றத்தை ஜீரணிக்கவும் முடியாமலின்னும் இருக்கிறேன்...
   இருப்பினும் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வலையுலகால் தெளிவடைகிறேன் சகோ!

   மரபில் பாடப் பயமாக இருக்கிறது. சோகம் என் ஞாபக சக்தியையும் எழுதும் ஆற்றலையும் விழுங்கிவிட்டது போலை இருக்கிறதே...:(
   முயற்சி செய்கிறேன் சகோ! நீங்களும் சகோதரர் நெல்லைத் தமிழனும் தவறிப் போனால் மீண்டும் சரியான பாதைக்கு எனைக் கூட்டி வருவீர்கள் என கொஞ்சம் துணிவும் வருகிறது.

   சரி.. வேலைப் பழு உங்களுக்கு ஒத்துக் கொள்கிறேன். வாரத்தில் கிடைக்கும் ஒருநாள் விடுமுறையிலாவது உங்கள் வலைத்தளத்தில் எழுதலாமே!...
   முயற்சி செய்யுங்கள் சகோ! காத்திருக்கின்றோம்!

   அன்பான வரவும் உறுதுணையான உங்கள் கருத்துங்கண்டு மனம் நிறைந்தேன்!
   நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 12. வாழ்க்கையில் அதிகம் பொறுமை சாதித்தவர் நீங்கள். வலையில் உங்களுடன் நட்பு பாராட்டுவதுக்கு என்போன்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்பேன் .ஈழம் பலரை நிர்க்கதியாக்கிவிட்டது பொருளாதாரத்தில்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ நேசன்!

   உண்மையிலும் பொறுமை பெரிய சாதனைதான். எனக்கு அம்மா றோல்மொடலா இருந்தா. அதுவே எனக்கும் பயிற்சி ஆகிடிச்சு...
   உங்கள் அன்பும் எனக்கும் அத்தகையதே நேசன்...:)

   Delete
 13. தொடர்ந்து எழுதுகள் உங்களின் கவிச்சேவை எங்களுக்கும் வழிகாட்டட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆகட்டும் நேசன். கட்டாயம் எழுதுவேன்!

   அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete
 14. காதலில் புதுமையே படைத்துவிட்டீங்கள்)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்:) நேசன் பொறுத்தது போதும்:) இம்முறையாவது ஸ்நேகாவைச் சந்தித்து லெட்டர் குடுத்திட்டு வாங்கோ:))

   Delete
  2. அட.. அப்படியா? ..:) ஆமாம் இற்றைக்கு 30, 35 வருடங்கள் முன்னர் காதல் என்னும் சொல்லையே சத்தமாகச் சொல்லவும் முடியாதெல்லோ?

   இதற்குள் காதலித்து அதை 4, 5 வருடமாகப் பெற்றோருக்கும் தெரியாமல் காத்தது சாதனைதான்..:))

   Delete
 15. கிரிசாம்பாள்? மோதகத்துக்குள் மோதிரம்? அபுரி! இந்தக்கதை கேள்விப்பட்டதில்லையே...

  ReplyDelete
  Replies
  1. அது ஸ்ரீராம்... கிரிசாம்பாள் கிரிசம்பாள் என ரெண்டு பேர் இல்லை:) ஒரு சின்னப்பிள்ளை இருந்தவ, அவ மிக மிகப் பொறுமைசாலி.. ரொம்ப அடக்கொடுக்கமான அமைதியான பொண்ணு.. கிட்டத்தட்ட அதிராவைப்போல என வச்சுக்கொள்ளுங்கோவன்:))..

   ஹையோ கதை படிச்சதும் சுக்கு இருநூறாக் கிழிச்சு கீதா போன அந்த மலைப்பகுதில வீசிடுங்கோ பிளீஸ்:))..

   அந்தக் கிரிசாம்பாள் இருந்த ஊரில இருந்த ஒரு கோயிலில், எப்பவும் குழந்தைகளுக்கு பிரசாதம் குடுப்பார்களாம், அப்போ எல்லாக் குழந்தைகளும் அடிபட்டு இடிபட்டு... முன்னுக்கு ஓடி வந்து நல்லது.. பெரியது எல்லாம் எடுத்து விடுவார்களாம், இந்தக் கிரிசாம்பாள் பொறுமையாக நின்று, முடிவில் மிஞ்சும் உடைஞ்சது, நொருங்கியது இப்படி இருப்பதை எடுத்துக் கொண்டு போவாவாம்...

   இதை அவதானிச்ச கோயில் ஆட்கள், ஒருநாள் நிறைய பெரிய பெரிய மோதங்கள் அவிச்சு, முடிவில் ஒரு குட்டி மோதகம் அவிச்சு, அதுக்குள் ஒரு பவுண் மோதிரம் வைத்து விட்டார்களாம்.

   குழந்தைகளைக் கூப்பிட்டதும், எல்லோரும் ஓடி வந்து அடிபட்டு பெரிய மோதகங்கள் அனைத்தையும் தூக்கி விட்டார்களாம், இந்த குட்டி மோதகம் மட்டும் எஞ்சியதாம், கிரிசாம்பாள் சிரிச்சபடி அந்த குட்டி மோதகத்தை சந்தோசமாக எடுத்துப் போனாவாம்..

   பார்த்தால் அதுக்குள் தங்க மோதிரம்...அது கடவுள் கொடுத்தார் கிரிசாம்பாளின் பொறுமைக்கு என ஏனைய குழந்தைகளுக்கு சொல்லப்படதாம்... அப்போ பொறுமையாக இருப்பின் கடவுள் நல்லது செய்வார் என்பது போல கதை முடியும்...

   பொறுத்தார் பூமி ஆழ்வார்.. இப்படியும் இருக்குதெல்லோ.. இது குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதை.

   Delete
  2. வாங்கோ சகோதரர் ஶ்ரீராம்!

   நான் எள் என்னும் போதே அதிரா எண்ணையையே கொண்டுவந்துவிட்டார்.

   கிரிசாம்பாள் கதையை அதிராவை அழகாக எழுதித்தாருங்களேன் அதுவும் அவர் பாணியிலேயே என்று கேட்டேன். எத்தனை அன்பு என்னில் பாருங்கள் சகோ...
   உங்களுக்காக அழகாக எழுதி இங்கே பதிந்துவிட்டுள்ளார்.

   அன்பிற்கு மிக்க மிக்க நன்றி அதிரா!..

   Delete
  3. //ரொம்ப அடக்கொடுக்கமான அமைதியான பொண்ணு.. கிட்டத்தட்ட அதிராவைப்போல என வச்சுக்கொள்ளுங்கோவன்:)).//

   சாமி என்கண்ணில் இதெல்லாம் படணுமா :) படிச்சி கண்ணே கலங்களா தெரியுது :)

   Delete
  4. சிரிச்சு முடியலை அஞ்சு.... :)))

   Delete
  5. இந்தக் கதை பற்றி இன்றுதான் தெரியும். என்றாலும் இது போல எத்தனைக் கதைகள்! தேவதையும் தங்கக் கோடரிக் கதை கூட கிட்டத்தட்ட இந்த ரகம். நன்றி அதிரா.

   Delete
  6. //படிச்சி கண்ணே கலங்களா தெரியுது :)//

   //கலங்களா// = கலங்கலா !!

   ஹா.... ஹா.... ஹா... ஏஞ்சல்... சும்மா அதிரா என்ன சொன்னாலும் சண்டைக்கு நிக்கறீங்க நீங்க!!!!

   Delete
  7. garrr :) அது சும்மா டைப்பிங் எரர் :)

   Delete
 16. //நானும் "பொறுமை" என்றால் என்ன என்பதனை என் அம்மாவிடமிருந்தேகற்றேன்! //

  ஆமாம். அட்வைஸ் செய்துதான் கற்கவேண்டும் என்பதில்லை. நல்ல மனிதர்களை - நல்ல குணங்களை அவர்களிடமிருந்து, அவர்களை பார்த்து நாமாகவே கற்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை உண்மை சகோ!

   இப்பகூட நான் கவலைகளை எப்படி ஒதுக்கி இயல்பாகக் கலகலப்பாக இருப்பது என்பதை அதிரா அஞ்சு ஆகியோரிடம் அனுபவத்தில் கற்கிறேன்.
   இப்படி உங்கள் அனைவரின் தொடர்பு கிடைத்ததும் இறைவனால் தரப்பட்ட நல்ல வரமே!

   Delete
 17. //சொன்னால் நம்பமாட்டீர்கள் என் சித்திக்கும்எனக்கும் 5 வயதில் தான் வித்தியாசம்...//

  இது எங்கள் வீட்டிலும் உண்டு!! என் சித்தி என் அக்காவை விடஇளையவர். என் மாமன் எனக்கு நான்கு வயதே மூத்தவர், என் அண்ணனுக்கு இளையவர்!

  ReplyDelete
  Replies
  1. என் மனைவிக்கு இரண்டு சித்திகள் இளையவர்கள்

   Delete
  2. ஓ.. அப்படியா சகோதரர் ஶ்ரீராம் & G M B ஐயா!..:)

   இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் பல குடும்பங்களில் இப்படியான வயது வித்தியாச நெருக்கம் இருந்திருக்கிறது போலும்!

   அன்பான வருகைக்கும் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு இருவருக்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete


 18. அந்தக் கஷ்டத்திலும் தமிழ்ச் சேவை செய்தது பாராட்டத்தக்கது. அதிரா, அஞ்சு நட்புகளின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாராட்டுகள். அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. என் கணவரின் தமிழ்மொழிப் பற்று மிகத் தீவிரமானது! அவருடன் நானும் சேர்ந்து மிக விருப்பமுடனேயே இயங்கினேன்.
   தொடர்ந்து பணியாற்ற முடியாமல் இவர் பணி அதிகமாகிவிட்டது. அதனால் வேறொருவரிடம் கையளித்தேன் மிகுந்த கவலையோடு.

   இப்போ அது நடைபெறுகிறதோ தெரியவில்லை. சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டதாக அறிந்தேன். பணி செய்தவரை மகிழ்வே!

   அதிரா அஞ்சுவின் அன்பு அளப்பரியது சகோதரரே!
   காலம் முழுவதற்கும் என் நன்றி அவர்களுக்கு இருக்கும்!

   Delete
 19. கடல்களுக்கு நடுவில் கரையேறிவிட்டீர்...வாழ்க்கைப் பயணம் ஒன்றும் எளிதல்ல என்பதே ஒரு அட்வைஸ்தான்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரர் கலியப்பெருமாள்!

   ஆமாம் அப்படித்தான் நானும் எண்ணுகிறேன்.
   காலம்தான் காயத்திற்கு மருந்தாகும்!

   அன்பான வருகைக்கும் கருத்திற்கும் உளமார்ந்த நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

   Delete
 20. மனம் தளர்ந்த போதும் மீண்டெழுந்து நிற்கும் தங்களை மனதார வாழ்த்துகிறேன்..

  சோதனையும் வேதனையும் யாருக்குத் தான் இல்லை!..
  அவற்றையெல்லாம் உரமாக்கிப் போட்டு வாழ்வில் உயர்ந்து நிற்க வேணும்..

  அதனை நீங்கள் செய்திருக்கின்றீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துரை ஐயா!

   உங்களைப் போன்றோரின் அன்பும் ஆதரவும் என்னைத் தூக்கி நிறுத்தியுள்ளது!
   எல்லாவற்றையும் கடந்து போக வேண்டும்.
   சோதனை எழுதப் போகும் மாணவனாய் எனக்கு நானே துணிவாயிரு, கவலையை விடு என்று சொல்லிச் சொல்லிப் பாடமாக்கிச் செயற்படுத்த முனைந்துள்ளேன்.

   இன்னும் சிறிதுகாலத்திற்குள் எல்லாம் சரியாகிவிடும்!

   அன்பான வரவிற்கும் உரிமையான கருத்துரைக்கும்
   மனதார நன்றி சொல்கிறேன்! இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 21. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் பாடமே அனுபவமாக, அறிவுரையாக் மாறிவிடுகிறது. உங்க வாழ்க்கையின் பாடத்தினை அருமையா எழுதியிருக்கிறீங்க இளமதி.
  மற்றவர்களின் பாடங்களிருந்தும் நாம் கற்கலாம்.
  பழைய க்விலிங் பார்க்க மகிழ்ச்சி. திரும்ப செய்யுங்க. எடுத்து தூசு தட்டுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பிரியா! வணக்கம்!

   அதைத்தான் நானும் சொன்னேன் பிரியா. அட்வைஸ் என்பது சொல்லித்தான் கிடைப்பதல்ல.. அனுபவத்தில் கண்ட கேட்ட அனுபவித்த பாடங்களே அட்வைஸ் ஆகிறது.
   நாம் மண்ணுக்குள் போகும்வரை இந்த அட்வைஸ் - அனுபவங்கள் எமக்குக் கிடைத்துக் கொண்டேஇருக்கும்தானே.

   எல்லாவற்றையும் ஈஸியாக ஏற்றுக் கொண்டால் மகிழ்வு மிஞ்சும்!

   க்விலிங் வேறு செய்ய வேண்டும். அனுபவப் பாடம் கற்கும் சிறுமி நான் என இப்படத்தை இங்கு இட்டேன்..:))

   நான் எப்பவோ தூசு தட்டியாச்சு! அங்கேதான் கொஞ்சமாகிலும் வெளிச்சம் வர இன்னும் யன்னலே திறக்கேலை..கர்ர்ர்ர்..:) எப்போஓஓ???..:)

   அன்பான வரவுடன் இனிமையான கருத்திற்கு
   உளமார நன்றியுடன் வாழ்த்துக்கள் பிரியா!

   Delete
 22. இளமதி இந்த பதிவு எனக்கென்னவோ மிக சுருக்கமாக எழுதிய போல இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சகோதரரே!..

   இதுவே படிப்போர் மனதை ரொம்பத் தாக்கிவிட்டதாக நான் நினைக்கிறேன்.

   நானே இதை இன்னொருவர் எழுதியதாக எண்ணிப் பார்க்குமிடத்தில் படித்தால் வலியைத் தாங்கிக் கொள்ளமாட்டேன்.
   அன்பு வலையுறவுகள் மனதைக் கூறுபோடக் கூடாது. இதுவே பதிவிற்கு அவசியமானதைச் சொல்ல வேண்டி அவற்றை மட்டும் இங்கு பதிவிட்டேன்.

   Delete
 23. நான் எதை எதிர்பார்த்து இந்த பதிவை எழுத வலைத்தள நண்பர்களிடம் வேண்டு கோள் விடுவித்தேனோ அதை மிக முழுமையாக இங்கே காண்கிறேன் உங்களுக்கு நேரம் இருந்தால் எழுத மனமிருந்தால் இங்கே நீங்கள் சொல்லியதை இன்னும் விரிவாக நீண்ட தொடராக எழுதுங்கள்.

  உங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு ஜெர்மன் வந்தது அதன் பின் 14 வருடங்கள் உங்கள் கணவர் கோமாவில் இருந்த பொது நீங்கள் கவனித்து கொண்டது இரண்டும் மிக முக்கிய அம்சம் அதன் பின் உங்கள் குழந்தைகளை வளர்த்தது மிக முக்கியமான விஷயம்

  அதை பற்றி கொஞ்சம் விரிவாக எழுதி எப்படி வாழ்க்கையை எதிர் கொண்டீர்கள் என்பதை விளக்கினால் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களும் இது ஒரு அனுபவ பாடமாக இருக்குமே ...ப்ளிஷ் முடிந்தால் எழுதுங்க்ளேன்.. இன்றைய காலத்தில் பலரும் சிரிது கஷ்டம் வந்தாலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் அப்படி பட்டவர்களின் கண்களில் உங்கள் வாழ்க்கை அனுபவம் படிக்க கிடைத்தால் சோர்ந்து போகாமல் வாழ்க்கையில் முன்னேறுவார்களே.... அதற்காக இதை செய்வீர்களா/

  ReplyDelete
  Replies
  1. ///நான் எதை எதிர்பார்த்து இந்த பதிவை எழுத வலைத்தள நண்பர்களிடம் வேண்டு கோள் விடுவித்தேனோ அதை மிக முழுமையாக இங்கே காண்கிறேன்///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   //வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களும் இது ஒரு அனுபவ பாடமாக இருக்குமே///

   ஹலோ ட்றுத்:) இதுக்குத்தான் அதிராவிடம்.. அஞ்சு விடம் அட்வைஸ் கேய்க்கச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:))

   Delete
  2. எழுதிவிடலாம் சகோ! ஆனால் படிப்பவர் மனசு வேதனைப்படும். இந்தப்பதிவில் சந்தோஷம்+ இன்னல்கள் என்று எல்லாம் கலந்திருந்தும் இங்கே இதனைப் படித்தவர்கள் அனைவருமே மனம் கனத்துப் போனதாகச் சொல்கின்றனர். காரணம் சந்தோஷத்தைவிட வேதனை தந்த விடயங்களால் ஏற்பட்ட மனவலி.
   இதுவே அதிகமாயிற்றோ என எண்ணி மனம் குறுகிப் போனேன் நான்.

   தங்கள் ஆதங்கம் புரிந்தேன் சகோதரரே! இதனைப் படித்தாலே எப்படித் துன்பச் சுழலுக்குள்ளால் நான் வெளியே வந்தேன் வருகிறேன் என ஓரளவுக்குப் புரியும் என எண்ணுகிறேன்.

   அன்பான வரவுடன் ஆத்மார்த்தமான உங்கள் கருத்திடுகைக்கு
   என் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete
 24. உங்களுக்கு வலைத்தளம் அமைத்து எழுத சொன்னது அதிராவா.... ஆஹா அதிரா செய்த நல்ல காரியத்தில் இதுவும் ஒன்றா அல்லது இது மட்டும்தானா...... சரி சரி நல்லது பண்ணிய அதிராவிடமிருந்து அவர்கள் நெக்லஸை ஒரு வாரத்திற்கு கேட்டு தொந்தரவு பண்ண மாட்டேன் தேம்ஸ் நதியில் குதிக்க சொல்ல மாட்டடேன்

  ReplyDelete
  Replies
  1. ஓ மை கடவுளே.. புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்ன்ன்:)).. இது அதுவா இருக்குமோ:) எதுக்கும் ஒரு கிழமைக்கு தேம்ஸ் பக்கம் போக மாட்டேன்ன்:).. நெக்லெஸ் ஐ கண்ணாலும் பார்க்க மாட்டேன்ன்.. இது இளமதியில் இந்த போஸ்ட்டில் இருக்கும் முதல் எழுத்தின் மேல ஜத்தியம்ம்ம்:)))

   Delete
  2. ஹா.. ஹா.. எமது அதிராவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்லவில்லைப் போலும் சகோ!
   என்னைப் பொறுத்தமட்டில் உதவி என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அங்கே நிற்பார்!
   அன்பானவர்!..:)
   இந்த நெக்லெஸ் மாட்டர் எனக்கொண்ணும் தெரியாது. அதை அவங்களிடமே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்…:)))

   Delete
 25. அதிரா மற்றும் ஏஞ்சலுக்கு என் கண்டங்கள் எங்க்கு ஏன் இதற்கு முன்னால் ஆதரவு தரவில்லை 2010 ல் இருந்து மாமியிடம் பூரிக்கட்டையால் அடிவாங்குவதை பதிந்து வந்து இருக்கிறேன் பாவம் ஒரு அப்பாவி அடிவாங்குகிறானே அவனுக்கு வந்து ஒரு ஆறுதல் சொல்லக் கூட இல்லையே. ஹும்ம் இனிமேல் நீங்கள் சமைப்பது எல்லாம் சிறிது காலத்திற்கு ராமசேரி இடிலி போல இருக்க கடவுவது என்று சாபமிடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. அஞ்சூஊஊஊஊஊஊ ஓடிக்கமோன்ன்ன்ன்.. எதுக்கோ? ட்றுத்துக்கு ஆவரவு வெரி சோரி ஆதரவு:) கொடுத்திடலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

   Delete
  2. எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு .ஆமா ட்ரூத் இன்னிக்கு வாட்ஸாப்பில் ஒரு படம் அனுப்பினீங்களே ஒரு சைனீஸ் கேர்ள் செம கியூட் அழகா இருக்கா அந்த பொண்ணு :) பேர் கூட எதோ லீமா Yu Yan னு சொன்னிங்க இல்லை sooo ஸ்வீட் ..

   Delete
  3. ட்ரூத் இந்த ஆதரவு போதுமா இல்லை இன்னும் வேணுமா :)

   Delete
  4. என்னாதூஊஊஊஉ யூ மீன் ... இது வேற மீன்ன்ன்?:)).. சைனீஸ்ஸ்ஸ்.. குட்டி மூக்கு குட்டிக் கண்ணோட:) அந்தப் பொண்ணு படம்?:) ஹையோ நேக்கு இங்கின வடிவேல் அங்கிள் கொமெடி வந்து தொலைக்குதேஏஏஏஏஏஎ:))..

   ஒருவருக்கு....... ......... :))
   சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

   Delete
 26. எத்தனை இன்னல்கள்... இத்தனையும் கடந்து வந்ததே பெரிய வாழ்க்கைப் பாடம். இப்பதிவினை படிப்பதன் மூலம் மற்றவர்களும் பல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே தங்களின் அன்பான கருத்திற்கு!
   வாழ்த்துக்கள்!

   Delete
 27. வணக்கம் இளமதி...

  இதுவரை இந்த 3 நாட்களில் 5 முறை வாசித்து விட்டேன் ..பதில் தான் தாமதமாக...


  பதில் இட என வாசிப்பேன்...ஆனால் இயலவில்லை இருப்பினும் மீண்டும் மீண்டும் வாசிக்க தோணியது...

  ரொம்ப அழகாக கோர்வையாய் எழுதி இருக்கீங்க..

  பல பல அனுபவங்கள் ...பல இன்னல்களின் வழி...
  அதில் உள்ள அன்பையும் ...மகிழ்வையும் மட்டும் நாம் ஏற்றுக் கொள்வோம்...

  அழகிய குயிலிங் பாப்பா..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு!

   பதிவினால் ஏற்பட்ட பாதிப்போ?… உங்கள் மனநிலையைப் புரிந்தேன்.
   ஆமாம் இதுவும் கடந்து போகட்டும்! போகும்!

   க்விலிங் இது முன்பு செய்தது அனு. ஆமாம் அழகான பாப்பாதான்.
   எனக்கும் பிடித்த பாப்பா..:)

   ஆதரவாய் வந்து எழுதிய பின்னூட்டம் என்னை நெகிழ்த்தியது அனு!
   நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete
 28. படித்தேன். உங்கள் தமிழார்வம் உங்கள் கணவரால் தூண்டப்பெற்றதா?

  ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தோர் வாழ்வில் இத்தகைய சோகக் கதைகள் இல்லாமல் இருக்க இயலுமா? கண்காணாத தேசம், புதிய கலாச்சாரம், வேரை மறக்க முடியாத மனது ஆனால் புதிய கலாச்சாரத்தில் வளரும் மக்கள் - மிகுந்த கடினமான வாழ்க்கைதான். பொதுவா வாழ்க்கை என்பதே வருத்தங்களும் சோகங்களும் நிறைந்து, அவ்வப்போது பாலைவனச் சோலைபோல் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறுவதுபோல்தானே இருக்கின்றது.

  கிரிஜா - பார்வதி தேவியின் பெயர். அதனை கிரிஜா அம்பாள் - கிரிசாம்பாள் என்று கூப்பிடும் பெயராக இருந்ததுபோலிருக்கு.

  'எங்கே வாழ்க்கை தொடங்கும்
  அது எங்கே எவ்விதம் முடியும்
  இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம்
  என்பது யாவர்க்கும் தெரியாது'

  பிபி ஸ்ரீனிவாசன் அவர்கள் குரலில் கண்ணதாசன் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

  ஒரு மரபுக் கவிதையோடு முடித்திருக்கலாம். இடுகை ரொம்ப நீளமாக எனக்குத் தெரியவில்லை.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் சகோதரரே!

   மகிழ்ச்சியைப் போன்று சரிசமனாகச் சோகங்களும் பலர் வாழ்க்கையில் உள்ளதுதான்.
   என்ன செய்வது.. ஊரில் உறவுகளுடன் ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது. இங்கு உறவுகள் இருந்தாலும் அவரவர்க்குள்ள பிரச்சனைகளைக் கையாளவே நேரம் போதாமல் இருக்கின்றனர். எல்லாவற்றையும் நாம் தனித்தே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

   இக்கதையில் கிரிசாம்பாள் என்றே பெயரைச் சொல்லிக் கதை சொல்லுவார்கள்…:)
   உங்கள் விளக்கம் சரியானதுதான்.

   மயக்கமா கலக்கமா பாடலில்வரும் அருமையான வரிகள் இவை. இதுபோல் மனதைத் தொடும் பழைய பாடல்கள் ஏராளம் உண்டு. நானும் அறிவேன். நினைவு படுத்தினீர்கள் சகோதரரே நன்றி!

   இப் பதிவு எழுதும்போது மனமும் கனத்துப் போனது. பின்னர் கவிதை எழுத இயலவில்லை. அப்படியே பதிவிட்டுவிட்டேன்.
   வேறு கவிதைப் பதிவு விரைவில் இடுவேன். பார்த்துக் கருத்தினைக் கூறவேண்டும் என இப்பொழுதே வேண்டிக் கேட்டுகொள்கிறேன்!

   அன்பான வரவுடன் அருமையான கருத்துப் பதிவிட்டமை கண்டு
   உள்ளம் மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

   Delete
  2. @நெல்லைத்தமிழன் ..இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஷ ,ஜா போன்ற வார்த்தைகளில் எழுதும்போது ச என்றே சொல்கிறாரகள்
   இதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன் அதேபோல் ஸ்ரீ என்பதற்கு பதில் சிறி .சிறிராம் /சிரி ராம் என்றும் எழுதுவதை பார்த்தேன் :)

   அதேபோல் கவுதம் என்றுதான் சொல்வாங்க கெளதம் என்பதற்கு

   Delete
  3. ஹலோ அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்படி எல்லாம் இல்லை... தப்பு தப்பா, எல்லாம் தெரிஞ்ச ஆள் மாதிரி நெல்லைத் தமிழனுக்கு சொல்லக்குடா கர்ர்ர்ர்ர் ..:). நாங்க ஜா வை ஜா எண்டேதான் சொல்லுவோம் சா வை சா எண்டுதான் ஜொள்ளுவோம்... இக்கதையில்... அவவுக்கு கிரிசாம்பாள் எனத்தான் பெயர் வரும்...

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) அப்போ எதுக்கு நிறைய இலங்கை தமிழர்கள் யேர்மனி னு சொல்றாங்க :) அனுஷா வை அனுஸா னுதான் சொல்றாங்க

   எங்கிட்ட வம்பு வேணாம் நானா ப்ரூபோட எடுத்துக்காட்டுவேன் . :) தமிழில் D எடுத்த மியாவ்

   ரவைக்கு றவ்வை னு எழுதற பூனை பேசற பேச்சைப்பாருங்க மக்களே ஹஆஹாஆ

   நெல்லைத்தமிழன் சபைக்கு வரவும் இதுக்கு முடிவு கட்டாம விட மாட்டேன் :)

   Delete
 29. http://imaasworld.blogspot.co.nz/2018/01/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி இமா! தங்கள் பதிவினையும் வந்து பார்த்துக் கருத்திட்டேன்!
   வித்தியாசமான அனுபவங்கள்!
   அருமை!நன்றியுடன் வாழ்த்துக்கள் இமா!

   Delete
 30. அன்பு இளமதி, இத்தொடர் பதிவுக்காய் என்னை அழைத்தமைக்கு முதலில் என் அன்பும் நன்றியும்.

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி கீதா!
   எழுத்தாளரான உங்களை இணைத்தால் நிறைய வித்தியாசமான அனுபவங்களைப் பெறலாம் எனும் ஒரே நோக்கில் இணைத்தேன்.

   பதிவாக்கிவிட்டீர்கள்! பலன் பெற்றேன் நானும்!
   உங்களுக்குத்தான் என் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 31. முன்பே உங்களுடைய இப்பதிவை வாசித்துவிட்டேன். ஏராளமாய் உணர்வுக்கலவையில் சிக்கி எதுவுமே எழுதத் தோன்றாமல் திரும்பிவிட்டேன். உங்கள் வாழ்க்கை பற்றி பல விவரங்கள் அறிந்து வியந்தேன். சாதாரணமாய் கிடைக்ககூடியவற்றையும் போராடிப் பெறவேண்டிய போராட்டகரமான வாழ்க்கைச்சூழல். உண்மையில் உங்கள் வாழ்க்கை எங்களுக்கு படிப்பினை. அம்மா கற்றுத்தந்த பொறுமை, சித்தி கற்றுத்தந்த துணிவு, கணவர் கற்றுத்தந்த தன்னம்பிக்கை என வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலிலும் நீங்கள் பயின்றுவந்தவற்றை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மனம் நிறைந்த நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. எனது வாழ்க்கை அனுபவமும் படிப்பினைத்தந்தது என்றால் எனக்கு வியப்பாக இருக்கிறது.
   என் வாழ்க்கையை அனுபவத்தை புலம்பல் எனும் பெயரிட்டுத்தான் நான் சொல்கிறேன்..:)

   காலம் எம்மைக் கடத்திக் கொண்டு அல்லது நடத்திக் கொண்டு போகிறது. ஒருவர் அனுபவம் இன்னொருவருக்கு ஒரு பாடமாக அமைகிறது. அதில் என் அனுபவமும் கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்பது போல இவர் இருக்கும்வரை இப்போ இவரில்லா நிலை எனப் பிரிக்க வேண்டும். பிற்பாதி ஆரம்பித்துள்ளது. இதிலும் எதிர்கொள்ளும் உளவியற் சிக்கல்கள் நிறைய. அதுவும் எனக்கு அனுபவங்களாகப் பாடங்களாக என் மனம் எனும் கைப்புத்தகத்தில் குறிப்புகளாகப் பதியப்படுகின்றன...

   அன்பான வருகைக்கும் அரவணைக்கும் கருத்திடுகைக்கும் உளமார்ந்த நன்றி தோழி!
   வாழ்த்துக்கள்!

   Delete
 32. இந்த அளவுக்கு தமிழில் ஈடுபாடுள்ள உங்களையும் உங்கள் திறமையையும் அறிந்து வெளிக்கொணர வகை செய்து வலையுலகில் எழுதவைத்துப் பெருமை சேர்த்துக்கொண்ட நட்புகளுக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் என் மூச்சு! அதற்காக நான் மொழியில் அத்தனையையும் கறுத்தேறியவள் அல்ல நான்.
   கற்கிறேன் இப்போதும்.
   என்னை இனங்கண்டு இவ்வலையுலகில் சேர்த்த அன்புத்தோழி அதிரா தமிழைப் போல என்னுயிர்க்கு நிகரானவர்! கற்கவும் கற்றதைப் பதியவும் வழி அமைத்துதந்தார்!

   என்னை ஊக்குவிக்கும் அன்புறவுகளாய்த் தொடரும் அஞ்சு, பிரியா, இமா, சீராளன், என் மரபுக்கவிதை ஆசான், நெல்லைத்தமிழன் உங்களொடு பெயர் குறிப்பிடாத இன்னும் ஏராளமான அன்புறவுகளையும் இவ்வலையுலகில் பெற்றுள்ளேன்!

   அத்தனை பேருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!
   உங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் இவர்கள் யாவருக்கும் உரித்தானது!

   வாழ்க வளமுடன்!

   Delete
 33. சகோதரி இளமதி/தோழி இளமதி

  எப்படித் தவற விட்டோம் உங்கள் பதிவினை?!! மன்னிக்கவும்...மிகவும் தாமதமாகிவிட்டது.

  உங்கல் பதிவு நீண்டு இல்லை. அப்படியே அதில் ஊன்றிப் படித்தோம். மனம் கலங்கியது பல இடங்களில். ஆம் அறிவுரைகள் என்பது நமக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியுள்ளவர், நம் சுற்றத்தார், நம் பெற்றோர் இவர்களைக் கூர்ந்து கவனித்து அவர்களின் செயல்பாடுகளில் நமது அனுபவங்களிலேயே நாம் கற்றுக் கொண்டுவிடலாம். எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதையும்.

  ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கட்டும். போதும் பட்ட வேதனைகள். உங்கள் கணவர் உங்களுடனேயே இருந்து எப்போதும் உறுதுணையாக இருப்பார். இறைவனின் அருளும் சேர்ந்து!!!

  உங்கள் இருவரின் தமிழ் ஆர்வம் மெய்சிலிர்க்க வைத்தது. பொதுவாகவே இலங்கைத் தமிழர் எங்குச் சென்றாலும் தமிழைக் கற்கின்றனர், எழுதிப் பேசுகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சிதரும் ஒன்றாகும். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த உங்கள் இருவருக்கும் அதுவும் சேவைசெய்யும் மனதுடன் கொடுத்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்!

  இதோ அடுத்த கருத்திற்குச் செல்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரர்களே!

   பதிவுகள் இங்குதான் இருக்கும். இதில் தாமதமான வருகையும் பின்னூட்டப் பதிவிடுகையும் ஒன்றும் குறைவானதல்ல..

   உங்களின் கருத்துக்களும் எனக்கும் மனதில் சேர்த்துக்கொள்ள வேண்டியவைகளே!

   தமிழை மூச்சாகக் கொண்டு சுவாசித்தால் அது எப்படி எம்மோடு இரண்டறக் கலந்துள்ளது என்பது புரியும் சகோ!
   என் கணவர் மிகுந்த பற்றாளர். அவருடன் எனது தமிழின் மேலான பற்று நாளுக்கு நாள் தீராக் காதலாகிச் செயற்படுத்தியது.

   சேவை செய்ததும் இன்றும் மன நிறைவுதான்! இறையருளே அனைத்தையும் நடத்தி வைத்தது!

   Delete
 34. எத்தனை இன்னல்கள்! அந்த இன்னல்களே உங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். இல்லையா இளமதி?!

  கண்ணதாசன் அவர்கள் ஆம்!! அவரின் வரிகள் பலரையும் ஆட்கொண்டிருப்பது...அதிலும் குறிப்பாக இலங்கைவானொலியில் அவை பேசப்பட்ட போது அங்கிருக்கும் நம் தமிழர்களின் உள்ளத்தில் எப்படிப் பதிந்து போயிருக்கின்றன என்று அறிய முடிகிறது. அழகான வரிகள்.

  கிரிசாம்பாளின் கதை அறிந்ததில்லை. இப்போது தெரிந்து கொண்டோம் அதிரா சொல்லியதிலிருந்து..

  அதிரா! நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் அவருக்கு மிகவும் பொருந்தும். நல்ல உள்ளம்!!! ஏஞ்சலும் அப்படியே!! அதிரா தங்களை ஊக்கப்படுத்தி இத்தளத்தை திறக்க வைத்ததற்கு அதிராவிற்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!!! உண்மையாக அவரால் வலை அதிருகிறது!! கலகலவென!!....

  உங்களின் பதிவிலிருந்தும் நிறைய அறியவும் கற்கவும் முடிந்தது.

  இலங்கையுடன் ஆன பிணைப்பு எனக்கு மிக மிகச் சிறியகால்மே ஆனாலும் என் மனதில் ஆழமாகப் பதிங்க ஒன்று. நாடும், தமிழும். என் பள்ளியும்...எல்லாமும். என் பொன்னான காலம் எனலாம். நாங்கள் இருந்தது கொலம்போவில். இன்னும் பசுமையான நினைவுகள் மனதில். மூன்றாம் வகுப்பு வரை அங்குதான் படித்தம். பின்னர் பிரச்சனைகள் தொடங்கியதும் இந்தியாவிற்கு வந்துவிட்டோம். என் அப்பா, தாத்தா அங்கு வேலை செய்ததால் நாங்கள் அங்கு இருந்தோம்.

  எனவே எனக்கும் என் அப்பாவிற்கும் இப்போதும் கொழும்பு என்றால் அத்தனைப் பிரியம். எனக்கே அப்படி என்றால் அங்கேயே பிறந்து வளர்ந்து, படித்து அதன் பின் அங்கு இனப்பிரச்சனையால் நீங்கள் எல்லோரும் புலம் பெயர்ந்து என்று எத்தனை வேதனை இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் இல்லையா?!!

  எங்கள் வீட்டிலும் இப்படி சித்திகள், மாமாக்கள் இளையவர்களாக இருக்கிறார்கள். என் மாமாவை விட அவர் சித்தி சில மாதங்களே பெரியவர். அது போன்று என் மாமாவின் மாமாவும். இப்படியானவை அப்போதைய காலகட்டத்தில் நிறைய இருந்தன எனலாம்.

  கணவரின் பிரிவு என்று எத்தனையோ கடந்து வந்துவிட்டீர்கள். தங்களுக்கு இறைவனின் அருள் என்றும் இருந்திட மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சகோதரி கீதா எனது பதிவிலிருந்தும் பெற்றுக்கொள்ள ஏதும் கிட்டியது என்றால் அது என் பாக்கியமே!
   என் அனுபவம் கண்ணீர்க் கதைதான் 80 வீதமும்.

   நீங்களும் கொழும்பில் இருந்தீர்களா? அட.. அதுதான் இப்படி எம்மை ஈர்த்துள்ளதோ?...:)
   மகிழ்ந்தேன்!

   என்னவர் பிரிவினை இந்த நிமிடம்வரை என் உள்மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.. அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடக்கின்றேன்.
   காலம் இன்னும் கடக்க வேண்டும்.....

   அன்போடு நேரில் வந்து அளவளாவிய மகிழ்வைத்
   தருகிறது உங்களின் பின்னூட்டம்!
   இனிய கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி!
   நல் வாழ்த்துக்கள்!

   Delete
 35. அன்புள்ள இளமதி இன்றுதான் உன் பதிவைப் பார்த்தேன். என்ன சொல்வது? எல்லோருடய பதிவுகளையும் தொடர்ந்து படிக்க இப்போதுதான் ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன். முடியாமைதான் காரணம். உன்னைப்பற்றி சிலதெல்லாம் அறிந்தவள் நான் என்று எண்ணியிருந்தேன். இல்லை. இன்னும் பல விஷயங்கள் நீ எழுதியவற்றைக்காட்டிலும் பல மடங்கு கற்பனையில் விரிகிறது. அதிரா,அஞ்சு நீ எல்லோரும் என் பதிவிற்கு உடனடியாக வந்து அன்பைத் தெரிவித்தது போல என்னால் உங்கள் பதிவிற்கும், மற்றவர்கள் பதிவிற்கும் போகவில்லையே என்று வருத்தம் தோன்றுகிறது. இளமதி நீ முழுமதியாக வலம் வருவாய். ஆழ்ந்த உணர்ச்சிகளுடனான உன் பதிவு. அன்புடன்

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_